விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்! | தினகரன் வாரமஞ்சரி

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்!

“ஏட்டையும் பெண்கள்

தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர்

மாய்ந்து விட்டார்்

வீட்டுக்குள்ளே பெண்ணைப்

பூட்டிவைப் போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” என்றான் புரட்சிக் கவிஞன் பாரதி. அதன் யதார்த்ததை தனது ஆய்வில் தெளிவாகக் குறிப்பிடுகிறார் நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமாத்யா சென்.

“எந்தவொரு நாட்டிலே பால் நிலை சமத்துவம் உயர்வாக இருக்கிறதோ அங்கு சிறந்த கல்வி, சுகாதார வளர்ச்சி, உயர் தலா வருமானம், வேகமானதும் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, பாரிய சர்வதேச போட்டித்தன்மை ஆகியன காணப்படும்” என உலக பொருளாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

மனித அபிவிருத்தியுடன் தொடர்புடைய காட்டிகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் கேரள மாநிலமானது ஏனைய மாநிலங்களினின்றும் தனித்துக் காணப்படும் சிறப்பை நியாயப்படுத்தும் ஆயுதமாக பெண்களின் கல்வி அபிவிருத்தியைக் குறிப்பிடுகிறார் அமாத்யா சென். வல்லரசுகளாவதற்காய் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் சீன இந்திய தேசங்களின் அரசியலுக்கிடையே ஜனநாயகமும் பால் நிலை சமத்துவமும் எங்ஙனம் அந்நாடுகளை மனித அபிவிருத்தியை நோக்கி நகர்த்திச் செல்கின்றன என்பதை அவரது ஆய்வு நூல்கள் வெளிப்படுத்துகின்றன.

சீன மறுமலர்ச்சிக்கும் (1949) இந்திய சுதந்திரத்துக்கும் (1948) முன்னரான காலப்பகுதிகளில் மனித அபிவிருத்திக் குறிகாட்டிகளின் அடிப்படையில் இவ்விரு நாடுகளையும் நோக்கினால் அவை ஏறக்குறைய ஒத்த நிலையிலேயே காணப்பட்டன. அவை உலகிலேயே வறிய இரு நாடுகளாகக் காணப்பட்டன என்பதுடன் அவற்றின் இறப்பு வீதங்கள், போஷாக்கின்மை, படிப்பறிவின்மை ஆகியன ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகவும் காணப்பட்டன.

சீன மறுமலர்ச்சியின் பின்னர் உருவாகிய தலைமைகள் தூர நோக்குள்ள கொள்கைகளை உருவாக்கி சீனாவின் சுகாதாரத்துறையை விஸ்தரித்து மக்களின் ஆயுட்காலத்தை உயர்த்தின. மாறாக இந்தியாவிலோ தொடர்ந்தும் பின்னடைவான நிலைமையே காணப்பட்டது.

மறுமலர்ச்சிக்கு முன்னரிருந்தே சீன அரசு மக்களுக்கான சமூக சந்தர்ப்பங்களை விஸ்தரிக்க ஆரம்பித்திருந்தது. இங்கு சமூக சந்தர்ப்பம் எனும் பதத்தை மனிதன் ஒருவன் வாழ்வதற்கான சுதந்திரத்தை அளித்தல் எனும் கருத்துடன் பார்க்கலாம். சுகாதாரம், கல்வி, நிலச் சீர்திருந்தங்கள், ஊடக சுதந்திரம் என மனித சுதந்திரத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளே சமூக சந்தர்ப்பங்களாகக் கருதப்படுகின்றன. ஆரம்ப காலம் தொட்டே அரசினாலும் கூட்டுறவு அமைப்புகளினாலும் சீனாவின் மக்களுக்கு இலவச மருத்துவக் காப்புறுதிகள் வழங்கப்பட்டு வந்தன. இவை சீன பொதுச் சுகாதாரத்துறைக்கு வளங்களை அள்ளி வழங்கலாயின. ஆதலினால் கல்வி, சுகாதாரத்துறைகளில் தனக்கான சமூக சந்தர்ப்பங்களை சீனா விஸ்தரித்துச் சென்றது. மருத்துவ வசதிகளுக்கான அணுகல் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமிண்றி வழங்கப்பட்டிருந்து. ஆயினும் சீன மறுமலர்ச்சியின் பின்னரான காலங்களில் அது இல்லாமல் ஆக்கப்பட்டு ஒவ்வொரு சீன பிரஜையும் தனியார் காப்புறுதியொன்றை பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்ற நிலை உருவானது. தடுப்பூசிகளைக் கூட பணத்துக்கு கொள்வனவு செய்யும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். இந்நிலைமையானது உறுதி செய்யப்பட்ட மருத்துவ வசதிகளுடன் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. சிசு மரண வீதம் அதிகரிக்கத் தலைப்பட்டது. ஜனநாயகமன்றி ஒற்றையாட்சி முறைமையை சீன தேசம் கொண்டிருந்தமையால் பொதுமக்களின் எதிர்ப்பு மிகவும் குறைவாகக் காணப்பட்டது. தனியார் மயமாக்கல் மூலம் சகலருக்குமான மருத்துவ வசதி மறுக்கப்பட்டமையால் சராசரி ஆயுட்காலமும் குறைவடையத்தொடங்கியது.

