கடுவன் பூனையிடம் சிக்கியுள்ள கிளி! | தினகரன் வாரமஞ்சரி

கடுவன் பூனையிடம் சிக்கியுள்ள கிளி!

மலையகப் பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஆஸ்பத்திரியில் நடக்கும் சில விரும்பத்தகாத விசயங்களப்பற்றி இதற்கு முன்பு இந்தப் பத்தியிலை எழுதியிருந்தம்.

கிழக்கிற்குப் போகிற வழியிலை உள்ள ஓர் ஆஸ்பத்தியிலையும் ஒரு விசயம் நடந்திருக்கு. அதுக்கு முன்பாக, மலையகப் பகுதியிலை உள்ள ஆஸ்பத்திரியைப் பற்றிப் புதிசா ஒரு தகவல் கிடைச்சிருக்கு. என்னெண்டு ஷொன்னா, அந்தப் பகுதியிலை உள்ள தமிழாக்களுக்ெகண்டு விசேஷமாக இந்த ஆஸ்பத்திரியை இந்திய அரசாங்கம் சகல வசதிகளோட அமைச்சுக் குடுத்திருக்கு. எல்லா வசதியும் இருக்கெண்டுதான் சொல்றாங்க. ஆனால், அங்க ஆராவது நோயோட போனால், வெளியிலை இருந்துதான் ரெஸ்ட் எடுத்துகொண்டு போகணுமாம். அது ஸ்கேன் என்றாலும் சரி, எக்ஸ்ரே என்றாலும் சரி.

இல்லாட்டிக்கு இரத்தம், மூத்திரம் என்றாலும் சரிதான், நீங்க வெளியிலைதான் சோதிச்சுக்ெகாண்டு போகணும். திறப்பு விழாவிற்குப் பிறகு அந்த ஆஸ்பத்திரியைப் பற்றி எந்த ஓர் அரசியல்வாதியும் கண்டுகொள்றது இல்லையாம். அவங்களுக்குள்ள வேலைப்பளுவிலை அதையெல்லாம் கவனிக்கிறத்துக்கு நேரம் எங்கதான் இருக்கு? அப்ப, இந்திய அரசாங்கமாவது குறைஞ்ச பட்சம் கொழும்பிலை உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமாவது இதுகளப் பற்றிக் கரிசனை எடுத்து இலங்கை அரசாங்கத்திற்குச் சொல்லலாமே! என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

பொதுவாக இந்த வைத்தியசாலைக்குப் பிரசவத்திற்காகச் செல்லும் தமிழ்க் கர்ப்பிணிப் பெண்களை அங்குள்ள தாதியர்களும் மருத்துவர்களும் கண்டுகொள்வதில்லையென்று குறைபடுகிறார்கள். என்னதான் வருத்தத்தில், வலியில் உழன்றாலும் தாதியர்கள் கண்டுகொள்வதே இல்லை. அப்படி அவர்கள் வேதனையில் துடித்தால், தாதியர்கள் சொல்கின்ற ஒரே ஆறுதல் வார்த்தை, "நாங்களா செய்துகொள்ளச் சொன்னோம்"?! என்பதுதான்! இதுபற்றிப் பல முறைப்பாடுகள் உண்டு. என்றாலும் அதற்கு நடவடிக்ைக எடுப்பதற்குத்தான் யாரும் இல்லை. அங்கு சிசேரியன் செய்துகொள்ளும் தமிழ்ப்பெண்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை காத்திருக்கவே செய்கிறது. கிழமைக்கு இருண்டு பெண்கள் நுவரெலியா ஆஸ்பத்திருக்குக் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது.

அண்மையில் அங்கு சிசேரியனுக்கு உள்ளான ஒரு பெண்ணுக்குப் பிள்ளை பெரிதென்று வயிற்றைப் பெரிதாகக் கிழித்ததாகவும் இப்போது அந்தப் பெண் பிரசவித்த குழந்தை நலமாக இருக்கின்ற அதேவேளை, தாய்க்குப் பிரச்சினை என்றும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இஃது எந்தளவிற்கு உண்மை என்பதை ஆஸ்பத்திரு ஆட்கள்தான் அறிவார்கள்.

