ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண எங்கட விஷயமொன்டை அமெரிக்க பேப்பரில போட்டிருந்தினமாம். உந்த விஷயம் இப்ப பத்திக்கொண்டு எரியுது என்டு மகேசன் மாஸ்டர் சொன்னவர். என்னண்ண போட்டுக்கிடக்குது?”
“அமெரிக்காவில உள்ள பிரபல பத்திரிகைதான் நியூயோர்க் டைம்ஸ் சரியே. உது ஒரு நாளைக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் பிரதிகள் விக்குது. ஞாயிற்றுக் கிழமையில 10 லட்சம் பிரதிகளுக்கு மேல”.
“பத்து லட்சமோ? அப்ப பெரிய பேப்பர்தான்”.
“166 வருசத்துக்கு முன்னால 1851 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி உத ஆரம்பிச்சிருக்கினம். நியூயோர்க் டெய்லி டைம்ஸ் என்டுதான் ஆரம்பிச்சிருக்கினம். 1500 பேர் வரையில உந்த பத்திரிகையில வேலை செய்யினம்”;.
“செல்வாக்குள்ள பத்திரிகையென்ன?”
“ஆனால்; நியூயோர்க் டைம்ஸை விட USA Today என்ட பத்திரிகை அதிகமா விற்குது. ஆனாலும் நியூயோர்க் டைம்ஸ் என்டது உலக செய்திகளை வெளியிடுறதில முன்னணியில இருக்கினம். இப்ப நிறையப் பத்திரிகையள் இணையத்தில வருகுது. உந்த இணையத்தில எத்தன பேர் பார்க்கினம் எது முதலில இருக்குது என்டதை சரியா சொல்ல முடியாமக் கிடக்குது.”
“சரியண்ண உதில என்ன சொன்னவையாம்?”
“உந்த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின்ட கடந்த மாதம் 25 ஆம் திகதி Maria Abi Habib என்ட பெண் பத்திரிகையாளர் ‘How China Got Sri lanka to Cough Up a Port’ (சீனா எவ்வாறு இலங்கையின் ஒரு துறைமுகத்தை தாரை வார்க்கச் செய்தது) என்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினவ. உதுதான் இப்ப சர்ச்சைய ஏற்படுத்திக் கிடக்குது”.
“பெரிய சர்ச்சையாப் போட்டுதே?”
“அதைப்பத்தித்தான் எங்கட அரசியலில பரபரப்பா பேசிக்கொண்டிருக்கினம்”.
“என்னண்ண பேசுறவை?”
“அமெரிக்க பத்திரிகைக்கு எதிரா வழக்கு போட வேணும் என்டு சிலர் சொல்லுகினம். எங்கட விஷயத்தில ஏன் அமெரிக்கா மூக்கை நுழைக்குது என்டு சிலர் கண்டனம் தெரிவிக்கினம்”.
“அப்படியென்டா ஏதோ கூடாம சொல்லிக்கிடக்கினம் என்ன”.
“உந்த அமெரிக்க பத்திரிகையில ஒன்டும் புதுசா சொல்லேல்ல. நமக்குத் தெரிஞ்சதைத்தான் திரும்பவும் சொல்லியிருக்கினம். ஆனா ஏதோ ஒரு காரணத்தோடதான் உத எழுதியிருக்கினம் போலக் கிடக்கு”
“என்ன சொல்லியிருக்கினம் என்டு சொல்லுங்கோவண்ண”
“சரி உன்ட ஆசைய கெடுப்பானேன். விஷயத்தை முழுசா சொல்லுறனான் சரியா கேட்டுக்கொள் என்ன. ஹம்பாந்தோட்டையில துறைமுகம் கட்ட வேணும். கடனும் உதவியும் தாங்கோ என்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேட்டப்போ சீனா ஓம் என்டுதான் சொல்லிக்கிடக்கு. உந்த துறைமுக விஷயம் சரிப்பட்டு வராது என்டு இந்தியா மறுப்புத் தெரிவித்துப் போட்டுது. ஆனா சீனா உதவிக்கு வந்துது. துறைமுகத்தை கடனுக்கு கட்டித் தந்தது. நிறைய கப்பல்கள் போற வழியிலதான் துறைமுகம் கிடக்குது என்டு ஆரம்பத்தில சொல்லிக் கொண்டிருந்தனம். ஆனா 2012ல 34 கப்பல்கள் மட்டுந்தான் வந்தவை.