சீனாவின் நிலைமையுடன் ஒப்பிடுகையில் இந்திய மாநிலமான கேரளா சிறந்த நிலைமையைப் பேணியது. உயர் எழுத்தறிவு வீதத்தையும் (குறி ப்பாக பெண்களின் எழுத்தறிவு) மேம்பட்ட சுகாதார வசதிகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அம்மாநிலத்தின் கொள்கைகள் சீனாவை விட மேம்பட்ட சராசரி ஆயுட்காலம் பேணப்படக் காரணமாயின. இவ்வபிவிருத்தி மாதிரி காரணமாக கேரள மாநிலத்தில் பலவித முன்னேற்றங்கள் உருவாகின. அவை பற்றி ஆராய முன்னர், அம்முன்னேற்றங்கள் சாத்தியப்பட ஏதுவாக அமைந்த காரணங்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.

தற்போது எம்மால் அறியப்படும் கேரள மாநிலத்தின் இரு பகுதிகள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் திருவாங்கூர், கொச்சின் ஆகிய இரு சமஸ்தானங்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தன. பாலக்காடு எனும் ஒருபகுதி காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த மதராஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. கொச்சின், திருவாங்கூர் சமஸ்தானங்களின் கீழ் காணப்பட்ட கேரளா மாநிலத்தின் பகுதிகளின் பெண்வழி சமுதாய அமைப்பு முறை காணப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்ணுக்கு முக்கிய அந்தஸ்து வழங்கப்பட்டது. ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரள மா நிலம் கல்வி சார் புள்ளிவிபரங்களில் முன்னிலையில் திகழ்வதற்கு மிகப் பிரதானமான காரணங்களாக அம்மாநிலத்தின் கலாசாரம், ஆட்சி முறைமை, கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு ஆகியவற்றையே மிகப்பிரதானமான காரணங்களாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். திருவாங்கூர் சமஸ்தானம் மிக நீண்ட காலமாக பெண்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வந்தமையை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இந்தியாவில் மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி முறைமை அறிமுகப்பட்டுத்தப்பட்டபோது, கேரள மாநிலமும் தனிமாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. அதன் பின்னர் தேர்வு செய்யப்படும் அரசுகள் தொடர்ந்து கேரள மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பது தொடர்பில் அதிக முக்கியத்துவத்தை வழங்கின. இது நவீன மனித அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட மாதிரியாக அமைந்ததுடன், இம்மாதிரியைப் பல நாடுகள் பின்பற்றிச்செல்லவும் காரணமாக அமைந்தது. இம்மாதிரியில் அபிவிருத்தியின் மையமாக பொதுமக்கள் முன்னிறுத்தப்பட்டனர். அதுவே ஜனநாயகத்தின் அடிப்படையுமாகும். மாநிலத்தின் மூலை முடுக்குகளெங்கும், குறிப்பாக பெண்களை முறையான கல்வி சென்றடைய இம்மாதிரி வழி வகுத்தது. கிராமங்கள் தோறும் எழுத்தறிவு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவை மட்டுமன்றி கிராமங்களெங்கும் சுகாதார, கல்விசார் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டன. ஆரம்ப காலகட்டங்களில் இவை திருவாங்கூர் சமஸ்தானத்தினால் உருவாக்கப்பட்ட போதும் தொடர்ந்து மாநில அரசுகளால் விஸ்தரிக்கப்பட்டன.

