ஐந்து மாணவர்களுடன் இயங்கி வந்த டாட்டன் பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு மூடுவிழா! | தினகரன் வாரமஞ்சரி

ஐந்து மாணவர்களுடன் இயங்கி வந்த டாட்டன் பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு மூடுவிழா!

இங்கிரிய மூர்த்தி   

'மூடப்படும் அல்லது வளர்ச்சி காணாத பாடசாலைகளுக்கு கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து அவற்றை சரியாக செயல்பட வைக்க உதவ வேண்டும். இது அவர்களது கடமை, ஆனால் தாம் விரும்பும் அல்லது 'தமது' அதிபர்கள் பணிபுரியும் பாடசாலைகளுக்கு சென்று குறைகளைக் கேட்டறிந்து அபிவிருத்தி செய்வதையே பெரும்பாலும் காணமுடிகிறது'

மத்துகம, கல்வி வலயத்தின் டாட்டன் பீல்ட் தமிழ் வித்தியாலயத்தை மூடி விடுவதற்கு கல்விப்பகுதியினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தரம் 1 முதல் 5 வரையில் இயங்கி வந்த இப்பாடசாலையில் தரம் ஒன்றில் இரண்டு மாணவர்களும், தரம் இரண்டில் இரு மாணவர்களும், தரம் ஐந்தில் ஒரு மாணவருமாக 5 மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். அதிபர் ஒருவரும் இரு ஆசிரியர்களும் கடமையிலிருந்து வந்துள்ளனர்.

சுமார் 60 வருடங்கள் வரலாற்றைக் கொண்டதாகக் கூறப்படும் இப்பாடசாலையில் கடந்த சில வருடங்களாகவே மாணவர் வரவில் படிப்படியாக வீழ்ச்சியேற்பட்டு தற்பொழுது இந்த நிலையை அடைந்துள்ளது.

இப்பாடசாலைக்கு நேர்ந்துள்ள நிலை குறித்து பெற்றோர் மத்துகம, வலயக் கல்விக் காரியாலய தமிழ் அதிகாரியிடம் கேட்டபோது தமக்கு இது பற்றி எதுவுமே தெரியாது எனக்கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர் 2017.-11.-19ல் மாகாணக் கல்வி அமைச்சரைச் சந்தித்து பாடசாலையை மூடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டபோதிலும் மாகாண கல்வி அமைச்சரிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கப் பெறவில்லையெனத் தெரிவித்த பெற்றோர், மாகாணக் கல்வி அமைச்சரின் ஆலோசனையின் படி வலயக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது பாடசாலை மூடப்பட்டுவிட்டதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்கிருந்த மற்றுமொரு அதிகாரி மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மிகுந்த அதிருப்தியும், வேதனையும் அடைந்த பெற்றோர் 2017.-11-.27ஆம் திகதியிட்ட கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் அமைச்சர் மனோ கணேசனை நேரில் சந்தித்து கூறியதையடுத்து பாடசாலையை மூடிவிடும் நடவடிக்கைகளை தேர்தல் முடிவடையும் வரையில் இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் வலயக் கல்விப் பணிப்பாளரை கடிதமூலம் கேட்டிருந்தார்.

இப்பாடசாலையின் நிலை தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளர் டீ.பீ.எல்.எம். திசாநாயக்கவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாடசாலையின் வீழ்ச்சிக்கு அங்கு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கடமையிலிருந்து வரும் அதிபரே காரணமாகும் என்று கூறினார். மாணவர்களின் கல்விநிலை குறித்து கவனம் செலுத்தி பாடசாலையை முன்னேற்றும் நோக்கத்தைக் கொண்டிராத இவர், தமது முன்னேற்றத்தை மட்டும் கருதி ரியூசன் வகுப்பு நடத்துவதிலேயே கூடுதல் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

அப்பாவி ஏழைப் பிள்ளைகளின் கல்வியைப் பற்றிச் சிந்திக்காத இவர் சமூகத்துக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தி வந்துள்ளார்.

