அம்பாறையில் தமிழர்களைத் துரத்தும் இயற்கை அனர்த்தங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

அம்பாறையில் தமிழர்களைத் துரத்தும் இயற்கை அனர்த்தங்கள்!

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் இவ்வாரம் இருவேறு இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. கூடவே ஒரு போராட்டமும் 27வது நாளாகத் தொடர்கிறது.

குறிப்பாக இவ் இயற்கை அனர்த்தங்கள் மாவட்டத்தின்தென்கோடியிலுள்ள திருக்கோவில் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளன. தனித்தமிழர்கள் வாழும் பிரதேசம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பாரிய கடலரிப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் திடீரென ஆர்ப்பரித்த பேரலைகள் பாரிய கடலரிப்பை ஏற்படுத்தியுள்ளன. வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்னாலுள்ள கொங்கிறீட் வீதி சேதமாகியுள்ளது. ஆலயத்திற்கும் அச்சுறுத்தலாக இக்கடலரிப்பு உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது. உடனடித் தடுப்பு நடவடிக்கையாக திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் விளையாட்டுக் கழகங்களின் இளைஞர்களின் உதவியோடு 2500 மண்மூடைகளை அணையாகப் போட்டுள்ளார். இதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் பிரதேசசபை பிரதேசசெயலகம் மற்றும் ஆலயம் என்பன மூடைகளை வழங்கியுள்ளன.

அங்கு ஏற்பட்டுள்ள மோசமான கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவாரகாலத்துள் 300 மீற்றருக்கு பாரிய மண்மூடைகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்குமாகாணப்பொறியியலாளர் ரி.துளசிநாதன் கூறியுள்ளார்.

அங்குள்ள பாதிப்பு சேதங்களை அவதானித்த பின்னர் அவர் கருத்துக்கூறுகையில்:

இந்த நிலைமையைக்கட்டுப்படுத்துவதானால் இருவழிகளுண்டு. ஒன்று இங்கு பாரிய மண்மூடைகளை அதிகமாக அடுக்குதல். இரண்டு கம்பிக்கூட்டிலான பாரிய கருங்கல்வேலி அமைத்தல்.

பாரிய மண்மூடைகளுக்கான ஒழுங்குகளை நாம் மதிப்பீடு செய்து கொழும்பு தலைமையகத்தின் அங்கீகாரத்துடன் அதனைச் செய்யமுடியும். இது 20வருடகாலத்திற்கு உத்தரவாதமாகும். அதனைப்பெற்றுத்தர ஒருவார காலமெடுக்கும்.

கருங்கல்வேலி அமைப்பதென்பது பாரிய செலவினங்களுடன் கூடியது. அதனை உயர்மட்ட அரசியல் செல்வாக்குடன் நிறைவேற்றலாம் என்றார்.

முன்பும் இதேகாலப்பகுதியில் கடலரிப்பு மோசமாகவிருந்தது. அவ்வேளை கடல்நீர் சுனாமிபோல் ஆலய வளாகத்துள் சுமார் 100 மீற்றர் அளவில் உட்புகுந்திருந்தது. அருகிலுள்ள தென்னந்தோப்புகளிலும் அதேநிலை. இவ்வருடம் இந்தநிலை. அடுத்தவருடம் வந்தால் கடல் ஆலயத்துள் புகும் என்பதில் ஐயமில்லை.

எனவே இங்கு நிரந்தரமான பாதுகாப்பு தடை ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடும்வரட்சி!

அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வரட்சியால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மழை பொய்தால் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்க வேண்டிவரலாம்.

குடிநீர்ப்பிரச்சினை ஒருபுறம் தமது பிரதான தொழிலான விவசாயத்தை கைவிடும்நிலை மறுபுறம். இத்தனைக்கும் மத்தியில் மக்கள் பயப்பீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்.

இதுவரை 6 பிரதேச செயலாளர்பிரிவுகளிலுள்ள 6248குடும்பங்களைச்சேர்ந்த 20ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவப்பிரிவு அறிவித்துள்ளது. மாவட்டத்திலுள்ள பெரிய சிறிய குளங்கள் கால்வாய்கள் வற்றிவருகின்றன.

