அம்பாறையில் நடந்தது என்ன? | தினகரன் வாரமஞ்சரி

அம்பாறையில் நடந்தது என்ன?

எஸ்.எல்.எம்.பிக்கீர் -

(அம்பாறை மத்திய குறூப் நிருபர்)

கடந்த 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறுபான்மை மக்களது உரிமைகளும் அரசியல் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய கட்டத்தை நாடு எதிர்நோக்கியிருக்ைகயில், பலம் பொருந்திய அரசொன்றை முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து மாற்றினர். அம்மாற்றத்துக்கு முஸ்லிம் மக்கள் துணை போனதற்குக் காரணம் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட இனவாதத் தாக்குதல்கள் தான்.

புதிதாக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசில் எந்த இனமும் பாதிப்புறாவண்ணம் சீரான பயணத்தை மேற்கொள்வதை தேசிய அரசு வலியுறுத்தினாலும் இனவாத தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

எது எவ்வாறிருப்பினும் நம் நாட்டில் பல்லாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த சமூகங்கள் மத்தியில் பிரித்தாளும் நடவடிக்ைககளை மேற்கொண்டனர். ஆனால் சாதாரண கிராமப்புற மக்கள் மத்தியில் இன உறவு சிறப்புற அமைந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமே.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உரிய முறையில் பாதுகாக்குமாறு ஐ.நா.வின் மனித உரிமை ஆணையகம் வலியுறுத்தி வரும் நிலையில் அம்பாறை சம்பவம் சர்வதேச அரங்கில் மேலும் ஒரு தலைக்குனிவை இந் நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சிறிய தகராறு அந்த கடையோடு முடிந்திருக்கவேண்டும். ஆனால் மேலும் பல கடைகளை தேடிச்சென்று தாக்கி ஒரு முஸ்லிம் பள்ளியையும் மிலேச்சதனமான முறையில் சேதப்படுத்தி பாரிய நஷ்டத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் அளவுக்கு என்ன நடந்தது என அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் பெரும்பாலான சிங்கள வர்த்தகர்களும் வேதனைப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

10.00 மணிக்கு பின்னர் பஸ்களிலும், வேன்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஆட்களை ஒன்று திரட்டி தாக்குதல் நடத்தும் நிலைக்கு கொத்து ரொட்டிப் பிரச்சினைதான் காரணம் என்றால் அதனை ஏற்க முடியுமா? அம்பாறை நகரில் உள்ள கணிசமான சிங்கள மக்களின் கருத்து இதுவாக உள்ளது. இது ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் தரப்புக்கு எந்தத் தகவல்களும் கிடைக்காததன் மர்மம் என்ன என்பதும் மற்றுமொரு வினா.

கடந்த கால அரசில் இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசிலும், இனவாதம் தொடர்வதும் வேதனைக்குரிய விடயமே' சிறுபான்மை சமூகங்களுக்கு சுதந்திரமாக வாழ வழியில்லை எனக் கூறி கூக்குரலிட்டு ஆட்சியமைத்தவர்களின் காலத்திலும் இந் நிலைதொடர்வதும் வேதனையன்றி வேறென்ன?

இனி விடயத்திற்கு வருவோம்.

செவ்வாய்க் கிழமை அதிகாலை 1.40 மணியளவில் தொலைபேசிச் சத்தம் காதுகளைப் பிளந்தது. தொலைபேசியில் உரையாடத் தொடங்கினேன். மறுமுனையில் அம்பாறை நகரிலிருந்த எனது நண்பர். நூற்றுக்கும் மேற்பட்ட காடையர் கும்பலால் அம்பாறை நகரின் நியுகாசிம் ஹோட்டல் தாக்கப்பட்டுள்ளதுடன் அதனை அண்டிய முஸ்லிம் கடைகளும் தாக்கப்பட்டதாகவும் அம்பாறை ஜூம்ஆ பள்ளியும் தாக்கப்பட்டதாகவும் மறுமுனையில் அலறியது என் நண்பனின் குரல். என்னவென்று பாருங்கள் என்று அவர் விடயத்தை கூறி முடித்ததும் அதிர்ச்சியால் சில நிமிடங்கள் உறைந்துபோனேன்.

பின்னர் 1.50 மணியளவில் அம்பாறை நகரிலுள்ள நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவருடன் தெரடர்பு கொண்ட போது இதனை உறுதி செய்த அவர் தான் தற்போது அம்பாறை முஸ்லிம் பள்ளியில் இருப்பதாகவும், நான் அங்கு அந்த வேளையில் வருவது பொருத்தமில்லை எனவும் காலையில் தனது வீட்டுக்கு வந்து சந்திக்குமாறு கூறி தொலைபேசியினை துண்டித்தார். இதனையடுத்து மேலும் பல நண்பர்களோடு தொடர்பு கொண்டு மேலும் பல தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டேன்.

