ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுப்பது எப்படி?

தேனீக்கள் வளர்க்கலாமா...? மரங்களைத் தறிக்கலாமா...? சென்சர் மூலம் அறியலாமா...? முடிவெடுப்பதில் திணறும் திணைக்களம்!

இயற்கை சூழலில் அனைத்து உயிரினங்களும் சூழலை வளப்படுத்தி பாதுகாக்கும் வகையிலேயே தம்மையறியாமலேயே செயற்பட்டு வருகின்றன. இதில் விதிவிலக்காக, சுற்றுச்சூழலுக்கு எதிராக செயற்படும் ஒரே உயிரினம், ஆறறிவு படைத்த மனிதன் மட்டுமே. வளமான சுற்றுச் சூழலுக்கு எதிராக அதை அழிப்பவன் மனிதன் மட்டுமே. அதற்குக் காரணம் அவனுக்கு மட்டுமே இருக்கும் ஆறறிவு.

மனிதனுக்கு எல்லா மிருகங்களும் முக்கியமென்றாலும் சில மிருகங்கள் மனிதனுக்கு நெருக்கமானவை. மாடு, ஆடு, பூனை, நாய் என்பனவற்றோடு யானையும் நமக்கு நெருக்கமான மிருகமே. அது தோழமையான மிருகம் அல்ல. ஆனால் அடங்கி நடக்கும். திடீரென புத்தி மாறியும் போகலாம். ஆனால் சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், காடுகள் அழியாமல் இருக்கவும் யானைகள் இன்றியமையாதவை. யானைகள் ஒவ்வொரு வருடமும் ஒருபெரும் நிலப்பரப்பில் சுற்றித்திரியும் இயல்பு கொண்டவையாக இருப்பதால், அதன் லத்திகள் ஊடாக விதைகளும் கொட்டைகளும் வெவ்வேறு இடங்களில் விழுந்து மரங்களாக முளைக்கின்றன என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால், இயற்கையின் காடு வளர்ப்புத் திட்டம் அவ்வளவு துல்லியமாக யானைகள் மூலம் நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எனினும், மனிதனால் அதிகமாக வேட்டையாடப்படும் மிருகமாகவும் யானையே விளங்குகிறது. இலங்கையில் தெய்வத்தன்மை கொண்ட, இந்து பௌத்த மதங்களுக்கு முக்கியமான இந்த விளங்கே, மறுபுறத்தில் வேட்டையாளடப்படுகிறது. துன்புறுத்தப்பட்டு வெறுக்கவும் படுகிறது என்பதோடு கடந்த காலங்களில், பெரும்பாலும் சமீபகாலமாக, விபத்துகளில் சிக்கி மரணத்தைத் தழுவும் மிருகமாகவும் விளங்குகிறது.

யானைகளுடனான மனிதனின் போராட்டம் சமீபகாலமாக இலங்கையில் உக்கிரமடைந்து வருகிறது. யானைகளின் காடுகள் குறுகி வருவதாகவும், அவற்றின் பாரம்பரிய வழித்தடங்கள் வழிமறிக்கப்படுவதாலும் அவை ஊருக்குள் வரவேண்டியதாகி விடுகிறது. இதேசமயம், சமீப காலமாக ரயில்களில் மோதுண்டு யானைகள் இறப்பது அதிகமாகி வருவது ஒரு பிரச்சினை வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்த யானைகள் எப்போதுமே ரயில் தண்டவாளத்தைக் கடந்து இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கமாக செல்வது வழமையான விஷயம்தான். வீதிகளையும் இவ்வாறுதான் அவை கடக்கின்றன. இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தமது பாரம்பரிய வழித்தடங்களின் வழியே பயணிக்கும் போதுதான் ரயில் மோதி இவை இறக்கின்றன. இதில் எமக்கு புரியாத விஷயம் இதுதான்.