கேரள மாநில அரசுடன் இணைந்து முறையான கல்வியை வழங்குவதில் தனியார் துறைகளும் மிஷனரிகளும் செயற்பட்டன. மாநில அரசினால் இத்தகைய பல்தரப்பு பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டது. ஆதலினால் கேரள மாநிலத்தின் மூலை முடுக்குகளெங்கும் ஆரம்ப, இடைநிலைக்கல்வி கிடைக்கப்பெறும் நிலை உருவாகியது. நடைமுறையில் பார்த்தால் எழுத்தறிவற்ற நடுவயதுக்குட்பட்ட ஆணையோ இல்லை பெண்ணையோ கேரள மாநிலத்தில் காண்பது அரிது என்ற நிலை உருவாகியது.

கல்வி நிலையில் உருவாகிய முன்னேற்றம் காரணமாக வகுப்பு, சாதி, பால் நிலை போன்றவற்றால் உருவாகிய பாரம்பரியமான ஏற்றத்தாழ்வுகளை கேரள மாநிலம் இலகுவாக வெற்றிகொண்டு மேலும் பல சமூக சந்தர்ப்பங்கள் வழங்கப்பட ஏதுவாக அமைந்தது எனலாம். பெண்களின் எழுத்தறிவு வீதம் அதிகரிக்க அதிகரிக்க கருவள வீதம் குறைவடைந்து சென்றமையை கேரள மாநிலத்தில் அவதானிக்க முடிந்தது. இந்தியாவின் வடமாநிலங்களில் காணப்படும் உயர்கருவளவீதத்துடன் ஒப்பிடுகையில் கேரள மாநிலத்தின் குறைவான கருவளவீதம் சனத்தொகை வளர்ச்சி வீதக்கட்டுப்பாட்டில் பெரும்பங்கு வகித்து வருகிறது. குறைவடைந்த கருவள வீதம் காரணமாக கர்ப்பகால காரணங்களால் உருவாகும் மரணங்கள் கேரள மாநிலத்தில் வெகுவாகக் குறைந்தன.

அதுமட்டுமன்றி பெண்களின் எழுத்தறிவு வீதம் அதிகரிக்க அவர்களது வருமானம் ஈட்டும் வல்லமையும் உற்பத்தித்திறனும் அதிகரித்ததன. மருத்துவத் தகவல்களை வாசித்தறியும் திறன் அதிகரித்தது. அத்தகவல்கள் அடுத்தவர்களுக்கும் சென்றடையும் வேகம் அதிகரித்தது. தமக்கு தேவையான உணவையும் சுகாதார வசதிகளையும் உரிமையுடன் கோரிப்பெறக்கூடியவர்களாக பெண்கள் மாற்றம் பெற்றனர். இவற்றின் காரணமாக சிசு மரண வீதமும் குறைவடையத்தொடங்கியது.

மேலான போக்குவரத்து வசதிகளை உருவாக்குவதன் மூலம் ஆரம்ப சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் அதன் 2 கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள் ஒரு பேருந்துத் தரிப்பு நிலையம் அமையும் வண்ணம் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமன்றி சுகாதார சேவைகள் பரந்து விரிவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட மனிதவளமானது விஸ்தரிக்கப்பட்ட கல்வி முறைமையால் உருவாக்கப்பட்டது. இந்நிலைமையானது நவீன மருத்துவத் தொழில்நுட்பம் கிராமங்களுக்கு இலகுவாகச் சென்றடைய ஏதுவாகியது.

