தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதே நான் கொண்டு செல்லும் செய்தி | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதே நான் கொண்டு செல்லும் செய்தி

எங்ளை முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் அனைவரும் சிறப்பாக செயற்படுவதால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றிபெறுவது உறுதி என்றார் தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் தினகரன் வார மஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வழங்கி செவ்வியை தொகுத்து தருகின்றோம்.

இலங்கை பயணம் தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இலங்கை பயணம் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மிகவும் மன நிறைவுடன் நான் தமிழ்நாட்டிற்கு திரும்பி செல்கின்றேன். என்னுடைய வருகையின் முக்கிய நோக்கம் அ.இ.அ.தி.மு.க அமைப்பை உருவாக்கிய பெருந்தலைவன் எம்.ஜி.ராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொள்வதே. அந்த பெருந்தலைவன் பிறந்த மண்ணில் நடைபெறுகின்ற இந்த விழாவில் கலந்து கொள்வது என்பது மிகவும் ஒரு பெரும் பாக்கியமாகவே நான் கருதுகின்றேன். அந்த வகையில் இந்த விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நிறைவடைந்திருக்கின்றது . அதற்காக ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.குறிப்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் எடுத்துக் கொண்ட இந்த முயற்சி பாராட்டிற்குறியது.இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டமையானது எனக்கு கிடைத்த ஒரு பெரும் பாக்கியமாகமே.

இலங்கைக்கு வழங்கப்பட்ட நூல்கள் தொடர்பில்?

நான் 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் இலங்கைக்கு புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற பிரேரணையை கொண்டு வந்த பொழுது அதற்கு அனைவரும் ஒத்தழைப்பு வழங்கினார்கள். ஆனால் அதனை எவ்வாறு யார் மூலமாக செயற்படுத்த முடியும் என்ற யோசித்துக் கொண்டிருந்த பொழுது கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். அவர் அந்த தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் இதனை வெற்றிகரமாக செய்து முடித்திருக்க முடியாது. காரணம்இங்கு வரிவிலக்கு பெற வேண்டும் அதனை தனி நபர் செய்ய முடியாது.இந்த நூல்களின் இலங்கை பெறுமதி சுமார் 10 கோடி என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்கள் பெற்றுக் கொடுக்கப்படமைக்கு ஏதும் விசேட காணரம் உண்டா?

விசேட காரணம் என்று கூறுவதை விட எங்களுடைய ஒரு பொறுப்பாகவே நாங்கள் அதனை கருதுகின்றோம். யாழ்ப்பாண நூலகமானது ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நூலகமாக கருதப்பட்டது. அது எரிக்கப்பட்ட பின்னர் அங்கிருக்கின்ற மக்களுடைய கல்வியை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் மூலமாக 50000 புத்தங்களை கையளித்திருக்கின்றோம்.இந்த நூல்கள் அங்கிருக்கின்ற மாணவர்களின் வாசிப்பு திறமையை மேம்படுத்த உதவியாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள். அதனை வரவேற்க கூடிய ஒரு விடயமாக நான் பாரக்கின்றேன். அத்துடன் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கும் வழங்குவதற்காக மீதமாக 50000 புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் கையளித்திருக்கின்றோம்.அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து அந்த புத்தகங்களை கையளிப்பார்.

இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளனவா?

இது தொடர்பான ஒரு வேண்டுகோளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் முன்வைத்துள்ளார். அதன்படி ஒரு ஏற்பாடு இருக்கின்றது. மிக விரைவில் இலங்கையில் இருந்து 100 ஆசிரியர்களை முதற்கட்டமாக இந்தியாவிற்கு அழைத்து சென்று அவர்களுக்கான தங்குமிட வசதி உட்பட ஏனைய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதற்கான ஒரு வேண்டுகோளை இலங்கையினுடை இராஜாங்க அமைச்சர் என்னிடம் விடுத்திருக்கின்றார். அதன் பயனாகவே இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.இதனை ஒரு ஆரம்ப கட்டமாக முன்னெடுத்து படிப்படியாக இவ்வாறான பயிற்சி முகாம்களை அங்கே நடாத்தலாம் என் நான் நினைக்கின்றேன். இதன் மூலமாக இரண்டு நாட்டிற்கும் இடையில் இருக்கின்ற ஆசிரியர்களின் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் திறமைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என நான் நினைக்கின்றேன். இந்த திட்டத்தை முன்னெடுக்கின்ற பொழுது எங்களுடைய தமிழ் நாட்டின் முதலமைச்சரின் முழுமையான பங்களிப்புடன் இதனை செய்வது மிகவும் பெருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன். இது தொடர்பாக நான் இந்தியாவிற்குச் சென்றதும் உடனடியாக இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிக்க தயாராக இருக்கின்றேன். இதனை ஒரு ஆரம்ப கட்டமாக ஆரம்பிக்கின்ற பொழுது எதிர்காலத்தில் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நான் கருதுகின்றேன்.இந்த பயிற்சியானது ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும் அப்படிச் செய்தால் அனைத்து பாடங்களையும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்னும் அதிகமான விடயங்களை மாணவர்களுக்கு கொண்டு செல்ல முடியும்.தனியே பயிற்சிகளை மட்டும் வழங்காது தமிழ் நாட்டில் இருக்கின்ற சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவதற்கான வாய்ப்பையும் இதன் மூலமாக ஏற்படுத்த முடியும் என நான் கருதுகின்றேன்.

