பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள் புதிய உள்ளூராட்சி மன்றங்களால் உறுதிப்படுத்தப்படுமா? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட மக்களுக்கான சேவைகள் புதிய உள்ளூராட்சி மன்றங்களால் உறுதிப்படுத்தப்படுமா?

கந்தையா விக்னேஸ்வரன் 

மலையக சமூகத்தின் அவிபிருத்தி நிலை இன்னமும் தாமதமாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்னவென்று பல துறைசார் ஆய்வாளர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏன் எமது சமூகத்தின் தெரிவு செய்யப்பட்ட மற்றும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரம் மிக்க அமைச்சர்களும் காலத்துக்குகாலம் அறிக்கைகளினூடாகவும் விவாதங்களினூடாகவும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், இது வரையும் ஏங்கி நிற்கும் அவிருத்திபணிகள் மலையக பிரதேசத்தில் எட்டாக் கனியாகவே திகழ்கின்றது. அதுவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமே மிகவும் மோசமான நிலைமையில் காணப்படுகின்றது.

எமது நாட்டின் ஆட்சியானது நான்கு அடுக்குகளாக ஆளப்படுகின்றது. ஜனாதிபதி, பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்கள் என வகைப்படுத்தி பார்க்கும்போது எத்தனையோ பணிகளைச் செய்து முடிக்க முடியும். ஆனால் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் அனைத்தும் அப்படியே நிலைகுலைந்த நிலையில் காணப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. காலத்துக்குக்காலம் தேர்தல்கள் வரும் போது வாக்குகளை ஏமாற்றி வாங்கும் நிலைமை மாறவே இல்லை.

எமது சமூகத்தில் அதுவும் எம் பெருந்தோட்ட மக்கள் வாழும் தோட்டப் பகுதிகளில் எந்தவித பயன்பாடும் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்காகத் தோட்டப் புறங்களை சார்ந்த மக்களின் வாக்குகளை மாத்திரம் சூறையாடுகிறார்கள். வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும், எமது இனத்தின், சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தோட்ட மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வாக்களிக்கின்றனர். பிரதிநிதிகளையும் தெரிவுசெய்கின்றனர். ஆனால், அதில் எவ்வித பயனும் தோட்ட சமூகத்திற்கு கிடையாது. நகர மற்றும் கிராமவாசிகளுக்கு கிடைக்கும் எந்தச் சலுகையும் தோட்ட சமூகத்திற்கு கிடைப்பதில்லை.

குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களினூடாக தோட்டப் பகுதிகளில் பொதுச் சுகாதாரம், திண்மக் கழிவகற்றல், கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும், வடிகாலமைப்பு வசதிகள், வீதி விளக்குகளைப் பொருத்துதல், சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும், விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும், நூலக வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், பொது மலசலக்கூடங்களை அமைத்தலும் பராமரித்தலும், கிராமிய நீர் விநியோகம், பொது நீராடல் நிலையங்களை அமைத்தல், தீயணைப்புச் சேவைகள், தாய் சேய் நலப்பணி, பிரதேசத்தினை அழகுபடுத்தல், சுத்தம் பேணுதல், மக்களின் தேவைக்கேற்ப பொதுக் கட்டடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும், தொற்றுநோய் தடுத்தல், வறியோருக்கான நிவாரணப் பணிகள், மற்றும் திடீர் அனர்த்த முகாமைத்துவ பணிகள் எனப் பல சேவைகளை பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கு இச் சேவைகள் வழங்கபடுகின்றனவா? அல்லது இப்பணிகளை பெருந்தோட்டப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த ஏதேனும் சட்டங்கள் உள்ளூராட்சி மன்றங்களில் உள்ளனவா? இல்லை என்று கூறக்கூடிய நிலைதான் காணப்படுகின்றது. ஏனென்றால், இப் பணிகள் பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதில்லை. எதிர்வரும் காலங்களிலாவது புதிய சட்டத்திருத்தத்திற்கு அமைவாக இவைகள் நடைமுறைப்படுத்தபடுமா? என்ற ஏக்கத்துடன் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களில் எமது ஜனநாயக நாட்டில் பத்தாயிரம் அல்லது அதற்கும் குறைவான சனத்தொகையைக் கொண்ட பிரதேசங்களுக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் உட்பட நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை வலப்பனை, ஹங்குராங்கத்தை பிரதேச சபைகள் அடங்களாக மொத்தம் 5 பிரதேச சபைகளே இருந்தன.

புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படும் போது நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப 12 க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என மலையக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல வழிகளில் கோரிக்கைகளை சமர்ப்பித்ததன் பயனாக பல இன்னல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச, நகர சபைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் அம்பகமுவ பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய புதிய சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்பட்டு, நுவரெலியா, கொட்டகலை, அக்கரபத்தனை ஆகிய மூன்று பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், வலப்பனை, கொத்மலை, அங்குராங்​கெத்தை, ஹட்டன் டிக்கோயா நகர சபை, லிந்துல நகர சபை மற்றும் நுவரெலிய மாநகர சபை உள்ளடங்களாக 12 உள்ளூராட்சி மன்றங்கள் வடிவமைக்கப்பட்டு, வட்டார தேர்தல் மூலம் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் தனி வட்டாரங்கள் மற்றும் இரட்டை வட்டாரங்களில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் தொகைக்கு ஏற்ப விகிதாசார முறையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். குறிப்பாக இவற்றுள் பெண்களின் பிரதிநிதித்துவ பாதுகாப்புக்காக 25 சதவீதம் பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை உள்ளூராட்சி மன்றங்கள் புதிதாக உருவாக்கப்பட்டாலும், எத்தனை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களினூடாக முழுமையான சேவையை வழங்க முடியுமா? என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

எனினும், எமது அரசியல் தலைமைகள் புதிதாக அதிகரிக்கப்பட்ட (உருவாக்கப்பட்ட) உள்ளூராட்சி மன்றங்களினூடாக தோட்டப்புறமக்களுக்கு முழுமையான சேவையை பெற்றுக்கொடுக்க இன்னும் சில ஆட்சிக் காலத்தினைப் போராட்டங்களுக்கும், விவாதங்களுக்கும் செலவிட வேண்டிய நிலை நிச்சயமாக காணப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

சில சமயங்களில் கடந்த காலங்களைப் போலவே எமது பெருந்தோட்ட சமூக வாக்காளர்கள் வெறுமனே வாக்கு பதிவு செய்வதற்கு மாத்திரம் உள்ளூராட்சி மன்றம் எனும் நிலை காணப்படும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இருப்பினும் கடந்த காலங்ளைப்போல எமது மக்களை சுலபமாக ஏமாற்றி விடவும் முடியாது. காரணம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அதிகனமானோர் பெருந்தோட்ட மக்கள் வாழும் வட்டாரங்களில் இருந்தே தெரிவாகியுள்ளனர்.

அவ்வுறுப்பினர்கள் முழுமையான சேவைவையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்காத விடத்து எதிர்காலத்தில் ஏனைய அரசியல் ஆட்சிகளுக்கும் பிரதிநிதித்துவ தெரிவுகளுக்கும் பாதகமான நிலையை உருவாக்கும். எனவே நல்லாட்சியை விரும்புவோர் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர்.

குறிப்பாக எமது பெருந்தோட்ட சமூகத்திற்க்கு உள்ளூராட்சி மன்றத்தின் முழுமையான சேவையை பெற்றுக் கொடுத்து நல்லாட்சியை நிலை நிறுத்த வேண்டும்.

Comments