ஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு | தினகரன் வாரமஞ்சரி

ஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு

*முதல்வர் விட்ட தவறை     ஒப்புக் கொண்டால்     விட்டுக்கொடுப்புக்கு தயார்   * முதல்வரின் தவறை    மேன்முறையீட்டு மன்று      நிரூபித்திருக்கிறது

வாசுகி சிவகுமார்

 

தனக்கு அமைச்சுப் பதவியைத் தந்தவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானெனக் கூறும் வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், தவறை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தன்னுடன் கலந்தாலோசித்தால் தான் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருப்பதாகச் சொல்கின்றார். வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனின் பதவி நீக்கத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் இடைக்காலத் தடையுத்தரவு வடமாகாண சபையில் ஏற்படுத்தி யிருக்கும் நெருக்கடிநிலை தொடர்பில் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்...

 

உங்களை பதவி நீக்கியது செல்லுபடியற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு, விதித்திருக்கின்றது. இன்னமும் நீங்கள் பதவியேற்பதில் தாமதங்கள் ஏன்?

கடந்த மாதம் 29 ஆம் திகதி, மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், மற்றும் கிராமிய அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான அமைச்சர் நான்தான் என்றும் அதற்கு எந்தவிதமான இடையூறும் விளைவிக்க வேண்டாமென்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியிருந்தது. அதற்கப்பால் கடந்த வருடம் ஆவணி மாதம் 20 ஆம் திகதி முதலமைச்சரால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கும் அதில் குறிப்பிடப்பட்டவற்றை அமுல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இத்தடை உத்தரவு இவ்வழக்கின் ஏழாவது பிரதிவாதியான ஆளுனருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த 29 ஆம் திகதியிலிருந்து ஆளுனரும் முதலமைச்சரும் அது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காது இழுத்தடித்து வருகின்றனர். எனக்கான அமைச்சுப்பதவியை நான் தொடர்ந்தும் வகிக்க ஆவன செய்து தருமாறு நான் ஆளுனர், முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால், நான் எனது கடமைகளை செவ்வனே மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ள வில்லை. கடந்த 9 ஆம் திகதி தான் ஏற்கனவே வழங்கிய தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் 14 நாட்களுக்கு நீடித்தது.

அண்மையில் நடந்த மாகாண சபை அமர்வில் இது குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. ஒரு சாதாரண நபர் முதலமைச்சராக இருந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கப்பால், எங்கள் முதலமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் உயர் நீதிமன்றத்தினதும் நீதியரசராக இருந்தவர். அவ்வாறான ஒருவர் நீதிமன்றத்தின் தடையுத்தரவை உடனடியாக அமுல்ப்படுத்தும் கடப்பாடு உள்ளவர். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை அவர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதனையும் நான் கடந்த மாகாணசபை அமர்வில் தெரிவித்திருந்தேன், அது ஆளுனரோ, முதலமைச்சரோ யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கொள்ளப்பட வேண்டும்.

அந்தவகையில் இன்னொரு முக்கிய விடயம் முதலமைச்சர் மாகாண சபையில் இன்னொரு பொய்யான விடயத்தைத் தெரிவித்திருக்கின்றார். எனது இடைக்காலத் தடையுத்தரவு சம்பந்தமான ஏதாவதொரு கடிதம் அவருக்கு ஆளுனரால் அனுப்பிவைக்கப்பட்டதா என கடந்த மாகாணசபை அமர்வில் முதலமைச்சரிடம் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு எந்தத் தயக்கமுமின்றி இல்லையென்பதையே பதிலாகத் தந்தார் அவர். ஆனால் தான் இதுதொடர்பில் முதலமைச்சரோடு கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவரது பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளுனர் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார். தனது கடிதம் முதலமைச்சருக்குக் கிடைத்தமை முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்புக்கொள்ளபட்டதாகவும் ஆளுனர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அவ்வாறான கடிதம் எதுவும் கிடைக்கவில்லையென்கிறார் முதலமைச்சர்.

