யாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்

கருணாகரன்  

மக்கள் நலன் நோக்கில் அமையாத யாழ். மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனால் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவதாக மாநகர சபையின் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதாக தாம் உணரவில்லை என்று மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் இந்த வரவு செலவுத் திட்டத்தைச் சிறப்பானதாக முதல்வர் கருதுகிறாரா என்று கேட்டுள்ள முன்னணியின் உறுப்பினர்களும் ஈ.பி.டி.பியினரும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தை மக்களுக்கு விரோதமான முறையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் அதில் திருத்தங்களைச் செய்யுமாறும் அதற்கு இடமளிக்க முடியும் எனவும் கேட்டிருக்கிறார் மேயர். இதை வரவேற்றுள்ள எதிரணியினர் தமது சிபாரிசுகளையும் திட்டங்களையும் அதில் இணைக்க வேண்டும் எனக் கேட்டு, அவற்றை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வரைவைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை அடுத்த பன்னிரண்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தாம் புதிய விசேட திட்டங்கள் சிலவற்றை உட்புகுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தைப்பற்றிய எதிர்த்தரப்பினரின் நிலைப்பாடானது, இந்த வரவு செலவுத்திட்டமானது மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படுவதற்குப் பதிலாக அவசியமற்ற, ஆடம்பரமான விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் எத்தகைய புதிய திட்டங்களும் உள்ளடக்கப்படவில்லை. அதாவது விசேட திட்டங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆகவே இதை ஏற்றுக் கொள்வதற்கும் அங்கீகரிப்பதற்கும் எந்த நியாயங்களும் இல்லை என்பதாகும்.

இதன்படி அவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

1. சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் சோலைவரி எந்த முன் யோசனையுமில்லாமல் இரண்டு வீதமாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த ஆறு வீதத்திலிருந்த வரி விதிப்பு எட்டு வீதத்துக்கு ஏற்றம் காண்கிறது. இதை எந்தக் காரணம் கொண்டும் தம்மால் ஏற்க முடியாது. மக்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொண்டு, வசதிகளைச் செய்தளித்த பிறகே அவர்களின் மீது வரிவிதிப்பை அதிகரிக்க முடியும். இங்கே மக்கள் நலத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் மேலதிக வரிவிதிப்புச் செய்யப்பட்டால், அது மக்களுக்குச் செலுத்தப்படும் சுமையாகும். மக்களுக்கான அநீதியாகும் என்பது. இதனால் இந்தத் தீர்மானம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

2. கடைகளின் வாடகைப் பணம் குறைக்கப்பட வேணும். அதேவேளை மாநகரசபைக்குரிய 199 கடைகளுக்கான புதிய வாடகை மற்றும் உரிம மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட வேணும். இந்தக் கடைகளைப் பலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்குப் பெற்றுள்ளனர். அவர்களில் பலர் அந்தக் கடைகளை நடத்துவதில்லை. பலர் இறந்து விட்டனர். பலர் நாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்து விட்டனர். அந்தக் கடைகளை இப்பொழுது இரட்டை வாடகை கொடுத்தே இப்போதுள்ளவர்கள் நடத்துகின்றனர். ஆகவே இதையெல்லாம் கவனத்திற் கொண்டு புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன்னோட்டமாக வடமாகாண முதலமைச்சரினால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி புதிய நடைமுறையில் வாடகைப் பணத்தை முற்பணமாக மாநகரசபை பெறலாம். அவ்வாறு பெறப்படுகின்ற திரட்டிய பணத்தில் விசேட அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். இந்த வாடகை முற்பணத்தை மூன்று கட்டங்களாகத் தவணை அடிப்படையில் விகித முறைப்படி வர்த்தகர்கள் செலுத்த முடியும் என்பதாகும்.

3. சபை மூலம் திரட்டப்படுகின்ற ஆண்டு வருமானமான 911 மில்லியன் ரூபாயில் மாநகர மக்களுக்கான நேரடி அபிவிருத்திக்கு 185 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்தச் செலவீனத்தி்ல் ஏறக்குறைய 5.8 வீதமாகும். இதில் வீதி விளக்குப் பொருத்துதல், மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளைப் புனரமைத்தல், வடிகாலமைப்பு ஆகியவற்றை மட்டுமே செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தை, பேருந்துத் தரிப்பிடங்கள், பூங்காக்கள், நூலக அபிவிருத்தி போன்ற இதர திட்டங்கள், வேலைகளுக்கு இதில் இடமில்லை. ஆகவே இது ஒரு முழுமைப்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டமில்லை என எதிர்த்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

4. நவீன சந்தைக்கான வர்ணம் பூசுவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இது உச்ச செலவீனமாகும். வருமானத்திலிருந்து செலவீனம் விகித அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமே தவிர, எழுந்தமானமாகச் செய்ய முடியாது என எதிரணி தரப்பில் கூறப்படுகிறது. கடந்த மாநகரசபை ஆட்சிக்காலத்திலும் பெரும் செலவில் நவீன சந்தைத் தொகுதிக்கு வர்ணம் பூசப்பட்டது. ஆகவே குறுகிய காலத்தினுள் பெருஞ்செலவுக்கு மாநகர சபை இடமளிக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம்.