தற்செயலாக எழுத்தறிவற்ற அயற்சூழலில் வாழ்ந்துவரும் எழுத்தறிவற்ற பெண்ணொருவருக்குக் கூட சுகாதாரப் பராமரிப்பு தொடர்பில் போதிய தகவல்கள் தெரிந்திருந்தன. இதனை கேரள அபிவிருத்தி மாதிரியின் வெற்றியாகவே ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். வைத்தியசாலைகளை அடிப்படையாகக் கொண்ட பிரசவங்கள், சிறுவருக்கான நோய்த்தடுப்பு மருந்துத் திட்டங்களும் தொடர் கண்காணிப்புகளும் பின்பற்றப்பட்டன. மிகவும் வினைத்திறன் மிக்க பொது உணவு விநியோக முறைமை கேரளாவில் காணப்பட்டது. அத்துடன் கொதித்தாறிய நீரைப்பருகும் வழக்கமும் சுகாதாரப் பழக்கவழக்கங்களும் கேரள மக்களின் கலாசார வழிவந்த விடயங்களாக காணப்பட்டன. உயர் எழுத்தறிவு வீதமானது இப்பழக்க வழக்கங்கள் உறுதியாகப் பின்பற்றப்பட ஏதுவாகின.

கேரள மாநிலத்தில் காணப்பட்ட சனத்தொகைச் செறிவானது சமூக சேவைகளுக்கான செலவைக் குறைப்பதற்கு பெரிதும் உதவின. ஏனெனில் சனத்தொகைச் செறிவு அதிகமாகும் போது குறித்த ஒரு இடத்தில் வழங்கப்படும் சேவையை பெரும் எண்ணிக்கையிலானோர் பெற்றுப்பயனடந்தனர். காணிச் சீர்திருத்தங்கள், பொது வேலைச் செயற்றிட்டங்கள், விவசாய தொழிற்சங்கங்களின் விஸ்தரிப்பு, தொழிலாளர் நலன்புரி நிதியத்தின் தாபிப்பு ஓய்வுதியத்திட்டங்களின் உருவாக்கம் என மாநில அரசின் கொள்கைகள் மக்கள் மத்தியில் வருமான சமத்துவம் நிலவுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கின.

பரவலாக்கப்பட்ட சுகாதாரப்பராமரிப்பு மக்களின் ஆயுட்காலத்தை நீடிப்பத்தில் பெரும்பங்கு வகித்தது. அதுமட்டுமன்றி மக்கள் முற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கியிமையால் நோயின் பின்னரான பராமரிப்பை நாடுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. தவிர்க்கக் கூடிய நோய்களால் மக்கள் ஊனமடையும் சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைவடையத் தொடங்கின.

கற்றோரையுடைய சமூகமானது ஊழல் தொடர்பிலும் அரச சேவை வழங்கலில் காணப்படும் அலட்சியம் தொடர்பிலும் விழிப்பாக இருக்கும் என்பது கண் கூடு. கேரள மா நிலம் ஜன நாயகத்தைப் பின்பற்றியமையால் பின் தங்கியக் குழுமங்கள் கூட தமக்கான சமூக சந்தர்ப்பங்களை உரிமையுடன் கோரிப்பெறவும் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள ஏதுவாக செயற்படவும் வழி சமைத்துக்கொடுக்கப்பட்டது. இவையாவுமே இறப்பு வீதம் குறைவடையக் காரணமாகின. முதியோர் மேம்பட்ட சுகாதார வசதிகளை அனுபவித்ததோடு நீண்ட நாட்கள் உயிர் வாழவும் தலைப்பட்டனர்.

1970களில் சீன அரசு ‘ஒரு குழந்தைக் கொள்கை’யை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கருவள வீதத்தைக் குறைத்து வேகமாக அதிகரித்து வந்த தனது சனத்தொகையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சி செய்தது. அதில் வெற்றியும் கண்டது. ஆயினும் அத்தகைய உறுதியான கட்டுப்பாடுகள் எவையுமின்றி கேரள மாநிலத்தின் கருவள வீதம் வெகுவாகக்குறைந்து சனத்தொகை வளர்ச்சி வீதம் கட்டுப்பட்டமையை பெண்களின் கல்விக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றியாகவே அமாத்யா சென் கருதுகிறார்.

