கச்சதீவு கடவுளின் தீவு | தினகரன் வாரமஞ்சரி

கச்சதீவு கடவுளின் தீவு

கச்சதீவிலிருந்து

விசு கருணாநிதி

"அது சர்வதேச கடல் எல்லை. அதற்கு அப்பால் காணப்படுபவை இந்திய மீன்பிடிப்படகுகள்! அங்கே தெரிபவை இலங்கை மீனவர்களின் படகுகள். அங்கே தெரிவது நெடுந்தீவு! அது நயினாதீவு! இங்கே தெரிவது பாம்பன் பாலம்! இது மன்னார் ஆற்றுப்படுகை! நாம் இங்கே இருக்கிறோம்"

போர்ப்படகின் கட்டுப்பாட்டறையில் உள்ள ராடாரைக் காண்பித்து விளக்கம் தருகிறார் அதன் கப்டன் கொமாண்டர் ஐ.என்.ஜே.புத்திக்க.

போர்ப்படகு என்பதைவிடச் சிறிய கப்பல் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கேசன்துறையில் இருந்து அதிகாலை மூன்று மணிக்குப் புறப்பட்டு கச்சதீவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரே இருள். கச்சதீவுக்குச் செல்கிறோம் என்பது தெரியும், எந்த இடத்தில் பயணித்துக்ெகாண்டிருக்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை. எம்மைப் பின்தொடர்ந்து இன்னொரு போர்ப்படகும் தூரத்தில் வந்துகொண்டிருக்கிறது. அதனைக் கப்டன் லெப்டினன்ற் கொமாண்டர் தினேஷ் கருணாரத்தின செலுத்தி வருகிறார்.

கட்டுப்பாட்டறையில் இருந்து வெளியே வந்த கப்டன் எம்முடன் சிரித்த முகத்துடன் சில நிமிடங்கள் உரையாடிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். நாமிருந்த இடத்தில் ஒரு சில ஊடகவியலாளர்கள்தான் இருந்தனர். ஏனையோர் அங்குமிங்கும் சென்று தகவல் திரட்டுகிறார்கள்போலும்! அநேகமானோர் படம்பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தனர். மேலும் சிலர் படகின் நாலாபுறமும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

கச்சதீவு போவதாகச் சொன்னதும், அலுவலகத்தில், ஏற்கனவே சென்று வந்தவர்கள் சொன்னார்கள், படகு பறக்கும்! கண்ணாடி அது இது ஒன்றும் அணிய வேண்டாம்! நீங்களே தவறி வீழ்ந்தாலும் தெரியாது. படகு அந்தளவு வேகம், டோராப்படகில்தான் உங்களை அழைத்துச் செல்வார்கள் என்றார், ஏற்கனவே அனுபவப்பட்ட லோரன்ஸ்.

எனினும், நாம் சென்ற 'கன்போட்' அப்படி வேகமாகச் செல்வதாகத் தெரியவில்லை. அதனால்தான் ஊடகவியலாளர்கள் அங்குமிங்கும் செல்ல முடிகிறது. எங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி என்பதைப்போல் இருக்கிறது அவர்களின் தைரியம்!

படகில் இருந்த ஒரு கடற்படை மாலுமி அருகில் வந்து, "கப்டன் உங்களை உள்ளே வரச்சொல்கிறார்" என்றார். அப்போதுதான் உள்ளே சென்றேன். விமானத்தின் கட்டுப்பாட்டறை மாதிரியேதான். ஓரிரு ஊடகவியலாளர்களும் பின்னால் நிற்கின்றனர்.

ராடாரைக் காண்பித்து கப்டன் தொடர்கிறார்...

"இப்போது நமது படகு 15 கடல் மைல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இங்கே பாருங்கள்.. இந்த இடத்தில் கடலின் ஆழம் 7.5 மீற்றர்"

உள்ளே இருந்து பார்த்தால் வெளியில் எதுவும் தெரியவில்லை. ராடாரின் துணையுடன்தான் பயணம் தொடர்கிறது. கப்டன் காண்பித்த சர்வதேச கடல் எல்லைக்கருகில் பல படகுகள் காணப்படுகின்றன. அதுபோல், இலங்கைப் பகுதியிலும் படகுகள் காணப்படுகின்றன. பாம்பன் பகுதி சர்வதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கிறது. சந்தேகத்தைத் தீர்த்துக்ெகாள்வதற்கு இதுதான் சந்தர்ப்பம்!

