"கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான தார்மிக உரிமையை கையெழுத்திடும் சங்கங்கள் இழந்துவிட்டன" | தினகரன் வாரமஞ்சரி

"கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான தார்மிக உரிமையை கையெழுத்திடும் சங்கங்கள் இழந்துவிட்டன"

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பான பேரப்பேச்சுவார்த்தையில் முதல்நாளே பெருந்தோட்டக் கம்பனிகளுடன் முரண்பட்டுக்கொண்டு அப்பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சட்ட அந்தஸ்தை கொண்ட தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளமை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பேச்சுவார்த்தையில் ஒரே தடவையில் முடிவு காணப்படுவதில்லை. இரு தரப்பிற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் அம்முரண்பாடுகள் தொழிலாளர்களின் நலன்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும். கடந்தகால பேச்சுவார்த்தைகளில் கூட தொழிற்சங்கங்கள் வெளியேறி இருக்கின்றன. ஆனால் முடிவில் கம்பெனிகளுடன் இணங்கிப்போனது தான் வரலாறு. கம்பெனிகள் குறிக்கும் சம்பளத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையை தோற்றுவிப்பதையே தொழிற்சங்கங்கள் தொடர்நது செய்து வந்துள்ளன. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் முழுமையாக கம்பெனிகளுக்கு சார்பானது. சம்பள உயர்வு தொடர்பிலும் பெருந் தோட்டத் தொழிற்துறையின் இருப்பு, தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பிலும் தொழிலாளர்களுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது. அவ்வொப்பந்தத்தில் இருக்கின்ற பாதகமான விடயங்களை நீக்காமல் தற்போது சம்பள உயர்வு பற்றி மட்டும் பேசுவது எந்தளவிற்கு ஆரோக்கியமானதாக இருக்கப் போகிறது?

* அந்த பாதகமான விடயங்கள் நீக்கப்படாமல் சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடியாதா?

- 2016 கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான விடயங்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொள்ளத் தடையாக இருக்கும். ஏனெனில் எதிர்கால சம்பள உயர்வு உற்பத்தி அடிப்படையிலும், குத்தகை முறையான வேலையின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒரு ஏற்பாடு 2016 கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கிறது. இந்த ஏற்பாடு வேலை நாட்களுக்கான சம்பளம், வாழ்க்கைச் செலவிற்கேற்ற சம்பளம் போன்றவற்றுக்கு மாறானது. அல்லது அவற்றை நிராகரிக்கிறது. அந்த ஏற்பாட்டை இரத்து செய்யாமல் வேலை நாட்களுக்கும், வாழ்க்கைச் செலவிற்கும் ஏற்ற சம்பளத்தை கேட்க முடியாது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்ற ஏற்பாடு 2016 கூட்டு ஒப்பந்தத்தில் மாற்றப்பட்டு ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு மீளாய்வு செய்யப்படும் என்ற ஏற்பாடு இருக்கிறது. அவ்வாறெனின் கூடியது எத்தனை வருடங்களாகவும் இருக்கலாம் என்று பொருள் வருகிறது அல்லவா? இதுவும் பாதகமானதே.

2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் 18 மாதங்களுக்கும் பிறகு செய்யப்பட்டாலும் சம்பள உயர்விற்கேற்று 18 மாதங்களுக்கான பாக்கி சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்த பாதகமான விடயங்களை ஏற்றுக்கொண்டு தொழிற்சங்கங்கள் மூன்றும் தொழிலாளர்கள் சார்பில் ஒப்பமிட்டுள்ளன.

*- இந்த பாதகமான விடயங்கள் இருப்பதால் அது சட்டத்திற்கு முரணானது என்ற அடிப்படையில் அதனை இரத்து செய்யும் கோரி மேன்முறையீட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தீர்கள். ஆனால் அவ்வழக்கு தள்ளும்படி செய்யப்பட்டு விட்டதே! 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் சட்டபடி ஏற்றுக்கொள்ளககூடியது என்ற அடிப்படையில் எமது வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை. அந்த விடயம் பற்றி விசாரணை மேற்கொள்ளுவதற்கு முன்பாகவே அவ்வழக்கின் பிரதிவாதிகளான தொழில் ஆணையாளர் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்டக் கம்பனிகள், இ.தொ.கா, இ.தே,. தோ.தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க நிலையம் என்பனவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் தொழில் அமைச்சரும் பூர்வாங்க ஆட்சேபணையை எழுப்பியிருந்தனர். மக்கள் தொழிலாளர் சங்கத்திற்கோ, அதன் சார்பில் அதன் பொதுச் செயலாளராகிய எனக்கோ, பொதுநலன் என்ற அடிப்படையில் வழக்கு தொடுக்கும் உரிமை கிடையாது என்றும் கூட்டு ஒப்பந்தம் தனியாக இரண்டு தரப்பிற்குரியது என்றும் அந்த முதல் நிலை ஆட்சேபணையில் குறிப்பிட்டிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்ைக செலவுடன் தள்ளுப்படி செய்தது. அந்த கட்டளைக்கு எதிராக நாம் உயர் நீதிமன்றத்திற்கு விசேட மேன்முறையீட்டை செய்திருக்கின்றோம் அதன் மீதான விசாரணை இம்மாதம் 14 ஆம் திகதி நடைபெறும்.

நீதிமன்ற நடவடிக்கை என்பது ஒரு வழிமுறையேயன்றி ஒரே வழிமுறையோ முடிவான வழிமுறையோ அல்ல.

*- பாதகமான ஏற்பாடுகளை கொண்ட 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்ததில் இ.தொ.கா, இ.தே.தோ, தொ.சங்கம், பெ.தொ.நி. என்பன கைச்சாத்திட்டுள்ளன. பாக்கி சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறின. அத்துடன் நீங்கள் தொடுத்த வழக்கில் உங்களுக்கு எதிராகவும் கம்பனிகளுக்கு சார்பாகவும் ஆட்சேபனையை பதிவு செய்துள்ளன. எனவே அச்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு மாறாக செயற்பட்டுள்ளன என்று கருதுகிறீர்களா?

அச்சங்கங்களே கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட தகுதியானவை என தொழில் ஆணையாளர் அவற்றுக்கு சட்ட அந்தஸ்தை வழங்கி இருக்கிறார். அதனால் அச்சங்கங்களுக்கு கூட்டு ஒப்பந்த பேரப்பேச்சில் ஈடுபட சட்ட உரிமை இருக்கிறது.

 

ஆனால் தொழிலாளர்களுக்கும், பெருந்தோட்டத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டமை, நாங்கள் தொடுத்திருந்த வழக்கில இலங்கை முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்ட கம்பனிகள் என்பன போன்று அவ்வொப்பந்தம் நியாயமானது என்றும் சட்டபூர்வமானது என்றும் கூறியமை, அத்துடன் 2013 வரை வழங்கப்பட்ட பாக்கி சம்பளத்தை வழங்க வேண்டிய கடப்பாடு கம்பனிகளுக்கு கிடையாது என்று கம்பெனிகளுக்கு சார்பான கருத்தை கூறியமை போன்றவைகளினால், தொழிலாளர்களின் சார்பாக கூட்டு ஒப்பந்த பேரப்பேச்சில் ஈடுபடும் தார்மீக உரிமையை அம்மூன்று சங்கங்களும் இழந்துவிட்டன. தொழில் ஆணையாளர் அங்கீகரிக்கும் வரை பேரப்பேச்சில் ஈடுபடும் சட்ட உரிமை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.

*- தார்மிக உரிமை இல்லாதவர்கள் பேரப்பேச்சில் ஈடுபடும்போது தொழிலாளர்களின் உரிமை உறுதி செய்யப்படுமா?

அவர்கள் தார்மீக உரிமையை மீள நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமாயின் தொழிலாளர்களின் உரிமைகளை முதல் நிலையில் வைத்து செயற்பட வேண்டும். அதற்கு 2016 ஆண்டு ஒப்பந்தத்திலும் அதற்கு பின்பும் தொழிலாளர்களுக்கு பாதகமான விடயங்களில் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கம்பெனிகளுக்கும் துணைபோனதை சுயவிமர்சனம் செய்துகொண்டு பாதகமான ஏற்பாடுகளை இரத்து செய்ய வேண்டும். அதற்கு 2016 ஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டும். அவர்களின் நேர்மையை நிரூபிக்க வேண்டும். உடனடியாக நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். நீண்டகாலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிசெய்யும், பெருந்தோட்டத் தொழிற்துறையை பாதுகாக்கும் விடயங்களை உள்ளடக்கிய புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.

*- கூட்டு ஒப்பந்தம், தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக நேற்று ஷற்றன் சமூக நலனுக்கான நிலையத்தில் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தீர்கள். இதன் மூலம் நீங்கள் எதிர்பார்ப்பதென்ன?

ஒரு பொதுவான கோரிக்கையை வென்றெடுக்க அமைத்து அமைப்புகளும். நபர்களும் வித்தியாசங்களை வைத்துக்கொண்டு பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியம். இவ்வாறான முயற்சிகள் முன்பும் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம், வீடு காணி உரிமைக்கான மலையக மக்கள் நடவடிக்கைக் குழு, சமூக சீராக்கல் இயக்கம் என்பன உதாரணங்களாகும். அதேபோன்று தொழிலாளர்களின் உரிமைகள் பெருந்தோட்டத் துறையின் இருப்பு, கூட்டு ஒப்பந்தம் என்பன தொடர்பான பொது வேலைத் திட்டம், அதன வென்றெடுக்க பொது அமைப்பு செயற்பாடுகளும் அவசியம, அவை பற்றி கலந்துரையாடி முடிவெடுகக வேண்டி இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கூட்டு ஒப்பந்த பேரப்பேச்சில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, ஏனைய தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், தனி நபர்களும் கலந்துகொள்வது அவசியம்.

 

 

 

உரையாடியவர்:

அருள் சத்தியநாதன்

Comments