உலக சுகாதார அமைப்பு, மொத்த கருவள வீதத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக்காலத்தில் அவளுக்குப் பிறக்கும் / பிறக்கவிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை என வரையறுக்கிறது. இங்கு அப்பெண்ணாணவள் அவள் வாழும் சனத்தொகையில் காணப்படும் வயதுக்கேற்ற கரு வளத்துக்கமைவானவளாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.

சீனாவின் ஒரு குழந்தைக்கொள்கையானது (அண்மையில் அது இரு குழந்தைக்கொள்கையாக மாற்றப்படும் வரை) மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்கொள்கையைப் பின்பற்றாத குடும்பங்கள் தண்டனைகளுக்கு ஆளாகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆயினும் இத்தண்டனைகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டன. பிறக்கும் ஒவ்வொரு மேலதிக குழந்தைக்குமாக பெற்றோரின் சம்பளத்தின் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. தமது பிள்ளைகளுக்கான கல்விக்கும் மருத்துவ வசதிகளுக்கும் பெற்றோரே செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளல் பண வசதி மிக்க குடும்பங்களுக்கு மாத்திரமே சாத்தியம் எனும் நிலை சீனாவில் உருவாக்கியது.

 

இது பொதுமக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தது. பிறப்பு வீதம் வெகுவாகக் குறையத்தொடங்கியது. சனத்தொகை வளர்ச்சி மந்தகதியை நாடியது. விளைவாக வயதானோரின் சனத்தொகை அதிகரிக்கத் தொடங்கியது. அதே வேளை கட்டாயப்படுத்தப்பட்ட கருக்கலைப்புகளாலும் கருத்தடை முறைகளாலும் குடும்பங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின. இந்நிலைமை சீனாவின் பாலினப்பரம்பல் ஒரு பக்கமாக சாய்வதற்கு ஏதுவாகியது. அதன் விளைவாக பாலியல் குற்றங்களும் பெண் கடத்தல்களும் அதிகரிக்கத்தலைப்பட்டன.

மாறாக இந்தியாவின் கேரள மாநிலத்திலே சீனவுடன் ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய கால இடைவெளியிலே கரு வள வீதம் குறைவடைந்து சென்றது. அதற்கான அடிப்படைக் காரணம் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையிலே சமூக சந்தர்ப்பங்களுக்கான கதவு திறக்கப்பட்டமையேயாகும் என வாதிடுகிறார் அமாத்யா சென். அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரமட்சமின்றி வழங்கப்பட்ட மேம்பட்ட கல்வியால் குறிப்பாக பெண்கள் தமக்கான வாழ்வை தீர்மானிக்கும் வல்லமையை வளர்த்துக்கொண்டனர். தாம் விரும்பிய வேலையைத் தீர்மானிக்க அவர்களுக்கு போதிய சுதந்திரம் கிடைத்தது.

பெண்களின் திருமணத்துக்கான வயதெல்லை உயர்வடைந்தது. ஏனெனில் அடிப்படைக்கல்வியைப் பூர்த்தி செய்த பின்னரே பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அங்கு காணப்பட்டது. மேம்பட்ட கல்வி முறைமையால் அடிப்படைக் கல்விக்கான காலம் அதிகரிக்க திருமண வயது அதிகரித்தது.

கேரள மாநிலத்தின் கலாசார வழக்கத்துக்கமைய திருமணமானது ஆணினதும் பெண்ணினதும் இனப்பெருக்க வாழ்க்கைக்கான ஆரம்பமாகக் கருதப்பட்டது. பாலியல் ரீதியான ஒன்று சேரலுக்குரிய முறையான வழியாக திருமணம் காணப்பட்டது. பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்படும் போது அதிக அபாயம் மிக்க கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தானாகவே குறைவடைந்தது. அதேவேளை பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைவடைந்தது. குடும்பத்திட்டமிடல் முறைமைகளைப் பின்பற்றியதால் பிள்ளைகளுக்கிடையிலான வயதெல்லை அதிகரித்தது. மூன்று குழந்தைகளுக்கும் அதிகமான குழந்தைகளையுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. தேவையற்ற கர்ப்பங்களால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடையத்தொடங்கியது. அது ஆதரவற்ற குழந்தைகள் உருவாகும் சாத்தியத்தை வெகுவாகக் குறைத்தது. பாதுகாப்பற்ற கருச்சிதைவுகளும் குறைக்கப்பட்டன.