இத்தனை வருடங்களாக, எழுபதுக்கும் மேற்பட்ட வருடகாலமாக இந்த வழிகளில்தான் யானைகள் ரயில் தண்டவாளங்களைக் கடந்து அந்தப் பக்கமாக சென்று கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நிகழாத யானை விபத்தால் சமீபகாலமாக அதிகரிப்பதன் காரணம் என்ற கேள்விக்கு சரியான பதில் கிடையாது. மிக அண்மைக்காலங்களில் ரயில் தண்டவாளங்களினூடாக யானைகள் கடந்து செல்லும் போது, ரயிலில் மோதுண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் காயமடைந்தும், உடல் சிதறி மரணித்துமுள்ளன. மட்டக்களப்பு இரவு ரயில் போக்குவரத்திலேயே அதிகமான யானைகள் விபத்துகளை சந்திக்கின்றன. கடந்த செப்டம்பர் மாதம் இரவு சரக்கு வண்டி மோதி ஒரு குட்டி உட்பட நான்கு யானைகள் இறந்த சம்பவம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் மோதுண்டு இறந்த யானைகளின் விவரணஙங்களைப் பார்ப்போமா?

2011 இல் அம்பலன்பொல ரயில் விபத்தில் மூன்று யானைகள் இறந்தன. 2014 இல் கிடுலுதுவ ரயில் விபத்தில் ஒரு யானை பலியானது. 2016 இல் செட்டிக்குளம் ரயில் விபத்தில் நான்கு யானைகள் பலியாகின. இதேநேரத்தில் இவ்வருடத்திலேயே ஏழு யானைகள் பரிதாபகரமான பலியாகின. கடந்த செப்டம்பர் மாதம் ஹபரனையில், மட்டு. இரவு எண்ணெய் ரயிலில் மோதி நான்கு யானைகள் பலியாகியன. இம்மாதம் 9 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், வெலிகந்த அசேலபுர பிள்ளையாரடி பகுதி ரயில் தண்டவாளைத்தை கடக்க முற்பட்ட யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் மூன்று யானைகள் ரயிலில் உயிரிழந்தன. அதிகமான யானைகள் கிழக்கில் ஹபரனை வெலிகந்த பகுதியிலேயே விபத்துக்களை சந்திக்கின்றன. வடக்கு செட்டிக்குளம் பகுதியிலும் யானைகள், ரயில் விபத்துகளை சந்தித்துள்ளமை அரச அதிகாரிகளை சிந்திக்க வைத்துள்ளது.

யானைகளின் விபத்துக்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, "கடந்த ஜனவரி முதல் இம்மாதம் ஐந்தாம் திகதி வரை 218 யானைகள் இறந்துள்ளன என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். யானைகளின் தாக்குதலினால் 80 பொதுமக்கள் மரணித்துள்ளனர். 4300கிலோ மீட்டருக்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் வருடத்தில் 7000 கிலோ மீட்டராக இவ்வேலியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான வேலைகளை முன்னெடுப்பதற்காக 1675 சிவில் பாதுகாப்பு படையினரை பயன்படுத்துவோம்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் யானைகளுக்கான தடுப்பு நிலையமொன்றினை ஹொரவபொத்தானையில் அமைப்பதுடன், யானைகளுக்கு மறுவாழ்வு நிலையமொன்றினை லுனுகம்வெரவில் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் யானை மனித மோதல்கள் 50 வீதத்தால் அதிகரித்துள்ளன. பொலன்னறுவை, அம்பாறை ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமான யானை மனித மோதல்கள் இடம்பெறுகின்றன.

