உள்ளத்தின் கதவுகள் கண்களடா! | தினகரன் வாரமஞ்சரி

உள்ளத்தின் கதவுகள் கண்களடா!

சித்திரைப் புது வருடப் பரபரப்பு தணிந்து எல்லாரும் அவங்கவங்க தொழிலைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலான பெரும்பான்மை சகோதரர்கள் கடந்த பத்தொன்பதாந்திகதிதான் புத்தாண்டுக்குப் பிறகு புதிதாகத் தொழிலை ஆரம்பிச்சிருக்கிறாங்க. இது தெரிஞ்ச விசயந்தானே என்று நீங்கள் நினைக்கக்கூடும். உண்மைதான். நீங்கள் தெரியாத விசயங்களும் இருக்கு என்றதைச் சொல்லத்தான் இந்த ஆரம்பம்!

ஏனென்று சொல்லிச் சொன்னால், இந்தச் சாத்திரம், சூத்திரமெல்லாம் எல்லாத் தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும் பொருந்தாது. அதிலும் கடமையே கண்ணும் கருத்துமாக செயற்படுகிறவர்களுக்கு எந்த விதத்திலும் பொருந்திப்போகாது. பதவிகளில் இருந்துகொண்டு தங்கட பொறுப்புகளை மற்றவங்களிற்ற விட்டிட்டுத் தேகப்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யிறவங்கள்தான் சாத்திரம் சுபநேரம் எல்லாத்தையும் சரிவர பின்பற்ற முடியும்.

சில நிறுவனங்கள்ல அடி மட்டத்திலை உள்ளவங்கள்தான் அந்த நிறுவனத்தையே இயக்குவதாக நினைத்துக் ெகாள்வார்கள். போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்றால், அங்குச் சாரதிகள்தான் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள். கணணிப் பிரிவு என்றால், அவர்கள்தான் நிறுவனத்தின் விமானிகள் என்று நினைத்துக்ெகாள்வார்கள். சிற்றூழியர்கள் அதனைவிட மேல். சில நிறுவனங்களில் அவர்கள்தான் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் ஒட்சிசன். அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. பாதுகாப்புப் பிரிவினர் வேறு ரகம்!

நான் இப்ப இங்க சொல்ல வாறது வேறு யாரைப்பற்றியும் அல்ல; சாரதிகளைப் பற்றி. ஒரு நிறுவனத்தில் மட்டுமன்றி வீடுகளிலும் அந்தரங்க விடயங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் சாரதிகள்தான், மெய்க்காப்பாளர்களுக்கு அடுத்தபடியாக. ஆனால், சிலர் சாரதிகளைப் பெரிதாக மதிப்பதில்லை. 'டிறைவர்' என்ற ஸ்தானத்தை விடுத்து அவர்களுக்கு வேறு மரியாதை கிடையாது. தூரப் பயணங்களின்போது கூடச் சாரதிகளுடன் ஒன்றாக உணவருந்தாது, தேநீர் குடிக்காது பயணத்தை நிறைவு செய்து வருபவர்களும் இருக்கிறார்கள். இதுபற்றி ஒரு சாரதியே எனக்குச் சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் தங்களை மட்டுமே உயர்ந்தவர்கள் என்று எண்ணிச் செயற்படுகிறார்கள். இதில் ஒரு விதத்தில் நன்மையும் இருக்கிறது. தன்னம்பிக்ைக, சுயகௌரவம் மேம்படுவதற்கு இந்த உயர்ந்த எண்ணங்கள் கைகொடுக்கும். அதுதான், எப்போதுமே எண்ணுவதை உயர்ந்ததாக எண்ண வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

"உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றையது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து"

எந்தவேளையிலும் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும். அந்த எண்ணம் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை, அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது என்கிறார் வள்ளுவர்.

இவ்வாறு எந்த வேளையிலும் உயர்வைப் பற்றியே சிந்திக்கும் சாரதிகளின் வாழ்வில் எந்தச் சந்தர்ப்பத்திலும் உயர்வு ஏற்பட்டதில்லை என்று ஒருவர் சொல்வாராயிருந்தால், நம்புவீங்களா?