மேலும் பல பெண்கள் தொழிற்சந்தையை நாடும் நிலை உருவாகியது. பிள்ளைகள் பிறப்பதால் உருவாகும் செலவுகளையும் நன்மைகளையும் பற்றி பெண்களின் அபிப்பிராயம் மாறியது. சிறு குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணரத்தலைப்பட்டனர்.

பெண்களின் எழுத்தறிவு வீதம் அதிகரித்தமையானது அதிகளவிலானோர் கருத்தடை நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பிப்பதற்கு ஏதுவாக அமைந்தது.

கேரள மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக பெண் வழி சமுதாய அமைப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தமையால் பெண்கள் தம் கருவள வீதத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரதான பங்கினை வகித்தார்கள். பெண்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கான வாய்ப்பானது கணவன்- மனைவிக்கான தொடர்பாடலை அதிகரித்தது. அதுவும் கருத்தடை வழிமுறைகள் இலகுவாகப் பின்பற்றப்பட வழிவகுத்தது.

பெண்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கான வாய்ப்பு மாநிலத்தின் சிசு மரண வீதத்தை வெகுவாகக் குறைத்தது. கற்ற பெண்கள் குழந்தைப் பராமரிப்பை இலகுவாக க் கற்கத்தலைப்பட்டனர். மிகவும் குறுகிய கால இடைவெளியில் பெண்கள் கருவுறும் நிலைமை குறைவடைந்தது. குறைந்த கருவள வீத மானது தலா மொத்த உள் நாட்டு உற்பத்தை அதிகரிக்கப்படக் காரணாமாகியது

ஏலவே குறிப்பிட்டது போன்று சுகாதாரப்பராமரிப்பு விருத்தி செய்யப்பட்டமையால் நோய்த்தடுப்பு வழிமுறைகள் சகலருக்கும் கிடைக்கப்பெற்றன. சிசு மரண வீதம் குறைவடைந்தது. சிசு மரணவீதம் அதிகரித்துக்காணப்பட்ட காலங்களில் இறக்கப்போகும் குழந்தைகளைப் பிரதியீடு செய்வதற்காக அதிக குழந்தைகளைப் பெற்ற நிலைமை மாற்றம் பெற்றது. நிர்ப்பந்திக்கப்பட்ட கொள்கைகளே இல்லாமல் கருவள வீதத்தைக் குறைத்து சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டது கேரள மாநிலம்.

சனத்தொகை அதிகரித்துச்செல்லலென்பது இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் பொதுவானதொரு நிலைமையாகும். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மனிதத்தேவையும் அதிகரிக்க இயற்கை வளங்களின் பாவனையும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்த வண்ணமே செல்வன என்பது கண்கூடு. சீனாவில் நடைபெற்றதைப் போன்று நிர்ப்பந்திக்கப்பட்ட கொள்கைகளினுௗடாக சனத்தொகையைக்கட்டுப்படுத்த முயன்றால் பல எதிர்மறைவான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதேவேளை எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது விட்டால் நிலைமை கட்டுக்கடங்காது போய்விடும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகள் உருவாக்கப்பட இதுவே பிரதான காரணமாகும்.

அத்துடன் இன்று உருவாக்கப்படும் கொள்கைகளின் பிரதிபலன் களை ஓரிரு தசாப்தங்களின் பின்னரே எம்மால் அவதானிக்க இயலும். சனத்தொகை அதிகரிப்பின் விளைவென்பது ஒன்றுடன் ஒன்று தங்கியுள்ள விடயமாகவே காணப்படுகிறது. இந் நிலையில் சனத்தொகை அதிகரிப்பு குறைப்பதற்கான வழிகளுள் பிரதானமானவை பெண்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான சந்தர்ப்பங்களை அதிகரித்தலும் ஜன நாயகத்தை மேம்படுத்தலுமாகும் என்பதே நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் அமாத்யா சென்னின் ஆய்வு முடிவாகும்.

