மண்ணை எடு, மண்வெட்டியைக் கழுவாதே! | தினகரன் வாரமஞ்சரி

மண்ணை எடு, மண்வெட்டியைக் கழுவாதே!

நிர்வாகப் பொறிமுறையில் நிலவும் 'துரைத்தனம்' மக்கள் பணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு. அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் துரைத்தனம் ஒருபுறமிருக்க, அவர்கள் தமக்குக் கீழ் உள்ள உத்தியோகத்தர்களையும் பணியைச் செய்யவிடாமல் தடுப்பதாகவும் ஒரு பெரும் குறைபாடு கண்ணுக்குத் தெரியாத காரணியாக இருந்து வருகிறது என்கிறார்கள் அலுவலர்கள்.

அதெப்படி?

அதிகாரிகள் தம் பணியைத் திறம்படச் செய்ய வேண்டுமாக இருந்தால், 'புரப்பஷனல் டிஸ்ரன்ஸ்' அவசியம் என்கிறார்கள். அளவிற்கு அதிகமாக எவருடனும் நெருக்கத்தை வைத்துக்ெகாண்டால், அது பணியாற்றுவதற்கு இடையூறாக அமைந்து விடும் என்பது அதிகாரிகளின் கருத்து. இதனால், எனக்குத் தெரிந்த ஓர் அதிகாரி, சதா எல்லோருடனும் எரிந்துவிழும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்ெகாண்டிருக்கிறார். மிகவும் நல்ல மனிதர். ஏன் ஐயா இப்படி? என்று கேட்டால், அவர் சொல்லுகின்ற விளக்கம் இதுதான். "ஐயோ! உங்களுக்குத் தெரியாது, இவங்களோட பெரிய கரைச்சல். கொஞ்சம் கிட்டத்துக்கு எடுத்தால் அவ்வளவுதான். அதுதான் நான் எட்டத்திலை வைச்சுக்ெகாள்ளுறன்" என்று சொல்லுறார். ஆனால், சக ஊழியர்கள் இவர் மீது மரியாதைக்குப் பதில் பயத்தை வளர்த்துக்ெகாண்டிருக்கிறார்கள். பயம் என்றால், மற்றவங்களுக்கு முன்னாலை சத்தம் போட்டுவிடுவாரே என்ற பயம், அவ்வளவுதான்.

உங்களுக்குத் தெரியும், சிலர் ஆரம்பக்கட்டத்தில் சக ஊழியராக இருக்கும்போது நன்றாக நெருங்கிப் பழகுவார்கள். ஏதாவது பதவிக்கு வந்துவிட்டால், சற்றே விலகி நிற்பார்கள். அவரைப் பொறுத்தவரை அதுதான் சரி! இல்லாவிட்டால், அந்தப் பதவிக்கு மரியாதை இல்லை அல்லவா?

இதனைப் புரிந்துகொள்ளாமல், "அவனைப் பார், எப்பிடி இருந்தான்! இப்ப ஆள் பெரிய லெவல்" என்று நொந்துகொள்வார்கள். அதற்குத்தான் எல்லோருடனும் அளவுடன் பழக வேண்டும் என்று அனுபவசாலிகள் அறிவுரை கூறுகிறார்கள். எங்களுடன் ஒருவர் வேலை பார்க்கிறார், அவருக்குத் தெரியாத எவரும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். "யாரைக் கண்டாலும் பல்லிளிப்பார்" என்று அவரைப்பற்றி மற்றவர்கள் சொல்வதை நான் என் காதாலேயே கேட்டிருக்கிறன். ஆனால், அவருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல! இருப்பினும், ஒரு பதவிக்கு வந்தார் என்றால்தான் சிக்கல் இருக்கிறது. அப்போது எல்லோருக்கும் பல்லிளித்துக்ெகாண்டிருக்க முடியாது. அந்த வேளையில், அவரையும் இப்பிடித்தான் சொல்வார்கள், "ஆள் இப்ப பெரிய லெவல்" என்று. இன்னும் சற்று விபரித்தால், ஊழியர்களுள் ஊழியராக இருக்கும்போது அவரும் ஒரு சாதாரணமானவர்தான். எனினும், பதவிக்கு வந்துவிட்டால், அவர் கட்டாயம் மாறித்தான் ஆக வேண்டும் என்கிறது மேலாண்மை. எப்படி?

