அக்கரப்பத்தனை சின்ன தோட்டத்தில் ஆரம்பமான பழைய லயன் வீடுகளை இடிக்கும் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

அக்கரப்பத்தனை சின்ன தோட்டத்தில் ஆரம்பமான பழைய லயன் வீடுகளை இடிக்கும் திட்டம்

ட்ரஸ்ட் தலைவர் புத்திரசிகாமணி சம்மட்டியால் அடித்து நொறுக்குகிறார்...

15 வருட பழைமைவாய்ந்த மலையக பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வரும் லயன் வீடுகளை இடித்து, தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்துவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்பின் பேரில் லயன் வீடுகளை அழிக்கும் திட்டம் கடந்த முதலாம் திகதியன்று அக்கரபத்தனை - சின்ன தோட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்தோட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் 72 வீடுகள் அடங்கிய புதிய கிராமம் அமைக்கப்பட்டு அதற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, வீதி போக்குவரத்து வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சின்னத்தோட்டத்தில் புதிய வீட்டுத்திட்டம் 

72 வீடுகளையும் பெற்ற குடும்பங்கள் பழைய லயன் வீடுகளிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வந்தனர். எனவே இந்த லயன்களை இடிப்பது என முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அழிக்கும் திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வடிவேல் புத்திரசிகாமணி தலைமையில் கடந்த முதலாம் திகதி நடைபெற்றது. கடந்த பொதுத் தேர்தலில் லயன் வீடுகள் அழிக்கப்படும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு லயன் அறைகள் இடிக்கப்படுகின்றன. தேயிலைச் செடிகளை பிடுங்கி எறிந்து வீடுகளை அங்கே வீடுகளை அமைப்பதற்குப் பதிலாக பழைய லயன் அறைகளை இடித்து அப்புறப்படுத்தி அவ்விடத்தில் புதிய வீடுகளை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக இதுவரை ஐயாயிரம் வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாலாயிரம் வீடுகள் கட்டப்படுவதுடன் மேலும் பத்தாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

எவ்வாறான இடையூறுகள் வந்தாலும் பழைய லயன் அறைகளை உடைக்கும் திட்டம் கைவிடப்பட மாட்டாதென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அக்கரபத்தனை - சின்ன தோட்டத்தின் முகாமைத்துவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த லயன் இடிப்பு திட்டம் இடம்பெற்றது.

2002 காலப்பகுதியில் மாடிவீடு அமைக்கும் திட்டத்தை முன்வைத்த ஆறுமுகன் தொண்டமான், பழைய லயன் குடியிருப்புகளை இடித்துவிட்டு அதன் அருகே புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். பின்னர் மாடி வீட்டுத் திட்டம் தோல்வியடைந்தது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

Comments