உலக சமாதான சுட்டெண்ணில் | தினகரன் வாரமஞ்சரி

உலக சமாதான சுட்டெண்ணில்

ரவி ரத்னவேல்

2018 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டெண் நமது நாட்டுக்கு சாதகமானதாகவே அமைந்திருக்கிறது. பொதுவாக பொருளாதார ரீதியில் ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அந்நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ வேண்டுமென்பதே யதார்த்தமாகும். அந்தவகையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த உள்ளூர் யுத்தம், யுத்தத்தில் பங்குபற்றிய அரச படைகள், விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்திய அதேநேரம் அதில் சிக்குண்ட பொதுமக்களுக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்திய நிலையிலேயே முடிவுக்கு வந்தது. இந்த நூற்றாண்டில் உலகில் இடம்பெற்ற உள்ளூர் மோதல்களில் மிக உக்கிரமான மோதலாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் இந்த உள்நாட்டு யுத்தமும் அவ் உச்சக் கட்டத்துக்கு மோதல்களை இட்டுச்சென்ற இன முரண்பாடுகளும் இந்த நாட்டில் நிலவிவந்த சமாதானத்தை பல தசாப்தங்களாக சீர்குலைய வைத்திருந்தன.

மறுபுறத்தில் நேரடியாக யுத்தத்தில் தொடர்புபட்ட தரப்புக்கள், குறிப்பாக பெரும்பான்மை சிறுபான்மை என சிங்கள தமிழ் என இன ரீதியாகவும் பிரிக்கப்பட்டிருந்த இரு சமூகங்கள் என்பதால் இவ்விரு தரப்புக்களுக்குமிடையிலான மோதலானது நாட்டின் சமாதானத்தை நீண்ட காலமாகவே சீர் குலைந்த நிலைக்கே தள்ளியிருந்தது.

யுத்தத்தின் பின்னராக அதனால் பாதிக்கப்பட்ட இரு தரப்புகளுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது கட்டாய தேவையாக இருந்த போதிலும் 2009 முதல் 2015 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் நம் நாட்டில் இன நல்லிணக்கத்தை உண்டு பண்ணும் விதத்திலான செயற்பாடுகள் போதுமான அளவிலோ, காத்திரமான அளவிலோ முன்னெடுக்கப்படவில்லை. மாறாக இன அல்லது மத ரீதியிலான மோதல்களுக்கு வழி வகுக்கும் சூழ்நிலையே காணப்பட்டு வந்தது.

இந்தப் பின்னணியில் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் சகல விடயங்களுக்கும் அடித்தளமாக சமாதானமே அமையுமென்பதை புரிந்து கொண்டதனாலும், புதிய அரச தலைவரை தேர்வு செய்வதில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு கணிசமாக இருந்த அதேநேரத்தில் மிக முக்கியமானதாகவும் அமைந்ததால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது இந்த அரச தலைமைத்துவத்தின் கட்டாய கடப்பாக அமைந்தது. இதன் விளைவாகவே கடந்த கால அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் இன நல்லிணக்கத்தை முதன்மைப்படுத்தி அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நிலை நல்லாட்சி காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் பேசும் சமூகத்தின் பொக்கிசமாக கருதப்பட்ட யாழ் நூலக தீவைப்பு சம்பவம் பற்றி அன்று வாய்திறந்து பேசவிரும்பாத சிங்கள சமூகம் இன்று அந்நூலகத்திலிருந்த 90 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை தீக்கிரையாக்கியமை மிக இழிவான செயலாகுமென வாய்திறந்து கூறுவதுடன் அச்செயலுக்காக தமிழ் பேசும் சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்ற மனப்பான்மை ஏற்பட்டிருக்கின்றது.

அதேபோல் பாரம்பரிய தமிழ் மக்களின் நிலங்களை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக் கொடுப்பதன் மூலம் அம்மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க வேண்டுமென்ற கொள்கையினை இந்த அரசாங்கம் உள்வாங்கிச் செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