அதிகாலை 4.10 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு அம்பாறை விரைந்தேன். அந்த அதிகாலை இருட்டிலும் வீதி நெடுகிலும் சனக் கூட்டம் நிரம்பி வழிந்திருந்ததுடன் எவரையும் அம்பாறை செல்ல வேண்டாமெனவும் சில இளைஞர்கள் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எனினும் எதனையும் பொருட்படுத்தாத நான் பிரதான வீதிகளைப் பயன்படுத்தாமல் எவ்வாறோ அம்பாறைப் பள்ளிக்கேசென்றேன். வீதிகள் மறிக்கப்பட்டுபொலிசாரும் விஷேட அதிரடிப்பபடையினரும் குவிக்கப்பட்டிருந்தனர், அதிரச்சி அடைந்தேன். பள்ளியில் நுழைந்ததும் அந்த அதிகாலைவேளையிலே பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரும் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ் ஜெமீல் காரியப்பரும் சேத விபரங்களை பார்வையிடுவதைக் கண்டபோதே எனக்குத் தெம்பு பிறந்தது.

அவ்வேளையிலே பயத்தினால் ஒளிந்திருந்த பள்ளியின் பேஷ் இமாம் இப்றாஹிம் மெளலவி வருவதைக் கண்டேன். இனவாதக் கும்பல் நடாத்திய மிலேச்சத் தனமான வெறியாட்டங்களை பேஷ் இமாமும் பள்ளி ஊழியரும் விபரித்தனர்.

27.02.2018 செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் அம்பாறை எஸ்.சேனாநாயக்க வீதியிலுள்ள நியுகாசிம் ஹோட்டலுக்குச் சென்றஅடாவடிக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொத்துரொட்டி கேட்டுச் சாப்பிட்டுள்ளார். கொத்துரொட்டியில் வெள்ளை நிற பதார்த்தமொன்று தென்பட்டதும் அதுகுறித்து கொத்து ரொட்டியைத் தயாரித்த பணியாளரிடம் வினவினார். ஆனால் அது கோதுமை மா என்றும் கொத்து ரொட்டி செய்யும் போது அவ்வாறு வருவது இயல்புதான் என்று அப்பணியாளர் கூறியதும், அந்நபர் அது கருப்பலைப்பு மாத்திரை என்றும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்றும் அவருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

பின்னர் கடையின் பணியாளரான திமுத்துவை அழைத்து, இந்த விடயம் தொடர்பாக அவர் வினவியதும், அது மாக் கட்டிதான். நாங்கள் அவ்வாறு மாத்திரைகள் போடுவதில்லை. அதற்கான அவசியப்பாடும் கிடையாது. பயப்படாமல் சாப்பிடுங்கள் என்றதும் கடுமையான கோபத்துடன் கடை ஊழியர்கள் இருவரையும் பலமாகத் தாக்கிவிட்டு தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டார் அவர். இதனையடுத்து மேலும் பலர் அங்கு மது போதையில் வந்தனர். அவர்களும் இணைந்து, கடையின் காசாளரான பர்சில் என்ற 27 வயது இளைஞனை அச்சுறுத்தி இவ்வாறான மாத்திரைகள் உணவில் வழமையாகக் கலக்கப்படுகின்றதா? என தொடர்ச்சியாக கேட்டு,அவருக்குத் தொல்லை கொடுத்தனர். சிங்களமே தெரியாத கடை உரிமையாளரின் தம்பியான காசாளர் செய்வதறியாது கேட்டதற்கெல்லாம் தலையை அசைத்துள்ளார். இதேவேளை,அங்கு கூடியிருந்தோரால் பல்வேறு கேள்விகள் கேட்டு கேட்டு இவர் பலமாகத் தாக்கப்பட்டு கடையையும் சேதப்படுத்தியதுடன் மேலும் பலர் அங்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அனைவரும் அருகிலிருந்த இரும்புக்கடையையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய பின்னர் அம்பாறைக் கச்சேரிக்கு முன்னால் இருந்த முஸ்லிம் ஒருவரின் உணவகத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவம் நடைபெறும் போதே,பள்ளிவாசல் பேஸ் இமாமுடன் இருந்த பள்ளிவாசல் ஊழியரான எம்.எப்.சிஹானுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் அம்பாறை பொலிசாருக்கு அறிவித்ததுடன்,பள்ளிவாசலுக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல் கொடுத்தார். தகவல் வழங்கப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர் இனவாதக் கும்பல் பேரிரைச்சலுடன் கூட்டமாக வந்து பள்ளிவாசல் மீது கற்களை வீசினர். பின்னர் சுற்று மதிலை உடைத்துள்ளது. மற்றொரு கும்பல் பள்ளிவாசலுக்கு முன்பிருந்த கடையையும் அடித்து நொருக்கியதாகவும் பேஸ் இமாம் தெரிவித்தார். உள்ளே நுழைந்த குழுவினரால் பள்ளியின் யன்னல் கதவுகள் அலுமாரிகள் உடைத்ததோடு அடுக்கி வைக்கப்பட்டடிருந்த குர்ஆன் பிரதிகள் சமயநுால் என்பவும் கிழித்து வீசப்பட்டுள்ளன.

