சாதகத்தில் ஒன்றிணைவதால் ஏற்படும் நன்மை தீமைகள்! | தினகரன் வாரமஞ்சரி

சாதகத்தில் ஒன்றிணைவதால் ஏற்படும் நன்மை தீமைகள்!

பத்தாமிடத்தில் வியாழனும் சுக்கிரனும் அமைந்தவர், ஒன்றை உருவாக்க அழிக்கும் தொழிலில் ஈடுபடலாம். அதாவது, கோழிப்பண்ணை, ஆடு, மாடு, இறால் மற்றும் மீன் வளர்ப்புப் பண்ணை போன்றவைகளில் ஈடுபடலாம். இவையெல்லாம் உருவாக்கி அன்றாட உணவுக்காக அழிக்கும் தொழில்கள்தானே?

சோதிடத்தில் வியாழன் தேவர்களின் குருவாகவும், சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதாவது ஒருவருக்கொருவர் எதிரானவர்கள். இப்படிப்பட்டவர்கள் ஒரு சாதகத்தில் ஒன்று சேர்ந்து சஞ்சரிக்கும்போது, ‘நான்’ என்ற அகந்தையோடும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத முரட்டுப்பிடிவாதத்தோடும் ஒருவரையொருவர் வீழ்த்தும் முனைப்போடும் உலவுவார்கள். ஆகவே இவ்விதம் கிரக அமைப்பு அமையப்பெற்றவர் எதிலும் விட்டுக் கொடுத்தாலன்றி வாழ்வில் முன்னேறுவதோ, வெற்றிபெறுவதோ கஷ்டமாக இருக்கும். இத்தகையோர் கிடைப்பதை வைத்துக்கொண்டு முன்னேற வேண்டுமேயன்றி இருப்பதைவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது.

ஒரு சாதகத்தில் இலக்கினம் எனப்படும் முதலாம் வீட்டுக்கு, 3ஆம், 6ஆம், 8ஆம், 12ஆம் வீடுகள் (இராசிகள்) மறைவுத் தானங்கள் அல்லது துர்ஸ்தானங்கள் எனப்படும். எனவே இவற்றுக்கு அதிபதியான கிரகங்களும் வாழ்நாளில் சாதகருக்கு நன்மை செய்யவாய்ப்பில்லை.

(இவற்றில் சில விதிவிலக்குகளுமுண்டு) அதுபோல உபயராசியெனப்படும் தனு மற்றும் மீன லக்கின சாதகர்களுக்கு துலா மற்றும் மகர ராசிகள் இலாபத்தானமாக (11ஆம் இடம்) வருவதால் அவைகளிலுள்ள கிரகங்களான சுக்கிரனும், சனியும் நன்மை செய்யமாட்டாது. நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமலிருந்தால் அதுவே பெரிய பாக்கியம்.

வியாழனுக்குச் சொந்தமான தனு மற்றும் மீன இலக்கினகாரர்களுக்கு சுக்கிரன் எப்போதும் எதிர்மறையான பலன்களையே தருவார். சக்திக்கு மீறிய வருமானம், பதவியென்று எதைத் தந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்பாராத தருணங்களில் இழக்க வைத்துவிடுவார்! இத்தகையோர் எவரையும் அவரது படிப்பு, பட்டம், பதவி, அந்தஸ்து பாராமல் கேள்விக்கு உட்படுத்துவார்கள். இதனால்தான் இந்த தனு மற்றும் மீன லக்கினங்களில் பிறந்தவர்கள் பத்திரிகையாளர்களாக, அரசியல் ஆய்வாளர்களாக, தமக்கெனத் தனிவழி கொண்ட சித்தாந்தவாதிகளாக இருக்கிறார்கள். அரசியலோ, வியாபாரமோ, நிர்வாகமோ, போராட்டமோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள சாதகங்களைவிட பாதகங்களே (NEGATIVES) இவர்களுக்கு பெரிதாகத் தெரிகின்றன. அவற்றை வைத்தே அதனதன் முக்கியஸ்தர்களை மடக்கித்தடுமாற வைப்பார்கள்.

தனு, மீன இலக்கினகாரர்கள் பொதுவாகவே மனித நேயமுடையவர்கள். இயற்கையை நேசிப்பவர்கள். காடுகளை அழிப்பது, மலைகளைத் தகர்ப்பது, வாய்க்கால்கள், குளங்களை மூடி அவற்றின் மீது மாடிமனைகள் எழுப்புவது போன்ற இயற்கையை மீறும் செயல்களை எழுத்தின் மூலம் போராட்டங்கள் மூலமும் கண்டித்துக் கொண்டேயிருப்பார்கள். படிப்பில் எவ்வளவுதான் முன்னேறி முதன்மை பெற்றிருந்தாலும், வேலை கிடைக்காமல் பலகாலம் வேதாந்தம் பேசி அலை மோதித்திரிவது இத்தகையோர்தான். மேலே சென்னவையெல்லாம் பொதுவான பலன்கள்.

