பெருந்தோட்டத்திற்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை மலையக சமூக அபிவிருத்தியில் ஒரு புதிய பரிமாணம் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டத்திற்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை மலையக சமூக அபிவிருத்தியில் ஒரு புதிய பரிமாணம்

இன்று மலையக மக்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு தினமாகும். புதிய கிராமங்களை அபிவிருத்திச் செய்வதற்கான ஒரு அதிகாரசபைக்கான முன்மொழிவு இன்று சட்ட அந்தஸ்து பெற இருக்கின்றது.

இந்த அதிகார சபையின் உருவாக்கத்தின் மூலமாக மலையக மக்களின் நீண்டகால கனவு நிறைவேறுகிறது. எதற்காக அதிகார சபை உருவாக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டியது அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனது கடமையாகும்.

தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சிற்கான பெளதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த அமைச்சினால் உருவாக்கப்பட்ட பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளன. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டு வருவதை நான் அவதானித்து வருகிறேன்.

1997 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு தனியான அமைச்சை உருவாக்கினார். 2010 ஆம் ஆண்டு வரைக்கும் இந்த அமைச்சு பல்வேறு அமைச்சர்களின் கீழ் எல்லா வளங்களையும் கொண்ட ஒரு பலம் மிக்க அமைச்சாக வளர்ச்சி பெற்று வந்தது.

2006 ஆம் ஆண்டு இந்த அமைச்சு தேசிய நிர்மாண அமைச்சோடு சேர்க்கப்பட்டு அதனுடைய ஒரு பிரிவாகவே செயற்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டு இந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டது.

இதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே மீண்டும் தோட்ட உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சானது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி என பெயர் மாற்றம் பெற்றது. புதிய அமைச்சாக இருந்த காரணத்தினால் இந்த அமைச்சினை கொண்டு நடத்துவதற்கான வளங்கள் குறைந்த அளவாகவே இருந்தது. இதனை முழுமைப்படுத்தி வலுவான ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அமைச்சின் சவாலாகும். இந்த சவாலை நிறைவேற்றுவதே இந்த அதிகார சபையின் முக்கிய பணியாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் முறையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 2015 முதல் 2020 வரை உள்ளடக்கி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு முழுமையான நிர்வாக கட்டமைப்பு அமைச்சிடம் இருக்கவில்லை. இந்த காரணத்திற்காகவே ஒரு அதிகார சபையின் தேவை உணரப்பட்டது.

2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனையில் பெருந்தோட்ட பகுதிகளுக்காக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக ஒரு உயர் சக்திமிக்க அதிகார சபை ஒன்று நிறுவப்படும் என கூறப்பட்டது. ஆனால் 2005ம் ஆண்டு நிறுவப்பட்ட அரசாங்கம் இந்த அதிகார சபையை உருவாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரசபை தேவை என என்னால் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்டது. இதன்படி இந்த முன்மொழிவிற்கான ஆரம்ப வரைபு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்ட பணிக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரோடும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.

இக்குழுவின் தலைவராக, தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் செயற்பட்டார். குழுவில் எனது அமைச்சின் செயலாளர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில், காணி வீடமைப்பு, பொதுமுயற்சிகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து சட்ட வரைஞர் திணைக்களம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். இக்குழுவின் இணைப்பாளராக அமைச்சின் ஆலோசகர் செயற்பட்டார்.

இந்த குழுவின் ஆரம்ப வரைபு 2016ம் ஆண்டு ஜுலையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடைய தரப்பினரின் கருத்துக்கள், அவதானங்கள் பெறப்பட்டு சரிசெய்யப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் 2018 ம் ஆண்டு ஜுன் மாதம் 25ம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இன்று இது இந்த உயரிய சபையில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகார சபைக்கு இரண்டு முக்கிய குறிகோள்கள் உள்ளன. ஒன்று பெருந்தோட்ட சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் அரச கட்டமைப்புக்குள் சேர்ப்பதினை உறுதிப்படுத்தலாகும்.

இரண்டாவது தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தலாகும். இந்த நோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இம்மசோதாவில் எடுத்து கூறப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுசேவைகள் இம்மக்களை முழுமையாக போய்ச்சேருமாக இருந்தால் மட்டுமே இச்சமூகம் வலுப்பெற்றதாக மாறும். இந்த அதிகாரசபை பல்்வேறு அமைச்சுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி, அரச சேவைகளை இச்சமூகத்தை முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்தும். இதற்காக இந்த அதிகாரசபை தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலுள்ள நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து செயற்படும். அத்தோடு சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் இது பங்குபற்றுதலையும் உறுதிப்படுத்தும்.

இன்று அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பது இந்த மக்களுக்கான வீட்டுரிமையை வழங்குதலாகும். இந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்காக தோட்டங்களில் வாழும் மக்களுக்கு தெளிவான காணி உறுதிகளை வழங்கலை இந்த அதிகாரசபை வசதிப்படுத்தும். அத்தோடு தோட்டத்துறையினுடைய இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும்.

தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்தும் அத்தோடு பெண்கள் சிறுவர்கள் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்.

தற்போது அமைச்சானது வீடமைப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இதனை புதிய கிராமங்களின் அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதலே இவ்வதிகார சபையின் பிராதன பொறுப்பாகும். செயற்பாட்டு ரீதியாக நோக்குகையில் அமைச்சின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை புதிய கிராமங்களாக மாற்றவேண்டிய தேவை இந்த அதிகார சபைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகார சபையின் செயற்பாடுகளின் மூலமாக, இச்சமுதாயம் ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுகையில், எல்லா அபிவிருத்தி அம்சங்களிலும் சமமான நிலையை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த அதிகார சபையினை உருவாக்குவதற்கு முழுமூச்சாக நின்று செயற்பட்ட அமைச்சின் ஆலோசகர் எம்.வாமதேவன், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதேபோல இவ்வதிகார சபை தோற்றுவிக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் குரல் கொடுத்த பெ.முத்துலிங்கம், சந்திரபோஸ், சந்திரா சாப்டர், சந்திரசேகரன், விஜேந்திரன் போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகள்.

இந்த அதிகார சபையினை உருவாக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் ஒத்துழைத்த தமிழ் முற்போக்குகூட்டணி தலைவர் மனோகணேசன், பிரதித்தலைவர் இராதாகிருஷ்ணன், கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

Comments