பொய்யொன்றைச் சொல்லியதன் மூலம் முதலமைச்சர் இதுவிடயத்தில் தொடர்ச்சியாக விடாப்பிடியாகச் செயற்பட்டு வருவதானது இந்தத் தாமத்துக்குக் காரணம் என்பேன்.

பொதுவாகவே மாகாணசபை அதிகாரங்கள் எவையும் அற்றது என்று சொல்லப்படுகின்ற நிலையில், முதலமைச்சரின் அதிகாரத்தை மேலும் குறைக்கும் வகையில், தமிழ்த் தரப்பினரே செயற்பட்டிருப்பதாகவும் சில விமர்சனங்கள் முன்வைக்கபட்டுள்ளனவே?

பொய் சொன்னது மாத்திரமல்ல, வட மாகாணசபைக் கூட்டத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடையுத்தரவின் மூலம், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒற்றையாட்சியை விரும்புவதாக ஒரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தி விட்டார் முதலமைச்சர். இது அவர் எல்லாவற்றையுமே வேண்டுமென்றே திசை திருப்புவதாகவே எண்ண வைத்துள்ளது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு நீதியரசராக இருந்தவருக்கு, சட்டம் சரியாக தெரிந்திருக்க வேண்டும். ஒரு அமைச்சரை நியமிக்கவோ அல்லது பதவி விலக்கவோ தனக்கு அதிகாரம் இல்லையென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக அவர் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இது நிச்சயம் பொய்யானதொரு விடயம். இது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அது ஊடகங்களின் கடமை. அமைச்சரை நியமிக்கும் அதிகாரமோ, நீக்கும் அதிகாரமோ முதலமைச்சருக்கு இல்லையென்ற விதத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை. இது தெளிவாக இருக்கின்றது. அரசியலமைப்பின் 154 f 5 இன்படி அமைச்சர் வாரியத்தை நியமிக்கும் சகல அதிகாரமும் முதலமைச்சருக்கு இருக்கின்றது. அதேநேரம் அமைச்சரை நீக்குவது தொடர்பில் எந்தவிதமான தெளிவான ஏற்பாடும் இல்லாதவிடத்து, முதலமைச்சர் ஒரு அமைச்சரை நீக்கவேண்டுமென விரும்பின் தனது விருப்பத்தை ஆளுனருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

ஆனால், என்னுடைய விடயத்தில் நடந்தது என்னவெனில், கடந்த வருடம், ஆவணி மாதம் 23 ஆம் திகதி அமைச்சர் வாரியத்தில் இரு அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் தான் என்னை எனது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்குவதாக எனக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருந்ததோடு அனைத்து ஆவணங்களையும், கையளிக்குமாறும் கோரியிருந்தார். இதில் உண்மையில் நடந்தது என்னவெனில் ஒரு அமைச்சரை முறையற்ற விதத்தில் நீக்கியதற்காகவே நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது. இப்போதும் சொல்கின்றேன் ஒரு அமைச்சரை நியமிக்கவும் நீக்கவும் முதலமைச்சரின் நடவடிக்கைதான் முதன்மையானது. ஆளுனரின் ஊடாக அமைச்சரை நியமிக்கவும் நீக்கவுமான அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் இருக்கின்றது. இதில் பிழையான ஒரு பொருட்கோடலைச் செய்ததன் மூலம் முதலமைச்சர் எல்லாவற்றையும் திசைதிருப்பப் பார்க்கின்றார்.