இனி வியாழனும் சுக்கிரனும் ஒவ்வொரு இராசியிலும் இணைந்து நின்றால் அதன் பலன்கள் எத்தகையவை என்பதை தனு இலக்கினத்தை முதன்மையாகக் கொண்டு பார்ப்போம்.

தனுலக்கினத்திற்கும், அதிலிருந்து எண்ணிவரும் நாலாம் வீடாகிய மீனத்திற்கும் உரியவர் வியாழன். ஆனால் சுக்கிரனோ கெடுதல் செய்யும் ஆறாம் வீடாகிய இடபத்திற்கும், 11ஆம் வீடாகிய மாரகம் செய்யும் துலாமிற்கும் சொந்தக்காரர், இந்த இருவரும் சேர்ந்து இலக்கினத்திலே சஞ்சரித்தால் அத்தகையவர் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பார். எல்லா விடயமும் தமக்கே தெரிந்ததுபோல் காட்டிக் கொள்வார். மற்றவர்கள் குறிப்பாக தனது சகோதர சகோதரிகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தோடு இருப்பார். அவர்களும் ஏதோவொரு விதத்தில் இவரைச் சார்ந்தே இருப்பார்கள். தனக்கு ஏதோவொரு நோய் இருப்பதான சந்தேகம் இவருக்கு இருந்து கொண்டேயிருக்கும். எப்படியும் திருப்பிக் கொடுத்து விடலாமென்ற ஏதோவொரு தைரியத்தில் அடிக்கடி கடன் வாங்கிச் செலவழித்தபடி இருப்பார். இராணுவம், பொலிஸ், சிறைச்சாலை போன்ற இடங்களில் சீருடையணிந்து கடமையாற்றும் கடினமான பணிகள் இத்தகையோருக்குக் கிடைக்கும்.

தனுவுக்கு இரண்டாமிடமான மகரராசியில் கூடியிருந்தால் எப்போதும் சளசளக்கும் ஓட்டைவாயராயிருப்பார். இவரது பேச்சும் கருத்தும் சபைகளில் எடுபடாது. எதற்கும் கண், காது வைத்து மிகைப்படுத்தியும் பேசுவார். சின்ன வயதில் படிப்பு தடைப்படும். குடும்பத்தை விட்டு அன்னிய நாட்டில் சென்று சீவிப்பார். கண், காது, கோளாறுகள் அடிக்கடி வந்து நீங்கும். தான் சார்ந்த துறைகளில் பின்னாளில் சிறந்த விமர்சகராகவும் பிரகாசிப்பார்.

கும்பராசி தனுவுக்கு மூன்றாமிடம். இங்கு வியாழனும் சுக்கிரனும் இணைவது சிறந்த ராஜயோகமாகக் கருதப்படுகிறது. இத்தகையவர் எழுத்துத் திறமையால் வாசகர்களை வசீகரிப்பார். அயல் நாட்டுத் தொடர்புகளாலும் ஆதாயம் பெறுவார். சமூகத்திலோ, அல்லது தான் சார்ந்த துறையிலோ இதுவரை கவனிக்கப்படாத விடயங்களை எடுத்துச் சொல்லியும் புகழ் பெறுவார். இவரது இளைய சகோதரத்தின் வாழ்க்கை சரியாக அமையாது. அவர்களோடு எப்போதும் பிரச்சினையிருக்கும். நண்பர்கள் கூட்டம் எப்போதும் புடைசூழ்ந்திருக்கும்.

தனு லக்கினத்திற்கு நாலாமிடமான மீனம் வியாழனுக்கு சொந்த வீடு. சுக்கிரனுக்கோ அது உச்ச வீடு. ஆட்சியும் உச்சமும் ஒன்றிணையும் போது சொந்த ஊரிலோ, நாட்டிலோ சீவிக்க விடாமல் கிளப்பிவிடும். இந்த அமைப்பிலுள்ளவருக்கு சந்திரன் பலவீனப்பட்டிருந்தால். அது பெற்ற தாயைப் பாதிக்கும்; அல்லது பறித்துவிடும். அப்படியில்லாமல் சந்திரன் பலம் பெற்றிருந்தால் இவருக்கு தாயின், வழிகாட்டுதல் எப்போதுமிருக்கும். தாய்வழிச் சொத்துக்கள் இவருக்கு வந்து சேரும்! வாகனயோகம் இருப்பினும் அதனால் அடிபடுதல், பறிகொடுத்தல் போன்ற தொல்லைகளே அதிகமிருக்கும்.