"சர்வதேச கடல் எல்லையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கின்றனவா? ஏதாவது பகுதியில் கூடிக்குறைந்து?" கப்டனிடம் கேட்ட முதல் கேள்வி.

"இல்லை. இங்கே பாருங்கள் இது பருத்தித்துறை! இது இந்தியப்பகுதி. இரண்டு பக்கமும் சம அளவில்தான் இருக்கிறது. பாம்பன் பகுதி சற்று அருகில் இருக்கிறது"

"சர்வதேச கடல் எல்லை துல்லியமாகத் தெரிகிறது. அருகில் இருக்கும் படகுகளும் தெரிகின்றன. பின் ஏன், அத்துமீறும் படகுகளைத் தடுக்க முடிவதில்லை, அதில் என்ன பிரச்சினை?" என்று கேட்க,

"ஒரு பிரச்சினையும் கிடையாது. அங்கே பாருங்கள். எல்லைக்கு அருகில், மிக அருகில்தான் படகுகள் காணப்படுகின்றன. இப்படியல்ல, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வரும்! அப்போது நாம் அவதானித்து அதிவேகப் படகிற்கு அறிவிக்க வேண்டும். சிலவேளைகளில் அதிவேகப் படகு எல்லையை நெருங்குவதற்குள் இந்தியப் படகுகள் மீண்டும் தமது பகுதிக்குச் சென்றுவிடும். இதுதான் நடைமுறைச்சிக்கல்" என்கிறார்.

சென்றுகொண்டிருக்கும் போர்ப்படகு ஒரு சீனத்தயாரிப்பு. 1996இல் காரைநகரில் வைத்து அது தன் கன்னிப்பயணத்தைத் தொடங்கியது என்ற தகவலையும் சொல்கிறார் கப்டன். இதில் நான்கு இயந்திரங்கள் உண்டு. நான்கையும் இயக்கினால்தான் 15 கடல் மைல் வேகத்தில் செல்ல முடியும். அதாவது சுமார் 30 கிலோ மீற்றர் வேகம். சற்று முன்னர் வேகமாக வந்ததே, அப்போது நான்கு இயந்திரங்களும் இயங்கின. டோராப்படகு இதனைவிட வேகமாகச் செல்லக்கூடியது. என்றாலும், எல்லா வேளைகளிலும் அது பயன்படுத்தப்படுவதில்லை. வராத்தில் மூன்று நாட்கள் ரோந்து செல்வது வழக்கம்" கப்டனிடம் உரையாடிவிட்டு மீண்டும் வெளியில் நாம் இருந்த மேல்தளப் பகுதிக்கு வருகிறோம்.

ஒரு மாலுமி சொல்கிறார், "இங்கே பாருங்கள், இந்தப் படகில் நாலாப் பக்கமும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேல் தளத்தில் இரண்டு பெரிய துப்பாக்கிகள்." கீழ்த்தளத்தில் மூன்று பென்னம்பெரிய இயந்திரங்களைப்போன்றவை பக்குவமாக மூடிப் பாதுகாப்பாக இருக்கின்றன.

யுத்த காலத்தில் அவை ஒருபோதும் மூடிவைத்திருக்கப்பட்டிருக்கா! எதற்கும் மாலுமியைக் கேட்போமே.

"இந்தப் படகு யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதா?"

"நிச்சயமாக. பெரும்பங்களிப்பைச் செய்திருக்கிறது"

"இதில் எத்தனைபேர் பயணிக்கலாம், இப்போது எத்தனைபேர் சென்றுகொண்டிருக்கிறோம்? டீசல் கொள்ளளவு எவ்வளவு?" (தேவையில்லாத கேள்விதான். இதனைவிட மொக்ைகயாகவும் சிலர் கேள்வி கேட்டார்கள்). அவர் சொன்னார்.