இடைக்கால உத்தரவின் மூலம் தான் நியமித்த அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதுள்ள அமைச்சர்களை நீக்கவும் அதிகாரமில்லையெனவும் அவர் நிறுவ முயல்கின்றார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாக இருக்கின்றது. சுமார் முப்பது அல்லது நாற்பது பக்கங்களைக் கொண்ட 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற சட்ட ஏற்பாடுகளைப் பூரணமாக விளங்கிக் கொள்ளாது, மாகாண சபையை எவ்வாறு நிர்வகிப்பதென்ற பாரிய கேள்வி இங்கு எழுகின்றது. கட்சிகள் மக்களை ஒற்றையாட்சிக்குள் வழிநடத்த முற்படுவதானதொரு தோற்றப்பாட்டை முதலமைச்சர் அடிமட்ட மக்களின் மனங்களில் விதைத்து அவர்களை தவறாக வழிநடத்த முயல்கின்றார்.

அவ்வாறு சொல்வதன் மூலம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் எவையும் முதலமைச்சருக்குத் தெரியவில்லையா? என்கின்ற கேள்விதான் மேலோங்குகின்றது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையாக இல்லாவிட்டாலும் கூட இருக்கின்ற அதிகாரங்களைக்கூட முதலமைச்சர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது அவர் மீதான எனது குற்றச்சாட்டாக உள்ளது. அதுமாத்திரமல்ல இந்த வழக்கின் மூலம் மத்திய அரசுக்கு நாங்கள் மேலும் அதிகாரங்களை வழங்குகின்றோம் என்பது மேலும் நகைப்புக்குரிய விடயமாகவே இருக்கின்றது. முதலமைச்சரின் இந்த செயற்பாட்டால் மக்கள் பாரியளவில் அதிருப்தியுற்றிருக்கின்றார்கள். நீதியரசராக இருந்தவருக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை சரியாக அமுல்படுத்தத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றார்கள்.

அதிகாரப் பகிர்வுக்காக அரசியலமைப்பு ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பே முன்வைத்திருக்கின்ற நிலையில், தனது தவறை மறைக்க, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, ஒற்றையாட்சிக்குள் மக்களை வழிநடத்துவதாக பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்தி தான் தப்பிக்கப் பார்க்கின்றார் முதலமைச்சர். எனது வழக்குக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீணாக என்மீது பழிசுமத்தி என்னை பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டதே தவிர மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களை மத்திக்குக் கொடுப்பதற்காக அல்லவென்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் தான் செய்த தவற்றை மறைப்பதற்காக பல்வேறுவிதமான கூற்றுக்களை முன்னுக்குப் பின் முரணாக சொல்லிக் கொண்டிருக்கின்றார். முதலமைச்சர் இவ்வாறு தொடர்ந்து செயற்படுவாரானால் அவர் மீது மக்கள் கொண்டிருக்கும் நல்லபிப்பிராயம் சிதைவடைய ஆரம்பித்துவிடும்.

முதலமைச்சர் தான் விட்ட பிழையை ஒத்துக்கொண்டு என்னிடம் இதுகுறித்து கலந்தாலோசிப்பாரானால், நான் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களுக்குச்சேவை செய்வது ஒருபுறமாக இருந்தாலும், அமைச்சுப் பதவிக்காகத்தான் நான் வழக்குத் தாக்கல்செய்து அதற்காகத்தான் அடிபட்டேன் என்றவாறாகவும் இரண்டு மாகாணசபை அங்கத்தவர்கள் விமர்சனம் செய்தார்கள். அமைச்சுப் பதவிக்காக என்றுமே நான் சண்டையிட்டதில்லை. அதிலிருக்கும் சுகபோகங்களுக்காகவும் நான் கேட்கவில்லை.

அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. வேண்டுமென்றே பழிசுமத்தி என்னை நீக்கியிருக்கின்றார்கள். அதற்கான நீதியை நாடித்தான் நான் சென்றேன். முதலமைச்சர் இது விடயத்தில் தவறிழைத்திருக்கின்றார் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அது தவிரவும் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரத்தை விடவும் கூடுதல் அதிகாரங்களைப் பெறவும் இத்தீர்ப்பு வழிவகுத்திருக்கின்றது என்றே சொல்வேன். அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்படுகின்ற தற்போதைய சந்தர்ப்பத்தில் இவ்வாறான குழப்பகரமான சூழ்நிலைகளை ஆராய்ந்து கூடுதல் அதிகாரங்களைப் பெறவுமே இது வழிவகுக்கும். ஆகவே முதலமைச்சர் கூறுவதைப்போன்று 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள எந்த அதிகாரத்தையும் மத்திய அரசிடம் வழங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நானோ, அல்லது நான் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ முயற்சிக்கவில்லை. இவ்வாறான முன்னுக்குப் பின்முரணான கருத்துக்களைக் கூறுவதன் மூலம் தானே எதிர்காலத்தில் தமிழ் மக்களின் தலைவன் என்று காட்டிக்கொள்ளவே இவ்வாறு முதலமைச்சர் செயற்படுகின்றார் என்றே எனக்கு எண்ணத்தோன்றுகின்றது.

மாகாணசபை அமைச்சர்களின் எண்ணிக்கை 5 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உங்களை அமைச்சராக நியமிப்பதில் சிக்கல்கள் உள்ளனவா?

இது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் தெளிவாக, குறிப்பிட்டிருக்கின்றது. வழக்கு விசாரணைகளின் போது முதலமைச்சரின் சட்டத்தரணியே மன்றில் தொடர்ச்சியாகத் தோற்றமளித்திருந்தார். நீதிமன்றில் நடந்த அனைத்து நடவடிக்கைகளும் அவரது சட்டத்தரணிக்குத் தெரியும். நீதிமன்றத்தின் கட்டளை அதன் இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. அதன் பிரதிகள் ஊடகங்களிலும் வெளிப்பட்டிருந்தன. முதலமைச்சர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். என்னுடன் தற்போது 6 அமைச்சர்களாக அமைச்சரவை விரிவடைந்து விடும் என்றும் அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அரசியலமைப்புக்கு முரணாகத் தான் செயற்படப்போவதில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார். இதனை நகைப்புக்குரிய விடயமாகவே நான் கருதுகின்றேன். இது குறித்த நீதிமன்றின் கட்டளை தெளிவாக இருக்கின்றது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மாகாணசபையின் அமைச்சர் வாரியம் முதலமைச்சர் உட்பட 5 ஆக இருக்க வேண்டும் என்றும், அதில் நான் வடமாகாணத்தின் மீன்பிடி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்க வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றது. அதற்குரிய நடவடிக்கையை ஆளுனர் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கின்றது. ஆளுனரும் முதலமைச்சர் தவிர்ந்த அமைச்சரவை வாரியத்தில் இருக்கக்கூடிய மூன்று அமைச்சர்களின் பெயர் விபரங்களைத் தருமாறு முதலமைச்சரிடம் கோரியிருக்கின்றார். ஆனால் முதலமைச்சர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதாக தொடர்ச்சியாக தான் விட்ட பிழையே மறைக்க தொடர்ந்து பிழை விடுகின்றார் என்பதை வெளிப்படையாகச் சொல்கின்றேன்.

பதவியேற்றவுடன் அதனை இராஜினாமா செய்யப்போவதாகச் சொல்லியிருந்தீர்களே?

நிச்சயமாக அவ்வாறு நான் கூறியிருந்தேன். நடந்த அநீதிக்கு நீதி கேட்கவேண்டும் என்பதே எனது நோக்கம். அதில் நான் வென்றும் இருக்கின்றேன். பதவியேற்றதன் பின்னர் மறுநாளே எனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதென்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. நான் அமைச்சராக இருந்தபோது இரண்டு விடயங்களை எனது இலட்சியங்களாக் கொண்டிருந்தேன். ஒன்று மாவீரர் குடும்பங்கள் மற்றும் போராளிகளுக்கான வாழ்வாதார அபிவிருத்தித் திட்டம் மற்றையது எனது மாகாணத்தை விபத்துகளற்ற மாகாணமாகக் கொண்டு வரவேண்டும் என்பது. வட மாகாணத்தில் ஏதோவொரு மூலையில் வீதி விபத்து தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டுபேர் தொடர்ச்சியாக விபத்தால் இறந்து கொண்டிருக்கின்றார்கள். எனது மாகாணம் வீதி விபத்தற்ற மாகாணமாக மாறவேண்டும்.

