கள்ளன் பொலிஸ் விளையாட்டு! | தினகரன் வாரமஞ்சரி

கள்ளன் பொலிஸ் விளையாட்டு!

கொழும்பிலும் சரி புறநகர்ப்பகுதிகளிலும் சரி, ஓரிடத்தில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தால், உடனே வாகனச் சாரதிகள் கூறுவார்கள், "முன்னால் பொலிஸார் இருப்பார்கள்" என்று. நமக்கான வழி கிடைத்ததும் கடந்து செல்கையில் பார்த்தால், அங்குப் பொலிஸ்காரர்கள் அந்த வீதியின் கட்டுப்பாட்டைத் தம் கையில் வைத்திருப்பார்கள். அப்படி ஒரு நினைப்பு அவர்களுக்கு!

சந்தியில் உள்ள சமிக்ைஞ (சிக்னல்) விளக்குகளின் ஆளியை (சுவிற்சை) அணைத்துவிட்டு இவர்கள் வீதியைத் தம் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து, வாகனங்களைத் தம் விருப்பப்படி அனுப்பிக்ெகாண்டிருப்பார்கள். அந்தச் சந்தியில், வீதி மாறுவது என்றாலும் குதிரைக்ெகாம்புதான். அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் மனம் வைத்தால்தான் நீங்கள் வீதியைக் கடக்கலாம். நீங்கள் நினைத்த மாதிரியெல்லாம் போக முடியாது. அது நமது பாதுகாப்புக்குத்தானே! அதை விடுவம்.

சிக்னல் ஒளிர்ந்தால், இவருக்கு மரியாதை இருக்குமா என்ன? சந்திகளில் அவதானித்துப் பாருங்கள், சமிக்ைஞ விளக்குகள் மஞ்சள் நிறத்தில் விட்டு விட்டு ஒளிரும். அப்படியென்றால், அந்த இடத்தில் சுவீற்சை அணைத்துவிட்டார்கள் என்று அர்த்தம்!

சிக்னல் பொருத்தப்பட்டிருக்கும் சந்தியில் நன்றாக அவதானித்துப் பாருங்கள், சாம்பல் நிறத்தில் ஒரு பெட்டி இருக்கும். அந்தப் பெட்டியில்தான் எல்லாக்கட்டுப்பாடுகளும் அமைந்திருக்கும். சிக்னல் ஒழுங்காக இயங்கினால் அந்த இடத்தில் பொலிஸார் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. பொலிஸார் முறையாக இயங்கினால், சிக்னல் அவசிமே இல்லை. இங்கு சிக்னல் இருந்தும் பொலிஸார் இருந்தும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுதான் ஏனென்று புரியவில்லை.

வெளிநாடுகளில் எல்லாம் சிக்னல் மட்டுந்தான். பொலிஸார் அரிதாகவே காணப்படுவார்கள். விபத்துகளின்போது அந்த இடத்திற்கு விரைந்துவிடுவார்கள். நமது நாட்டில், மோட்டார் சைக்கிளில் சென்றால், தலைக்கவசம் அணிவது; இருக்ைகப் பட்டியை அணிவது; அனுமதிப்பத்திரம் பெறுவது எல்லாம் பொலிஸ் உத்தியோத்தர்களுக்குத்தானே என்று நினைத்துக் ெகாண்டிருக்கிறார்கள்போலும். அவையெல்லாம் நமது தற்பாதுகாப்புக்கு என்று நினைப்பதில்லை. மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களிலும் காட்சியறைகளிலும் பரீட்சார்த்தமாக ஓடிப்பார்ப்பவர்கள் தலைக்கவசம் இல்லாமல் செலுத்தமாட்டார்கள். அங்குப் பொலிஸார் இருக்கமாட்டார்கள்! ஆக, அரசுக்கு வரி செலுத்த வேண்டும், வீதி ஒழுங்குகளைச் சரியாகக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று எத்தனைபேர் நேர்மையாகச் செயற்படுகிறார்கள்?

"பொலிஸார் பிடிப்பார்கள்" என்ற அச்சத்தில்தான் தலைக்கவசம் போடுகிறார்கள்; அனுமதிப்பத்திரங்கள் பெறுகிறார்கள். இப்படி நம்மீது தவறுகளை வைத்துக்ெகாண்டு பொலிஸார் மீது குற்றங்காண்பது சரியா?