“2015ல வந்த ஜனாதிபதி தேர்தலில மஹிந்த தோத்துப்போனார். துறைமுகத்தை கட்டிய கடனை திரும்பச் செலுத்த புதிய அரசாங்கத்துக்கு ரொம்ப சிரமமாப் போட்டுது. இக்கட்டான நிலையில அரசாங்கம் பேச்சு நடத்தினது. கடைசியில துறைமுகத்தை நீங்களே நடத்துங்கோ. அதோட கேட்ட மாதிரி 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை 99 வருஷ குத்தகைக்கு வச்சிக் கொள்ளுங்கோ என்டும் இலங்கை அரசாங்கம் சொல்லிப்போட்டுது. கடனையும் உதவியையும் கொடுத்து காரியத்தை சாதிச்சுக் கொள்ளுறது சீனாவின்ட பழக்கம். உலகம் முழுவதும் அவை இப்படித்தான் செஞ்சிருக்கினம். அவையின்ட கடன் திட்டம் பலமில்லாத நாடுகளுக்கு ஒரு பொறி. உப்பிடித்தான் இலங்கையும் கடன்பொறியில சிக்கவச்சிக் கிடக்கு என்டு எழுதியிருக்கினம்”.
“உதுக்கு பிறகுதான் விஷயமே வருகுது”.
“விஷயம் வருகுதோ?”
“இலங்கையில 2015ல ஜனாதிபதி தேர்தல் நடக்கேக்கை சீனாவின்ட துறைமுக நிர்மாண நிதியத்தில இருந்து பெருமளவு பணம் ராஜபக்சவுக்கு கைமாறியது. பணத்தை வாங்கிய ராஜபக்ச சீனா சொன்ன விதிகளுக்கு ஓம்பட்டார். உப்பிடி பணம் கொடுக்கப்பட்டதுக்கு ஆதாரம் கிடக்குது. உந்த ஆதாரங்களை நியூயோர்க் டைம்ஸ் ஆக்கள் பாத்திருக்கினம். 2009ல யுத்தம் முடிஞ்ச பிறகு மஹிந்த ராஜபக்சவும் அவரின்ட தம்பிமாரும் தான் அரசாங்கத்தை நடத்தினம் அரசாங்க செலவில 80 சதவீதம் அவையின்ட பொறுப்பிலதான் கிடந்தது. பிரிட்டனின்ட கால்வாசி அளவுக்குள்ள சிறியநாடு. அதனின்ட சனத்தொகையே 22 மில்லியன்தான். உதுக்கேன் இரண்டாவது துறைமுகம் என்டு அதிகாரியள் கூறிப்பாத்தவை. ஆனால் ராஜபக்ச தன்ட இஷ்டத்துக்கு சீனாவுக்கு சரி சொன்னதால சீனா துறைமுக வேலையை ஆரம்பிச்சுது. துறைமுகத்துக்கான முதலாவது கடன் சீன அரசாங்கத்தின்ட ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (EXIM)யிட்ட இருந்து கொடுத்தவை. உது 307 மில்லியன் டாலர் கடன். ஆனா துறைமுகத்தை எங்கட சீன துறைமுக கம்பனிதான் கட்ட வேணும் என்டு சீனா நிபந்தனை விதிச்ச கதை விக்கி லீக்ஸ் மூலம் அமெரிக்காவுக்கு தெரிஞ்சிபோட்டுது. உலகம் முழுவதும் சீனா உப்பிடித்தான் கடன்கொடுத்து தன்னோட கம்பனிகளுக்கும் சீன தொழிலாளர்களுக்கும் வேலையை வாங்கிக்கொள்வினம்.
