மீள்குடியேற்ற அமைச்சை இன்னும் வைத்திருப்பது கவலைக்குரியதே! | தினகரன் வாரமஞ்சரி

மீள்குடியேற்ற அமைச்சை இன்னும் வைத்திருப்பது கவலைக்குரியதே!

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற அமைச்சு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஒன்பது வருடங்களில் மீள்குடியேற்றத்தை பூரணப்படுத்த இயலாது போனால் எங்கு தவறு நடந்திருக்கின்றது என்பதை கண்டறியவேண்டியுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் சரியான முறையில் இதனை கையாளத்தவறியதாலேயே மீண்டும் இந்த அமைச்சை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மீள்குடியேற்றம், புனர் வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் கே. காதர் மஸ்தான் தெரிவிக்கின்றார்.

பிரதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட மறுதினமே அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்தார். மற்றொரு தடவை இந்த அமைச்சு உருவாக்கப்படாத வகையில் குறுகிய காலத்துக்குள் மீள்குடியேற்ற விடயத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுச் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் காதர் மஸ்தான் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் விபரம் வருமாறு:

கேள்வி – மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்புக்கான புதிய பிரதியமைச்சராக உங்களை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். உங்கள்முன் பாரிய பொறுப்பொன்று காணப்படுகின்றது. இதனை எவ்வாறு முகங் கொடுக்கப்போகின்றீர்கள்?

பதில் – உண்மையிலேயே இது பெரும் சவால்தான். முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் நிறைவடைந்து விட்ட நிலையிலும் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு விடயங்களை நிறைவு செய்ய முடியாத நிலையே தொடர்கின்றது. இது பெரும் கவலை தரக் கூடியதாகும். யுத்தம் நடந்து முடிந்த நாடுகள் இந்த விவகாரத்தை குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்திருக்கின்றன. ஆனால் எமது நாட்டில் சரிபாதியைக் கூட நிறைவு செய்ய முடியாத அவலம் காணப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் திட்டமிட்ட அடிப்படையில் இதனைக் கையாளத்தவறியதே என நான் கருதுகின்றேன். சரியான முறையில் திட்டமிட்ட அடிப்படையில் முதலில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அடையாளப்படுத்தி வீடமைப்பு, வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சரியான திட்டமிடலைச் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக முன்பிருந்தவர்கள் செய்யவில்லை என குற்றம் சுமத்தமுற்படவில்லை. ஆனால் சரியாக இதனை கையாளத் தவறியதைத் தான் சுட்டிக்காட்ட விளைகின்றேன்.

கேள்வி – இன்னமும் மீள்குடியேற்றப்படாதவர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள்?

பதில் – சரியான தொகை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பல கட்டங்களில் வடபுலத்திலிருந்து மக்கள் வெளியேறி இருக்கின்றனர். வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். 90களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அதற்கு முன்னரும், பின்னரும் கூட தமிழ் மக்கள் உட்படபெரும் தொகையினர் வெளியேறியுள்ளனர். இதற்கான தரவுகளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தரவுகள் கூட முரண்பட்டவையாகவே உள்ளன. பிரதேச செயலகங்கள், கிராம சேவை அலுவலகங்களின் தரவுகளுக்கும் பொதுமக்களின் தரவுகளுக்குமிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனைத்துத் தரவுகளை சீர்செய்து கொள்ள வேண்டியுள்ளது.

தங்களது மண்ணிலிருந்து வெளியேறியவர்களில் பலர் திரும்பி வரவிரும்பினாலும் அவர்களுக்கு சரியான தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத நிலை தொடர்கின்றது. மற்றும் பலர் திரும்பி வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இதுதான் அங்குள்ள நிலைமை. இதற்கு சரியான முறையில் திட்டம் வகுத்துச் செயற்பட வேண்டும். மீள்குடியேற்றம் என்பது வெறுமனே வீடுகளை மட்டும் பெற்றுக் கொடுப்பது மாத்திரமல்ல. அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வழிசெய்யப்படவேண்டும். அதற்கு போதுமான நிதி தேவைப்படுகின்றது. இது குறித்து அரச உயர் மட்டத்துடன் பேசி தீர்வு காணவேண்டியுள்ளது. இது நீண்டகாலக் குறைபாடாக உள்ளதால் திட்டமிட்டுச் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கேள்வி – அரசுக்கு மிகக்குறுகிய கால அவகாசம் உள்ளதால் இதற்கிடையில் இவ்விடயத்தில் தீர்வு காணமுடிமென நினைக்கின்றீர்களா?

பதில் – முற்றுமுழுதாக தீர்வு கண்டுவிடமுடியும் என நம்பவில்லை. ஆனால் காத்திரமான சில நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்ற நம்பிக்கையுள்ளது. எனது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மண்ணைச் சேர்ந்தவர் நானும் அதே மண்ணிலிருந்து வந்தவன். எம்மிருவருக்கும் அங்குள்ள நிலைமைகள் நன்றாகத் தெரியும். நாமிருவரும் இணைத்து சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவிடுக்கின்றோம்.

இங்கு இன்னுமொரு விடயத்தைச் சுட்டிக் காட்டவிரும்புகின்றேன். வடக்கு ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியதாகும் இந்த ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் எந்த அபிவிருத்தியையும் கண்டு விடமுடியாது. குளங்களை திருத்த வேண்டும். சில குளங்கள் தூர்ந்து போயுள்ளன. அவற்றை முழுமையாக திருத்த வேண்டியுள்ளது. நீண்டகாலமாக கவனிக்கப்படாதிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும்.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், மீன்பிடித்தொழில் என பல விடயங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஒரேயடியாக கட்டியெழுப்ப முடியுமென நினைக்கமுடியாது.

