கண்ணிவெடி தொடரும் அச்சுறுத்தல் | தினகரன் வாரமஞ்சரி

கண்ணிவெடி தொடரும் அச்சுறுத்தல்

மகேஸ்வரன் பிரசாத்   
 

‘2020ல்கண்ணிவெடி அச்சுறுத்தல் அற்ற இலங்கை’ என்ற இலக்கை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. முப்பது வருடங்களாகப் புரையோடிப்போயிருந்த யுத்தத்திலிருந்து கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் மீண்ட இலங்கையால் கண்ணிவெடி ஆபத்திலிருந்து முழுமையாக மீளமுடியாதுள்ளது. காணிகளைத் துப்பரவாக்கும்போதும், விவசாயக் காணிகளுக்குச் செல்லும்போதும் ஆங்காங்கே புதைந்திருக்கும் கண்ணிவெடிகள் வெடிக்கத்தான் செய்கின்றன. கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவது என்பது சவால் மிக்க இலக்காக இருந்தாலும் அரசாங்கம் இதுவிடயத்தில் முனைப்புக் காட்டியுள்ளமை சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற பகுதிகள், முன்னரங்கங்களாக இருந்த இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் விடுதலைப் புலிகள் என இரு தரப்பாலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து 9 வருடங்களாகியும் இவற்றை அகற்றுவது சவால் மிக்கதாகவே இருக்கிறது. குறிப்பாக வடக்கின் முகமாலை, கிளாலி உள்ளிட்ட இடங்களில் கணிசமான பகுதிகள் கண்ணிவெடிகளுடன் காணப்படுகின்றன. இவற்றை அகற்றும் சவால்கள் தனியார் கண்ணிவெடி அகற்றும் அமைப்புக்களாலும், இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஆறு சர்வதேச நிறுவனங்கள் செயற்படுகின்றன. டனிஷ் கண்ணிவெடி குழு, பவுன்டேஷன் சுவிஸ் டீமைனிங் (எப்.எஸ்.டி), ஹலோ டிரஸ்ட், ஹொரிசோன், மைன் அட்வைசரி குரூப், சர்வார்த், ஷார்ப், டாஷ் போன்ற அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன.

'2020ல் கண்ணிவெடி அச்சம் அற்ற நாடு' என்ற இலக்கை அடைவதற்கு வடக்கு, கிழக்கில் 23 சதுர கிலோ மீற்றர்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றவேண்டியிருப்பதாகக் கூறுகிறார் தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையத்தின் செயற்பாட்டு அதிகாரி டிலான் இதமல்கொட.

“மொத்தமாக கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் முகமாலையில் 11.51 சதுர கிலோமீற்றர் உள்ளது. இரு தரப்பினதும் எல்லைப் பகுதியாக இது மாறி மாறி இருந்தமை இதற்கு பிரதான காரணமாகவுள்ளது. அவ்வப்போது எல்லைப் பகுதி மாறியதால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவது கடினமானதாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக பாதுகாப்பு எல்லையை மையமாகக் கொண்டு கண்ணிவெடிகளைத் தேடிச்சென்று அகற்றுவது வழமை. எனினும், முகமாலை பகுதியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இரு தரப்பும் மாறிமாறி கண்ணிவெடிகளைப் புதைத்திருப்பதால் முழுப் பகுதியையும் உன்னிப்பாக அவதானித்தே கண்ணிவெடிகளை அகற்றவேண்டியுள்ளது. இதனாலேயே மிகவும் காலதாமதமாகின்றது. இருந்தபோதும் 2020ஆம் ஆண்டில் முழுமையாக கண்ணிவெடிகளையும் அகற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சின் கீழ் உள்ள தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது. உள்ளூர் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணித்தல், அந்த அமைப்புக்களுக்கு இலக்குகளை வழங்குதல், கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை மீள் உறுதிசெய்தல், மீள்குடியேற்றம் பற்றிய தீர்மானங்களை எடுத்தல் போன்ற விடயங்களில் இது பங்காற்றி வருகிறது. கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள், மாவட்ட செயலகம் போன்ற அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வது என்பதும் இதன் பணியாகும்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் கண்ணிவெடி அகற்றவேண்டிய இடங்களில் மாத்திரம் தடை காணப்படுகிறது. எவ்வாறான சவால்கள் இருக்கின்றபோதும் அவற்றை அரசாங்கம் வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளது. இதுவிடயத்தில் அரசாங்கம் காண்பித்துவரும் அக்கறை அல்லது முனைப்பு சர்வதேசத்தினாலும் பாராட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடிகளை தடைசெய்வதற்கான சாசனத்தின் விசேட தூதுவர் ஜோர்தான் இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசைன் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த விசேட பிரதிநிதி ஹுசைன் கடந்த செவ்வாய்க்கிழமை முகமாலைக்குச் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டிருந்தார். ​ெஹலிக்கொப்டர் மூலம் முகமாலையைச் சென்றடைந்த அவர், முகமாலை கிளாலி களப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