இதனால் இப்பாடசாலையை தொடர்ந்து நடத்திச் செல்வதனால் எந்த ஒரு நன்மையுமே கிடையாது. எனவே பாடசாலையை மூடிவிட மாகாண மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி கற்றுவரும் மாணவர்கள் அருகில் உள்ள கலேவத்த தமிழ் வித்தியாலயத்துடன் இணைத்துக் கொள்ளப்படுவர் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இங்கு கடமையில் இருந்த அதிபர் பாடசாலையை மூடி விடுவதற்காகவே வேலை பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள பிரதேச வாசிகள், எந்தவித முன்னேற்றமும் இல்லாது ஐந்து மாணவர்களுக்கு அதிபர் ஒருவரும், ஆசிரியர்கள் இருவரும் இருந்து பேருக்காக இயங்கிவரும் இப்பாடசாலையை மூடி விடுவதற்கு எடுத்துள்ள தீரமானம் சரியானதே எனவும் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, மத்துகம, ஹொரனை ஆகிய மனித நடமாட்டமும், மனித சஞ்சாரமும் இல்லாத ஒதுக்குப்புறத்தே தொலைவில் 5, 10, 20 என்ற மாணவர்களுடன் தரம் 1 முதல் 5 வரையில் இயங்கிவரும் பெரும்பாலான பாடசாலைகள் எதுவித முன்னேற்றமும் இல்லாது பெயரளவில் இதே நிலையிலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான பாடசாலைகளின் கல்வித்தரம் மற்றும் வீழ்ச்சிக்கு அங்கு கடமையில் இருந்து வரும் அதிபர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து வரும் கல்வி அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளனர். ஏனெனில் அதிகாரிகள் இது போன்ற பாடசாலைக்களுக்கு விஜயம் செய்து அங்கு என்ன நடக்கின்றது? பாடசாலை எவ்வாறு இயங்கி வருகின்றது? என்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. மாறாக தங்களுக்கு விருப்பமான நெருக்கமான அதிபர்கள் இருந்து வரும் பாடசாலைகளுக்கு மட்டும் அடிக்கடி சென்று பார்வையிட்டு பாடசாலை சிறந்த முறையில் இயங்கி வருவதாக குறிப்பெழுதிவிட்டு திரும்பி விருகின்றனர்.

இது போன்ற குறைந்த எண்ணிக்கையுடன் கூடிய மாணவர்களுடன் இயங்கி வரும் பாடசாலைகளில் கடமையிலிருந்து வரும் சில அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு முறையாகவும், நேரத்துக்கும் சமூகந் தராமலும், பாடசாலை நேரத்தில் வெளியிடங்களில் சொந்த அலுவல்களை நிறைவேற்றிக்கொள்வதில் ஈடுபட்டிருப்பதையும், குறிப்பாக சிலர் தனியார் வகுப்புக்களை நடத்துவதிலும், அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழி கற்பித்தலிலும் ஈடுபட்டு வருவதாகவும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் சரி என்ற எண்ணத்துடன மனச்சாட்சிக்கு விரோதமாகவே நடந்து கொள்கின்றனர். இது இவர்கள் சமூகத்துக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

மத்துகம வலயத்தில் சில வருடங்களுக்கு முன்னர் மூடப்படும் நிலையை அடைந்த அன்னாசிகல தமிழ் வித்தியாலயத்தைப் பொறுப்பேற்ற அதிபர் இன்று அந்தப் பாடசாலையை பலரும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றியமைத்து மிகவும் உயர்ந்த ஒரு நிலைக்கு கொண்டு வந்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றுள்ளார். இது எதைக் காட்டுகிறது? திறமைவாய்ந்தவராகவும் சேவை மனப்பான்மையும் சமூக சிந்தனையும் கொண்டவராக இருந்தால் படுத்துக் கிடக்கும் பாடசாலையும் எழுப்பு நிற்கும் என்பதைத்தானே!

அவரது அர்ப்பணிப்பான சேவையும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புமே இதற்கான காரணமாகும். சுகாதாரம், சுற்றாடல், விளையாட்டு, கல்வித் தரம் உட்பட அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வருவதுடன் ஏனைய பாடசாலைகளுக்கு ஒருமுன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய சேவை மனப்பான்மை சமூக உணர்வு எத்தனை அதிபர், ஆசிரியர்களிடம் இருக்கின்றது? மத்துகம பிரதேசத்தில் தமிழ்ப்பாடசாலையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற வேளையில் அதே பிரதேசத்திலேயே இயங்கி வந்த ஒரு பாடசாலையை மூடிவிட எடுத்துள்ள தீர்மானம் கவலைக்குரியதாகும்.

பல வருடங்களுக்கு முன்னர் களுத்துறை மாவட்டத்தின் திரிவானக் கெட்டிய தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் வரவில் ஏற்பட்ட வீழ்ச்சிகாரணமாக மூடப்பட்டது அதே போன்று ஹோமகம கல்வி வலயத்தின் ஹேவாகம தமிழ் வித்தியாலயமும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலையை நடத்திச் செல்வதில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிகமிக அவசியமாகும். மாணவர் வரவில் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமானால், ஆசிரியர், மாணவரின் வரவை அதிகரித்து நடாத்திச் செய்வதில் அக்கறை வேண்டும். இல்லாவிடின் இது போன்ற நிலை ஏற்படுவதை தடுக்கமுடியாத துரதிர்ஷ்ட நிலையே ஏற்படும். ஒரு பாடசாலையை இலகுவாக மூடிவிடலாம். இதனால் புதிதாக ஒருபாடசாலையை இலகுவாக ஆரம்பித்து விடமுடியாது. எனவே, இருக்கும் பாடசாலையை கட்டிகாத்து கொண்டு செல்ல வேண்டியது யாருடைய பொறுப்பு, கடமை என்பதை அவரவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Comments