அம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீரை வழங்கும் பிரதான நீர்வழங்கு மையமாகத் திகழும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் என்றுமில்லாதவாறு வெகுவாகக் குறைந்துள்ளது.

மொத்தமாக 7லட்சத்து 70ஆயிரம் ஏக்கர்அடி நீர் கொள்ளளவு கொண்டது இச் சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தில் 50ஆயிரம் ஏக்கர் அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநீர் ஆக குடிநீருக்காகவும் மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும். இதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் இவ்வரட்சியுடன் குழாய்நீர் விநியோக நிறுத்தமும் சேர்ந்து பாரிய குடிநீர்த்தட்டுப்பாட்டை தோற்றுவித்துள்ளது. சாகாம நீர் விநியோக மையம் குழாய்நீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

குறிப்பாக தாண்டியடி, சாகாமம், கஞ்சிக்குடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், நேருபுரம், ஸ்ரீவள்ளிபுரம், மண்டானை, குடிநிலம் போன்ற பிரதேசங்களில் அறவே தண்ணீரில்லாத நிலை. திருக்கோவில் பிரதேச செயலகமும் பிரதேச சபையும் நீர்வழங்கல்சபையும் இணைந்து 6பவுசர்களில் குடிநீரை வழங்கிவருகின்றன.

மேலும் 20முக்கிய இடங்களில் நீர்த்தாங்கிகளை வைத்துள்ளனர். எட்டு பொதுக்கிணறுகள் இனங் காணப்பட்டு அதிலிருந்தும் குடிநீர் வழங்கிவருவதாக தவிசாளர்.இ.வி.கமலராஜன் தெரிவித்தார். உண்மையில் திருக்கோவில் பிரதேச குடிநீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாக நீக்குவதானால் 200மில்லியன் ருபா தேவை. அக்கரைப்பற்றிலிருந்து சாகாமத்திற்கு நீரைப் பாய்ச்சினால் பிரச்சினை தீரும் என்று பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கூறுகிறார்.

27வது நாளாகத் தொடரும்

பொத்துவில்போராட்டம்!

பொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை 27 நாளாக வெற்றிகரமாகத்தொடர்கிறது.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ள நிலையிலும் போராட்டம் இன்று 27ஆவது நாளாக தொடர்கிறது. 1960களிலிருந்து இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த 278 தமிழ்க் குடும்பங்கள் சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் மேட்டு நிலப்பயிச்செய்கையிலீடுபட்டு ஜீவனோபாயத்தை நடாத்திவந்தன. 1981களில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் அவர்களுக்கு வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகளைக் கட்டிக்கொடுத்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். 1983முதல் அவ்வப்போது நாட்டிலேற்பட்ட இனக்கலவரம் யுத்தம் இவர்களை 1990களில் முற்றாக இடம்பெயர வைத்தது. 2009இல் திரும்பிவந்து குடியேற முயற்சித்தபோது அப்பிரதேசத்தை வனவள இலாகா தம் கட்டுப்பாட்டிற்குள் கையகப்படுத்தி வைத்திருந்தது. அதற்கெதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

போராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ்மக்கள் இரவு பகலாக அந்த இடத்திலேயே அமர்ந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராடப்போவதாகக் கூறியுள்ளனர். எமது அரசியல்வாதிகள் வெறும் அறிக்கை மன்னர்களாக உள்ளனரே தவிர எதையும் சாதித்தாகத் தெரியவில்லை. எனினும் நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர நிலத்தை மீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது என்று மக்கள் கூறுகின்றனர். உண்மையில் மேற்படி மூன்று பிரச்சினைகளிலும் அரசியல்வாதிகளின் இதயசுத்தியுடனான பங்களிப்பு கூடுதலாக உணரப்படுவதனை மறுக்கமுடியாது.

வி.ரி.சகாதேவராஜா... காரைதீவு குறூப் நிருபர் சகா

Comments