“கண்ணிவெடி அகற்றும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. கண்ணிவெடி அகற்றும் விடயத்தில் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியான ஆர்வம் உள்ளது என்பதை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறப்பான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் சாட்சியாக அமைந்துள்ளன” என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

'2020 இல் கண்ணிவெடி அச்சுறுத்தல் அற்ற நாடு' என்ற இலக்கை அடையமுடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் முன்னேற்றகரமான இந்த செயற்பாடுகள் சர்வதேச மட்டத்திலிருந்து உதவிகளைக் கிடைக்கச் செய்யும் என்றும் தெரிவித்தார்.

முகமாலைப் பகுதிக்குச் சென்றிருந்த விசேட பிரதிநிதியுடன், அமைச்சர் சுவாமிநாதனும் பங்கேற்றிருந்தார். விசேட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரை கண்ணிவெடி அகற்றும் பகுதியில் வரவேற்றிருந்த இராணுவ பொறியியல் படையணியின் தளபதி பிரிகேடியர் அமித் செனவிரட்ன, இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவால் முன்னெடுக்கப்படும் பணிகள் பற்றிய விளக்கத்தை வழங்கினார்.

இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினால் 2017ஆம் ஆண்டி டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 1,233.368 கிலோ மீற்றர் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்தப் பிரிவு உட்பட ஏனைய கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களால் இதுவரை மனிதர்களுக்கு எதிரான 735,444 கண்ணிவெடிகளும், இராணுவ தாங்கிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் 2,073 கண்ணிவெடிகளும், ஏனைய 556,385 வெடிக்கும் பொருட்களும் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

வடபகுதியில் மீட்கப்பட்ட கண்ணிவெடிகளில் பீ-4 மார்க் 2 கண்ணி வெடிகளும், விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ரங்கன் இன கண்ணி வெடிகளுமே அதிகமாக இருக்கின்றன என கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஷார்ப் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சரத் ஜயவர்த்தன கூறினார். சாதாரணமாக 15 சென்டிமீற்றர் ஆழத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். உலோகம் கண்டுபிடிக்கும் கருவி, மோப்ப நாய்கள் என்பவற்றைப் பயன்படுத்தி கண்ணிவெடி அடையாளம் காணப்பட்டு, குறித்த பகுதி மிக அவதானமாக சுத்தப்படுத்தப்பட்டு கண்ணிவெடி அகற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். முகமாலை பகுதியில் கணிசமான கண்ணிவெடிகள் இருப்பதால் இயந்திரங்களைவிட கைகளைப் பயன்படுத்தியே அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆங்காங்கே தவறவிடப்பட்ட சில கண்ணிவெடிகளால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறத்தான் செய்கின்றன. கண்ணிவெடிகளால் கைகால்களை இழந்தவர்களை விசேட தூதுவர் ஹுசைன் தனது முகமாலை விஜயத்தின்போது பார்வையிட்டிருந்தமை விசேட அம்சமாகும். அவயங்களை இழந்த நிலையிலும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை தளரவிடவேண்டாம் என்றும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

விசேட பிரதிநிதியுடன் முகமாலை சென்றிருந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவருடைய விஜயத்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். 2020இல் கண்ணிவெடி அச்சுறுத்தல் அற்ற இலங்கையாக மாற்றுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக விசேட தூதுவர் ஜோர்தான் இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசைன் உறுதியளித்திருப்பதாகவும், கண்ணிவெடிகளை அகற்றுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடர்பில் திருப்தியடைந்துள்ளதுடன், அரசின் செயற்பாடுகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் கூறினார். எதிர்கால கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசேட பிரதிநிதியுடன் இணைந்து கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்திருந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கத் தயார் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

கண்ணிவெடி அகற்றப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளை துப்பரவாக்கும்போதே பலர் வெடிவிபத்துக்களில் சிக்கியுள்ளனர்.