நாங்கள் எல்லாம் புத்தாண்டுக்கு விடுமுறை வேண்டும், பிறந்த நாளைக்கு விடுமுறை வேண்டும் என்று கேட்டு, அவ்வாறு வழங்காவிட்டால், நிறுவனத்தின் மேலதிகாரிகளைத் திட்டித் தீர்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். சில பதவி நிலை உத்தியோகத்தர்கள், விடுமுறை கிடைத்து வீட்டுக்குச் சென்றாலும் அவர்களால் தம் அன்புப் பிள்ளைகளைச் சந்திக்க முடியாது! அவர்கள் நித்திரைக்குச் சென்ற பின்னிரவில் வீட்டுக்குச் சென்று, பாடசாலை விட்டுப் பிள்ளை வீட்டுக்கு வருவதற்கு முன்னர் திரும்பிவிடுவார்கள். பிள்ளைக்கும் அப்பாவுக்குமான பிணைப்பு இந்தளவுதான்.

எனினும், நெஞ்சைப் பிழியும் பல கண்ணீர்க்கதைகள் ஒவ்வொரு சாரதியின் வாழ்க்ைகயிலும் ஒளிந்திருக்கின்றன என்பது வேதனையான உண்மை.

'தொழிலுக்கு வந்து இருபது ஆண்டுகளாகின்றன. இன்னும் ஒரு தடவையாவது குடும்பத்தாருடன், பிள்ளைகளுடன் இருந்து புத்தாண்டுக்குப் பாற்சோறு சாப்பிட்டதில்லை" என்று கண்ணீர்விடுகிறார் ஒரு சாரதி! ஏனென்று கேட்டேன்!

"புத்தாண்டுக்கு ஒருபோதும் விடுமுறை தர மாட்டார்கள். அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக, எங்களை நிறுவனத்திலேயே இருக்கச் சொல்வார்கள். எந்தவிதமான வேலையும் இல்லாமல், எங்கள் விடுதிகளில் குடும்பத்தின் நினைப்புடன் பொழுதைக் கழிப்போம். எங்கள் வீடுகளிலும் புத்தாண்டு இருக்காது. அவர்களும் அதனைக் கணக்கில் எடுக்க மாட்டார்கள். குடும்பத் தலைவன் இல்லாமல் அவர்களுக்கு என்ன புத்தாண்டு. எல்லோரும் புத்தாண்டு முடிந்து நிறுவனத்திற்கு வருவார்கள்; நாங்கள் அப்போதுதான் வீடுகளுக்குச் செல்வோம். ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு வந்துவிடுவோம். இப்படித்தான் ஒவ்வொரு சாரதியின் வாழ்க்ைகயும் கழிகிறது. சிலர் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வயதை உடையவர்கள், ஒரு நாள்கூடப் புத்தாண்டைக் கொண்டாடியது இல்லை. குடும்பத்திற்காக உழைத்துக்ெகாடுக்கின்றோமே தவிர, நாங்கள் வாழ்க்ைகயில் எந்த மகிழ்ச்சியையும் கண்டதில்லை" கண்கள் குளமாகத் தன் சோகத்தைச் சொல்கிறார் அந்தச் சாரதி.

நல்ல நாள் திருநாளைக்குக் குடும்பத்தாருடன் ஒன்றாகப் பயணம் போனதில்லை. அப்படியும் போகவே வேண்டும் என்றால், பண்டிைகக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் சென்று வரலாம். இல்லையேல், பண்டிகைக்குப் பின்னர் சென்று வரலாம், என்கிறார்கள். இவர்களை எப்படி சாரதி ஸ்தானத்தில் மட்டும் வைத்திருக்கிறார்களோ, அதுபோலவே, வாழ்நாள் முழுவதும் நடத்துகிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள் சாரதிகள். உத்தியோகத்தர்கள் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டுத் தொழிலுக்குத் திரும்பும்போது, சாரதிகள் புத்தாண்டைத் தொலைத்துவிட்டு வீடுகளுக்குச் செல்கிறார்கள்!

புத்தாண்டுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் இவர்களையும் எண்ணிப்பார்த்துக் ெகாண்டால், உள்ளத்தில் கவலை நீங்கும் என்று தத்துவம் பேசுகிறார் நண்பர். இதைச் சுலபமாய் எடுக்கவும் முடியாது; சும்மாவிடவும் முடியாது! சிந்திப்போம். உள்ளத்தின் கதவுகளைத் திறப்போம்.

Comments