இப்போது ஐயாயிரத்து ஐநூற்று ஐம்பத்து ஐந்து (5555) என்ற இலக்கத்தை எடுத்துக்ெகாள்ளுங்கள். இதில் எந்த எண்ணுக்கு பெறுமதி அதிகம்? வரிசையின் முதலில் உள்ள எண்ணுக்கா, அல்லது கடைசியில் உள்ள எண்ணுக்கா? எல்லா எண்ணுமே ஐந்துதான், ஆனால், இருக்கும் இடத்தைப் பொறுத்து அவற்றின் பெறுமதி மாறுகிறது அல்லவா! அப்பிடித்தான் இதுவும்.

சரி அது போகட்டும். பொது மக்களுக்கு என்றாலும் சரி, அல்லது ஓர் அலுவலகத்தில் நடக்க வேண்டிய சாதாரண பணியாக இருந்தாலும் சரி, சற்றே நெகிழ்வுப்போக்கு வேண்டுமா, இல்லையா? வேண்டும் என்று அடித்துச் சொல்கிறார் நண்பர். ஆனால், அதிகாரி சொல்கிறார், நெகிழ்வுப்போக்கு இருக்குமென்றால், அங்கே நிர்வாக ஓட்டை ஏற்பட்டு, சீரழிவும் ஏற்படும் என்கிறார்.

உண்மைதான் சில அதிகாரிகள், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகக் கூறி மினக்ெகடுவார்கள். ஆனால், அவர்கள் செய்வது நிர்வாகச் சீரழிவு என்பது அவர்களுக்குத் தெரியாது. உதாரணத்திற்கு, இன்று சிற்றூழியர் வரவில்லை என்றால், அந்தப் பணியை அவரே செய்துவிடுவார். அல்லது வேறு ஒருவர் மூலமாகச் செய்வித்துச் சமாளித்துவிடுவார். ஒருவர் வரவில்லை என்றால், அவருக்குப் பதிலாக மற்றொருவரை பணிக்கு அமர்த்தும் நிர்வாகத்திறனை ஏற்படுத்திக்ெகாள்ளாமல், சமாளித்துச் சென்றால், அதுதான் நிர்வாகச் சீரழிவுக்குக் கொண்டுபோய் விடுகிறது.

கடந்த வாரம் ஓர் அலுவலக நண்பருடன் உரையாடிக்ெகாண்டிருந்தேன். நண்பர் என்பதைவிடச் சகபாடி என்று சொல்லலாம். அநேகமானோருக்கு நண்பருக்கும் சகபாடிக்கும் விளக்கம் தெரியாது; வேறுபாடும் புரியாது. நண்பர் என்பவர் வேறு, சகபாடி என்பவர் வேறு. ஒன்றாகப் பணியாற்றுவோர் எல்லோரும் நண்பர்களாகிவிட முடியாது என்பது என் ஆணித்தரமான கருத்து. நான் மட்டுமல்ல, முனைவர் இறையன்பு போன்ற மேதைகள் உணர்த்துவதும் இதுதான். ஒரே நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வேறொரு நிறுவனத்திற்குப் பணிக்குச் சென்றிருப்பாரென்றால், அவர் உமக்கு நண்பர் என்கிறார் முனைவர் இறையன்பு!

சரி, இந்த நண்பர் என்ன சொல்கிறார்? ஒரு சிக்கலான கட்டத்தில், முடிவு எடுக்கக்கூடிய தகுதி, திறன் அவருக்கு இருக்கிறது. அவரே அந்தப் பணியைச் செய்துவிடவும் இயலுமான திறமை இருக்கிறது. அவர் அந்தப் பணியைச் செய்யத் தயங்கிக்ெகாண்டிருந்தார். ஏன் என்று கேட்டேன். "இல்லை, இங்கு எப்பிடி என்றால், "மண்ணை எடு, மண்வெட்டியைக் கழுவாதே" என்ற கொள்கையில் செயற்படுகிறார்கள். எனது பொறுப்பு மண்ணை எடுப்பது என்றால், அதை மட்டும் செய்! மண்வெட்டியைக் கழுவாதே! என்கிறார்கள்" என்று ஆதங்கப்படுகிறார். பொது மக்களுடன் சம்பந்தப்பட்ட இப்பிடியான அலுவலகத்தில் இது சரியான நடைமுறைதானா? என்று அவர் கேட்கிறார். எனக்கு காயல் ஷேக் முகம்மதுவின் ஈச்ச மரத்து இன்பச் சோலைதான் நினைவுக்கு வருகிறது! இதனோடு சம்பந்தப்பட்ட இன்னுமொரு சுவையான சம்பவத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

Comments