பொய்யிலே பிறந்து; பொய்யிலே வளர்ந்து...! | தினகரன் வாரமஞ்சரி

பொய்யிலே பிறந்து; பொய்யிலே வளர்ந்து...!

சிலருக்குப் பொய் சொல்வது அவல் சாப்பிடுறமாதிரி என்பார்கள். வாயைத்திறந்தால் பொய், மூடினால் பொய். மூச்சுவிட்டாலே பொய்யாகத்தான் விடுவார்கள். ஒரு காலத்தில் இவர்களின் உண்மையைக்கூடப் பொய்யென்று நினைக்கும் அளவிற்கு இவர்களின் பொய் வேலை செய்யும். ஆனால், பொய் பேசுபவர்களுக்கு அதனால் கிடைக்கும் நன்மைகள் தற்காலிகமானது என்பார்கள். எனினும், அதனை ஏற்க முடியாது என்கிறார் நண்பி!

பொய்யும் புரட்டும் பேசி நடிப்பவர்கள்தானே நன்றாக இருக்கிறார்கள்; சிறப்பாக வாழ்கிறார்கள். நீங்கள் சொல்லும் தத்துவம் எல்லாம் பச்சைப்பொய் என்கிறாள் அவள். என்னைப் பொறுத்தவரை பொய் சொல்லிக் காலங்கழிப்பவன், ஒரு நாளும் இயற்கையிடமிருந்து தப்பிக்க முடியாது. இதனைக் கவியரசர் தமது அர்த்தமுள்ள இந்து மதத்தில் குறிப்பிடுகிறார். உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பல சாட்சி!

"பொய் சொல்லாதிருப்பாயாக" என்கிறது விவிலியம். உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல் என்றார் ஜேசுநாதர். அதனைத் தவிர வேறு ஒன்றில்லை.

பொய்தான் பாவங்களுக்கு ஆணிவேர் என்கிறது இஸ்லாம். இப்படி பொய்யைப் பற்றி என்னதான் போதித்தாலும், சிலர் பொய் சொல்லும்போது "வயிற்றில் உள்ள பிள்ளை தானாகக் கீழே வழுகி வந்துவிடும் அளவிற்குக் கதை சொல்வார்கள்.

பொய் சொல்வது என்பது எல்லோராலும் இயலாது. அது சிலருக்குக் கைவந்த கலை. பொய்யை அப்பிடியே உண்மையைப்போல் நம்ப வைத்துவிடுவார்கள். என்றாலும் கல்யாண பரிசு திரைப்படத்தில் தங்கவேலுவைப்போல் சிலர் மாட்டிக்கொண்டுவிடுவார்கள். மன்னார் அன்ட் கம்பனியில் வேலை பார்ப்பதைப்போல் இன்றும் நம் மத்தியில் பலர் வேலை பார்த்துக்ெகாண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு பேராசிரியரின் பெயரைக்ெகாண்ட ஒரு நபர், நண்பருடன் வேலை பார்த்திருக்கிறார். வெள்ளையும் சொள்ளையுமாய் ஆஜானபாகுவான தோற்றம். புறோக்கன் இங்கிலீசும், சிங்களமும் கொஞ்சம் கூடவே வரும். அவர் செல்லுமிடம் எல்லாம், வாங்க சார், நீங்களா சார் என்று பேராசிரியரிடம் உரையாடுவதாக நினைத்துக்ெகாண்டு சிலர் இவர் அருகில் செல்வார்கள். இவர், அது நான் இல்லை என்று சொல்லமாட்டார். ஆமாம் என்று ஒப்புக்ெகாள்வதைப்போல் இளித்துவிட்டுச் சும்மா இருந்துவிடுவார். இப்படி சிலகாலம் பிழைப்பு ஓடியிருக்கிறது. கடைசியில், பஞ்சதந்திரக் கதையில் வரும் நரியின் கதைதான் இவருக்கும். சலவைத் தொழிலாளி ஒருவரின் நீலம் கலந்த தண்ணீர்த் தாங்கியில் வீழ்ந்து நீலநிறமாகி, காட்டுக்குள் ஓடும் நரி, கொஞ்ச காலம் காட்டு மிருகங்களுக்ேக ராஜாவாக இருந்து மிரட்டிக்ெகாண்டு இருந்திருக்கிறது. ஒரு நாள் நரிகள் எல்லாம் சேர்ந்து ஊளையிடும்போது, இவரால் சும்மா இருக்க முடியுமா? இவரும் ஊளையிட, எல்லா மிருகங்களும் சேர்ந்து அந்த நரியைக் கடித்துக் குதறியுள்ளன. அந்த நிலைதான் நமது போலி பேராசிரியருக்கும் நேர்ந்திருக்கிறது.

