சுற்றுலாத்தலங்களாக மலினப்படுத்தப்படும் உலக புராதன புனிதப் பிரதேசங்கள் | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாத்தலங்களாக மலினப்படுத்தப்படும் உலக புராதன புனிதப் பிரதேசங்கள்

லோரன்ஸ் செல்வநாயகம்

(பட உதவி- கிண்ணியா ரிபாய்ஸ்)

திருமுழுக்கு யோவான் வாழ்ந்த பிரதேசமென ‘கைட்’ ஹனி காட்டிய ஒரு ஒற்றையடிப்பாதையூடாக இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற இடத்திற்குச் சென்றோம்.
அங்கு மண்டபங்களை போன்ற சில கட்டிடங்கள் காணப்பட்டன. இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற ஜோர்தான் நதி நீரின்றி வரண்டு காணப்பட்டது. அதனைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன.

அந்த புனித பிரதேசத்தைப் பாதுகாக்கும் வகையில் உட்புறம் எவரும் செல்லமுடியாதவாறு கயிறுகளால் பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன. அருகிலிருந்த மேட்டுப் பகுதியிலிருந்து நான் அந்த இடத்தைப் பார்த்து முழந்தாளிட்டு பிரார்த்தனை செய்தேன். கையை நனைப்பதற்குக் கூட அங்கு நீரின்றி வரண்டு காணப்பட்டது. அங்கிருந்து நாம் தற்போது திசைதிருப்பப்பட்டு ஜோர்தான் -இஸ்ரேல் எல்லையாக்கப்பட்டிருந்த ஜோர்தான் நதிக்கரை நோக்கி நடந்தோம்.

மிகவும் அமைதியான ஒரு ஒற்றையடிப் பாதை இரு மருங்கிலும் பற்றைகள் வறட்சியினால் காய்ந்திருந்தன. நாம் அந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தபோது ‘கைட்’ ஹணி எம்மிடம் “இது இயேசு கிறிஸ்துநாதர் கால்பதித்து நடந்த பாதை இதனூடாக நடந்து செல்லும்போது மிக மெதுவாக அடியெடுத்துவைத்து அமைதியாக ஒரு தியான நிலையில் செல்வது நல்லது” எனக் கூறி அவர் அது போன்றே நடந்து காட்டினார்.

சில நிமிடங்களுக்குப்பின் நாம் ஜோர்தான் நதிக்கரையை அடைந்தோம். அங்கு முன்பகுதியிலேயே இயேசுநாதரின் திருமுழுக்கு ஆலயம் காணப்பட்டது. அதற்கு அருகிலேயே ஜோர்தான் படையினரின் முகாம் அமைந்திருந்தது. நாம் அங்கு சென்ற போது ஆலயத்தைப் பராமரிக்கும் ஒருவரும் படையினரும் மட்டுமே காணப்பட்டனர். வேறு எவரையும் காணவில்லை.

ஆலயத்திலிருந்து நதிக்கரை நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் இறங்கி நடந்தோம். படிக்கட்டுக்கள் முடிவடையும் இடத்தில் தடாகம் போன்ற உருவில் அமைந்துள்ள “புனித நீர்த்தொட்டி ‘ஹொலிவோட்டர்’ காணப்பட்டது. அதனைக் கடந்து செல்கையில் படைவீரர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ஜோர்தான் நதியின் மறுபுறத்தில் இஸ்ரேல் எல்லை தெரிகிறது. பார்க்கும் தூரத்தில் மிகக்குறைந்த தூரத்தில் அக்கரை காணப்பட்ட போதும் எம்மால் பார்க்க மட்டுமே முடிந்தது. அப்பிரதேசத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கிடையாது. இரு பக்கத்திலும் துப்பாக்கிகள் ஏந்திய இராணுவத்தினர் கடமையில் இருந்தனர்.

நாங்கள் சென்ற சமயம் மறு கரையில் திருமுழுக்கு (ஞானஸ்தானம்) இடம்பெற்றது. சுமார் 50 பேர் அளவில் வெள்ளை உடைதரித்து திருமுழுக்குப்பெற்றனர். அங்குள்ள கறுப்பு உடை தரித்த பாதிரியார் ஒருவர் கையில் ஒலிவ் கிளைகளை வைத்திருந்தார். அவர் நதியில் அக்கிளைகளைத் தொட்டு திருமுழுக்குப் பெற வருபவரின் தலைகளிலே அந்த நீரைத் தெளித்து சிலுவை அடையாளம் இடுகிறார். திருமுழுக்கு பெற்றவர்கள் வரிசையாக நதியில் மூழ்கி குளித்துவிட்டு கரையேறுகின்றனர். அங்கு ஒரு பூசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் பிரமாண்டமானதொரு படை முகாம் காணப்பட்டது. இஸ்ரேல் பலஸ்தீன தேசிய கொடிகள் இங்கிருந்து பார்க்க தென்பட்டன.
நான் எம் அருகில் நின்ற படைவீரரிடம் அக்கரைக்குச் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். அந்த நதியின் நடுப்பகுதியில் ஒரு கயிற்றுத் தடுப்பு போடப்பட்டிருந்தது. அதற்கு அப்பால் இஸ்ரேல் நாடு. என்றும் அந்த தடுப்புக்கு இப்பகுதியே ஜோர்தானுக்கு சேர்ந்தது என்றும் விளக்கிய அவர். அந்த தடுப்புக்கு அப்பால் சென்றால் துப்பாக்கியால் சுட நேரிடும் என்றும் தெரிவித்தார்.

