சுயமரியாதை என்பதை அறியாத பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

சுயமரியாதை என்பதை அறியாத பெண்கள்

னித முயற்சிகள் பெரும்பாலும் அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றன. விலங்குகளையும் சேர்த்துக் கொண்டு பாடுபட்டு உழைத்த மனிதன் இப்போது விலங்குகளை உணவுக்காகவும், விற்பனைப் பண்டமாகவும் மட்டுமே கொண்டிருக்கிறான். வாழ்க்கை என்பது உழைப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் கொண்டிருந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோமோ அப்படியான ஒரு வாழ்க்கையை நாங்கள் போர் நடந்து கொண்டிருந்த காலத்திலும வாழும் நிர்ப்பந்தம் இருந்தது.

நீர் இறைப்புக்காக ஏற்றம் போட்டோம். உழவுக்காக மாடுகளைப்பூட்டினோம். வீட்டுவேலைகளிலும் குனிந்தும் நிமிர்ந்தும் பாடுபட்டோம். குந்தியிருந்து குனிந்து அடுப்பூதி, கூட்டுமாற்றால் குனிந்து கூட்டி வீட்டை சாணிகொண்டு மெழுகி அழகுபடுத்தி அதிலும் புதிய கண்டுபிடிப்புகளை செய்தனர் எங்கள் பெண்கள். உமியை வைத்து ஒரு பெரும் பந்திக்கே சமைத்தனர்.

வீடுகளைப் பொறுத்தவரை முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, செம்மலை பிரதேசங்களின் வீடுகள் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டிருக்கும். அவை மண்வீடுகள்தான் தாயறை, ஒரு கூடம் இரண்டும் தனிக்கூரைக்குள் அமைந்து வெளித்திண்ணை ஒன்றிருக்கும். முன்புறம் முற்றம் அத்தோடு இணைந்து மால் எனப்படும் வரவேற்புக்காகவும் நெற் களஞ்சியமாகவும் ஒரு சிறு மண்டபம் இருக்கும். அடுப்படி எனப்படும் குசினி முட்டச்சுவர் வைத்து தனியே ஒரு சிறு திண்ணையுடன் இருக்கும். இதன்மீதே அம்மி, ஆட்டுக்கல் என்பனவும் ஒருபுறத்தே உரல் உலக்கைகளும் இருக்கும். இவ்வளவு பகுதிகளும் மெழுகியிருக்கும் சுவருக்கென்றே செம்மண்மெழுக்கு. தரை மெல்லிய யானைநிறத்தில் இருக்கும். எப்படி இந்தக்கருமை வழுவழுவென்று மெழுகுபோல வருகிறது என நான் வியந்து பார்ப்பேன். அதை ஒரு கலையாக செய்த பெண்கள் சொன்ன தொழில் ரகசியம் இது.

அன்னமுன்னா இலைகளை அரைத்து ஊறவைத்து பிழிந்து அந்த சாற்றில் சிறிதளவு சாணம் கலந்து அதைக் கொண்டு மெழுகினால் சீமெந்து போல இறுகும். இது வழுவழுவென்றே இருக்கும். அதே வழவழப்பும் வரும். இது மட்டுமல்ல இந்த வீட்டுச்சுவர்களில் அழகிய ஓவியக்கோலங்கள் இருக்கும். பளிச்சென்று வெள்ளை வண்ணம். எப்படி? மரவள்ளிக்கிழங்கின் சீவல்களால் அல்லது நிலக்கடலை கொண்டு வரையப்பட்டவை அவை. வரையும்போது எந்த வண்ணமும் தெரியாது தண்ணீர் போல இருக்கும், காயக்காய பளிச்சென்று மின்னும்.

தென்னோலைகள் பெருமளவு கிடைக்கும். ஒரு ஓலையை பதின்னான்கு ரூபாவரை விற்கலாம். அதை கிடுகாக்குவது ஒரு குடிசைக் கைத்தொழிலாகவே நடந்தது. பெருமளவு பெண்கள் சிறு சேமிப்புக் குழுக்களாக இணைந்து தமது சொந்த சம்பாத்தியத்தில் பெருமளவு பணம் சேர்த்து அவற்றை நகைகளாக்கினர். இந்தக் குழுக்கள் பெரும்நகரங்களல்லாமல் கிராமமட்டங்களில் பரவியிருந்தாலும் ஆண்டு தோறும் இவர்கள் ஒன்றுகூடல்களை நடாத்தி பெரும் மகிழ்ச்சியுடன் தமது சாதனைகளை பகிர்ந்து கொண்டனர்.

