ஊர் போற்ற நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிவதேன்? | தினகரன் வாரமஞ்சரி

ஊர் போற்ற நடந்த திருமணங்கள் விவாகரத்தில் முடிவதேன்?

கல்யாணமாம் கல்யாணம்.. ஒரு கல்யாணம் செய்து முடிப்பதற்கு தென்னிந்திய சினிமாவும் சரி, தொலைக்காட்சி நாடகங்களும் சரி என்னபோடு போடுகின்றன. பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையாகத் தெரிந்தாலும் அவை எமது வாழ்க்கையில், எமது சமூகத்தில் எவ்வளவு தாக்கங்களை நிகழ்த்தி வருகின்றன என்பதை எண்ணிப்பார்த்தால் கல்யாணம் செய்து கொடுக்கும் பெற்றோருக்கு கதிகலங்கும். ஊரே அசந்துதான் போகும்.

இருமனம் இணைந்தால் திருமணம். பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகிற திருமண நடைமுறைகள் இரண்டு. ஒற்று கற்புமணம். மற்றது களவுமணம். இரண்டுமே சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். இந்த திருமணங்கள்கூட உற்றார் உறவினருக்கு திருமண விருந்தளிப்பதுடன், மாலை மாற்றியோ சோறு கொடுப்பித்தோதான் நிகழ்த்தப்பட்டன என சங்ககால இலக்கியங்கள் கூறும். அந்த வழியில் எனது திருமணமும் எனது சகோதரிகளின் திருமணமும் கூட தாலியும் இல்லாமல் மேளமுமில்லாமல் நடத்தப்பட்டவைதான். அதே வழியில் எனது சந்ததியினராக என் மக்களும் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், அந்த திருமண வைபவங்களுக்கான செலவை சொல்வதற்கே. எனது திருமணம் (1962) இருநூறு ரூபாய்கள் செலவிலும் என் அக்காவின் திருமணம் வீட்டிலே சாதாரணமாக சமைத்த உணவுடனும், (1970) என் தங்கையின் திருமணம் முன்னூற்றைம்பது ரூபாவுடனான பதிவுத்திருமணமாகவும் நடந்தேறியது. பதிவுத் திருமணத்துக்கான செலவே அப்போது பத்து ரூபாதான் இப்போது அது ஐயாயிரம் எனக் கேள்விப்படுகிறேன்.

கூடி வாழ்தல் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன் எழுதியிருந்தேன். போர் நடந்த காலத்தில் இந்த வகைத் திருமணங்களே அதிகமாக நடந்தேறின. பெற்றோர், உற்றோர் சம்மதத்துடனேயே இந்த வாழ்தலும் நடந்தது. காலப்போக்கில் குழந்தையும் கையுமாக பெண்கள் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றங்களுக்கு அலைந்தார்கள். காரணம் திருமணம் செய்தவர் என்பதை இயக்கத்துக்கு நிரூபிக்கவே இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. பற்றற்ற வாழ்க்கையை ஆரம்பித்து மனைவி கர்ப்பமான பிறகே அந்த மணமகனுக்கோ பெற்றவர்களுக்கோ சீதனம் தேவைப்பட்டது. ஆக மாப்பிளை பெண்ணை கைவிட்டுவிட்டு சென்றான். இவனுக்கு சீதனம் கொடுக்க வேண்டிய சொத்து எங்கோ கைவிடப்பட்டிருக்கும். அவன் ரொக்கமாக கேட்பான்.

பெண்ணைப் பெற்றவர்கள் அலைவார்கள். குடியிருக்கவே நிரந்தர வீடிருக்காது. அடிக்கடி இடப்பெயர்வுகளில் மாப்பிள்ளையை தேடுவதும், சட்ட நடவடிக்கை எடுப்பதும் முடியவே முடியாது. பெண் முல்லைத்தீவில் இருப்பாள், மாப்பிள்ளை சிலநாள் மன்னாரில் காணப்படுவான். சிலநாளில் மல்லாவியில் பார்த்ததாக ஒருவர் சொல்வார். சிலவேளை அவன் கிளிநொச்சியில் இருப்பான். இப்படி திரியும் அவனைத்தேட போக்குவரத்து வசதிகளும் இராது. கடினமான பயணக் கட்டணங்களை செலுத்தி ஒரிடத்துக்குப்போனாலும், அன்றைக்கே திரும்பவும் முடியாது. உதாரணமாக புதுக்குடியிருப்பிலிருந்து மல்லாவிக்கு போய்வர இரண்டு நாட்கள் தேவை.