ரயில்களில் மோதி யானைகள் உயிரிழக்கும் இந்த பிரச்சினை ஒரு புதிய பிரச்சினையாகும். எனவே, இதனை தீர்க்கும் யோசனைகளையும் இனித்தான் முன்வைக்க வேண்டியுள்ளது. ரயில் பாதையின் இரு மருங்கும் கானகமாக இருப்பதால் ரயில் பாதையின் இரு மருங்கிலும் மின்சார வேலி அமைக்கும் திட்டம் பொருத்தமற்றது என்று கூறுகிறார் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வன விலங்குகள் அமைச்சர் பீல்ட்மாஷல் சரத் பொன்சேகா.

"எவ்வாறெனினும் இந்த பிரச்சினையை தீர்க்க தொழில்நுட்பத்துடன் கூடிய முறையொன்று எமக்குத் தேவையாகவுள்ளது. ரயில் பாதையில் ஒரு யானை நின்று கொண்டிருக்கிறது என்ற தகவலை ரயில் சாரதிக்கு உணர்த்தும் வகையில் இந்த முறை இருக்க வேண்டும். அதேவேளை ரயில் பாதைகளில் யானைகள் இருக்குமானால் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தலாம். இதன் பொருட்டு நிலையில் வேறு எச்சரிக்ைக முறைகளையும் உருவாக்க வேண்டும். இதனை உடனடியாக செய்ய முடியாது. எனினும் நாம் ஒருசில தரப்பினருடன் இது பற்றி பேசி வருகிறோம்" என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யானைகள் ரயில் பாதையில் இருப்பதைக் கண்டதும் ரயில் சாரதி ரயில் ஹோர்ன் சப்தத்தை எழுப்புவது வழக்கம். கடந்த மாதம் ஒரு குட்டியானை உள்ளிட்ட நான்கு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்த சமயத்தில் ரயில் சாரதி ஹோர்ன் ஒலியை எழுப்பியிருந்தார்.

சுமார் 25 யானைகள் அடங்கிய கூட்டம் ரயில் பாதையில் இருந்திருக்கிறது. ஒலி கேட்டதும் எல்லா யானைகளும் விலகிச் சென்றுள்ளன. ஆனால் விலகிச் சென்ற யானைகளில் சில திரும்பவும் ரயில் பாதைக்ேக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்று ரயில்வேயின் பொதுமுகாமையாளர் திலந்த பெர்னாண்டோ கூறுகிறார்.

யானைகளுடன் மோதிய ரயில் வேகமாக வந்திருக்கிறது என்று கருதவும் முடியவில்லை. ஏனெனில் அது எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயிலாகும். குறிப்பிட்ட இடத்தில் ரயில் பாதை ஒரு பக்கம் ஏற்றத்துடன் கூடியது. எனவே ரயில் வேகமாக செல்ல வாய்ப்பில்லை. ஆனால் ரயிலின் எண்ணெய் தாங்கிகள் பாரம் கொண்டவையாக இருந்ததால் மெதுவாகத்தான் பயணித்திருக்க வேண்டும்.

எவ்வாறெனினும் ஆராய்ச்சியாளர் ஒருவர் புதிய முறையொன்றை கண்டிபிடித்திருக்கிறார். இந்த முறையை கடந்த ஒருவருடகாலமாக மன்னார் பிரதேசத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ரடாரைப் பயன்படுத்தும் இந்த முறை வெற்றியளித்திருக்கிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் நாட்டின் ஒரு பகுதியில் வெற்றியளிக்கும் ஒரு முறைமை நாட்டின் மற்றொரு இடத்தில் முழுமையான வெற்றியைத் தருவதில்லை. இது ஏன் என்று புரியாமல் உள்ளது என்று கைவிரிக்கிறார் ரயில் திணைக்களத்தின் பொதுமுகாமையாளர்.