ஒரு பெண் சொன்னாள் பற்பொடி வாங்குவதற்கும் நான் என் கணவனைத்தான் கேட்பேன் இஞ்சேருங்கோ ஒரு பத்து ரூவாத் தாங்கோ என்று. ஆனால் நேற்று அவருக்கு சீட்டுக்காசு கட்ட நான் காசு கொடுத்தேன். அதுவும் ஐயாயிரம் ரூபா. அவர் திகைத்தேபோனார். ஏன்றாள். அப்படி வாழ்ந்த பெண்கள்தான் இப்போது நுண்கடன்களை வாங்கிவிட்டு தடுமாறித்திரிகிறார்கள் என்பது வேதனையாக இல்லை.

இன்றும் அதே தென்னைமரங்களிலிருந்து ஓலை விழத்தான் செய்கிறது. பெண்கள் அவற்றை அள்ளிப்போட்டு நெருப்பிட்டு கொளுத்துகிறார்கள். அவர்கள் கொழுத்துவது தென்னோலைகளையல்ல. அவர்களது சுயமரியாதையை என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

வாரம் ஒருமுறை பெண்கள் கூடி அயலிலுள்ள காட்டுப்பகுதிக்கு செல்வார்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு வந்த விறகுகளை சேகரித்து கொண்டு போய் அடுக்குவார்கள். அது வாரம் முழுதுக்குமான சமையலை கவனிக்க, உமியும் மரத்தூசும் கூட எரிபொருளாகும்.

இலவசமாககிடைக்கும் இன்று மரக்காலை நடத்துவோருக்கு மரத்தூசை அப்புறப்படுத்துவது பெரிய வேலையாக உள்ளது. பெண்கள் விறகு தேடுவதுமில்லை. தமது வேலிகளிலிருந்தோ அயலிலிருந்தோ கிடைக்கும் விறகையும் எரிக்க பயன்படுத்துவது இல்லை. விறகு மலைபோல குவிந்து கிடக்க அடுக்களையுள் சமையல் எரிவாயு கீசுகிறது சுவிட்சை போட்டால் மா. தேங்காய்கூட துருவுவது மிக்சிதான்.

தண்ணீர்த்தொட்டியுடன் சலவைக்கென ஒரு கல்லும் பதித்து கட்டிய கிணற்றடிகளுக்கு பெண்கள் போவதே இல்லை. தண்ணீரை தாங்கிகளுக்கு ஏற்றிவிட்டு கீழே குளியலறை. அதற்குள்ளேயே மலசலகூடமும். சலவை மெசின் என எல்லாமே வைத்துவிட்டனர்.

கிணற்றை வாளிபோட்டு கலக்கி நீரள்ளிய போது சருகு குப்பைகளை அன்றாடம் துளாவி எடுத்துவிடுவதால் எப்பவுமே முத்துப்போல இருந்த தண்ணீர் இப்போது கலக்குவதற்கு ஆளில்லாததால் பாசி படர்கிறது. பாசியை அகற்ற குளோரின் போடுகிறோம். பிறகு குடிதண்ணீரை விலைக்கு வாங்குகிறோம். அந்த குடிதண்ணீரை பளிச்சிட வைக்க அவர்கள் என்னென்ன கெமிக்கல்களை பாவிக்கிறார்களோ ?

எல்லாமே வசதிதான் இனி நம்ம வீட்டில் சாம்பல் விரயமாகாமல் பயிர்களுக்கும் போடுவோம் பாத்திரமும் துலக்குவோம் இப்போது தேங்காய் பொச்சு மட்டைகள் கூடை ஐம்பது ரூபாவுக்கு விற்றுவிட்டு சைனாவிலிருந்து கப்பலேறி பொலித்தீனில் சுற்றி வந்திருக்கும் கம்பித்தும்பு வாங்கி தேய்க்கிறோம்.

வைக்கோல் தும்பும் தென்னந்தும்பும் வீணாகப்போகிறது. சாம்பலும் எலுமிச்சையும் கலந்த கழுவிச்சவர்க்காரங்களை வாங்கி தட்டில் வைத்துக் கொள்கிறோம். அதிலும் கூட அது நல்லதா இது நல்லதா என்ற போட்டியை வர்த்தகர்கள் உண்டாக்கிய வண்ணமே உள்ளார்கள். இன்னும் பார்ப்போம்.

Comments