இருத்தல், பிழைத்தல், வாழ்தல்! | தினகரன் வாரமஞ்சரி

இருத்தல், பிழைத்தல், வாழ்தல்!

எல்லோரும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்ெகாள்வதற்காகவே பாடுபடுகிறார்கள் என்று யாரைப் பார்த்தாலும் பொதுவாகச் சொல்வார்கள். இஃது அரசியல்வாதிகளுக்கும் அலுவலகங்களில் பதவிகளில் இருப்பவர்களுக்கும் சாலப்பொருத்தம். எல்லாரும் அப்படியென்று சொல்லிவிடவும் முடியாது.

இன்னொரு தரப்பினர் பிழைப்பைப் பற்றிச் சொல்வார்கள். நாய் பிழைப்பு, எச்சில் பிழைப்பு, ஈனப்பிழைப்பு என்று பல்வேறு பிழைப்பைப் பற்றிச் சொல்வார்கள். அதுவும் மேலே சொன்ன தரப்பினருக்கும் பொருந்தும். நாட்டில் நடக்கின்ற அரசியல் நிலவரத்தைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். வேறு உதாரணங்கள் தேவையே இல்லை.

அடுத்தது வாழ்க்ைக. அதாவது வாழ்தல். வாழ்க்ைக வாழ்வதற்கே என்றாலும், நம்மில் பலர் வாழ்வதே இல்லை, மேலே சொன்ன இரண்டையும்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார் சொல்வேந்தர் சுகி சிவம்!

மேற்சொன்ன மூன்று சொற்களையும் அவர் இப்படி வியாக்கியானப்படுத்துகிறார். மூன்றும் ஒரே அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிந்தாலும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தம் என்கிறார் அவர். இருத்தல் (Existence), பிழைத்தல் (Survival), வாழ்தல் (Living) என்று அவர் கற்பிதம் செய்கிறார். இன்றைய நவீன பொருளாதார யுகத்தில் மனிதர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் ெகாள்வதற்காகவும் பிழைப்புக்காவும்தான் பாடுபட வேண்டியிருக்கிறதே தவிர, அவர்கள் தமது வாழ்க்ைகயை வாழ முடியாமல் தவித்துக்ெகாண்டிருக்கிறார்கள் என்கிறார் சுகி சிவம்.

எது நடந்தாலும் பரவாயில்லை, நான் எனது இருப்புக்காக எதனையும் செய்வேன் என்றும் என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக நான் எதனையும் செய்யத்தயார் என்றும் அந்த இரண்டு தரப்பினரும் செயற்பட்டுக்ெகாண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் வாழ்க் ைகயை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அவ்வாறு சொல்வதில்லை என்று சொல்வார் சுகி சிவம். நம்மில் பலர் எப்படி நலமா? என்று கேட்டால், "ஏதோ உங்கள் புண்ணியத்தில் இருக்கிறேன்" என்று சொல்வார்கள் என்கிறார் அவர்.

வாழ்வதற்காகப் போராடுவது என்பதுதான் பிழைத்தல். இருப்பதைத் தக்கவைத்துக்ெகாண்டு காலத்தை ஓட்டுவது இருத்தல். இதனைத்தான் பலபேர் செய்துகொண்டிருக்கிறார்கள். வாழ்வது மிகவும் குறைவு. அதுதான், ஏதோ இருக்கிறேன் என்பது. தினமும் உயர்ந்துகொண்டு மேலே செல்வதுதான் வாழ்தல். ​நேற்று இருந்ததைப்போன்று இன்றைக்கு இருக்கக்கூடாது. நமது நிலைமையும் அன்றாடம் மாறிக் ெகாண்டிருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி; வாழ்தல். இருத்தலுக்கும் வாழ்தலுக்கும் சிறிய வித்தியாசம்தான். சிறையில் இருக்கும் யாராவது, சிறையில் வாழ்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள்.