5. மக்கள் நலத்திட்டங்களுக்குப் பதிலாக உறுப்பினர்கள் மற்றும் முதல்வருக்கான செலவீனம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக மேயருக்கான வீட்டு வசதிக்கு 2.5 கோடி ரூபாய்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவீனத்துக்கு ஒரு கோடி. தவிர உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள், தொலைபேசி உள்ளிட்ட இதர செலவீனங்கள், பயிற்சிகளுக்கான பயணங்கள் மற்றும் பிரத்தியேகச் செலவுகள் என பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்த்தரப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. உள்ளூரில் உள்ள குப்பையையே ஒழுங்காக அகற்றுவதற்கு முடியாமலிருக்கிறது. இந்தச் சீரில எதற்காக இப்பொழுது வெளிநாட்டுப் பயணங்களும் வெளிப்பயிற்சிகளும் என்றும் அவர்கள் கேட்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய பயணங்கள் ஏற்படுத்திய முன்னேற்றம் என்ன என்பது அவர்களுடைய இன்னொரு கேள்வியாகும்.

6. மாநகரசபையின் புதிய நிர்வாகம் இயங்கத் தொடங்கிய பிறகு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் எந்தவோரு திட்டமும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவும் இல்லை. புதியதாக அறிமுகப்படுத்தப்படவும் இல்லை. இது மாநரசபைக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டங்களிலும் இந்தக் குறைபாட்டை நீக்கி எழுவதற்கான புதிய சமிக்ஞைகளும் அதில் காணப்படவில்லை. அப்படியென்றால் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது எதிர்த்தரப்பின் இன்னொரு கோணத்துக் கேள்வி.

7. ஊழியர்களுக்கான கடனுக்குப் பத்துக் கோடி ரூபாய் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட கடனை அறவிடுவதைப்பற்றிய தெளிவான நிலைப்பாடோ உறுதியான நடவடிக்கைகளோ சரி செய்யப்படாமல் புதிய கடன்களை எவ்வாறு வழங்க முடியும்? என்பது. அவ்வாறு கடன் வழங்குவதாக இருந்தாலும் அவற்றை மீளப் பெறுவதற்கான புதிய – இறுக்கமான நடைமுறைகளும் விதிமுறைகளும் உருவாக்கப்பட வேணும் என்பது.

8. களியாட்ட வரிவிதிப்பு மட்டும் எந்த விதமான முறையீடுகள், இடையீடுகள் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டது.

9. 1200 நிரந்த ஊழியர்கள் மாநகர சபையில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய சிந்தனை அவசியம். அவர்களை மாநகரசபையின் வளர்ச்சியில் பங்குதாரராக மாற்றுவதற்கான சிறப்புத்திட்டங்களை உருவாக்குதல். இதைப்பற்றிய சிந்தனைகளையும் வரவு செலவுத்திட்டத்தில் காணவேயில்லை என்பது எதிரணியின் குற்றச்சாட்டு.

 

10. சபைக்கான வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, செலவுகளைச் சீராக்கம் செய்து, தகுந்த செலவீனமுள்ள வரவு செலவுத்திட்டத்தை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் கேட்டுள்ளனர்.

11. மாநகர சபைக்கான ஆண்டு மானியம் மத்திய அரசினால் வழங்கப்படுகிறது. அது 585 மில்லின் ரூபாய்களாகும். அவ்வளவு பணமும் உத்தியோகத்தர்களுக்கான சம்பளமாகவே தீர்ந்து விடுகிறது. புதிய மாற்று வருமானத்திட்டங்களை மாநகர சபை தன்னுடைய கையில் உருவாக்கினாலே புதிய திட்டங்களை உருவாக்க முடியும். இதற்குப் புலம்பெயர் உறவுகள், பிற நாட்டுதவிகள் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க வேணும். ஆனால் அதற்கான கரிசனையை இந்த வரவு செலவுத்திட்டம் கொண்டிருக்கவில்லை என்பது இன்னொரு முறையீடு.

இப்படிப் பல காரணங்களை முன்வைத்துள்ளன எதிரணிகள். எதிரணிகளுக்குப் பதிலளிக்கக் கடினமான நிலையிலேயே ஆளுந்தரப்புள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு வரவு செலவுத்திட்டத்தின் சிறப்பெனப்படுவது, அது உள்ளடக்கியிருக்கும் நலத்திட்டங்களும் புதிய சிந்தனைகளின் வெளிப்பாடான புதிய செயற்பாட்டுக்கான வரைவுகளுமாகும். இது அடுத்து வரும் ஆண்டுக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைகளுடைய தேவைகளையும் முன்னுணர்ந்ததாக இருக்கும். அப்படியானதொரு வரவு செலவுத்திட்டத்தை முன்மொழிவதே சபையின் சிறப்பு. அதாவது வரவு செலவுத்திட்டத்தின் கொள்கை விளக்கத்தின்போது அதை முன்வைப்பதாகும். அதை விவாதித்துச் செழுமையாக்கம் செய்து வலுப்படுத்துவது எதிரணிகளின் பங்கு.

அப்படிப் பார்த்தால் யாழ். மாநகரசபையின் 2019க்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தப் புதிய நுட்பங்களுமில்லை. எந்த நியாயங்களுமில்லை என்ற வாதம் ஏற்புடையதாகவே படுகிறது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தெரிவிப்பதைப்போல, ஒழுங்காகக் குப்பையை அகற்றுவதற்கே முதல்வர் எந்த யோசனைகளையும் வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. இதேவேளை இதே விமர்சனத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரின் மீது தம்மால் முன்வைக்க முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு மாநகரசபையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரே ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் ஒழுங்காகக் குப்பையை அகற்றினார்களா? என்று கேட்கின்றனர் கூட்டமைப்பின் சார்பிலான மாநகரசபை உறுப்பினர்கள்.

 

 

Comments