மலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா? | தினகரன் வாரமஞ்சரி

மலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா?

மலையக வீடமைப்புத்திட்ட இலக்கை 2020க்குள் எட்டப்போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் அண்மையில் அறிவித்திருந்தார். அதனையடுத்து சுறுசுறுப்பாக ஆங்காங்கே அடிக்கல் நாட்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஹட்டன் வெலிஓயாவில் 50 வீடுகள், வட்டகொடை மடக்கும்புற தோட்டத்தில் 250 வீடுகள் என அமர்க்கள ஆரம்பங்களை பார்க்க முடிகிறது. இவை இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் இடம்பெறும் வீடமைப்புத் திட்டங்களாகும். யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் 4000 வீடுகளை இந்திய அரசாங்கம் வழங் கியிருந்தது. அந்த வாய்ப்பை மலையகத் தலைமை உரிய காலத்தில் பயன்படுத்தியிருக்கவில்லை.

அதன்பின் இந்தியப் பிரதமர் மோடி இங்கு விஜயம் மேற்கொண்டபோது மேலும் 10,000 வீடுகளை நிர்மாணித்துத் தர இணங்கினார். ஆக 14,000 வீடுகளையும் அமைத்துத்தர வேண்டிய பொறுப்பு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சிடம் வந்து சேர்ந்தது. ஏற்றுக்கொண்ட இப்பொறுப்பை அமைச்சு சிறப்பாக ஆற்றி வருகின்றது. பூண்டுலோயா, டயகம பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. விரைவு காணாத இரண்டே குறைபாடுகள்தான் நிலவுகின்றன. நாட்டில் நிலவும் அரசியல் ஸ்த்திரமின்மை, பொருளாதார நெருக்கடி என்பனவாக இவை காணப்படுகின்றன. எனவே, கடந்த காலங்களில் இடம் பெற்ற மலையக வீடமைப்புத் திட்டங்கள் எதுவுமே முழுமை பெற முடியாமல் போனமைக்கான பின்னணி குறித்து திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது.

கடந்த காலங்களில் மலையக வீடமைப்புக்கென பல்வேறு திட்டங்கள் தீட்டப்படவே செய்தன. ஆனால் அவை எதுவுமே முழுமை பெறவில்லை. ஒப்புக்காகவே முன்னைய அரசாங்கங்கள் திட்டங்களை வகுத்தன. இதற்குத் துணை போவது போல அரசியல் தொழிற்சங்கத் தலைமைகள் நடிப்பு காட்டின. ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படாத இவ்வாறான திட்டங்கள் பிசுபிசுத்துப் போயின. மக்களின் வெறுப்புக்கு உட்பட்டன.

சந்திரிகா ஆட்சியிலேயே முதன்முதல் மலையக மக்களுக்கென தனிவீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அமரர் பெ. சந்திரசேகரன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முடிந்தவரை வெற்றிகரமாக முன்னெடுத்தார். எனினும் இது மீள் செலுத்த வேண்டிய கடனுதவி அடிப்படையிலேயே நடந்தது. 25,000 வீடுகள் என்பது இலக்காக இருந்தபோதிலும் கட்டி முடிக்கப்பட்டவை 6000 வீடுகளே! கடன் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டாலும் வீட்டுரிமை வழங்கப்படவில்லை. அமரர் ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய ரீதியில் கிராமிய வீடமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதில் பெருந்தோட்டத்துறை உள்வாங்கப்படவில்லை. பிரேமதாஸவின் தொகுதிக்கு நூறு வீடு திட்டத்தின்கீழ் மலையக மக்களுக்கு மொத்தமாக கிடைத்த வீடுகள் வெறும் 20 மட்டுமே. முன்னைய ரணில் ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மாடிவீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆரம்பித்த வேகத்திலேயே இந்த வீடுகளின் அசெளகரியம் குறித்து சிவில் சமூகம் எச்சரிக்கை விடுத்தது இது லயத்து வாழ்க்கை முறைக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இம்மாடி வீட்டுத் திட்டம் மக்களின் வீட்டுத் தேவைக்கான பரிகாரம் அல்ல என்பதை ஆய்ந்தறிந்த கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக இயக்குநர் பெ.முத்துலிங்கம் மக்களிடம் இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். வீட்டுரிமைக்கான ஐ.நா. அதிகாரி மிலுன் கொத்தாரியை நாட்டுக்கு வரவழைத்து ஆய்வு செய்ய வைத்தார். இத்திட்டம் மஹிந்த ஆட்சியிலும் முன்னெடுக்கப்பட்டது ஐ.நா.அதிகாரியின் ஆலோசனையை சந்திரிகாவோ, மஹிந்தவோ கருத்திற் கொள்ளவில்லை. எனினும் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமும் மலையக சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக நடாத்திய போராட்டங்களின் விளைவாக மாடி வீட்டுத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.

ஓர் ஆய்வுப்படி பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளி மக்கள் 15 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இதில் 10 இலட்சம் பேர் வரை தோட்டங்களையே வதிவிடமாகக் கொண்டுள்ளார்கள். எனினும் இவர்கள் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வெளி இடங்களிலேயே வேலை செய்து வருகின்றார்கள். இன்றைய நிலையில் சுமார் 2 இலட்சம் வரையிலானோரே தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளார்கள். கிராமப்புறங்களில் 95.06 வீதமானோர் தனி வீடுகளில் வசிக்கும் அதேவேளை தோட்ட மக்களில் 33.04 வீதமானோர் மட்டுமே தனி வீடுகளைக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களிலும் அரச முகாமைத்துவத்தின் கீழ் வரும் தோட்டங்களிலும் (432 தோட்டங்கள்) 249061 தனி வீடுகள் அமைக்கப்பபட வேண்டுமென ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. கடந்த 20 வருட காலத்துக்குள் பெருந்தோட்டப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 31761 ஆகும். இதில் தொழிலாளர்கள் தாமாகவே அமைத்துக் கொண்ட வீடுகள் 6774 ஆகும்.

இவ்வீடுகள் சகல அடிப்படை வசதிகளையும் கொண்டவையல்ல. இதே நேரம் சட்ட ரீதியிலான உரிமைப் பத்திரமும் இல்லை. தோட்ட மக்களுக்கு வீடமைப்புக்குத்தேவையான காணிகளை கம்பனி தரப்பே வழங்க வேண்டியுள்ளது. எனினும் வீடமைப்புக்கான காணி விடுவிப்பதில் கம்பனி தரப்பு எப்போதுமே முரண்படுவதே வழக்கமாக கொண்டுள்ளது. அடிப்படை வசதிகள் வதிவிட வசதிகள் சமூக நலன் சார் தேவைகள் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் யாவுமே கம்பனி சார்ந்தவையாகவே இன்னும் இருக்கின்றன. இதன் பின்னணியில் தற்போது லயக்காம்பிராக்களில் வாழும் 60 சதவீதமானோர் பல்வேறு சங்கடங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்கள் சரியான முறையில் திட்டமிடப்பட்டவை அல்ல. இதன் காரணமாக இவை முறையாக நிறைவேற்றப்படுவது இல்லை. ஒன்று முடங்கிப் போகும். அல்லது முடக்கப்பட்டு விடும். இதற்கான பொறுப்புக்கூறலை எந்த மலையகத் தலைமையும் இதுவரை ஏற்பதாயில்லை. இந்த நிலையில் தான் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தனி வீட்டுத்திட்டம் அனைவரையும் கவர்வதாயிருக்கின்றது. கடந்தகால வீட்டுக் கனவினை நனவாக்கும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் இம்மக்களின் தேவைகள் இந்த அரசாங்கத்தின் காலத்திலாவது நிறைவேற்றப்படுவது அவசியமாக உள்ளது.

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 338 வீடுகளும் 2016 ஆம் ஆண்டு 1500 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதுவரை 6000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 1043 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையிலேயே 2018க்கான வரவு செலவுத் திட்டத்தில் 25,000 வீடுககளை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீட்டினை இந்த அரசாங்கம் செய்துள்ளது.

இது இப்படி இருக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் மலையகத்தில் 2600 தனி வீடுகள் அமைக்கப்பட இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் 1400 வீடுகளும் அனாத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புக்குள்ளாகலாம் என அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்போருக்குமே இவ்வீடுகள் வழங்கப்படுமென தெரிகின்றது.

இதே நேரம் வறிய மக்களுக்கான 250 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டமொன்றை நிராகரிக்கும் கைங்கரியமும் கூட நுவரெலியா மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. முன்னைய நுவரெலியா மாநகர சபை கொண்டுவந்திருந்த இத்திட்டத்தை தற்போதைய நிர்வாகம் இரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றது. வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை இல்லாத விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது உண்மை. அதேநேரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் கவனப்படுத்த வேண்டியுள்ளது. இடப் பற்றாக்குறை, போக்குவரத்து வசதியின்மை, முறையான வடிகான்கள் அமைக்கப்படாமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சில இடங்களில் அடித்தள பலவீனத்தால் சில வீடுகள் இடிந்துவிழும் அபாயமும் உள்ளது. உறுதியான கல் கட்டிடம் அமைக்கப்படாது வெறுமனே மண்ணைக் கொட்டி நிரப்பி அமைக்கப்பட்டுள்ளதாலேயே இந்நிலைமை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. இவ்வாறு பூர்த்தியாகாத சில வீடுகளில் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வந்து தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்.பாலா

 

Comments