வெளிநாட்டு தொழில் பெற்று செல்வோரின் குடும்பங்களை கவனிக்கும் முதியோர் | தினகரன் வாரமஞ்சரி

வெளிநாட்டு தொழில் பெற்று செல்வோரின் குடும்பங்களை கவனிக்கும் முதியோர்

முன்னரெல்லாம் முதியவர்களை மதித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் வழிகாட்டலுக்கும் அனுபவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் கலாசாரம் இருந்தது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்தவுடன் குடும்ப உறவுகள் பாதிக்கப்பட்டுவிட்டன. முதியேரை அனுபவமிக்க மூத்தோராக மதித்து அவர்களை கெளரவிக்கும் கலாசாரம் மறைந்து வருகிறது.

பல குடும்பங்களில் முதியவர்கள் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் தமது பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் ஒரு முக்கியமான பணியுடன் இன்னும் பல குடும்ப வேலைகளை இதுவரை கவனித்து செய்து வருகின்றனர். இவர்கள் இவ்வாறு முக்கியமான பங்களிப்பு செய்தாலும் இந்த முதியவர்கள் நோய், தனிமை, மற்றவர்களால் மதிக்கப்படாமை ஆகிய பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் முதியவர்களை மதித்து அவர்களை கெளரவிக்கப்பட வேண்டியவர்களாக கருதுகின்றன என்பது கேள்விக்குறியாகும். சாதாரண குடும்பங்களிலுள்ள முதியவர்களின் நிலைமை இப்படி இருக்கும் போது இதுவரை எவரின் கவனத்தை ஈர்க்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்ற புலம் பெயர் அபிவிருத்தி பங்காளர் குடும்பங்களில் உள்ள மூத்தோரின் நிலைமை குறித்து சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போது வருடமொன்றிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் கிடைக்கும் வருமானம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு வரவு செலவு திட்டம் தயாரிக்கும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பால் கிடைக்கும் வருமானமே முக்கிய இடத்தை பிடித்தது.

தமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும், பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும், தங்களுக்கென சொந்தமாக வீடு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற நோக்கங்களுடன் தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றவர்களில் எத்தனை பேர் தங்கள் இலக்கை அடைந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! இவர்கள் தொடர்பான பணிகளை பிரிடோ நிறுவனம் செய்து வரும் பகுதிகளில் வெளிநாடுகளில் இருப்போரின் குடும்பங்களில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும் இன்னொரு பக்கத்தில் இந்த குடும்பங்களில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நன்மைகளை விட பாதகமான நிலைமையே அதிகம் என்பதாகவும் அறியமுடிகிறது.

பிரிடோ எஸ், கே.சந்திரசேகரன்

வெளிநாட்டில் உழைத்த பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்தல், தேவையற்ற பொருட்களில் முதலீடு செய்தல், கணவர்மாரும் சிலவேளைகளில் மனைவியரும் வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், குடும்பங்கள் பிரிந்து சின்னாபின்னமாகுதல், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுதல், இளயவயது திருமணம், கர்ப்பமாதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவருடனான தொடர்பு இல்லாமல் போதல், அல்லது அவர்கள் அங்கு பிரச்சினைக்குட்படுவதால் இங்கு குடும்பத்தில் உள்ளவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளைப் பற்றியே இதுவரை அனைவரும் பேசியிருக்கிறார்கள். முடியுமானவரை இந்த பாதிப்புக்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் எவருடைய கவனத்தையும் ஈர்க்காத இன்னும் பல பிரச்சினைகள் உண்டு. அவற்றில் ஒன்றே புலம் பெயர் அபிவிருத்தி பங்காளர் குடும்பங்களில் உள்ள முதியோரின் பிரச்சினையாகும். பெருந்தோட்டப் பகுதிகளில் புலம்பெயர் அபிவிருத்தி பங்காளரின் குடும்பங்கள் தொடர்பாக பிரிடோ நிறுவனத்தால் செய்ய்பட்பட ஆய்வுகளின் அடிப்படையில் தாய் வெளிநாடு சென்றுள்ள பல குடும்பங்களில் தந்தைமாரும் பல சந்தர்பங்களில் கொழும்பு போன்ற வெளியூர்களில் வேலை செய்வதால் அல்லது குடும்பத்தை கைவிட்டு செல்வதால் குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனிக்கும் பொறுப்பை அவர்களின் பாட்டி தாத்தாமார்களே பொறுப்பேற்றுள்ளனர். முழுப்பொறுப்பையும் ஏற்று குடும்பத்தை கட்டிக்காக்கும் அளப்பரிய பங்களிப்பை அவர்கள் செய்கிறார்கள். உண்மையில் அவர்களை நம்பியே பல தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்கின்றனர்.