"இதன் டீசல் கொள்ளளவு 18ஆயிரத்து 520 லீற்றர். இதன் பெயர் ரணவிக்கிரம. ஐந்து அதிகாரிகள், 49 மாலுமிகள் என 54 பேர் பயணிக்கலாம். இப்போது 26 ஊடகவியலாளர்களும் சேர்ந்து செல்கிறோம். அண்ணளவாக 15 கடல் மைல் வேகத்தில் செல்லலாம்" (ஒரு கடல் மைல் என்பது 1852 மீற்றர்) இந்தப் படகு ஒரு தடவைப் பயணத்தை ஆரம்பித்து மீண்டும் திரும்பி வருவதென்றால், சுமார் பத்தாயிரம் லீற்றர் டீசல் எரிந்துவிடும்! மீண்டும் முழுமையாக நிரப்பிக் ெகாண்டுதான் அடுத்த பயணத்தைத் தொடங்க வேண்டும்! என்று மாலுமி விளக்குகிறார். இப்போது புரிகிறது, கடற்பாதுகாப்பு என்பது இலகுவான பணியல்ல. பண விரயம் ஒரு புறம் இருந்தாலும், பயணம் என்பது கரணம் தப்பினால் மரணம்தான்! ஒரு முறை இந்தப் பகுதியில் பயணித்தபோது படகு கவிழ்ந்துவிட்டதாம்! அப்போது அந்தோனியாரே எங்களைக் காப்பாற்று! என்று மன்றாடியதாகவும் அதன்போது உயிர்தப்பி மீண்டதாகவும் அன்றிலிருந்து இற்றைவரை கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்குச் சென்று வருவதாகக் கூறியிருக்கிறார் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன.

உண்மையில் கச்சதீவு திருவிழாவைப் பார்க்கிறோமோ இல்லையோ, இந்தத் தீவைப் பற்றிய பேச்சையும், பிரச்சினையையும் அக்கு வேறு ஆணி வேறாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. சுமார் 286 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இப்படியொரு போட்டியா? அங்குக் குடிப்பதற்கு மட்டும் தண்ணீர் இருக்குமாக இருந்தால், நினைத்தும் பார்க்க முடியாது! சிலவேளை இந்தியா அந்தத் தீவை இலங்கைக்குக் கொடுத்திருக்குமோ என்னவோ!

இந்தத் தீவில் எப்போது சன நடமாட்டம் ஏற்பட்டது என்பதற்குச் சான்றுகள் கிடையா. ஆனால், சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக்ெகாண்டது அங்கு அமைந்திருக்கும் அந்தோனியார் கோவில். ஆரம்பத்தில் மீனவர்கள் அங்குத் தங்கி ஓய்வெடுத்துவிட்டுச் செல்வார்களாம். அத்துடன் தமக்கு ஆபத்து நேர்ந்தபோதெல்லாம் அவ்விடத்தில் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள். எனவே, தம்மைப்பாதுகாத்துக்ெகாள்ளும் அந்த இடத்தில் அந்தோனியார் ஆலயம் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள்.

1974ஆம் ஆண்டு ஜூலை எட்டாந்திகதி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் செய்துகொண்ட ஒப்பதத்தின்படி கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

கச்சதீவு ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். கச்சதீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை. ஆனால், இந்திய மீனவர்கள் கச்சதீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித அந்தோனியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்ற இரண்டு விடயங்களில் மட்டும் உடன்பாடு காணப்பட்டது.

எனினும், இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமாக இருந்த கச்சதீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்ததால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதாகத் தெரிவித்து தமிழக அரசியலில் இத்தீவு பற்றிய சர்ச்சை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. கச்சதீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் சட்ட மன்றத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களைப் பொறுத்தவரை இந்தத் தீவு அல்ல அவர்களின் பிரச்சினை, இலங்கைக் கடற்பரப்பில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது. மற்றையது அவர்களுக்கு ஆழ் கடல் மீன்பிடிக்கான வசதிகள் இல்லை என்றும் சொல்கிறார்கள். இந்திய மீனவர்கள் பொட்டம் ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால், எமது மீன்வளம் அழிவடைகிறது என்கிறார்கள் வட பகுதி மீனவர்கள்!

