யார் அந்த ஊழல் பெருச்சாளிகள்? | தினகரன் வாரமஞ்சரி

யார் அந்த ஊழல் பெருச்சாளிகள்?

இவ்வருட ஆரம்பத்தில் அல் ஜஸீரா தொலைக்காட்சியி்ல் 2016ம், 2017ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஆட்ட நிர்ணயச் சதியில் ஈடுபட்டதாக சில காட்சிகளை விவரணப் படம் மூலம் வெளியிட்டிருந்தது. அக்காலப் பகுதியில் இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவே இருந்துள்ளார். அன்றிலிருந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும், சில வீரர்களும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சந்தேகம் நிலவுகின்றது. இதனாலேயே ஐ. சி. சி. யின் ஊழல் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் இலங்கையில் முகாமிட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் இலங்கை- - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டியில் ஆட்டநிர்ணய சதி மற்றும் சூதாட்டம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அவர்களால் எமது நாட்டில் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கெதிரான சாட்சிகளைச் சேகரித்து கோவைப்படுத்தி டுபாயிலுள்ள ஐ. சி. சி. தலைமையகத்துக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. கடந்த வாரங்களில் ஐ. சி. சி. தலைமையகத்தால் இவ்வாறான கோவையொன்றை விசாரித்ததில் 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத் தெரிவுப்போட்டிகளில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஹொங்கொங் வீரர்களிடம் 14 நாட்களுக்குள் அது பற்றி விளக்கம் கோரியிருந்தனர். இது குறித்து குற்றவாளிகள் தமக்கு சாதகமான சாட்சிகளைத் தயார்படுத்தி அக்குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துவிடுவார்களேயானால் ஊழல் ஒழிப்புக்காக ஐ. சி. சி. யின் இம்முயற்சி வீணானதாகவே ஆகிவிடும்.

நாட்டுப்பற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கின்ற ஒவ்வொரு இலங்கையர்களின் எதிர்பார்ப்பு எமது நாட்டின் நேர்மையையும், மதிப்பையும் இழக்கச் செய்யும் செயல்களில் ஈடுபவர்கள் யார் என்பதை அறிவதே.

ஆனால் ஐ. சி. சி. கடந்த இரு வருடங்களாக இலங்கையில் ஊழல் பற்றி விசாரித்து வருகின்றது. அவர்கள் இதுவரை எப். சி. ஐ. டி.க்கு சென்று வாக்குமூலம் எடுப்பதிலேயே காலம் கழிந்துள்ளதைத் தவிர இன்னும் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. கிரிக்கெட் விளையாட்டை தரம்தாழ்த்தும் இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ள சூதாட்ட புக்கி ஏஜன்டின் தரகரொருவர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அந்த சூதாட்டத் தரகர் முன்னாள் வீரர்களையும், தற்பேதைய வீரர்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அது பற்றி விசாரித்து வரும் ஐ. சி சி. அந்நபர் யாரென்ற விபரம் அவ் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. சூதாட்டத் தரகரை அடையாளம் காண்பதற்காக இலங்கை பொலிஸாரின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். பட்டப்பகலில் வங்கிக்கொள்ளையர்களையே பிடிக்க முடியாத இவர்கள் புக்கி தரகரை எங்கே போய் தேடுவார்கள்?

இவ்வாறான புக்கி தரகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் இலங்கையில் இல்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார். அவ்வாறான பலர் கையடக்கத் தொலைபேசியுடன் போட்டி நடைபெறும் மைதானங்களில் நடமாடி தமது காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கின்றனர். அவர்களில் ஓரிருவரை கைது செய்யும் பொலிஸார் விசாரித்து விட்டு விடுவிக்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் போட்டியில் நடைபெறும் ஊழலை நிறுத்த முடியாது. அண்மையில் பாணந்துறை மற்றும் களுத்துறை கழகங்களுக்கடையில் நடைபெற்ற போட்டியில் நடைபெற்ற ஊழல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கியமான புள்ளி ஒருவர் அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். அக்குற்றச்சாட்டில் தொடர்புபட்டிருந்த கிரிக்கெட் வீரர்களையும் விடுவித்துள்ளனர். அப்படியானால் அப்போட்டியைக் காட்டிக்கொடுத்தவர்கள் யாரென்பதை அறிந்து கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் ஊழல் எதிர்ப்புப் பிரிவினருக்கும் முடியாமலுள்ளது.

அண்மையில் ஐ. சி. சி. யினால் உலகில் ஐந்து கிரிக்கெட் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ள தகவல் கிடைத்துள்ளதாகவும் அத்தலைவர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனால் இலங்கை அணியிலிருந்த ஒவ்வொரு தலைவர் மீதும் கிரிக்கெட் பிரியர்களுக்கு சந்தேகம் எழுவது சகஜமே.

Comments