சுருங்கச் சொல்லின் அங்குக் கடமையாற்றும் சிங்கள தாதியர்களும் மருத்துவர்களும் அந்த ஆஸ்பத்திரியின் அமைப்பைக் கண்டு பொறாமைகொண்டு இவ்வாறு நடந்துகொள்வதாகவே மக்கள் தெரிவிக்கிறார்கள். "உங்களுக்கு இப்படியோர் ஆஸ்பத்திரியா?" என்பது அவர்களின் மனத்தில் உள்ள அழுக்காக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

தவிரவும், அங்குத் தங்கிச் சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளர்கள் தாம் விரும்பியவாறு மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்ெகாள்ள முடியாது. எந்தத் தினத்தில் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆனாலும், மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்குச் செவ்வாய்க்கிழமை செல்ல வேண்டும். அதுவும் ஒரு மணித்தியாலம்தான் அதற்காக ஒதுக்கப்படும். அன்றைய தினம் தவறினால், அடுத்த செவ்வாய்க்கிழமை வர வேண்டும்! இது என்ன அநியாயம்? நாங்கள் தொழிலுக்குச் செல்வதில்லையா? என்று யாராவது கேட்டால், "நீங்கள் நினைத்த மாதிரியெல்லாம் மெடிக்கல் எடுக்க முடியாது?" என்று தாதியர்கள் சிங்களத்தில் கத்துகிறார்கள். அதற்குத் தமிழ்ப் பிள்ளைகளும் ஒத்து ஊதுகிறார்கள் என்கிறார் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர். இதனால், இந்த வைத்தியசாலைக்கு முற்றிலும் தமிழ் தெரிந்த தாதியர்களையும் ஊழியர்களையும் நியமித்தால் நல்லது என்கிறார் அந்த முதியவர். இல்லாவிட்டால், கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்ததற்குச் சமம் என்ற கதையாகிவிடும் என்று ஆதங்கப்படுகிறார் முதியவர்.

இந்தக் கதை இவ்வாறிருக்க, அழகாகக் கட்டிக்ெகாடுக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை நம்மாக்களுக்கு வைத்துக்ெகாள்ளத் தெரியவில்லை என்றும் ஒருவர் ஆதங்கப்படுகிறார். என்னவென்று கேட்டால், "கிளாஸ் போத்தல்களை உடைத்துக் கக்கூஸ் சிங்கில் போடுகிறார்கள் சார்! நான் அந்த ஆஸ்பத்திரியில் பதினான்கு நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். ஐயோ, சரியான மோசம்! அங்குத் தங்கியுள்ள நோயாளர்களைப் பார்க்க வருபவர்கள் 'காலை'க்ெகாண்டு வந்து கொடுக்கிறார்கள். இவன் மறைவாகக் கக்கூஸ் பக்கம் கொண்டுபோய் குடித்துவிட்டுப் போத்தலை உடைத்துச் சிங்கில் போட்டிருக்கிறான். அதனால், கழிவறையைப் பயன்படுத்த முடியாத சிக்கலும் ஏற்பட்டிருக்கு! என்கிறார் அவர். இதெப்படியப்பா நடக்குது? இந்தக் கதையைச் சொன்னவர் ஒரு பெரும்பான்மையினத்தவர். உண்மையில் பெரும்பான்மையினத்தவர்களுக்கு அங்கு எந்தக் குறையும் இல்லை என்பது உண்மைதான்.

ஏற்கனவே, லிந்துலை வைத்தியசாலையில் இனவாதமான போக்கு காணப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. தற்பொது நிலைமை சீரடைந்திருக்கிறது என்று தகவல். பொதுவாக மலையகத்தில் இனப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கு மறைமுகமாகத் திட்டமிட்ட சதிகள் நடப்பதாகப் பல முறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பலவந்தமான குடும்பக்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இப்போது இந்த வைத்தியசாலையில் ஒழுங்காக பிரசவம் நடப்பதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, இந்த ஆஸ்பத்திரியில் கடமையாற்றுபவர்களும் இந்தத் திட்டமிட்ட செயற்பாட்டை முன்னெடுக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நோயாளர்களை வெறுப்படையச்செய்வதும் இவர்களின் ஒரு நோக்கமாக இருக்கிறதோ தெரியவில்லை என்பது அந்தப் பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. இதுபற்றி விரிவான விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம். என்ன நோக்கத்திற்காக இந்த வைத்தியசாலை பெற்றுக்ெகாடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறுகிறதா என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். விசேடமாக துணைத்தூதுவர் நடராஜன் அவர்களேனும் இதைப் படித்துப்பார்த்து சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதேவேளை, மத்திய மாகாண சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் மத்திய அரசில் உள்ள தமிழ் தெரிந்த அதிகாரிகளுக்கும் இந்த விடயத்தை முன்வைக்கின்றோம்.

கிழக்கு நோக்கியிருக்கும் ஆஸ்பத்திரியில் நடந்த விடயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்!

Comments