ஒரு காலத்தில் பேச்சு சுதந்திரமும் உயிர்வாழும் சுதந்திரமும் மறுக்கப்பட்ட நாடாக விளங்கிய நமது நாடு இன்று சிறுபான்மை மக்களும் பெரும்பான்மை மக்களுக்கு ஒப்பானவர்களாக வாழவேண்டுமென்று ஏற்றுக் கொண்டிருப்பதுடன் அதனை செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. அத்தோடு வரலாற்று ரீதியாக பெரும்பான்மை சிங்கள மக்களின் பெளத்த மதமும் சிங்கள மொழியும் அவர்களின் கலாசாரம் எவ்வேளையிலும் முதன்மைப்படுத்தப்பட்டு வந்ததற்கு பதிலாக தமிழ் பேசும் மக்களுக்கு முக்கியமான நிகழ்வுகளையும் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மத வழிபாடுகளுக்கும் அம்மதங்களின் ஆசீர்வாதங்களுக்கும் அம்மக்களைச் சார்ந்த கலைப் படைப்புக்களுக்கும் தகுந்த சந்தர்ப்பத்தையும் மரியாதையையும் பெற்றுக் கொடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதுவே தற்போது இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமாதான சூழ்நிலைக்கும் சகவாழ்வுக்கும் அடிப்படை காரணமாகும். குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் அமோக ஆதரவை தற்போதைய ஜனாதிபதி பெற்றிருப்பதனாலேயே இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத அளவு தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி அடிக்கடி விஜயம் செய்து வருகின்றார். அத்தோடு அம்மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதையும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அம்மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார அபிலாசைகளை அடைவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதிலும் அவர் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதுடன் அந்நிலைப்பாட்டினை செயற்பாட்டு ரீதியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார்.

மறுபுறத்தில் சுமார் 10 வருடங்களாக சட்டத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்படாதிருந்த இந்நாட்டில் மீண்டும் சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டச் செய்வதற்கான துரித நடவடிக்கைகளை எடுத்திருப்பதன் மூலம் அவ்வேலைத்திட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மிக உறுதியானதாக இருக்கின்றது. சட்டத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டிருப்பதன் காரணமாக நீதி விசாரணைகள் சட்ட திட்டங்களை மதிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன் அதன் மூலம் சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள் என்ற நிலை மீண்டும் இச்சமூகத்தில் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியிலேயே சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகின்றபோது உலக சமாதான சுட்டெண்ணில் 163 நாடுகளில் 67 வது இடத்தை இலங்கை எட்டிப் பிடித்திருக்கின்றது. அதேபோல் தெற்காசியாவில்் பூட்டானுக்கு அடுத்தபடியாக சமாதானம் மிக்க நாடாக இலங்கை வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தினை பரப்பி அதன் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பதற்கு பதிலாக நாட்டின் அனைத்து மக்களையும் சமத்துவத்துடன் வாழவைப்பதற்கான வழிவகைகளை இந்த நல்லாட்சி அரசு எடுத்து வருவதே இன்று சர்வதேச சமூகத்தின் நற்பெயரை நமது நாடு பெற்றுவருவதற்கு முக்கிய காரணமாகும்.

துரதிஷ்ட வசமாக அரசியல் யாப்பு சீர்திருத்த விடயங்களை நாட்டு மக்கள் எதிர்பார்த்த அளவு யதார்த்தமாக்கிக் கொள்ள இயலாத போதிலும் தமது அரசியல் உரிமைகளுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் மேற்கொண்ட போராட்டங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய இழப்பினை ஏற்படுத்தி கசப்பான அனுபவங்களை பெற்றுக் கொடுத்திருக்கும் பின்னணியிலும் சுயநலவாத அரசியல் வாதிகளினால் தவறாக வழிநடத்தப்படும் தீய அரசியல் சக்திகள் நமது நாட்டில் மீண்டும் மீண்டும் இன முறுகல்களை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கும் அப்பிரதேசங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அதிக எண்ணிக்கையிலான அரச படையினரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கும் தென்னிலங்கை வாழ் இனவாத சக்திகளும் வட கிழக்கில் வாழும் கடும்போக்குவாதிகளுமே தடையாக இருந்து வருகின்றனர்.

இந்த இரண்டு விடயங்களையும் சுமூகமாக தீர்த்து வைக்கின்ற அதேவேளையில் தென்னிலங்கையில் எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தங்களிலும் வீதிப் போராட்டங்களிலும் இறங்கி அன்றாட இயல்பு வாழ்க்கையை குழப்பியடிக்கின்ற தென்னிலங்கையின் வங்குரோத்து அரசியல் சக்திகளும் முயற்சியெடுக்காது இருப்பின் சமாதான சூழ்நிலையை அடைந்திருக்கும் உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழக்கூடிய நிலையை எட்டக்கூடிய வாய்ப்பு தற்போதும் நமது நாட்டிற்கு இருந்து வருகின்றது.

குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அரசியல் சக்திகளின் இந்த சதிவலையில் சிக்காது நாட்டு மக்கள் நிலையான சமாதானத்தின் தேவையையும் அதன் பெறுமதியையும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் வெகு சுலபமாகவே நமது நாட்டை உலகின் பொருளாதார சுபீட்சமும் உள்ளக சமாதானமும் நிலவுகின்ற முன்னணி நாடுகள் வரிசையில் நிலைநிறுத்த முடியுமென்பதில் ஐயமில்லை.

Comments