அரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் கைதிகளின் விடுதலையில் முதலமைச்சரின் கரிசனை

மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடயத்தைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், இது சற்று வேறுபட்டது. சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களைச் சுற்றி நிகழும் அரசியலைப்பற்றியது.

சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கென்று 12.10.2018 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டம், கைதடியிலுள்ள மாகாணசபை வளாகத்தில் அவசர கதியில் நடந்திருக்கிறது.

இதில் அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொது அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடுதலையைப் பற்றியும் அவர்களில் ஒரு தொகுதியினர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1. அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு மறுப்பில் ஈடுபடும் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அவர்களுடைய போராட்டத்தைக் கைவிடக் கோருவது. இதற்காக வண.பிதா சக்திவேல் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்வது.

2. சிறையில் நடத்தப்படும் போராட்டத்தை மக்கள் பொறுப்பேற்பது. (கவனிக்கவும், மக்களைப் பொறுப்பேற்க வைப்பது – அரசியல் தரப்பினர் அல்ல)

3. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடுதலையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்த வேண்டும். முக்கியமாக வரவு – செலவுத்திட்டத்தில் இதை நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துதல். அதாவது அரசுடன் கூட்டமைப்பைப் பேரம் பேச வைத்தல்.

இதைப் பார்க்கும்போது ஏதோ இதெல்லாம் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடுதலை மீதான அக்கறையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களைப் போலத் தோன்றும். அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவே இந்தச் சந்திப்பும் - இந்தக் கூட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இதன் உள்ளோட்டமோ வேறானது. இதற்கான காரணங்களும் பல.

1. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் நிலையைக் கருவியாகப் பயன்படுத்தி, விக்கினேஸ்வரனின் அரசியல் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துவது. அவருடைய பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அவர் நேரடியாக வீட்டுக்குச் செல்லும் நிலையேற்படாமல், தொடர்ந்தும் அரசியற் களத்தில் நிற்பதற்கான ஏற்பாடே இது. ஏனெனில் மாகாணசபை கலைக்கப்பட்டு, பதவியிழந்த பிறகு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு பிறரைப்போல விக்கினேஸ்வரனுக்கு கட்சிகள் எதுவும் இல்லை. ஆகவே இவ்வாறான விவகாரங்களின் மூலமே அவருக்கான அரசியற் களத்தை அளிக்க முடியும்.

2. மறுவளமாகக் கூட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்குவது. விக்கினேஸ்வரனைப் பலப்படுத்த வேண்டும் என்றால் அவருடன் மோதிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டும். கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டுமென்றால், அதை நெருக்கடிக்குள் தள்ள வேண்டும். அதை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்றால், அதனுடைய பலவீனங்களைக் கையாள வேண்டும். அரசுடன் மோதவைத்து நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும். இதற்கு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்குதல்.

3. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் நடைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். கூடவே இந்தப் போராட்டம் பல்வேறு தரப்பினராலும் நடத்தப்படுகிறது. கிராம மட்டங்களிலும் அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கியுள்ளன. இதையெல்லாம் அப்படியே சுவீகாரம் செய்து விக்கினேஸ்வரனின் தலைமைக்குக் கையளிப்பது.

ஒரே கல்லில் பல மாங்காய்கள்

இந்தக் கோணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் கலந்து கொண்டிருந்தார். ஆனால், அவர் கூட்டமைப்பின் சார்பில் எந்தப் பதிலையும் கூறவில்லை. பேசப்படும் விடயங்களுக்குத் தன்னால் உடனடியாகப் பதிலளிக்க முடியாது என்றும் இவற்றைப் பற்றி, கூட்டமைப்பின் உள்ளகச் சந்திப்பின்போது பேசுவேன் என்றும் தெரிவித்தார் சித்தார்த்தன். சித்தார்த்தனின் பங்கேற்பு பெருமளவுக்கும் புளொட் சார்பானதாகவே இருந்தது.

இருந்தபோதும், “சிறையிருப்போரின் விடுதலையை வலியுறுத்தி வரவு செலவுத்திட்டத்தில் நீங்கள் எதிர்த்து வாக்களிப்பீர்களா?” என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் சித்தார்த்தனிடம் கேட்டார். இதற்குப் பதிலளித்த சித்தார்த்தன், “என்னால் அப்படி முடிவெடுக்க முடியாது. அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவைப் பொறுத்தே அமையும். ஆனால், வாக்களிக்காமல் இருக்க முடியும். அதைப்பற்றி யோசிப்பேன்” என்றார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், சிறையிலிருப்போரின் நிலையைப் பற்றிச் சிந்திப்பதையும் விட விக்கினேஸ்வரனின் நலனைப் பற்றிச் சிந்திப்பதே முனைப்பாகியுள்ளது. கூடவே கூட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்குவதும்.

இது என்ன மாதிரியான அரசியல்?

இது உள்நோக்கமுடைய அரசியல் இல்லை. இப்படித் தவறான முறையில் இதை அர்த்தப்படுத்தக் கூடாது என்றால், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த விடுதலையாளர்களின் விடயம் இவ்வளவு காலமும் இத்தனை சீரியஸாக எடுக்கப்படாதிருந்தது ஏன்? இதையிட்டு மாகாணசபை தன்னுடைய ஐந்தாண்டுகால ஆட்சியிலும் இதைக்குறித்து ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாட்டையும் கரிசனையையும் கொள்ளாதிருந்தது எதற்காக? இந்தச் சீரியஸான விடயத்தை விக்கினேஸ்வரன் இவ்வளவு காலமும் தன்னுடைய கையில் எடுக்காதிருந்தது ஏன்? அவருடைய ஆதரவாளர்கள் இதைப்பற்றிச் சிந்திக்காதிருந்தற்கான காரணங்கள் என்ன?

சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்கள் கைது தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது பயங்கரவாதத் தடைச்சட்டமாகும். இந்தச் சட்டத்தின் கீழேயே பல விசாரணைகளையும் தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில்தான் விக்கினேஸ்வரனின் கடந்த நீதியரசர் என்ற பதவிச் செயற்பாட்டுக்காலமும் உள்ளடக்கம். பலரும் குறிப்பிட்டுச் சொல்வதைப்போல, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த விடுதலையாளர்களில் சிலருக்கான தீர்ப்பில் விக்கினேஸ்வரனே சம்மந்தப்பட்டுமிருக்கக்கூடும். இதைவிட இந்த மோசமான சட்ட ஒடுக்குமுறை பிரயோகத்திலிருந்த சட்ட அமைப்பில் – நீதி முறையில்தான் எந்தக் கேள்வியுமில்லாமல் விக்கினேஸ்வரன் நீதியரசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஆகவே ஒரு வகையில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த விடுதலையாளர்கள் உள்ளே இருப்பதற்கு விக்கினேஸ்வரனும் பொறுப்பாளி. அல்லது உடந்தையாளர். அப்பொழுது உள்ளே தள்ளியவர் அல்லது உள்ளே தள்ளப்படுவதற்கு உடந்தையாக இருந்தவர் இப்பொழுது அவர்களை வெளியே எடுப்பதற்குப் போராடப்போகிறார் என்றால், இதற்குப் பொருளென்ன? பெயரென்ன?

இவ்வாறு நாம் கூறுவதையும் கேள்வி எழுப்புவதையும் சிலர் மறுத்துரைக்கக் கூடும். இதற்கு அவர்கள் வேறு சில காரணங்களையும் சொல்லலாம். உதாரணமாக ஊடவியலாளர் தயாபரனின் தகவலின்படி, சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்கள் (அரசியல் கைதிகள்) நடத்தும் போராட்டம், அரசியல் சக்திகளால் பிளவுபட்டிருக்கிறது. இதனால் சிலர் தன்னிச்சையாகப் போராட்டத்தை முடிவுறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றனர்.

எஞ்சியோர் தொடர்வதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தை முடிவுறுத்துவோர் அதைக் கௌரவமாக ஒத்திவைப்பதற்கு அவர்கள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உறுதிப்பாட்டைக் கோரியிருக்கின்றனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சக்திவேல் அடிகளும் பிறரும் முதலமைச்சரோடும் ஏனைய செயற்பாட்டாளர்களோடும் பேசி இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தனர் என்பதாகும்.

சக்திவேல் அடிகள் இந்த விடயத்தில் இதயசுத்தியுடன் செயற்பட்டு வருகிறார் என்பது உண்மையே. இதற்காக அவர் பல சிரமங்களையும் எதிர்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் பின்தங்காமல் தொடர்ந்தும் முழு வேகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கவனத்திற்குரியது.

ஆனால், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்கள் சிறையில் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களால் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களால் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றை சம்பந்தனும் அங்கஜன் இராமநாதனும் அரசியற் காரணங்களுக்காகப் பின்னடைய வைத்தது உண்டு. பொதுவாகவே இந்த மாதிரியான போராட்டங்களை அதிகார வர்க்கமும் அரசும் உடனடியாகக் கணக்கில் எடுப்பது குறைவு. வேண்டுமானால் யாரையாவது கொண்டு, ஏதாவது சூழ்ச்சிகளைச் செய்து போராட்டத்தைத் தளர்வடையச் செய்யும். இல்லையென்றால் போராடுவோர் பலியாகும் அளவுக்கு விட்டுப் பிடிக்கும். இப்பொழுது நடந்திருப்பதும் இதுவே.

சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் கண்டு கொள்ளவேயில்லை. இடையில் தலையிட்டுச் சமரசம் செய்யவோ, போராட்டத்தைக் கைவிடுமாறு கோரவோ கூட்டமைப்பினாலும் முடியாது. அங்கஜனாலும் முடியாது.

ஆதலால் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும் முடியாது, கைவிடவும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை போராடிக் கொண்டிருப்போர் கைவிட்டால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே இதை வெளித்தரப்பின் கோரிக்கை மூலமாகக் கைவிடப்பண்ணுவதாக ஒரு பாவனை செய்யப்படுகிறது. இந்தளவுக்குத்தான் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் நிலையும் தமிழர் தரப்பின் அரசியல் வீரியமும் உள்ளன.

இதற்கான பதிலைக் காண்பதை விடுத்து, இந்தக் குறைபாட்டை, தவறை நிவர்த்தி செய்வதை விட்டுவிட்டு, மீளவும் மீளவும் பாவனை அரசியலும் சூதரசியலும் செய்யப்படுவது எதற்காக?

இதை எத்தனை காலம்தான் சனங்கள் பேசாமடந்தையர்களாக இருந்து அங்கீகரிக்கப்போகின்றனர்?

Comments