ஐந்தாமிடமான மேடராசியில் வியாழனும் சுக்கிரனும் அமர்ந்திருந்தால், இத்தகையவர் பிறந்தவுடனேயே இவரது தாய் தந்தையர் தமது பூர்வீக இடத்தை விட்டு இடம்பெயர்வார்கள். பூர்வீக சொத்து இழப்பு ஏற்படும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்துவேறுபாடும் மோதலும் அடிக்கடி ஏற்படும். ஐந்தாமிடம் என்பது பிள்ளைப் பாக்கியத்தைக் குறிப்பது. அதற்குக் காரகன் வியாழன். ஆனாலும் பிள்ளைக்குரிய ராசியில் அதற்குக் காரகனான வியாழன் இருப்பது தோஷமாகக் கருதப்படுகிறது. அதனால் காலம் கடந்து பிள்ளைகள் பிறக்கும். அப்படிப் பிறந்தாலும் அப்பிள்ளைகள் தந்தையின் சொல்கேட்டு நடக்க மாட்டார்கள்.

இடபராசி தனுவுக்கு ஆறாமிடம். இது சுக்கிரனுக்கு ஆட்சி வீடும். அது இங்கு வியாழனுடன் சேர்வதால் குறைவில்லாத பொருளாதார வசதியை ஏற்படுத்துவார். 11ஆம் வீட்டுக்குரிய சுக்கிரன் இவ்விதம் மறைவுஸ்தானமாக ஆறில் அமர்வதால் முக்கிய தருணத்தில் மூத்த சகோதரத்துடன் பிரச்சினை வந்து பிரிய நேரும்.

சுக்கிரனுக்கு ஆறாமிடம் சொந்த வீடாக அமைந்தாலும் வியாழனுக்கு அது மறைவுஸ்தானமே. அதனால் இவ்விதம் அமைந்தவர் தனக்குத் தானே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வார். இவர்கள் பெரும்பாலும் நாத்திகராகவே இருப்பர்.

கையில் பணமிருந்தால் இவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதனைத் தண்ணீர்போல் செலவழித்துவிட்டே மறுவேலை பார்ப்பர். இவர்கள் எப்போதும் கடனாளியாகவே இருப்பதன் காரணம் இது தான். இவர்களைச் சுற்றியுள்ளவர்களே இவர்களைச் சிக்க வைப்பார்கள்.

தனுவுக்கு மிதுனம் ஏழாமிடம். இது களத்திரமெனப்படும் கல்யாண வீடு. இங்கு சுக்கிரனும் வியாழனும் அமர்வதால் இத்தகையவரின் வாழ்க்கைத் துணையின் உடல் நலம் பாதிக்கப்படப் பலனுண்டு. கருச்சிதைவு மற்றும் கோளாறுகளால் பிள்ளைப் பேறு தடைப்படும்; தாமதமுமாகும்.

பெரும்பாலும் இத்தகைய அமைப்பிலுள்ளவர்களுக்கு காதல் திருமணமே நடக்கும். வந்து வாய்க்கும் கணவனோ அல்லது மனைவியோ கலைகளில் ஈடுபாடு கொண்டவராயிருப்பார். ஒரு தொழிலில் மட்டுமே ஈடுபடாமல் பல தொழில்களிலும் முதலீடு செய்து கையைச் சுட்டுக் கொள்வார். இவர் ஆணாயின் பெண்களால் அபவாதங்கள் பலவந்து சேரும்.

கடகராசி தனுவுக்கு எட்டாமிடம். இங்கு வியாழன் உச்ச கதியில் சஞ்சரிக்கிறார். கூடவே சுக்கிரனும் இருந்தால் ஒரு சிந்தனையாளராகவும், எவரிடமும் எவ்விடயத்தையும் அறிவுபூர்வமாக பேசவேண்டுமென்று விரும்புகிறவராகவுமிருப்பார்.

அடிக்கடி எடுத்ததுக்கெல்லாம் சீறிச்சினப்பதுதான் இவருக்குள்ள பெரிய பலவீனம்! சோதிடம், சித்தவைத்தியத்தில் ஆராய்ச்சியும் பிழைப்புமுண்டு. பல தருணங்களில் தாய் அல்லது சகோதரியின் கட்டுப்பாட்டில் இருப்பார்; இவருக்கான முடிவுகளை அவர்களே தீர்மானிப்பர். நிம்மதியாயிருக்க வேண்டுமானால் தமது சொத்துப்பத்துக்களை வாழ்க்கைத் துணைவரின் பெயருக்கு மாற்றுவது நல்லது.

சுக்கிரனும் வியாழனும் கூடி 9ஆம் இடத்தில் அதாவது சிம்மராசியில் இருந்தால், அப்படி அமைந்தவர் நேர்மையாக வாழ நினைத்தாலும், தவறான நண்பர்கள் மற்றும் தொழில் பங்காளிகளுடன் சேர்ந்து கெட்டுப்போவார். இதில் தங்களது பலவீனத்தை மறைக்க மற்றவர்கள் மீது பழியைப் போடுவார்கள். குறிப்பாக தந்தையின் தவறால்தான், தான் மதிமோசம் போனதாக குற்றம் சாட்டுவர்.

