புதிய பிரதமரின் நியமனம் இவர்கள் என்ன கருதுகின்றார்கள்? | தினகரன் வாரமஞ்சரி

புதிய பிரதமரின் நியமனம் இவர்கள் என்ன கருதுகின்றார்கள்?

வடிவேல் சக்திவேல்

புதிய பிரதர் நியமனம் கிழக்கு அரசியல்வாதிகளின் பார்வையில்

நாட்டில் தற்போது தேசிய அரசியலில் ஓர் குழப்பகரமான சூழ்நிலை நிலவி வருவதை அனைவரும் அவதானித்து வருகின்றனர். இந்நிலையில் பல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளரும், பட்டிருப்புத் தொகுதியின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சோ.கணேசமூத்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது

புதிய பிரதமர் நியமனம் தெடார்பில் நாட்டில் சட்டப்பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது. இந்த நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது. அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவில்லை. அதற்குரிய நகர்வுகளைக் கொண்டு செல்லும் வேளையில், அதற்கு முன்னெடுப்புக்களை மேற்கொண்ட ஒரு அரச தலைவரை திடீரென பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதானது தவறானது.

ஜனாதிபதி இம்முடிவை திடீரென என்ன நோக்கத்திற்காகக் கொண்டு வந்தர் என்பது விளங்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு முரணான விடையமாகும் எனத் தெரிவித்தார்.

தனக்கிருக்கும் அதிகாரதிதையே ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார்

இ.தவஞானசூரியம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளரும் பட்டிருப்புத் தொகுதியின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான இ.தவஞானசூரியத்திடம் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது

நாட்டிற்கு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள மாற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம், மிகவும் அனுபவமிக்க நாட்டின் தலைவர் ஒருவரை ஜனாதிபதி , பிரதமராக நியமித்துள்ளார். அவர் எம்மையும் வழிநடாத்தி பிரதமராக இருந்து நாட்டையும் சிறந்த முறையில் வழிநடாத்திச் செல்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டுதான் புதிய பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தவறான விடயங்களைச் செய்யமாட்டார். அவர் சரியான விடயங்களைத்தான் மேற்கொள்வார். அந்த வகையில் இந்நியமனத்தில் அவர் சிறந்த முறையில்தான் செயற்பட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி அபிவிருத்தியில் வடகிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டின் கீழ் செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் இரண்டு கட்சிகள் சேர்ந்து நடாத்திய அரசு தற்போது எங்களுடைய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஆட்சி வந்துள்ளதனால் பட்டிருப்புத் தொகுதியை மேலும் விருத்தியடையச் செய்வதற்கு எமக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது....

ஜனாதிபதி தந்போது புதிய பிரதமரை நியமித்துள்ளார். ஆனார் இதுதொடர்பில் நான் தனிப்பட்ட முறையில் எதுவும் கூறமுடியாது எமது கட்சியின் தலைமைப் பீடம் எம்மையெல்லாம் அழைத்து விரைவில் கூடி ஆராய்ந்து தீர்க்கமாக கருத்தை வெளியிடும் என அவர் தெரிவித்தார்.