பொலிஸாருக்கு ஒரு காலத்தில் மரியாதை இருக்கவில்லைதான், தற்காலத் தமிழகப் பொலிஸாரைப்போல...ஆனால், இலங்கைப் பொலிஸார் இப்போது மிகத் திறமையாகச் செயற்படுகிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. குற்றம் நடந்த ஓரிரு நாட்களில் குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அது மாத்திரமன்றி மிகவும் விசுவாசம் நிறைந்தவர்களாகவும் பொலிஸார் காணப்படுகிறார்கள். யாழ் நீதிபதிக்காக உயிரைக்கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரைப் பற்றி உங்களுக்கு நினைவிருக்கும். பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிர்த்தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.

பொலிஸார் பொதுமக்களின் நண்பன் என்பதற்கிணங்க அவர்களின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திக்ெகாண்டுள்ளார்கள்.

மொத்தத்தில் அவர்களும் அரச உத்தியோகத்தர்களே! ஆகவே, பொது மக்களுக்கு அரச அதிகாரிகளால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பினை பொலிஸாரும் நிறைவேற்றிக்ெகாடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

என்றாலும் பொலிஸாருக்கு உள்ள இந்த நன்மதிப்பை எல்லாம் போக்குவரத்துத்துறை பொலிஸார் இழக்கச்செய்துவிடுகின்றனரே என்கிறார்கள் பொதுமக்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

பொலிஸ் பிரிவில் இந்தப் பிரிவினர் மீதுதான் பொதுமக்களுக்குப் பிரச்சினை. இதில் மிக மிக முக்கியமானது, வாகனங்களில் சுதந்திரமாகப் பயணிக்க விடுகிறார்கள் இல்லை, என்பது. தூரப் பயணத்தை மேற்கொள்கின்றவர்கள், எப்படியும் அவசரமாகச் செல்லக்கூடியவர்கள். செல்லும் கடமையைப் பூர்த்திசெய்துகொண்டு உடனே திரும்பிவிட வேண்டும் என்று பதற்றத்தில் பயணிப்போரும் இருக்கிறார்கள்; ஆறுதலாகப் பணியாற்றிக்ெகாண்டு வரலாம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், வீதியில் செல்லும் ஏனைய வாகனங்களுக்கு ஈடுகொடுத்துத் தமது வாகனத்தையும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். அப்படி இல்லாவிட்டால், வீணான நெரிசலுக்கு முகங்கொடுக்க நேரிடுவதோடு, ஏனைய வாகன ஓட்டிகளின் கண்டனத்திற்கும் ஆளாக வேண்டி வரும்.

அவ்வாறு நினைத்துச் சற்று வேகத்தை அதிகப்படுத்துவதற்கும் அஞ்சி சாகவேண்டியிருக்கிறது என்கிறார் நண்பர்.

ஏனென்று கேட்டால், ட்ராபிக் பொலிஸார் கள்ளன் பொலிஸ் விளையாட்டு அல்லவா விளையாடுகிறார்கள். எங்காவது தூரத்தில் ஒரு மரத்திற்குப் பின்னாள் ஒளிந்திருந்து நமது வாகனத்தின் வேகத்தைக் கண்டுபிடித்து நிறுத்துகிறார்கள்.

அப்போது திகிலடைந்து வாகனத்தை நாம் நிறுத்து வேண்டியிருக்கிறது. இந்தக் கள்ளன் பொலிஸ் விளையாட்டை நாங்கள் சிறு வயதில் பள்ளியில் விளையாடியிருக்கிறோம் என்கிறார் அவர். பொலிஸ் என்றால், வெளிப்படையாக இருந்து தவறினைப் பிடிக்கட்டும். ஏன் ம​ைறந்து நின்று கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் என்னதான் மறைந்திருந்தாலும் எதிர்த்திசையிலிருந்து வரும் சக சாரதிகள், முன்பக்க விளக்ைக ஒளிரச்செய்து, பொலிஸார் நிற்பதை உணர்த்திவிடுவார்கள். இப்படியிருக்கையில், மறைந்திருப்பதில் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, பொலிஸார் மீதான வெறுப்புணர்வே அதிகரிக்கும்.

சாதாரண நாட்களில் அவ்வாறு மறைந்திருந்தாலும் பிரச்சினையில்லை, கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை, சற்று ஓய்வுகொடுக்கும் சந்தர்ப்பங்களில்கூட மறைந்தருந்து கண்ணாமூச்சு விளையாடுகிறார்கள். மழை வருவதற்கு முன்னர் வீடுகளுக்குச் சென்றுவிட வேண்டும் என்று பதை பதைத்துப் பயணம் செய்யும்பொது பொலிஸார் அவ்வாறு மறைந்திருக்கத்தான் வேண்டுமா?

பொதுமக்கள் என்னதான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாலும், தாங்கள் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்று மட்டும் நினைத்து வீதியில் மறைந்திருப்பதை இனியாவது பொலிஸார் தவிர்த்துக் ெகாள்ள வேண்டும்! செய்வார்களா?

 

Comments