“காணியைத் துப்பரவாக்கும்போதே கண்ணிவெடி வெடித்தது. இதனால் எனது கால் ஒன்றை இழக்க நேர்ந்தது. கவனயீனமாக இருந்தமையே இதற்கு காரணமாக அமைந்தது எனக் கூறினார் பாதிக்கப்பட்டவரான மலர்.

மலரைப் போன்று பலர் காணிகளைத் துப்பரவாக்கச் சென்று கைகளையும் கால்களையும் இழந்துள்ளனர். முகமாலைப் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் செல்வராசா வலது காலையும், வலது கண்ணையும் கண்ணிவெடியால் இழந்துள்ளார். அவரும் தனது காணியை கவனயீனமாகத் துப்பரவாக்கச் சென்றே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

“எம்மைப் போன்று ஏனையவர்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு கண்ணிவெடி அகற்றும் பணி மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட எமக்கு மாதாந்தம் அரசாங்கத்தினால் 3000 ரூபா மாத்திரம் வழங்கப்படுகிறது. இது எமது வருமானத்துக்குப் போதுமானதாக இல்லை. எனவே நான் சைக்கிள் கடையொன்றை வைத்திருக்கிறேன்” என்றார் செல்வராசா.

கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவனாக 15வயது சிறுவன் அமுதன் காணப்பட்டான். அவரை நெருங்கி அவருக்கு ஏற்பட்ட அனர்த்தம் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம்.

“2005ஆம் ஆண்டு நண்பர்களுடன் மணல் கும்பியில் விளையாடிக்கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டது. சுத்தியலால் அடிக்கும்போது கண்ணிவெடி வெடித்தது” என்றான் அமுதன். அமுதனின் இரண்டு கைகளிலும் நான்கு விரல்கள் கண்ணிவெடியால் இழக்கப்பட்டுள்ளன.

இரு கைகளிலும் நான்கு விரல்களை இழந்த அமுதன் தனது விடா முயற்சியால் கல்வியை கைவிடவில்லை. எஞ்சிய இரு விரல்களாலும் பேனையைப் பிடித்து எழுதப்பழகி படிப்பைத் தொடர்ந்து வருகின்றான். பாடசாலையில் ஏனைய மாணவர்களைப் போல வேகமாக தன்னால் எழுத முடியும் என்றும், பரீட்சைகளில் தனக்கு எந்தவித விசேட கவனமும் தேவையில்லையென்றும் கூறினான்.

அமுதன் போன்று வயது வித்தியாசமின்றி பலரும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகோர்க்கும் அமைப்பாக யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் காணப்படுகிறது. வடக்குக்குச் சென்றிருந்த விசேட பிரதிநிதி ஹுசைன் இந்த நிறுவனத்துக்கும் சென்று உதவிப் பொருட்களை வழங்கியிருந்தமை சிறம்பம்சமாகும்.

யுத்தத்தினால் கால்களை இழந்தவர்களுக்கு ஜெய்பூர் கால்களை வழங்குவதில் கணிசமான பங்களிப்பை இந்த நிறுவனம் செய்து வருகின்றது. 1987ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்து, கடந்த 30 வருடங்களில் 7000ற்கும் அதிகமானவர்களுக்கு செயற்கை கால்களை பொருத்தியிருப்பதாக யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் டொக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

ஆரம்ப காலத்தில் அலுமினியத்தினாலான செயற்கைக் கால்களைப் பொருத்தியபோதும் ஐ.சி.ஆர்.சியின் பயிற்சி மற்றும் பங்களிப்புடன் ஜெய்பூர் கால்களைப் பொருத்தி வருகின்றோம். வயது வித்தியாசம் இன்றி வரும் அனைவருக்கும் செயற்கைக் கால்களைப் பொருத்துவதாகவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அளவு எடுக்கப்பட்டு தனித்துவமான முறையில் கால்கள் தயாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் வீதி விபத்துக்களால் கால்களை இழப்பவர்கள் தற்பொழுது தமது நிலையத்துக்கு வருவது அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், தமது நிலையத்தில் சிகிச்சைபெற்ற மாணவர்களின் கல்விக்கும் தாம் உதவி வருவதாகக் கூறினார்.

இதுபோன்று மக்கள் அவயவங்களை இழக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவர கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

 

Comments