ஆனால் வயது முதிர்ச்சி, நோய், பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் உள்ள சிரமம் ஆகியவை காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களையும் எதிர்நோக்குகின்றனர். பல சந்தர்பங்களில் வெளிநாட்டில் உள்ள தாய் தனது கணவருக்கே பணத்தை அனுப்புகிறார். ஆனால் பணத்தை பெறும் தந்தைமார் குடும்பத்திற்காக சரியான முறையில் பணத்தை செலவிடாதபோது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்த தாத்தா பாட்டிமார்களே. ஒரு சில சந்தர்ப்பங்களில் தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாத சந்தர்ப்பங்களிலும், தந்தை குடும்பத்தை கவனிக்காத சந்தர்ப்பங்களிலும் தள்ளாத வயதில் ஏதாவது தொழில் செய்து பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து அவர்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பை இந்த முதியவர்கள் மிகவும் சிரமத்துடன் செய்து வருகிறார்கள்.

இந்த முதிர் வயதினர் பலர் நோய்வாய்ப்பட்டவர்கள். இவர்கள் மாதா மாதம் வைத்தியசாலைகளில் கிளினிக்குகளுக்கு போக வேண்டியுள்ளது. பணம் கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு இந்த தள்ளாத வயதிலும் தங்களாலான பங்களிபை வழங்கினாலும் இவர்களின் தேவைகளை கவனித்து அவர்களுக்கு வேண்டிய மருந்து மற்றும் சத்துணவை கொடுப்பதிலோ அல்லது அதற்கான பணத்தை கொடுப்பதற்கோ அக்குடும்பத்தவர்கள் அக்கறை காட்டுவதில்லை. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு தொலைபேசியில் பேசும்போது கூட இவர்களை மதித்து அவர்களோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் செய்யும் பங்களிப்பை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் முழுதும் புறக்கணிக்கப்பட்டதான உணர்வுடன் வாழ்கிறார்கள்.

பெரியவர்களின் இந்த மனப்பாங்கு காரணமாக இவர்களால் பாதுகாத்து போசிக்கப்படும் பிள்ளைகள் கூட இவர்களை மதிப்பதில்லை. இந்த முதியவர்கள் தமக்காக செய்யும் தியாகங்களை பிள்ளை கெளரவப்படுத்துவதில்லை. இவையெல்லாம் முதியவர்களான தாத்தா பாட்டிகளை மனரீதியாக பாதிப்பதால் தங்கள் பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாமலும், அதற்கு வாய்ப்பு இல்லாமலும் பெரும் மன உழைச்சளோடு வாழ்கிறார்கள்.

இதுவரை இவர்களின் பிரச்சினைகளை எவரும் வெளிக்கொணர்ந்தது கிடையாது. வெளிநாடுகளில் தொழில் செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் மூலமாக வெளிக்கொணர்ந்தாலும் இந்த முதியவர்களின் பிரச்சினை எவருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. இவர்களுடைய பிரச்சினைகள் பாரதூரமானவை. அவர்களது பிரச்சினை அவர்களின் பெறுப்பில் விடப்பட்டுள்ள பிள்ளைகளையும் பாரதூரமாக பாதிக்கிறது என்பதை எவரும் சிந்திப்பதில்லை. இவர்களுக்கான ஒன்றுகூடல் நடத்தியபோது தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே தங்களுக்கு பெரிய ஆறுதலை தந்தது என்று அவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

இநத பின்னணியில் இவர்களின் பிரச்சினைகளுக்கு ஆரம்பத் தீர்வுகளை கொடுக்குமுகமாக பிரிடோ நிறுவன முன்பள்ளி ஆசிரியைகள் புலம்பெயர்ந்தோர் குடும்பங்களுக்கு விஜயம் செய்து அவ்வீடுகளிலுள்ள முதியோரைச் சந்தித்து பேசுகிறார்கள். அவர்களை மதித்து அவர்களுடன் பேசுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றார். தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. எப்போது தங்கள் வீடுகளுக்கு இந்த ஆசிரியைகள் வருவார்கள் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். வீடுகளுக்கு விஜயம் செய்யும் ஆசிரியைகள் முதியோரை மதித்து அவர்களை கெளரவப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மற்றைய குடும்ப அங்கத்தவர்களுக்கு அறிவூட்டுகிறார்கள். இது தவிர, பிரிடோ தான் பணி செய்யும் பகுதிகளில் முதியோர்களுக்கான சேமநல மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த முகாம்களின்போது பெரும்பாலானவர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களுக்கு மூக்குக் கண்ணாடி போட வேண்டிய தேவை உள்ளது கண்டறியப்பட்டது. கண்ணாடிகளை தங்களால் வாங்க முடியவில்லை என்பதையும், தங்களுடைய குடும்பத்தார் அது குறித்து அக்கறை காட்டுவதில்லை என்பதையும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இந்த பின்னணியில் லயன்ஸ் கிளப் போன்ற இதுவிடயத்தில் சேவை செய்துவரும் நிறுவனங்களின் உதவியுடன் மூக்குக் கண்ணாடிகள் பெற்றுக் கொடுக்க பிரிடோ நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் அரசாங்கத்திலுள்ள முதியவர்களுக்கான சேவைகளை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இது தவிர இவர்களுக்கு உள நல ஆலோசனைகள் வழங்கும் வைத்தியர்கள் ஆலோசகர்களை கொண்ட உளநல மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. உளநல மருத்துவ சிகிச்சை தேவைப்படுவர்கள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். 

 

 

Comments