ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண, மீன் சாப்பிடாதியள், உதுக்குள்ள புழு கிடக்குது என்டு சில பெடியள் கூறிக்கொண்டு திரியினம்”

“எங்க திரியினம்”

“சந்தியலதான் திரியினம். பாத்தா ஸ்கூல் பெடியள் போலக்கிடக்குது. என்ன விளப்பம் என்டு தெரியேல்ல”

“அவையள் சொன்ன விஷயம் உண்மைதான்”

“உண்மையே. என்ன சொல்லுரியள்”

“போனமாசம் 74 கென்டேனரில டின் மீன் இறக்குமதி செஞ்சிருக்கினம்.ஆனால் உந்த டின் மீன் மனித பாவனைக்கு ஏற்றதில்ல என்டு உந்த கென்டேனர்களை திருப்பியனுப்பியிருக்கினம். திருப்பியனுப்பிய கென்டேனர்கள் பின்பக்கத்தால திரும்பவும் சந்தைக்கு வந்து போடும் என்டதாலதான உந்தப் பெடியள் உப்படி கூவிக் கொண்டிருந்திருப்பினம்.”

“அப்ப மீன் சாப்பிடக்கூடாது என்டது உண்மைதானென்ன”

“மீன் இல்ல டின்மீன்”

“யுத்த காலத்தில கடலில சண்டை நடக்கிற நேரம் மீன் சாப்பிடாதியள் என்டு சொன்னவை. அண்ணக்கு ஞாபகமிருக்கோ”

“நல்லாஞாபமிருக்கு. தான் வாங்கின மீனின்ட வயித்துக்குள்ள தங்க மோதிரம் கிடந்துது என்டு விசாலிப்பாட்டி சொன்ன பிறகு தான உந்த விஷயம் சூடு பிடிச்சுது.”

“உந்த தரமில்லாத டின்மீன் எங்க இருந்தன்ன இறக்குமதி செஞ்சிருக்கினம்”

“உதையோ, சீனா தாய்வான், தாய்லாந்து என்ட நாடுகளில இருந்து இறக்குமதி செஞ்சிருக்கினம். 388 மில்லியன் ரூபா பெறுமதி. உதை பரிசோதிச்சிருக்கினம். உதில புழுக்கள் கிடந்துதென்டு சொல்லுகினம். ஆனா பாவனை திகதி கடந்து போட்டுது என்டுதான் கேள்வி. 7 மாசத்துக்கு முன்ன ஓடர் பண்ணின மீனாம் உது. கலர் மாறிக் கிடந்துது. ஒரு மாதிரி மணமும் அடிச்சுது. என்டபடியாதான் திருப்பியனுப்பினனாங்கள் என்டு சுங்கத் திணைக்கள அதிகாரியொருவர் சொன்னவரெண்டு பேப்பரில வாசிச்சனான்.”

“அப்ப புழு கிடக்கேல்லயோ”

“மத்த நாடுகள் பொருட்கள இறக்குமதி செய்யேக்க சின்னராசு. எல்லைப்புற சோதனைச் சாவடிகளில முறையா சோதிப்பினம். குறிப்பிட்ட தரத்தில பொருட்கள் இருக்கேல்லயென்டா திருப்பி அனுப்பிப் போடுவினம். ஆனா எங்கட நாடு தீவென்டபடியா எல்லா இறக்குமதியும் துறைமுகத்துக்குத்தான் வருகுது. எங்கட துறைமுகத்தில பிரதான துறைமுகம் கொழும்பு துறைமுகம்தான். உதால அங்கதான் எல்லா இறக்குமதிகளும் குவியுது. சரியான நெரிசல் என்டதால சந்தேகத்துக்குரிய பொருட்களதான் சோதிப்பினம். உதை இரண்டு முறை சோதிப்பினம். வீணா தாமதப்படுத்துகினம் என்டு இறக்குமதி செய்றவை குத்தம் சொல்லுவினமாம். ஆனா இறக்குமதி பொருட்கள் தரமா இருக்க வேனுமெல்லோ”

“பின்ன தரமில்லயென்டா எதுக்கு வேண்டிக்கிடக்கு”

“உதாலதான் ரெண்டு தடவ சோதிக்கினம். இன்னொன்டு சில காலத்துக்கு முன்னால பாகிஸ்தானில இருந்து பிளாஸ்டிக் அரிசி இறக்குமதியான நேரத்திலயும் நிறைய சிக்கல் வந்து கிடந்தது. எனக்கொரு சந்தேகம் சின்னராசு”

“என்ன சந்தேகமண்ண.”

‘தரமில்லாத பொருட்கள குவிக்கிற ஒரு குப்பைக்கூடமா எங்கட நாட்டை யாரோ பாவிக்க முயற்சிக்கினம் போலக் கிடக்கு”

“ஏனண்ண அப்பிடி நினைக்கிறியள்”

“தரமற்ற உணவுப் பொருள், தரமற்ற எரிபொருள், தரமற்ற அது இது என்டு எங்கட நாட்டில குவியிறதை பாக்கேக்கை உப்பிடி சந்தேகம் வாறத தடுக்கேலாமக் கிடக்கு. இலங்கைக்கு கொண்டு வாற வாகனங்கள் மற்றும் கணினிகள் அநேகமாக செகன்ட் ஹான்ட் ஆகத்தான் கிடக்கு. உவையளை நீண்ட காலம் பாவிக்கேலாது. தெரிஞ்சுதோ. உதுக்குப்பிறகு உவையள கழிவிலதான் சேக்க வேண்டிக் கிடக்குது. வாகன கழிவை உலோகக் கழிவுக்கு எடுக்கலாம் என்டு வச்சிக்கொண்டாலும் உந்க கணனிக் கழிவுகள் ஆரோக்கியத்துக்கு கேடு தெரியுமோ. எங்கட ஆக்கள் உதையும் கடலில கொட்டப் பாப்பினம். உதாலதான். பிளாஸ்டிக் பொருட்கள கடலில கொட்டுறவையில எங்கட நாட்டுக்கு அஞ்சாவது இடம் கிடைச்சிருக்கு.”