சில பெரிய புள்ளிகளின் உதவியாளர்களாக இருப்பவர்களைப் பாருங்கள், வாயைத் திறந்தால் பொய்... கப்பல் கப்பலாய் கொட்டுவார்கள். அதையெல்லாம் நம்பி அந்தப் பெரிய புள்ளிகள் குட்டிச்சுவராகிவிடுவார்கள்.

சிவபெருமானின் பெயரைக் கொண்ட ஒரு பிரபல வர்த்தகரும் அதே பெயரில் இருந்த "பெரிய கடவுள்" பெயரைக்ெகாண்ட ஓர் அரசியல்வாதியும் நல்ல உதாரணங்கள். இன்னும் சிலர் பொய்யைச் சொல்லிப் பீற்றிக்ெகாள்வார்களே ஐயோ... பரிதாபம். தாம் மட்டுமன்றிப் பிறரையும் சிக்கவைத்து விடுவார்கள். சரியாகச் சொன்னால், அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டில் இருப்பவரைப்போல் பேசுவார்கள். உண்மையில் இவர்கள்தான் ஹிட்லரின் கோயபல்ஸ். இவர்களுக்குத்தான் கோடிநேற்றர்ஸ் என்று பெயர் என்கிறார் நண்பர்.

சரி அதைவிடுங்களன். அலுவலக சிற்றூழியர் ஒருவர் கடந்த வாரம் சில வாசகங்கள் பதித்த அறிவிப்புப் பத்திரமொன்றைக் காண்பித்தார். அதில் கடன் பெற்றவரின் கட்டளைகள் என்று சில வசனங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஓரிரு நாளில் தருகிறேன்.

கிடைக்கும்போது தருகிறேன்.

கொடுக்க இருந்தேன்

நீங்கள் இருக்கவில்லையே..

ஓரிடத்தில் கடன் வரவிருக்கிறது...

வந்ததும் தருகிறேன்

நான் என்ன ஓடியா

போய்விடுவேன்?

வாங்கியவர் தரவில்லையே...

அநியாயம், இவருக்குக்

கடன் கொடுக்கவிருந்தேனே!

என்று கடனாளி கூறுவதைப்போன்று சில கற்பனைப் பதில்கள் அந்தக் காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவை கற்பனையாக இருந்தாலும் உண்மையில் காற்றில் பறக்கும் வார்த்தைகள். சிலர் இதனைப் பற்றியெல்லாம் அலட்டிக்ெகாள்ளமாட்டார்கள். அந்தத் தருணத்தில் சமாளிப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ, வாயில் வந்த பொய்யைச் சொல்லித் தப்பித்துக் ெகாள்வார்கள்.

பொதுவாக கவிஞர்களை அண்டப்புளுகர்களின் தலைவர் என்பார் ஒரு கவி நண்பர். கவிதைக்குப் பொய்தான் அழகு என்பார் கவிப்பேரரசு. ஆனால், பொய்யையே வாழ்வாக்கிக்ெகாண்டுள்ளவர்களால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அநேகர் சிந்திப்பதில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், ஒருவரின் பொய்யை நம்பி அவருக்குப் பிணையாக வங்கியில் கையெழுத்து வைத்துவிட்டுப் பாடாய்ப் பட்டுக்ெகாண்டிருக்கிறார். அவரால், அவரது தேவைக்காக ஒரு கடனைக்கூடப் பெற முடியாத இக்கட்டுக்குத்தள்ளியிருக்கிறார் அந்த நண்பர். கேட்டால், எனக்கு ஒருவர் கடன் கொடுக்க இருக்கிறது, கொடுத்ததும் தருகிறேன்.. என்கிறாராம். அவருக்கும் காலம் போகிறதுதானே என்கிறாள் நண்பி.

நான் என்னத்தைச் சொல்ல?

Comments