இவ்வாறான சர்ச்சையை கொண்ட இந்தத் தீவில் வருடத்திற்கொரு தடவை அந்தோனியார் திருவிழா வெகு விமரிசையாக நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளுக்கு இலங்கை இந்திய அரசுகள் அனுசரணை வழங்குகின்றன. அதில் இலங்கை கடற்படைக்கு முக்கிய வகிபாகம் இருக்கிறது. விழாவிற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய பொறுப்பு கடற்படையைச் சார்ந்திருக்கிறது. பக்தர்களைப் போக்குவரவு செய்வது அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுப்பது என்பதெல்லாம் கடற்படையின் பொறுப்பு. இதனிடையேதான் அந்தத் திருவிழாவிற்கு ஊடகவியலாளர்கள் குழுவொன்றையும் அழைத்துச் செல்கின்றனர் கடற்படையினர்.

சூரியோதயம் ஆரம்பமாகிறது. கதிரவனின் பொற்கிரணங்கள் பூமியை நோக்கிப் பாயும் நேரம் நெருங்குகிறது. தூரத்தே அதோ கச்சதீவு தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் கடற்படை இணைப்பாளர்களுள் ஒருவரான கொமாண்டர் தோமரத்தின உற்சாகப்படுத்துகிறார். தூரத்தில் இந்திய மீன்பிடிப்படகுகள் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது. ரணவிக்கிரம கச்சதீவை நெருங்குகிறான்.

இந்தப் போர்ப்படகு கரையருகே செல்ல முடியாது. இன்னொரு விசைப்படகு வந்து எம்மை அழைத்துச் செல்ல வேண்டும். பொதுவாக இந்தப் பயணம் "டேஞ்சர்தான்". வருகின்ற அந்தப் படகில், நின்று நிதானித்துத் தாவிக் குதித்துவிட வேண்டும். 'வோட்டர் ஜெற்'றொன்று எமது படகை(கப்பலை) நெருங்கி வந்துவிட்டது! இரண்டும் ஒன்றுடனொன்று உரசிக்ெகாண்டு நிற்க, நாம் அதில் குதித்துவிடத்தயாராகிறோம். பெண்கள்?

ஒரு தடவைக்கு மேல் கச்சதீவு சென்றுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்குப் பிரச்சினை இல்லை. மற்றவர்களுக்குச் சற்றுச் சிக்கல்தான். அத்தோடு முடிவதில்லை. வோட்டர் ஜெற்றிலிருந்தும் இன்னொரு சவால் இருக்கிறது! அது குதிப்பதல்ல; இறங்குதுறை மேடைக்குத் தாவி ஏற வேண்டும்! அப்பப்பா! போகும்போது ஒருவர் சொன்னார், ஒரு தடவை போகலாம்! இரண்டாவது தடவை ஆர்வமிருக்காது என்று. திவ்வியராஜனின் மொழியில் சொன்னால், அவ்வளவையும் தாங்கினால், கச்சதீவு சோக்குதான்!

எந்தச் சிக்கலும் இல்லாமல் கொண்டுபோய் இறக்கலாம்! சிலவேளை அடுத்த தடவை வரமாட்டார்கள்; வேறு வேறு நபர்களைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று கடற்படையினர் நினைக்கிறார்களோ தெரியவில்லை என்றுகூட மனம் சிந்திக்கிறது. ஏனென்றால், பச்சை மண் முதல் குழந்தைகள் வரைக் கொண்டுவந்திருக்கிறார்கள் பொதுமக்கள். இலங்கையிலிருந்தும் சரி இந்தியாவிலிருந்தும் சரி பெண்கள் சிறுவர்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் கடற்படையினர்தான் உதவுகிறார்கள்.

இறங்கிவிட்டோம்! மூன்றரை மணித்தியாலத்திற்குப் பின்னர் கால்கள் தரையைத் தழுவுகின்றன.

கச்சதீவு!

இந்தத் தீவுக்காகச் சண்டைபிடித்துக்ெகாள்வதில் சூட்சுமம் இருக்கத்தான் செய்கிறது!

(அடுத்தவாரம் தீவில் சந்திப்போம்)

Comments