மீன் பிடித்தொழிலைப் பொறுத்தளவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தெற்கில் மீன் பிடித்தொழில் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் இனித்தான் அதனைச் செய்யவேண்டும். வடக்கில் கடற்றொழிலாளர்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றுக்கு படிப்படியாக தீர்வு காணப்பட வேண்டும்.

கால் நடை வளர்ப்பு விடயத்தில் முக்கியமானது மேய்ச்சல் தரை குறித்ததாகும். வடபுலத்தில் நிறைய காணிகள் காடுகளால் சூழப்பட்டுள்ளன. மக்கள் அங்கிருந்து வெளியேறியதாலும், வெளியேற்றப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டது. அதே சமயம் நிலங்களில் காடுகள் வளர்ந்ததனால் வனபரிபாலன இலாகா நிறைய காணிகளை வனஇலாக்காவுக்குள் உள்வாங்கியதால் பெரும் நெருக்கடிநிலை உருவானது. இந்தக் காணிகளை அடையாளம் கண்டு திரும்பபெற்று உரிய மக்களுக்கு ஒப்படைக்க வேண்டியுள்ளது.

அடுத்தது கல்வித்துறையை மேம்படுத்த வேண்டியுள்ளது. பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். உரிய வளங்களைப் பெற்றுக்கொடுத்து ஆசிரிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் படித்த இளைஞர், யுவதிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவை குறித்து ஜனாதிபதி – பிரதமருடன் பேசவிருக்கின்றோம். இதற்கான ஏற்பாடுகளை எனது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வருகின்றார். ஜனாதிபதி வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணியை அமைத்திருக்கின்றார் அதனூடாகவும் எமது பணிகளை இலகுவாக்கிக் கொள்ளமுடியுமென நம்புகின்றேன்.

கேள்வி – கடந்த காலத்தில் நல்லாட்சியில் கூட மீள்குடியேற்ற அமைச்சு இருந்தது தானே அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியற்றதெனக் கூறுகிறீர்களா?

பதில் – அவ்வாறான தொனியில் நான் கூறமாட்டேன்.

அவர்களால் மீள்குடியேற்ற விடயத்தில் காத்திரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கருத முடியாதுள்ளது. அந்த அரசு சிலரை மனங்குளிர வைப்பதற்காக நிதியை ஒதுக்கியது. இதனால் பாரிய பிரச்சினை உருவாகியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி உரியமுறையில் பயன்படுத்தப்பட்டதா? என்பது கேள்விக் குறியதாகும்.

இந்த விடயத்தில் நாம் கவனமாக செயற்பட வேண்டியுள்ளது. பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். தனிநபர்களை திருப்திப்படுத்துவதை விட சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டும். திட்டமிட்டே இதனைக் கையாள வேண்டியுள்ளது. நாம் வெளிப்படைத் தன்மையுடனேயே செயற்படுவோம்.

கேள்வி – இவ்வேளையில் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்?

பதில் – நான் பிரதியமைச்சராக இந்த அரசில் பதவி வகிப்பது தனியொரு சமூகத்துக்காக அல்ல. பொதுவானவனாகவே நியமிக்கப்பட்டுள்ளேன், என்பதை முதலில் சொல்லி வைக்கவிரும்புகின்றேன். அனைவருடனும் சமமானவனாகவே செயற்படுவேன். எனது கடமையை சரிவரவும், நீதியாகவும் செய்யவே உறுதி பூண்டிருக்கின்றேன்.

அதே சமயம் எனது முஸ்லிம் சமூகத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன் முஸ்லிம் சமூகம் நிதானத்துடன் செயற்படவேண்டும். அரசியல் கட்சிகளானாலும் தலைவர்களானாலும். மக்களானாலும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஈமான் உறுதியாக இருக்க வேண்டும். இஸ்லாம் காட்டும் நேரிய பாதையில் நடந்து கொள்ளவேண்டும்.

இந்த விடயத்தில் உலமாக்களுக்கு மிகப் பெரியதொரு கடப்பாடு இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்தேன்.

முஸ்லிம் தலைவர்கள் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் அவர்களால் தவறுகள் நடக்கும் போது தட்டிக்கேட்டு, நியாயத்தின் பக்கம் அவர்களை திருப்பும் பாரிய பொறுப்பு உலமாக்களிடம் உள்ளது. இதனை கிராம மட்டத்திருந்து பள்ளி வாசல்களை மையப்படுத்தி உலமாக்கள் மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் விடயத்தில் கூர்மையான பார்வை இருக்க வேண்டும். தவறு நான் செய்தால் கூட தட்டிக் கேளுங்கள். என்னை நல்வழிப்படுத்துங்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன். அரசியல் வாதிகள், தலைவர்கள் என்பதற்காக செய்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டு தலையசைக்க வேண்டாமென உலமா பெருந்தகைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

கிராமிய மட்டத்திலிருந்து பள்ளிவாசல்களில் ஆலோசனைசபை களை அமைத்து சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் பாரிய பொறுப்பும், கடப்பாடும் உலமாக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்கின்றேன்.

 

Comments