இவ்வாறு பள்ளியினுள்ளே காடையர் ்கூட்டம் வெறியாட்டம் ஆடும்'போதே மற்றுமொரு கும்பலினால் பள்ளிக்கு பின்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான்,மோட்டார் சைக்கிள் என்பனவற்றுக்கு தீ வைக்கப்பட்டதோடு மூன்றுமோட்டார் சைக்கிள்களும் அடித்துநொருக்கப்பட்டன.

வரக்காப்பொல,கண்டி மற்றும் மாவனெல்ல போன்ற பகுதிகளிருந்து வர்த்தக நோக்கில் பள்ளிவாசல் வாடகை அறைகளில் தங்கியிருந்தோரின் கதவுகள் பலாத்காரமாக உடைக்கப்பட்டு அவர்களது உடைமைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. அவர்களும் தாக்கப்பட்டார்கள். இத் தாக்குதல்களில் காயங்களுக்குள்ளான 2 பேர் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நாட்டில் முஸ்லிம்கள் மீதான இன வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட தம்புள்ள, கிராண்ட்பாஸ். அளுத்கம ஜிந்தோட்டை போன்ற இடங்களுடன் அம்பாறையும் இணைந்தது. அந்தச் சம்பவத்தினையடுத்து,மாவட்டமெங்கும் இத் தகவல் காட்டுத் தீபோல் பரவியதால் அம்பாறையிலுள்ள அரச அலுவலகங்களில் கடமைபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வருகை தந்திருக்கவில்லை. அம்பாறை மாவட்டம் எங்கும் பதற்றமும் பீதியும் தலைதுாக்கியது. காலையிலேயே பிரதியமைச்சர் எச்.எம் ஹரீஸ் மற்றும் எம். மன்சூர் எம்.பீ. பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் சேதநிலைமைகளைப் பார்வையிட்டதுடன்,

அம்பாறை கச்சேரியில் அரச அதிபர் துசித பீ. வணிகசிங்க தலைமையில் பதற்றத்தினைத் தணிக்கும் பாதுகாப்பு உயர் மட்டமாநாடும் நடைபெற்றது.

பின்னர், மறு நாட்காலை விசேட விமானம் மூலம் வருகை தந்த அமைச்சர் றிசாட் பதியுதீன் சேத நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கச்சேரியில் நடைபெற்ற பாதுகாப்பு உயர்மட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டு பொலிசாருக்கு கடும் தொனியில் எச்சரிக்ைக விடுத்தார்.

அம்பாறை நகரக் கடையில் கொத்து ரொட்டி முறுகலுடன் இது நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். ஏனைய கடைகளையும் பள்ளிவாசலையும் நூற்றுக்கணக்கானோர் தேடிச் சென்று தாக்கப்பட்ட விடயமானது, ஓர் இனவெறித் தாக்குதல் எனவும் உயர்மட்ட மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், பொலிசார் உரியவேளையில் தக்க நடவடிக்கை எடுக்காததையும் சுட்டிக் காட்டினார்.

தற்போது பொலிசாரும் விசேட அதிரடிப்டையினரும் அம்பாறைப் பள்ளிவாசல் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேசேகர அம்பாறைத் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.கே. தடல்ல ஆகியோரின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் நீரிணைப்பு மின் இணைப்பு என்பனவற்றை மீளப் பெறவும் நடவடிக்ைககள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது யார் வந்து எதைச் செய்தாலும் உரிய வேளையில் உரிய பணி நடைபெறவில்லை.

காலத்துக் காலம் நம் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதும் அதன் பின் பாதுகாப்பு வழங்குவதும் அரச அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் இவ்வாறு இனிமேல் இடம்பெறாதென உறுதிமொழி வழங்குவதும் புளித்த கதையாகி விட்டது.

இன்று அம்பாறை. நாளை பொலநறுவையோ அனுராதபுரமோ எங்கு நடந்தாலும் நடைபெறப் போவது இதுதான்!.எனவே நம் நாட்டில் இனவாதம் களையப்பட்டு மத ஸ்தலங்களும் பாதுகாக்க படவேண்டுமெனின் இருப்பின் பாதுகாப்பு தரப்பினர் தமதி பணியை செவ்வனே செய்தல் வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் போதும் பாதுகாப்பு தரப்பு மீதே குற்றம் சுமத்தப்பட்டமையும் தெரிந்ததே.

காலத்திற்கு காலம் இந் நாட்டில் ஏற்பட்டு வந்த இன வன்முறை சம்பவங்களால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் கொஞ்ச நெஞ்சமல்ல.

எனினும் நீண்ட காலமாக அம்பாறை நகரம் மாவட்டத்தின் மூவின மக்களினதும் தலைநகராகவே இருந்து வருகிறது.

ஆனால் இங்கு புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் தம் இனத்தின் மத்தியில் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள இனவாத கலவரங்களை தூண்டிவிடுவதாகவும் அம்பாறையைச் சேர்ந்த ஒரு சிங்கள ஊடகவியலாளர் தெரிவித்த கருத்தும் நோக்கத் தக்கது.

மேலும்,இந்தச் சம்பவத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை வரை சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது படிப்படியாக இயல்பு நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

Comments