ஆனால் இன்னொரு கோணத்தில் தந்தை ஒரு புத்திசாலியாக, இவரது தவறுகளை சீர்திருத்தி காப்பாற்றுகிறவராக இருப்பார். தந்தையின் தொழிலையும் இவரே பொறுப்பேற்று நடத்துவார். சேமிக்கும் பழக்கமுமுண்டு. வயது போகப்போக புண்ணிய காரியங்களில் ஈடுபாடு கொண்டு தர்மஸ்தாபனங்களையும் உருவாக்கி உதவுவார். தங்களது தவறுகளை நியாயப்படுத்திப் பேசுவதில் சமர்த்தர்கள்.

கன்னிராசியானது தனு லக்கினத்துக்கு பத்தாமிடம். இது ஜீவனோபாயத்தைக் குறிக்கும் ஸ்தானம். இங்கே வியாழன் அமர்ந்திருந்தால் பதியை – அதாவது, இருக்குமிடத்தை விட்டுக்கிளப்புவார் என்பது சோதிட மொழி. இதைவிட, கூடவே இணைந்துள்ள சுக்கிரனுக்கு இது நீசஸ்தானம். இதன்பலன் இவ்விதம் அமைந்தவர் சொந்தத் தொழில் செய்ய முடியாது போகும். ஆனால் ஒன்றை உருவாக்கி அழிக்கும் தொழிலில் ஈடுபடலாம். அதாவது கோழிப்பண்ணை, ஆடு, மாடு, இறால், மீன் வளர்ப்புப் பண்ணை போன்றவைகளில் ஈடுபடலாம். இவைகளெல்லாம் உருவாக்கி அன்றாட உணவுக்காக அழிக்கும் தொழில்கள் தானே? இக்கிரகநிலை கொண்டவர் அடிக்கடி அன்னியதேசம் சென்று பொருளீட்டுவர்.

ஒரு ராசியென்பது 30 பாகைகள் கொண்டது. இதில் பத்துப் பாகைக்குள் இருகிரங்கள் இணைந்திருந்தால் ‘அஸ்டதங்கம்’ என்ற மறைவு நிலையை அடையும், இவ்விதம் அமைந்த சாதகர் எந்தத் தொழிலிலும் நிலையாக இருக்கமாட்டார். கிரகங்கள் ஒன்றிக்கொன்று பத்துப்பாகை தாண்டி விட்டால் கல்வியில் உயர்ந்து வேத விற்பன்னர்களாக, கிருபானந்தவாரியார் போல் உபன்னியாசர்களாக உயர்வார்கள்.

வங்கி மற்றும் கல்வித்துறைகளில் உயர்பதவிகளும் பெறுவார்கள். நடைமுறை வாழ்க்கையிலோ, ஆன்மீகத் துறையிலோ இவர்களுக்கு தெரியாத விடயங்களே இராது எனலாம்.

துலாராசியானது தனுவுக்கு 11ஆம் இடம். பொதுவாக இது இலாப ஸ்தானம். ஆனால் உபய இலக்கினமான தனுவுக்கு 6ஆம் 11ஆம் இடங்கள் மாரகஸ்தானங்களாக கொள்ளப்படுவதால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் பூரண சுபரான வியாழனும் இணைந்துள்ளபடியால், இவ்விதம் அமைந்தவர் ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ இது உத்தரவாதமளிக்கும். இத்தகையவரின் படிப்பும் நடபடிகளும் கிட்டத் தட்ட ஒரு ராஜகுருவின் தோரணையில் அமைந்திருக்கும். சபைகளிலும் முதன்மை ஸ்தானம் பெறுவார். தமக்கு மூத்த சகோதர சகோதரிகள் முன்னேற உதவிகரமாகவும் இருப்பார்.

12ஆம் வீடு விரய வீடு. செலவு வீடு. இறுதிப்பயணத்தையும் இதுவே சொல்லும். விருச்சிமாகிய இந்த வீட்டில் வியாழனும் சுக்கிரனும் இணைந்தால் அலைவதே வாழ்வாக இருக்கும். அலைந்து திரிவதே தொழிலாகவுமிருக்கும். கோயில்களும் தேடி யாத்திரையென்று ஆன்மீகத்தேடலிலும் திரிவர். முதலில் காமக்களியாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு இறுதியில் ஆன்மீகத் தேடலில் அமைதிபெறுவர். சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாலேயே இவர்களது வாழ்க்கை வளம் பெறும்.

திருவோணம்

Comments