திருமணமானவர்களை இயக்கத்தில் சேர்க்காத காலம் ஒன்றிருந்தது. போர் நெருக்கடி ஏற்பட்ட போதே திருமணம் செய்து கொள்பவர்கள் இயக்கத்திடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. திருமணப்பதிவாளர்கள் இயக்கத்தின் அனுமதிக் கடிதமில்லாமல் திருமணத்தை பதிவு செய்தல் தடை செய்யப்பட்டது.

அப்போதும் பலர் தாம் ஏற்கெனவே திருமணம் செய்து விட்டதாக கூறி குடும்பமாக இணைந்து வாழ்ந்தனர். இந்த தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்கள் மட்டுமே செய்தார்கள் என்றில்லை. இதேயளவு தன்னைக் காதலித்த கணவனை விட்டுவிட்டு வெளிநாட்டுத் தொடர்பிலுள்ள மாப்பிள்ளைகளை கண்டதும் அவனுக்குப்பின் ஓடிவிட்ட பெண்களும் இருந்தனர். இந்த நிலை புனர்வாழ்வு முகாம்களில் அடைபட்டுக்கிடந்த பல ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முள்வேலி முகாம்களுக்குள் செட்டிக்குளத்தில் வசிக்கும் போதே தனக்கும் தன்கணவனுக்கும் பிறந்த குழந்தைகளை கணவனின் தாயுடன் விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை தேடிய பெண்களும் உண்டு. அதேசமயம் சீதனம் கேட்டு கைவிட்ட மனைவிக்கு குழந்தை பிறந்ததும் ஓடிவந்து சேர்ந்து கொண்ட கணவன்களும் உண்டு.

பாருங்கள் ஒரு மனிதனும் மனுசியும் இணைவது சந்ததி விருத்திக்குத்தான் தலைமுறை வளரத்தான். மேற்குறித்த அனைத்திலும் அவர்களது சந்ததி உருவாகி வளர்ந்து இன்று நல்ல கல்வி கற்றோ அல்லது நல்ல தொழில்களிலோ இருப்பதை காண முடிகிறது. இதேயளவு சிக்கல்களை வேறு விதமாக சாதகம், சாதி, சீதனம் எல்லாம் கொடுத்து தீர்மானிக்கும் திருமணங்களிலும் சந்திக்கத்தான் செய்கிறார்கள். பல லட்சம் செலவிட்டு மண்டபங்களில் ஊரார் கூடி விருந்துண்டு ஆடல்பாடல்களுடன் அரங்கேறும் திருமணங்களிலும் பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது. ஆரவாரமாக ஊரார் போற்ற நடந்த பல கல்யாண ஜோடிகள் விவாகரத்துப் பெற்றுவிட்ட சம்பவங்களும் அதிகம்.

ஒரு தந்தை தன் காணியை விற்று கலாதியாக மகளுக்கு திருமணம் செய்தார். பென்னம் பெரிய கப்பல்போல ஒரு வீட்டைக்கட்டி மகளுக்கு சீதனமாக கொடுத்தார். அந்தப்பெண் தனக்கு குழந்தையே வேண்டாம் என்ற முடிவோடு இருந்தாள்.

கணவனுக்கோ குழந்தை வேண்டும். விளைவு விவாகரத்து. அவன் வேறொரு திருமணம் செய்து அவன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். முன்னவளோ, எதையும் சட்டைசெய்யாமல், ஆள் அம்பு சேனைகளுடன் பணத்தில் மிதக்கிறாள். அவளுடைய திருப்தி அவளுக்கு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதா என்ன?

Comments