சமூக கவனத்தை ஈர்த்திருக்கும் மதுவற்ற தீபாவளி செயல்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

சமூக கவனத்தை ஈர்த்திருக்கும் மதுவற்ற தீபாவளி செயல்திட்டம்

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து சம்பளம், சம்பள முற்பணம் போன்றவற்றில் எதிர்பார்ப்புகள் நிறைவேராத நிலையில் தீபாவளி கொண்டாட்டங்களும், தீபாவளி விற்பனையும் களைகட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

ஆனாலும் கடந்த சனிக்கிழமை மூன்றாம் திகதி தொடங்கி அட்டன் நகரில் அங்குமிங்கும் நகர முடியாதபடி சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. சனநெருக்கடியில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் சென்றதால் ஏற்பட்ட சத்தம், வாகனங்கள் வீதியில் நடந்த மக்களை தாண்டிச் செல்வதற்காக தொடர்ச்சியாக எழுப்பிய வாகன ஹோன்களின் கர்ணகடூரமான சத்தம், போட்டி போட்டுக்கொண்டு நடைபாதை வியாபாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தி அடித்தொண்டையில் முடியுமான வரை பலமாக கத்தி எழுப்பிய சத்தம் என நகரம் களைகட்டியிருந்தது.

நகரின் பல இடங்களில் கட்டப்பட்டடிருந்த ஒலிபெருக்கிகளுக்கு அருகில் இருந்தவாறு அதில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த செய்திகளை ஆர்வத்துடனும், கவனமாகவும் பலர் கேட்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அத்தனை இரைச்சல்களையும் தாண்டி பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிமின் குரல் தெளிவாகக் கேட்டது

"12 ஆண்டுகளுக்கு முன் மது இல்லாமல் தீபாவளித் திருநாளை கொண்டாடுவோம்" என்ற கோரிக்கையோடு மதுவற்ற மலையகத்தை நோக்கிய அருள் யாத்திரை என்ற தொனிப்பொருளோடு ஆரம்பித்த தீபாவளி பரிந்துரை, படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று ஒரு சமூக எழுச்சி பரிந்துரையாக உருவாகி இருக்கிறது என்றார் மைக்கல் ஜோக்கிம்.

"நமது சமூகத்தை அடக்கியாண்ட மது என்னும் அரக்கனை படிப்படியாக வென்று வருகிறோம். தற்போது சமூகத்திலும் , விசேடமாக இளைஞர்களிடமும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானிக்கும்போது மதுவற்ற மலையகம் என்பது சாத்தியமான ஒன்று தான் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. மதுவை வென்றது மட்டுமல்ல, நமது சமூகத்தின் சாபக்கேடாக இருந்து வரும் கடன் கலாசாரத்தில் இருந்தும் நாம் விடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். வெறும் களியாட்டமாகவும் மதுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த கொண்டாட்டமாகவும் இருந்த தீபத்திருநாள் இப்போது ஒரு ஆன்மீக எழுச்சி விழாவாகவும், சமூக எழுச்சி விழாவாகவும் வளர்ச்சிபெற்று வருவதை தெளிவாக காண முடிகிறது.

முன்பெல்லாம் தீபாவளித் திருநாளில் மூடிக்கிடந்த தோட்ட ஆலயங்கள் வழிபாட்டுக்காக திறந்திருக்கின்றன. காலையில் மதுவை படைப்பு பொருளாக வைத்து வீடுகளில் 'பூஜை' என்ற பெயரில் காலையிலேயே மது அருந்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி சண்டை சச்சரவுகளில் முடிந்த புனிதமான ஒரு ஆன்மீக விழாவின் அடிப்படை தத்துவத்தையே மாசுபடுத்திய நிலை மாறி இப்போது தோட்டங்கள் தோறும் ஆலயங்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தும் வழக்கமும், கெளரிவிரதம் இருக்கும் வழக்கமும் நடைமுறைக்கு வந்திருக்கிறதே. இது எவ்வளவு பெரிய ஆன்மீக சமூக மாற்றம்!" என்று கூறி பெருமிதம் கொள்கிறார் ஜோக்கிம்.

இந்த முறை சம்பள உயர்வுக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும் ஒரு சூழல் வந்திருப்பதே ஒரு பெரிய வெற்றிதான். ஆனால் அதேவேளையில் நமது தொழில் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் தோட்டங்களை பாதுகாக்க வேண்டும். தோட்டங்களை பாதுகாப்பது என்பது நமது இருப்பை பாதுகாப்பதாகும்.

இப்போது உள்ளூரில் நமது வருமானம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு நம்மில் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்கிறோம்.

கடும் சிரமத்திற்கு மத்தியில் அங்கு உழைத்த பணத்தை செலவிடுவதில் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த பணம் நமது எதிர்கால அபிவிருத்திக்கு உதவ வேண்டும்.

வெளிநாட்டு உழைப்பில் கிடைத்த பணத்தை எவராவது மதுவுக்கு செலவிட்டால் மிக மோசமான செயல். உழைத்தவருக்கு துரோகம் செய்யும் செயல் என்பதை வெளியரங்கில் சொல்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது. ஒருபோதும் வெளிநாட்டில் உழைத்த பணத்தை மதுவுக்கு செலவிடாதீர்கள்.

அத்தோடு நாம் தொடர்ந்தும் வெறும் வீட்டுப் பணியாளர்களாகவும் எதுவித தொழில் திறனற்ற தொழிலாளர்களாகவும் வெளிநாடு சென்று கொண்டிருக்க முடியாது. தொழில்திறன் இருந்தால் நமது சிரமத்திற்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ தொழிற் திறன்களை பெறுவதற்கு வழிகாட்டும் திறன் அபிவிருத்தி வழிகாட்டல் சேவை ஒன்றையும் பிரிடோ நடத்தி வருகிறது. இந்த சேவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கடந்த குறுகிய காலத்தில் ஒரு சமூகம் என்ற ரீதியில் அரசியல் ரீதியாகவும் பல வெற்றிகளை அடைந்துள்ளோம். எனவே நாம் எதிர்கால நம்பிக்கையோடு தீபாவளியை கொண்டாடும் தகுதியை பெற்றிருக்கிறோம் என்பது பிரிடோவின் தீபாவளிச் செய்தியாக இருந்தது.

பின்னர் பிரிடோ பணியாளர்கள் மக்களைச் சந்தித்து உரையாடியபோது, அடுத்த முறை நுவரெலியா, தலவாக்கலை போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவ்வாறு கருத்துக்களை சொல்ல முன்வரவேண்டும் என்றும் நாங்கள் ஒத்துழைப்பு தருவோம் என்று ஆர்வமுடன் கூறினார்கள் ஹற்றன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, பெல்மதுலை போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள். பலரிடம் கருத்து கேட்டபோது அனைவருமே அடுத்த தீபாவளியின்போது தங்கள் பகுதிகளிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments