தமிழ் பேசும் சமூகத்தின் அரசியல் பலத்தை ஒழிக்க அயராது முயற்சி | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் பேசும் சமூகத்தின் அரசியல் பலத்தை ஒழிக்க அயராது முயற்சி

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் சிறுவயதில் இருந்தே அகிம்சை ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலபோராட்டங்களில் பங்கேற்று, செயற்பட்டுவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான கிருஷ்ண பிள்ளை சேயோன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.....

கேள்வி : - உங்களது அரசியல் பிரவேசம் எவ்வாறானது?

பதில் : - என்னுடைய தந்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர். அவர் பலபோராட்டங்களில் கலந்து பல முறை தடுப்புக் காவல்களிலும் பூசா, வெலிக்கடை பேன்ற சிறைகளிலும் இருந்து அதன் பின் தனது ஆசிரியர் தொழிலையும் சிலகாலம் இழந்திருந்தவர். அதன்பால் ஈர்க்கப்பட்ட நான், சிறு வயதிலிருந்தே தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவனாக 1994 ஆம் ஆண்டு எனது 9ஆவது வயதிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்புனர் நிமலன் செளவுந்தர்நாயகத்தின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதில் இருந்து ஆரம்பமாகியது.

தேர்தல் அரசியலானது, 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு நடைபெற்ற அராஜக போக்குகளும் கடத்தல்களும் இளைஞர்களுக்கான பாதுகாப்பின்மை குறிப்பாக 2012 கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட முடியாமல் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பலர் பின் வாங்கியபோது, தமிழ் தேசியத்தின் கடமை உணர்ந்து, தேர்தல் அரசியலில் 25 வயதில் பிரவேசித்தேன்.

கேள்வி : - நீங்கள் ஓர் இளம் அரசியல்வாதி என்ற வகையில் அரசியலில் தங்களை ஈடுபடுத்திய இதுவரையான காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

பதில் : - பல சவால்கள் கடந்த காலங்களில் சந்தித்துள்ளேன். பணம் பதவிகள்தான் சில விடயங்களை தீர்மானிப்பவையாக இருந்தன. இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதை நினைத்துப் பார்க்க முடியாத சூழல் அது. சிலரின் அரசியல் காழ்புணர்வுகளையும் பழிவாங்கல்களையும், தாண்டி தந்தைசெல்வாவின் வழியில் நாகரீமான அரசியல் பயணத்தை செய்கின்றேன் என்று நினைக்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

கேள்வி : - நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன?

பதில் : - புதிய தேர்தல் முறைதான் காரணம். எந்தக் கட்சியாலும் பெரும்பாலான இடங்களில் பெரும்பான்மையைப் பெறமுடியாத சிக்கல் நிலையை தோற்று வித்திருந்தது.

இத்தேர்தல் முறை 100 வீத ஜனாநாயக பண்புகளைக் கொண்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்குப் பொருத்தமானது. ஆனால் இலங்கைபோன்ற அபிவிருத்தியடைந்து வரும் சிறிய நாடுகளுக்குப் பொருத்தபாடு இல்லாததே இத்தேர்தல் முறை ஆகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்ல, நாட்டில் எந்த கட்சியும் அனேகமான உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. என்னைப் பொறுத்தமட்டில் இப்போதைக்கு நாட்டிற்கு பொருத்தமற்ற தேர்தல் முறையாகும்.

கேள்வி : - உள்ளூராட்சிமன்ற உறுப் பினராக பதவியேற்ற பின்னர் இதுவரையில் அப்பகுதி மக்களுக்கு தாங்கள் எவ்வகையான வேலைத்திட்டங்களை மேற் கொண்டுள்ளீர்கள்?

பதில் : - பிரதேச சபை மூலம் எமது வட்டாரத்தில் 25 மின்குமிழ்கள் மாத்திரமேபொருத்தப்பட்டுள்ளன. இச் சபையை முற்றிலும் நம்பாது வெளிதொடர்பு மூலமே பலமுன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி : - தங்களது உள்ளூராட்சி மன்றத்தில் ஏனைய கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு அமைந்துள்ளது?

பதில் : - எமது பிரதேச சபையில் ஆளும் அதிகாரத்தை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்திருக்கின்றது. இதன் நிமித்தம் எமது தரப்பு நிபந்தனைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது சிரமமாக ஒன்றாக உள்ளது. சில உறுப்பினர்கள் ஒத்துழைத்தாலும் சில உறுப்பினர்கள் கெளரவத்தைதான் எதிர்பார்க்கின்றார்கள் மக்கள் நலனை மறந்து விடுகின்றார்கள்.

கேள்வி : - பிரதேச சபை உறுப்பினர்களிடமிருந்து மக்கள் எவற்றை எதிர்பார்க்கின்றார்கள்?

பதில் : - பிரதேச சபை உறுப்பினர் ஊடாக பிரதேச சபை மூலம் பல கிராமிய அபிவிருத்தி சார்ந்த விடயங்களை மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

கேள்வி : - உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசு போதியளவான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்றதா?

பதில் : - போதுமானதாக இல்லை.

கேள்வி : - உள்ளூராட்சி மன்றங்களினுடாக நாட்டின் அபிவிருத்திகளைக் கட்டியெழுப்ப அரசு என்ன செய்ய வேண்டும்?

பதில் : - நாட்டினுடைய அரசியல் கட்டமைப்பிலும், அபிவிருத்திக் கட்டமைப்பிலும் ஆரம்ப நிலை பிரதேச சபையாகும். இதனால் வட்டாரப் பிரதிநிதிகளுக்கு வருடாந்தம் நிதி ஒதிக்கீடு செய்து (நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் போன்று) பிரதேச அபிவிருத்தி மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கூறிய நடைமுறையை அரசு செயற்படுத்த வேண்டும்.

கேள்வி : - கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைப்பாடு பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில் : - தமிழ் பேசும் சமூகத்தின் அரசியல் பலத்தை இல்லாதொழித்து எமது சமூகத்தைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அண்மைக்கால சம்பவம்கள் மூலம் எண்ணத் தோன்றுகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு தனிமனித போட்டிகளை விடுத்து தமிழ் தேசிய சிந்தனையுடன் செயற்படுவது இன்றையகாலத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

கேள்வி : - பொதுவாக உள்ளூராட்சி மன்றங்களில் பல இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் அவ்வாறெனில் இளம் சமூகத்தினர் அரசியலில் விழிப்படைந்துள்ளார்கள் எனலாமா?

பதில் : - 2015 ஆம் ஆண்டு அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் இளைஞர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் நிலவுகின்றது. அரசியல் செயற்பாடுகள் பற்றி சிந்திக்கின்றார்கள் இதனை வரவேற்க வேண்டும். உள்ளூராட்சி மன்றதேர்தலில் தெரிவான இளைஞர் யுவதிகள் தமிழ் தேசிய சிந்தனையோடு செயற்பட்டால் அதுவே எமது சமூகத்தின் வெற்றியாக இருக்கும்.

கேள்வி : - இளைஞர் யுவதிகள் சமூகத்தை தலைமைதாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பதில் : - பொறுமை, சகிப்புத்தன்மை நிதானம், தேடல் அதனுடன் கூடிய செயற்பாடு குறிப்பாக தமிழ் தேசியபற்று அவசியம்.

கேள்வி : - அரசியல் கட்சிகள் இளைஞர் யுவதிகளுக்கு தகுந்த உரிய இடங்களை ஒதுக்குகின்றனவா?

பதில் : - இதுவரையில் அது மிக மிககுறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்வி : - வளர்ந்துவரும் அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளுக்குதாங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில் : - புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க கனவுகாணுங்கள். அரசியலை ஆடம்பரமாக்காதீர்கள் சோதனைகளால் வேதனைப்பட்டு காலத்தைக் கடத்தாதீர்கள். நேர்மையாக இருங்கள் துணிச்சல் தானாய் வரும். மக்களை நேசியுங்கள்.

(அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்)

 

வ.சக்திவேல்

Comments