சிறையில் இருக்கிறேன் என்றுதான் சொல்லுவார்கள். வீட்டில்தான் வாழ முடியும். சிலர் வீட்டிலும் இருக்கிறேன் என்று சொல்வார்கள். எமது விருப்பத்திற்கு மாறாக நம்மை சிறையில் வைத்திருப்பதால், அதற்கு இருத்தல் என்று பெயர். வீட்டில் வாழ்கிறேன் என்று சொல்ல வேண்டும். ப​லபேர் இன்று உலகத்தில், நான் வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம் என்றால், அவர்களுக்கு வீடு சிறையாக இருக்கிறது என்று அர்த்தம். அவர்களுக்கு வாழ்கிற கலை தெரியவில்லை என்று அர்த்தம். ஜெயிலுக்கும் வீட்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அஃது என்னவென்றால், ஜெயிலில் தாழ்ப்பாளை வெளியில் போட்டிருப்பார்கள், வீட்டில் உள்ளே போட்டிருப்பார்கள். தாழ்ப்பாள் உள்ளேயா, வெளியேயா என்பதைவிட வேறு ஒன்றும் வித்தியாசம் கிடையாது. சிறையில் வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

வீட்டில் உட்பக்கமாகப் பூட்டிவிட்டு உட்கார்ந்திருப்போம். நம்மைப் பிறர் கட்டுப்படுத்தினால் அது சிறை. நாமே நம்மைக் கட்டுப்படுத்தினால் அது வீடு. நாம் சுய கட்டுப்பாடோடு இருப்பது வாழ்தல்! பிறர் கட்டுப்படுத்த வாழ்தல் இருத்தல். நம்மை அறியாமலேயே இருக்கிறேன்... இருக்கிறேன்... என்று சொல்லிக்ெகாண்டு இருக்கிறோம். தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், பிறருடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்தான் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்; சொல்வார்கள். தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் வாழ்கிறேன் என்று சொல்வார்கள் என்பது சொல்வேந்தரின் ஆணித்தரமான கருத்து. நீங்கள் வாழ்கிறீர்களா, இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

தரித்திரம் என்பது வேறு, தரித்திரப் புத்தி என்பது ​வேறு! இல்லை, இல்லை என்று சொல்லி இல்லாதவற்றைச் சொல்லிப் புலம்பித் தரித்திரர்களாக அல்லாமல், இருப்பவற்றை எண்ணி மகிழ்ச்சியாக வாழுங்கள் என்கிறார் சொல்வேந்தர். தரித்திரம் இருந்தால், அதிலிருந்து விடுபட்டு மேலே வந்துவிடலாம்.

ஆனால், தரித்திரப் புத்தி இருந்தால் மேலே வருவது கடினம். செல்வந்தராக இறப்பதற்காகத் தரித்திரர்களாக வாழாதீர்கள் என்பது அவரது அறிவுரை. இல்லாததைப் பட்டியல் போட்டுத் தரித்திர வாழ்க்ைக வாழக்கூடாது!

இன்னும் சிலர் எல்லாவிதமான செல்வங்களையும் வைத்துக்ெகாண்டு அனுபோகம் செய்யாமல், அடுத்த நாளுக்காகக் காத்திருப்பார்கள். எங்கு சென்றாலும், அடுத்த அடுத்த பணிகளையே சிந்தித்துக்ெகாண்டிருப்பார்கள். இதுபற்றித் தென்கச்சி கோ.சுவாமிநாதனும் அறிவுறுத்துகிறார். ஒருவர் எந்த வேலைக்குச் சென்றாலும், அடுத்ததாக அங்குச் செல்ல வேண்டும் இங்குச் செல்ல வேண்டும் என்று எந்த வேலையையும் எந்த வேளையிலும் சரியாகச் செய்யமாட்டாராம். ஆகவே, நாளை வருவதை நாளை பார்த்துக்ெகாள்ளலாம். இன்றைய பொழுதின் மகிழ்ச்சியைப் பற்றிக்​ெகாண்டு இன்றைய நாளில் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்கிறார் அவர்.

Comments