யுத்தத்தால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர்கள் விரும்பினால் இந்திய குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியுமா?

இந்த விடயம் தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அதற்கு காரணம் அதற்கான முடிவெடுக்க கூடிய அதிகாரம் மாநில அரசாங்கத்திடம் இல்லை. தற்பொழுது இங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் இருக்கின்றவர்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் அறிவிக்கின்ற அனைத்து விடயங்களையும் மாநில அரசு ஏற்று செய்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களது குடியுரிமை தொடர்பில் மத்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா முன்னெடுத்த நலத்திட்டங்கள் தற்பொழுதும் தொடர்கின்றனவா?அல்லது இடைநிறுத்தப்பட்டுவிட்டனவா?

அம்மாவினுடைய விருப்பத்தின்படி இந்த அரசு ஆட்சி நடக்கின்றது. அவர் உயிருடன் இருந்த காலத்தில் மக்கள் நன்மை கருதி கொண்டுவரப்பட்ட அனைத்து நலத் திட்டங்களும் தற்பொழுது நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து திட்டங்களையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அம்மா தான் மறைந்தாலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் அ.இ.அ.தி.மு.க அமைப்பு தமிழக மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதனை முன்னெடுக்கின்ற பொறுப்பு தற்பொழுது இருக்கின்ற அரசாங்கத்துக்குரியது. அதனை நாங்கள் மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றிபெற முடியுமா?

அடுத்த நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலிலும் எங்களுடைய அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றியடையும் அதற்கு காரணம் தற்பொழுது இருக்கின்ற தமிழ் நாடு அரசின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் பொறுப்புடன் தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருப்பதே. எனவே நாங்கள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட்டு வருகின்றோம். எங்களுடைய வெற்றியானது மிகவும் பிரகாசமாக இருக்கின்றது.

இங்கிருந்து இந்தியாவிற்கு என்ன செய்தியை நீங்கள் எடுத்து செல்வீர்கள்?

நான் இங்கிருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் செல்கின்ற செய்தி இலங்கையிலே தமிழர்களும் சிங்களவர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழுகின்றார்கள் என்பதாகும்.

அதற்கு காரணம் நான் சென்ற இடங்களில் எல்லாம் அனைவரும் இந்த மண்ணில் பிறந்த அத்தனை பேரும் இணைந்து செயற்படுவதை நான் காணக்கூடியதாக இருந்தது.இதனை நான் வரவேற்கின்றேன்.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்படுவது தொடர்பில் உங்களுடைய கருத்து எவ்வாறு இருக்கின்றது?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பாக கருத்து கூறுவதற்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நியமிக்கப்பட்டிருக்கின்றார். எனவே அவர் மாத்திரமே இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் அந்த விடயம் தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க முடியாது.

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே இருக்கின்றதே?

இலங்கையின் மீன் வளத்துறை அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சாவை நானும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனும் இணைந்து அண்மையில் சந்தித்தோம். அதன் அடிப்படையில் அவர் என்னிடம் மிக விரைவில் சென்னைக்கு வருவதாக குறிப்பிட்டார். அவர் அங்கு வருகை தரும் பட்சத்தில் எங்களுடைய முதலமைச்சர் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி அத்துடன் மத்திய அமைச்சரையும் தொடர்பு கொண்டு விடயங்களை தெளிவுபடுத்தி உரிய முறையில் அந்த விடயம் அணுகப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கேரள கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது இதனை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.?

இந்த விடயம் தொடர்பாக நான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என நான் கருதுகின்றேன். காரணம் இது இலங்கை அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டிய ஒரு விடயம். எனவே அது தொடர்பில் இரு தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நான் நினைக்கின்றேன்.

நீங்கள் ஏன் இலங்கை நாட்டின் ஜனாதிபதியை சந்திக்கவில்லை. நீங்கள் முயற்சி செய்யவில்லையா?அல்லது அதற்கான சந்தர்ப்பம் உங்களுக்கு வழங்கப்படவில்லயௌ?

அதாவது நேரத்தையும் குறுகிய காலம் இதனை கருத்தில் கொண்டு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்.பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்தேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை சந்தித்தேன்.இது தவிர இன்னும் சில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தேன்.ஏனைய முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான நேரம் போதவில்லை. இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திலே நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது.இதன் காரணமாகவே ஏனையவர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.வேறு எந்த காரணமும் கிடையாது.

நுவரெலியா தினகரன் நிருபர் எஸ்.தியாகு 

 

Comments