வடமாகாணத்தில் இதுவரையில் ஆக்கபூர்வமான ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்ட தென்றால் அது என்னால் கொண்டுவரப்பட்ட வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டம்தான். அதனூடாக சுமார் 200 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது அதற்கான ஆளணியும் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. அவ்வாறனதொரு அதிகாரசபை உருவாக்கப்பட்டு வட மாகாணத்தின் போக்குவரத்துத்துறை சீரமைக்கப்பட்டுவரும் நிலையிலும் மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பட்டுவரும் நிலையிலும் என்னை எனது அமைச்சுப் பதவியில் இருந்து இடைநிறுத்தி விட்டார்கள். பல தூதரகங்களிலும் இதற்கான நிதிக்கோரிக்கைகளை நான் முன்வைத்திருந்தேன். இன்னும் 16000 மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் பலர் என்னைத் தொடர்புகொண்டு எதிர்வரும் நான்கு மாதங்களும் பதவியிலிருந்து மக்கள் சேவையை தொடர வேண்டு எனக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு தாங்கள் பக்க பலமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இப்போதுள்ள நிலையில் முதலமைச்சரோடு சுமுகமாக என்னால் வேலை செய்யமுடியாதென நான் சொன்னேன்.

நான் பதவியில் இருந்தபோது மாவீரர் மற்றும் பேராளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கென பல மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் நான் பதவியில் இல்லாத இந்தக் காலத்தில் அவர்களுக்கென ஒரு சதமேனும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அவற்றையெல்லாம் மீண்டும் செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அதனைச்செய்யவே விரும்புகின்றேன். முதலமைச்சருடன் முரண்பட்டுக்கொண்டு அமைதியாக அவற்றையெல்லாம் செய்யமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. எனது இலட்சியங்களை எதிர்வரும் குறுகிய காலத்தில் இரவு பகல் பாராது உழைத்து நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கு முதலமைச்சரின் ஒத்துழைப்பு எவ்வாறு அமையும் என்ற கேள்வியும் இருக்கின்றது.

முதலமைச்சர் தனது பிழையை உணர்ந்து என்னை விட்டுக்கொடுக்குமாறு கோரியிருந்தால் மறுகணமே இந்தப் பதவியை ஏற்காமலேயே நான் வெளியேறியிருப்பேன். இந்த அமைச்சுப் பதவியை எனது கல்வி மற்றும் தகுதிகளைப் பார்த்து எனக்குத் தந்தவரும் முதலமைச்சர்தான். நான் சார்ந்த கட்சி எனக்குத் தரவில்லை. ஆனால் பல பிரச்சினைகள். அதற்கு முதலமைச்சர் மட்டுமே காரணமல்ல. முதலமைச்சரை பிழையாக வழிநடத்தியவர்கள் பலர். அவரை மட்டும் நான் குறை கூறவில்லை.

தற்போதுள்ள மற்றொரு போராட்டம், மேன்முறையீட்டு தீர்ப்பை வைத்து முதலமைச்சர் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்போவதாக அறியக்கிடைத்தது. உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாமையால் முறையீடு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றது. மேல்முறையீடொன்றுக்கு முதலமைச்சர் செல்வாராயின் அவையெல்லாவற்றுக்கும் முகம் கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன். இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து, இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்று சேவை செய்ய வேண்டும், என்கிற அவா எழுந்துள்ளது. ஆளுனரும், முதலமைச்சரும் நீதிமன்றக் கட்டளையை நிறைவேற்றத் தவறினால் அது தொடர்பாக, அதாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் தயாராக இருக்கின்றேன்.

Comments