“துறைமுக நிர்மாண திட்டம் சரிப்பட்டு வருகுது என்டு தெரிஞ்சவுடன் சீனா ராஜபக்சவோட ரொம்ப நெருக்கமா போட்டுது. 2015 தேர்தல் வந்த நேரம் அதுக்கு சில மாதங்களுக்கு முன்ன தேர்தல் நிதியாக ராஜபக்சவின்ட தேர்தல் பிரசாரத்திற்கு 7.6 மில்லியன் டொலர் ஒரு வங்கியூடாக கொடுத்தினம். இதற்கு நியூயோர்க் டைம்ஸ் கிட்ட ஆதாரம் கிடக்குது. உதுக்குப் பிறகு தேர்தலுக்கு 10 நாள் இருக்கையில 3.7 மில்லியன் டொலர்களுக்கு ஒரு செக், டீ சேர்ட், தொப்பி மற்றும் பரிசுப் பொருட்களுக்கென்டு 15 லட்சம் டாலர்கள் திரும்பவும் 3.4 மில்லியன் டாலர்களுக்கு ரெண்டு காசோலை என்டு நிறையப்பணம் கொடுக்கப்பட்டு கிடக்குது இந்த பணத்த ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி நிதி என்ட பெயரிலதான் கொடுத்திருக்கினம். 2010ல ஹம்பாந்தோட்டை துறைமுகம் திறக்கப்பட்ட பிறகும் கப்பல்கள் அங்கு நினைச்ச மாதிரி வரேல்ல. அதால 2012ல ராஜபக்ச 757 மில்லியனை கடனை தாருங்கோ என்டு சீனாவை கேட்டவர். முதலில கொடுத்த 307 மில்லியன் டாலர்களுக்கு வட்டியை 6.3 சதவீதம் என்டு உயர்த்திப் போட்டுத்தான் இரண்டாவது கடனை குடுத்தவை. உந்த ஹம்பாந்தோட்டை துறைமுக கடன் விவகாரம் தான் தேர்தலில் மஹிந்தவுக்கு சிக்கலாக்கிப்போட்டுது. உதால அவர் தோத்துப்போட்டார். அவர் பதவியை விட்டு போகேக்கை அவரது கடன் 44.8 பில்லியன் டாலர்கள் என்டு கிடந்தது. உந்த துறைமுக விடயத்தில சீனா இலங்கைய ஏமாத்திப்போட்டுது. உதை நடத்தி கிடைக்கிற வருமானத்தில 85 சதவீதம் சீனாவுக்கு 15 சதவீதத்தான் இலங்கைக்கு என்டு ஒப்பந்தத்தில கிடக்குது. என்டுதான் உந்த நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை எழுதப்பட்டு கிடக்கு.
“உந்த நியூயோர்க் டைம்ஸ் செய்திய மஹிந்த ராஜபக்ச மறுக்கிறார். முன்னால் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் என்டவரும் உதை மறுக்கிறார். உது மட்டுமில்ல. இலங்கையில உள்ள சீன தூதுவரும் உதுக்கு மறுப்பு சொல்லியிருக்கிறார். அமெரிக்காவும் சீனாவும் கொலவெறியில இருக்கினம். மூன்று மாசத்துக்கு முன்னாள் டிரம்ப் அமெரிக்க இறக்குமதியளுக்கு வரியை கூட்டினவர். சீனாவும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியை கூட்டிப்போட்டுது. உந்த சண்டையில ஒரு அங்கம்தான் உந்த பத்திரிகை கட்டுரை. துரதிர்ஷ்ட வசமா நாங்க உதில மாட்டிப்போட்டம். உதாலதான் இந்த சர்ச்சை. உதை விசாரிக்க வேணும். விஷயம் உண்மையோ என்டு அறியவேணும் என்டு எங்கட ஆக்கள் கூறிக் கொண்டிருக்கினம். எப்படியோ ஜனாதிபதி தேர்தலுக்கு நல்ல பிரசாரம் ஒன்டு கிடைச்சிருக்குது. இது மஹிந்தவுக்கு பாதகமாகவும் அரசாங்கத்துக்கு சாதகமாகவும் கிடக்குது”.
“அப்ப தேர்தல் பிரசாரம் ஆரம்பம் என்டு சொல்லுங்கோ”
“விஷயத்தை பார்த்தா அப்பிடித்தான் கிடக்குது சின்னராசு”.

Comments