நாம் இப்பக்கம் இருந்தே அங்கு நடக்கின்றவற்றைப் பார்த்து விட்டு தடாகத்தில் இருந்த ஹொலி வோட்டரை போத்தலொன்றில் நிரப்பிக்கொண்டு திரும்பினோம். படியேறி மேற்புறத்துக்கு வந்து ஆலயத்தைத் தரிசித்தோம். அச் சமயம் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் ஜோர்தான் நதிக்கரையை தரிசிக்க வந்துகொண்டிருந்தார்கள்.
பல நாடுகளிலிருந்து வருகை தந்த அவர்களுடன் நாம் உரையாடினோம்.

இயேசு நாதர் திருமுழுக்குபெற்ற ஜோர்தான் நதிக்கரை, அவர் வாழ்ந்த, கால்பதித்த பகுதிகள், அவர் பிரசங்கம் செய்த இடங்கள் ஆலயங்கள் என பல முக்கிய இடங்களை நாம் தரிசிக்கக் கிடைத்த போதும். தங்கியிருக்கும் போது எதிர்பார்த்த பக்தி வரவில்லை. சுற்றுலாப் பயணிகள் போல் அவற்றைப் பார்த்து விட்டுவருவது போல் ஒரு உணர்வே இருந்தது.

அதற்குக் காரணம் அந்த இடங்கள் பக்தி ஏற்படுவது போலல்லாமல் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வர்த்தகக் காட்சிப் பொருட்கள் போன்றே காட்டப்படுகின்றன. நாம் பக்தியை பலாத்காரமாக வரவழைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

உண்மையில் பக்தி விசுவாச பூமியாக பராமரிக்கப்படவேண்டிய இடங்கள் சுற்றுலாத்துறை வசதிக்கேற்ப காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ளமை கவலை தருகிறது.
ஜோர்தானைப் பொறுத்தவரையில் சாக்கடல், மோயீசன் மற்றும் ஆபிரகாமின் மலைகள் வரலாற்று இடங்கள் அனைத்துமே சுற்றுலாத்துறை மையங்களாகவே உள்ளன. அதன் மூலம் ஜோர்தானுக்குப் பெரும் வருமானம் கிடைக்கின்றது.

நாம் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பிரதான வீதிக்கு வந்தபோது நுவரெலியா ஹட்டன் பகுதிகளில் வீதியோரங்களில் சிறுவர் மரக்கறி விற்பனை செய்வது போன்றே இங்கும் சிறுவர் மரக்கறி விற்பனையில் ஈடுபடுவதைக் கண்டோம். அப்பகுதியில் விவசாயம் செய்யப்படுகின்றது. மிக அதிகமாக உரம், கிருமிநாசினிகள் உபயோகிக்கப்படுகின்றதோ என்னவோ கத்தரிக்காய், “கோளிப்பளவர்”, கோவா போன்ற மரக்கறிகள் வியக்கத்தக்க விதத்தில் மிகப்பெரிதாகக் காணப்பட்டன. அந்தளவு பருமானான கத்தரிக்காயை நான் இதுவரை கண்டதேயில்லை.

எமது அடுத்த நாள் நிகழ்ச்சி நிரலில் காலையில் ஒரு பிரபலமான இஸ்லாமிய பள்ளி வாசலுக்குப் போவதாக இருந்தது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்புடைய ஒரு புனித பிரதேசத்திற்குப் பயணிக்கவிருந்தோம்.

ஜோர்தான் அமைதியின் பூமி எனப்போற்றப்படுகிறது. அங்குள்ள மக்கள் அருளைப் பெருமையாகக் கூறி மார்த்தட்டிக் கொள்கின்றார்கள். ஜோர்தானின் டெரஸ் பகுதியில் நாம் சந்தித்த அறிஞர் ஒருவர் (அல்டாப்) “ஜோர்தான் ஒரு அமைதியின் நாடு. இங்குள்ள மக்களும் அமைதியாக வாழ்க்கை நடத்துகின்றனர். அதேபோன்று அயல் நாடுகளிலிருந்து மோதல்களில் பாதிக்கப்பட்டு இங்கு வருபவர்களுக்கும் இந்த நாடு அடைக்கலம் வழங்கி அவர்களையும் சந்தோஷமாக வாழ வைத்துள்ளது.

ஜோர்தானைச் சுற்றியுள்ள அயல்நாடுகளிலெல்லாம் தொடர்ச்சியாக யுத்தமும் மோதல்களும் தலைவிரித்தாடுகையில் நடுவிலுள்ள ஜோர்தான் மிக அமைதியாக காட்சியளிக்கின்றது. இங்குள்ள மக்கள் மிக நேர்மையானவர்கள் எதையும் அபகரித்துக் கொள்ள ஆசைப்படாதவர்கள் அனைவரையும் அணைத்துக் கொண்டு வாழ விரும்புவார்கள். அதனால் தாமும் தம்பாடும் என ஒவ்வொருவரும் அமைதியாக வாழ முடிகிறது என்றார்.            

 

(தொடரும்) 

Comments