இத்தகைய பரீட்சார்த்த முயற்சியில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகள் ரயில் பாதையில் இருப்பதை சாரதிக்கு அறிவிக்கும் உணர்கருவிகள் (Sensor) பயன்படுத்தும் முறை பரீட்சிக்கப்பட்டது. யானைகளின் உடல் வெப்பத்தைக் கொண்டு யானையின் இருப்பை சாரதிக்கு அறிவிக்கும் முறை இது. எனினும் ரயில் பாதைக்கு அருகில் உள்ள கற்களும் வெப்பத்தை குறிப்பாக இரவில் வெப்பத்தை வெளிப்படுத்துவதால் இந்த முறை சரியாக பயன்தரவில்லை. மேலும் இவ்வாறாக முறைகளை கண்காணிப்பதற்கு போதிய அதிகாரிகள் இல்லாமையும் இந்த முறை சரியாக பயனளிக்கவில்லை என்பதற்கு ஒரு காரணமாகும்.

அண்மையில் நான்கு யானைகள் ரயிலில் மேதுண்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரிதும் கவலைக்குரியது என்கிறார் பிரபல தொழிலதிபர் ஒடாரா குணவர்தன. இவர் ஒரு வனவிலங்குகள் ஆர்வலர்.

"ஒரு வருடத்திற்கு முன்னரும் நான்கு யானைகள் ரயிலில் மோதி கொல்லப்பட்டன. அந்த சந்தர்ப்பத்திலும் யானையும் அதன் குட்டிகளும் உயிரிழந்தன. அந்த படங்களை பார்க்கும் போது, மிகுந்த வேதனை ஏற்பட்டது. யானைகள் ரயிலுடன் மோதுவதை தவிர்க்க உணர்கருவிகள், யானைகள் வருவதை குறிக்கும் நேரம் மற்றும் ரயிலின் வேகத்தை குறைக்கும் பணிப்புரை எல்லாம் இருந்தும்கூட யானைகள் ரயிலில் மோதுவதை தவிர்க்க முடியவில்லை.

இத்தனைக்கும் யானைகள் எந்தெந்த நேரங்களில் ரயில் பாதையை கடக்கின்றன என்பது ரயில் சாரதிக்கு தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் கூட இவ்வாறு நடந்தது கவலைக்குரியது. குடிப்பதற்கு தண்ணீர் அல்லது சாப்பிட ஏதாவது தேடுவதற்கு அலைந்து திரியும் யானைகளுக்கு மரணத்தை தான் பரிசாக கொடுக்க முடிவது எவ்வளவு கவலையளிக்கிறது" என்கிறார் ஒடாரா.

எதிர்காலத்தில் யானை ரயில் விபத்தை தவிர்க்கும் விடயம் சம்பந்தமாக மாகோவிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ரயில் பாதைகளை பரிசீலனை செய்து, அறிக்ைக யொன்று இருவாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என வனஜீவிகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் சுமணசேன குறிப்பிட்டுள்ளார்.

ரயில் பாதைகளில் தேனீர் வளர்ப்புகளில் ஈடுபட்டால், அவ்விடங்களில் யானைகளின் நடமாற்றம் குறைந்துவிடும் என்றொரு யோசனை உள்ளது. அத்துடன் யானை விபத்துக்குள்ளாகும் அதிகமான இடங்கள் காட்டுப்பாதை என்றபடியால் பாதுகாப்பு மின்வேலியும் ஒரு தீர்வாகும் என்று சொல்லப்பட்டாலும் அது எந்தளவு சாத்தியமாகும் என்பதே கேள்வியாகும். வழமையாக யானைகள் ரயில் பாதையை கடக்கும் இடங்களில் காணப்படும் மரங்களை தறித்துவிட்டால் அவ்விடத்தினூடாக யானைகள் செல்லும் போது, யானைகளை தொலைவிலிருந்தே சாரதியால் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்பது மற்றொரு யோசனையாகும்.

எது எப்படியிருந்தாலும், யானைகள் ரயில் பாதையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் ரயிலின் வேகத்தை குறைத்து சென்றால் அருகிவரும் யானைகளை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பொதுவான கருத்து மனிதர்களிடமிருந்தும், ரயிலிடமிருந்து யானைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

Comments