உலகளாவிய ரீதியிலே இலங்கையின் சமூக பாதுகாப்பு நடைமுறைகள் பிரபலமானவை. 1945 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் யாவருக்குமான இலவசக்கல்வியும் சமீப காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 13 வருட கட்டாயக்கல்விச் செயற்றிட்டமும் கல்விக்கான அணுகுதலை இலகுவாக்கும் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ செயற்றிட்டமும் கல்வியின் சமத்துவத்தை உறுதி செய்வனவாக அமைகின்றன. இலவசக் கல்வித்திட்டத்தினூடு கல்வி மட்டும் இலவசமாக வழங்கப்படுவதில்லை. தரம் 1 தொடக்கம் 11 வரை வழங்கப்படும் இலவச பாட நூல்களாகட்டும். வருடாந்தம் வழங்கப்படும் இலவச சீருடைகளாகட்டும், மானிய அடிப்படையில் வழங்கப்படும் பேருந்து நுழைவுச்சீட்டுகளாகட்டும், வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசிலாகட்டும், பள்ளிச் சிறார்களுக்கான இலவச இடை நேர உணவாகட்டும், கிராமியப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு, மனிதவள விருத்தியாகட்டும், 13 வருட கட்டாயக்கல்வியினூடான தொழிற்கல்வி விருத்தியாகட்டும் யாவுமே அபிவிருத்தியின் பாதையில் எவரும் கைவிடப்படக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையாகும். அதனால் தான் இலங்கை ஆரம்பக்கல்வி தொடர்பான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உயர்வருமானம் பெறும் நாடுகளை எல்லாம் பின் தள்ளி முன்னிலையில் திகழ்கிறது.

சகலருக்குமான இலவச சுகாதாரக்கொள்கையும் கிராமங்கள் தோறும் விஸ்தரிக்கப்பட்ட சுகாதார நிலையங்களும் தாய் சேய் பராமரிப்பும் சகல கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்படும் போசாக்குணவு முத்திரைகளும் இலங்கை நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் பாதையில் பயணிப்பதை உறுதி செய்கின்றன.

கர்ப்பகால மரணங்கள், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் இறப்பு வீதம் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிலைத்து அபிவிருத்திக்கான அடைவுகளை இலங்கை இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே அடைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இடைக்கால அறிக்கை குறிப்பிடுகிறது.

இலங்கையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சகலருக்குமான கல்வியும் சுகாதாரமுமென்ற கொள்கை பால் நிலை சமத்துவம் பேணப்பட வழி வகுத்திருக்கிறது. முதனிலை, இடை நிலைக் கல்வியைப்பூரணப்படுத்துவதில் பெண் பாலரின் முன்னேற்றம் ஆண்பாலரை விட அதிகமாகவே காணப்படுகிறது. இந் நிலைமையானது கேரள மாநிலத்தை ஒத்த முன்னேற்றங்களை இலங்கையில் உருவாக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. அவற்றை உறுதி செய்யும் மிகப்பெரிய பணி ஆய்வாளர்களுக்காக ஏங்கி நிற்கிறது.

2017 ஆம் ஆண்டு இலங்கையில் 2,975,000 பெண்கள் நவீன கருத்தடை முறைமையைப் பயன்படுத்தியுள்ளார்கள் எனவும் இதனால் 824,000 தேவையற்ற கர்ப்பங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் 251,000 பாதுகாப்பற்ற கருச்சிதைவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன எனவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இது பெண்களின் கல்வி முன்னேற்றத்துடன் இயைந்த பாதையில் இலங்கை செல்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆயினும் இப்புள்ளிவிபரங்களில் காணப்படும் பிராந்தியங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழிக்க இலங்கை வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!

 

Comments