சட்ட ரீதியாக நிரபராதியாக நிரூபிக்கப்பட்டே பிள்ளையான் வெளியே வருவார்  

தேசிய அரசியலில் தோன்றியுள்ள குழப்பகரமான நிலமை குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,   
நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து தற்போது 3 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம், மற்றும் உட்கட்டமைப்புக்கள் அனைத்தும் பாதகமானநிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், நாட்டில் ஆர்ப்பாட்டங்களுக்கும், சத்தியாக்கிரகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதே தவிர மக்களுக்கான தீர்வுகள் எதுவும் கிட்டவில்லை. இது இவ்வாறு இருக்க வடக்கு கிழக்கிலிருக்கின்ற சிறுபான்மை மக்கள் வாக்களித்ததன் நிமித்தம் ஜனாதிபதி யையும், இந்த நல்லாட்சி அரசையும் ஆட்சிக்கு அமர்த்தியவர்கள் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்பட்டதா என கேள்வி எழுப்பினால் அதற்கு மக்களே இல்லை என பதில் கூறுவார்கள். அந்த வகையில் மக்களுக்கு எதுவித நன்மைகளும் இல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி நடைபெறுகின்றது என்பதை அனைவருக்கும் தெளிவு படுத்தியிருந்தது.   
இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்கின்ற பிரதமர் பதவி சட்டத்திற்குட்பட்டதா? இல்லையா? என்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் தொடர்பான குழப்பகரமான நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வகையான வாய்ப்பை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை முடிவுசெய்து கொள்ள வேண்டும்.   
இலங்கையில் 1960 ஆம் ஆண்டும் இதே போன்றதொரு சூழல் ஏற்பட்டிருந்தது. அந்த ஆண்டு இரண்டு தேர்தல்கள் இடம்பெற்றன, அந்த நேரத்தில் தமிழ் தலைமைகள் அதிகமான ஆசனங்களைக் கொண்டிருந்தபோதும், தீர்க்கமான முடிவுகளை எடுத்திருக்கவில்லை. அப்போதைய காலகட்டத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருந்தால் தற்போது இவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்காது. எனவே தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலையை தமிழ் அரசியல் தலைமைகள் வாக்களித்த மக்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்தாதிருந்தால், எதிர்காலத்தில் மேலும் தமிழர்களின் நிலமையைக் கையாள்வதற்கு எந்தவிதமானதொரு வாய்ப்புக்களும், ஏற்படாது.   
புதிய பிரதமரின் நியமனத்தை அடுத்து சிறையில் இருக்கும் உங்களுடைய கட்சியின் தலைவர் விரைவில் வெளியேவரும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக பலரும் கதைக்கின்றார்களே இது எந்த வித்தில் சாத்தியமாகும் என பிராசாந்தனிடம் கேட்டபோது   
எமது கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டு 3 வருடங்கள் கடந்து விட்டது. நாங்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நீதிச் சட்டங்களை நம்பியே வழக்குகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. நீதியின் அடிப்படையிலேதான் அவர் நிரபராதியாக வெளியேவருவார் அதுதான் எமதும் எமது தலைவரினதும் நிலைப்பாடும் ஆகும். இதில் எங்களுக்கு எதுவித அரசியல் சாயமும் இல்லை என அவர் தெரிவித்தார்.   
பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட்டதன் விளைவு   முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  
புதிய பிரமதர் தெரிவு தொடர்பில் தமிழர் ஐக்கியசுதந்திர முன்னணியின் தலைவர் கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கையில்   
இவ்விடயத்தில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்   
வட, கிழக்கு மக்கள் ஆட்சி மாற்றம் தொடர்பில் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த நிலை அபிவிருத்தியில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும் என நாம் எதிர் பார்க்கின்றோம்.   
இந்த நாட்டை முன்னேற்றுவதற்குரிய பல வாய்ப்புக்கள் இருந்தும், மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தை பழிவா ங்குவது எப்படி என்பது தொடர்பில் கவனம் செலுத்தியதாலே பிரதமர் பதவியை ரணில் இழந்துள்ளார்.   
போர்க்குற்ற விசாரணையானது எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முன்னெடுக்கப்படாது. அது வெற்றிகரமாக நடைபெறப்போகின்ற விடயம் அல்ல. இதனை இனிமேலும் புரட்டிப்பார்க்கப்போனால் தொடர்ந்த காழ்ப்புணர்வுகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதற்காக இனிமேலும் யுத்தங்கள் இடம்பெறாமலிருக்க வேண்டும். தொடர்ந்து நாட்டின் இறைமையைப் பாதுக்காக்க செயற்பட வேண்டும்.   
அத்துடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிபந்தனை அடிப்படையில் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.   
எது எவ்வாறு அமைந்தாலும் அரசியல் நிலைமை எவ்வாறு நகர்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

 

Comments