“மற்றைய நாடுகள் எங்கட நாட்டில கொட்டுகினம். நாங்கள் உதை கடலில கொட்டி பேர் வாங்குறம் என்ன”

“பேர் எங்க கிடைக்குது. உதுக்கு ஏச்சும் பேச்சும்தான் கிடைக்குது”

“கொஞ்ச காலத்துக்கு முன்னால ரஷ்யாவுக்கு நாங்கள் அனுப்பின தேயிலையில பூச்சி கிடந்துது என்ட கதையால எங்கட ஆக்கள் கொஞ்சம் ஆடிப்போனவை. உது ரஷ்யா ஆடின அரசியல் விளையாட்டு என்டும் கதைக்கினம். ஆனா உந்த விசயத்துக்குப் பிறகு எங்கட தேயிலைக்கும் காலம் சரியில்லை”

“ஏன் என்னண்ண நடந்துது. ஏதும் வில்லங்கமோ?”

“ ஒரு வழியில வில்லங்கம்தான். நாங்கள் ஜப்பானுக்கு அனுப்பின தேயிலை சரியான தரத்தில இல்லயென்டு புகார் வந்து கிடக்கு. எங்கட தேயிலையில ஏதோ ரசாயன கழிவு கிடக்கென்டு சொல்லிப் போட்டவை”.

“ரசாயன கழிவோ?”

“ கிளைபோசெற் களை நாசினி கிடக்கில்லே. உதை எங்கட தேயிலை தோட்டங்களில அடிக்கினம். உதாலதான் உந்த ரசாயன மாற்றம் வந்து கிடக்கென்டு பேப்பரில போட்டுக்கிடந்வை. நிலைமைய சமாளிக்க எங்கட தேயிலை சபையின்ட தலைவர் ஜப்பான் போனவராம்.

“விஷயத்த சரிப்பண்ணிப் போட்டவரே”

“தெரியேல்ல ஆனா ஒன்டு இலங்கை தேயிலையின்ட ஏற்றுமதி மெல்ல மெல்ல குறைஞ்சி கொண்டு வருகுது என்டுதான் கேள்வி. போன வருஷம் எங்கட தேயிலை உற்பத்தி 14.5 மில்லியன் கிலோவால அதிகரிச்சிக் கிடக்கு. மொத்த உற்பத்தி 307.07 மில்லியன் கிலோ. உது முன்னைய வருஷத்தை விட கிட்டத்தட்ட 5 சத வீதம் அதிகரிப்பு.”

“நல்லமென்ன”

“ஆனா ஏற்றுமதி குறைஞ்சிட்டுது 0.07 சத. வீதம் தான் கூடீயிருக்குது.மொத்தத்தில் பாத்தமென்டா குறைஞ்சிட்டுது. உது மட்டுமில்ல சின்னராசு உந்த ரசாயன பிரச்சினையால ஜெர்மனிக்கு அனுப்பின தேயிலைய அங்கை உள்ள இறக்குமதியாளர்கள் நிராகரிச்சிருக்கினம்”

“ அப்படியென்டா சிக்கல் வந்துட்டுதென்ன?”

“ஓம் சின்னராசு. நாங்கள் வெளி நாட்டுக்கு அனுப்புற பொருட்கள தரமானதா அனுப்பாமல் அவையள் அனுப்புற பொருட்கள தரமில்லையென்டு சொல்லிக் கொண்டிருக்கிறனாங்கள். உது நியாயமோ?”

‘நியாயம் இல்லதான்”

“இலங்கை இறக்குமதி செய்கிற பொருட்களில 7165 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்கள உள்நாட்டிலயே தயாரிக்கலாம் என்டு நிதி அமைச்சு அறிக்கையொன்டு கூறுது தெரியுமோ?”

“உண்மையே. அது எந்தெந்த பொருட்களண்ண?”

“பால் உற்பத்தி பொருட்கள், வாசைன திரவியங்கள், மீன், ஆரோக்கியப் பொருட்கள், புடைவை வகைகள் எல்லாம் இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை. உதுகள இலங்கையிலயே தயாரிக்க முடியும். உந்த இறக்குமதிக்கான செலவையும் மிச்சம் பிடிக்கலாம் என்டும் சொல்லிக் கிடக்குது.”

“ஆனா உதுகள இறக்குமதி செஞ்சி பழகிப் போட்டினம். உதை மாத்த முடியுமே?”

“ ஆனா இறக்குமதி செய்றதை கொஞ்சம் பாத்து தரமானதை இறக்குமதி செஞ்சவையென்டா பரவாயில்லையென்ன?”

“நாங்கள் சொன்னா கேப்பினமே?”

“சொல்லுறது நாட்டு மக்கள் எங்களின்ட கடமை செய்யிறதும் செய்யாததும் அவையின்ட கடமை”

“உரக்கச் சொல்லுங்கோ. அப்பத்தான் அவையின்ட காதில விழும்.

Comments