ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“வீதியின்ட குறுக்கால வெட்டிக் கொண்டு எங்க ஓடுறனீ.”

“அடடே. எங்கட மாஸ்டரென்ன. எங்கட மாமிக்கு இன்சுலின் வாங்க பாமஸிக்கு போறனான்.”

“சாயங்காலம் வீட்டால வருவியோ?” 

“ஓமண்ண வருவனான்.”

“காலையில டுர் டி பிரான்ஸ் ரேஸ்காரன் மாதிரி வெட்டிக்கொண்டு போனனீ.”           

“டபள் பணிஸோ இல்லயண்ண இன்சுலின் வாங்கப் போனனான்.”

“டபள்பணிஸ் இல்லயப்பா டுர் டி பிரான்ஸ்.”

“உது என்ன சாமான்,”

“சாமான் இல்லயப்பா உது பிரான்ஸில நடக்கிற சைக்கிள் ரேஸ். நீ ரேஸ்காரன் மாதிரியல்லோ சைக்கிள் ஓட்டினனீ.”

“நானே? மகனின்ட சைக்கிள் அவன் ரேஸ் காரனில்லே சைக்கிளை அது மாதிரி வச்சிருந்தவன். அதுதான் ஒரு மிதி மிதிச்சனான். அதோட அவசரமா போகவேண்டிக்கிடந்ததென்ன.”

“உது சரி யாருக்கு இன்சுலின் வாங்கப் போனனீ.”

“எங்கட மாமி கொழும்பில இருந்து வந்து கிடக்கிறவை. உவவுக்கு அவசரமா இன்சுலின் தேவைப்பட்டுது. உதுக்குத்தான் அவசரமா தேவாவின்ட பாமஸிக்கு ஒருக்கா ஓடினனான்.”

“கிடைச்சுதோ?”

“நல்ல நேரத்துக்கு போனனான் ரெண்டு குப்பிதான் கிடந்துது. இல்லயென்டா யாழ்ப்பாணம் டவுனுக்குத்தான் போக வேண்டியிருந்திருக்கும்.”

“இப்போதைக்கு சரி. ஆனா இன்னும் ஏழெட்டு வருசத்தில இன்சுலின் கிடைக்குறது கஸ்டமாப் போடும்”

“என்ன சொல்லுறியள்.”

“நீரிழிவு நோய் உள்ளவைதான் இன்சுலின் பாவிப்பினம். உலகத்தில இப்ப 450 மில்லியன் நீரிழிவு வியாதிக்காரர் இருக்கினம். உதில அரைவாசிப்பேர் சீனாவிலயும் இந்தியாவிலயும் அமெரிக்காவிலயும் இருக்கினம். சரியா சொன்னமென்டா உலகத்தில உள்ளவையில 8.8 சத வீதம் பேர் நீரிழிவுக்காரர்கள். சரியே உந்த 450 மில்லியன் பேரில 80 மில்லியன் பேர் இன்சுலின் பாவிக்கிறவை.”

“உந்த இன்சுலின் என்டது?”

“நீரிழிவு நோயில ஒன்றாம் வகை இரண்டாம் வகை என்டு ரெண்டு கிடக்குது. உதில ஒன்றாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்குத்தான் இன்சுலின் தேவை. இரண்டாம் வகை நோயாளியளுக்கு முறையான சாப்பாடு தேகாப்பியாசம் மருந்து மாத்திரை மூலம் நீரிழிவை குணப்படுத்த முடியும். இரத்தத்தில சர்க்கரையின்ட அளவை கட்டுப்பாட்டில வச்சிருக்கிற அளவில இன்சுலினை கணையத்துக்கு சுரக்க முடியாமப் போட்டுதென்டா வேற வழியில்ல இன்சுலினை ஊசி மூலம் ஏத்த வேணும் கண்டியோ. அப்பிடி ஏத்தினமென்டா அது இரத்தத்தில உள்ள சீனியின்ட அளவை குறைக்கும். கணையத்தில இருந்து போதியளவு இன்சுலின் சுரக்கேல்லையென்டா இரத்தத்தில உள்ள சீனியின்ட அளவு அதிகரிக்கும். இதுவே நீரிழிவு நோய். இந்த நோய் வந்துதென்டா அதிகமா விடாய்க்கும். அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டியிருக்கும்.”

“எனக்கு வருமே?”

“உன்ட அப்பா அம்மாவுக்கு இருந்துதென்டா உனக்கும் வரும். உது பரம்பரையா வாற வியாதி கண்டியோ.”

“உங்களுக்கு இருக்கே?”

“உனக்கு தெரியுந்தான. எங்கட வீட்டில சாப்பாட்டில செல்லம் வலுக்கவனம். காலையில மாலையில நான் தேகாப்பியாசம் யோகா என்டு செய்றனான். சாப்பாட்டில கவனமும் உடற்பயிற்சியில அக்கறையும் இருந்துதென்டா நீரிழிவில இருந்து தப்பேலும்.”

“அண்ண உந்த இன்சுலினை எதில இருந்து செய்கினம்?”

“இன்சுலினையோ? உதை ஒரு வகை பக்டீரியாவில இருந்துதான் செய்கினம். உது இல்லயென்டா ஆக்கள் நிரம்ப கஸ்டப்படுவினம்.”

“உண்மைதானண்ண. எங்கயிருந்தாவது தேடிக்கொண்டு வா என்டல்லோ மாமி சொன்னவை. கொண்டு வந்தவுடன அவவுக்கு சந்தோசமென்டா. சொல்லி வேலையில்லயண்ண.”

“ ஆனா ஒன்டு தெரியுமோ? இன்சுலினுக்கு இப்ப தேவை அதிகரிச்சுக் கொண்டு போகுது. இன்னும் சில காலம்; போச்சுதென்டா இன்சுலின் விலையும் கூடிப் போவும் கிடைக்கிறதும் கஸ்டமாப் போடும்.”

“அப்ப என்னண்ண செய்யிறது?”

“இன்சுனிலயும் பல வகைகள் கிடக்குது. ஒரு நீரிழிவு நோயாளிக்கு எது சரியென்டதை டாக்டர்மார்;தான் தீர்மானிக்க வேணும். நீரிழிவு நோயாளியள் உலகம் முழுக்க இருக்கினம். ஆசியாவில அதிகமா இருக்கினம் என்டது சரிதான். ஆனா எல்லா இடத்திலயும் இருக்கிற நோயாளியளுக்கு தேவைப்படுறதால உதை பகிர்றது கொஞ்சம் வில்லங்கம்தான். போன கிழமை ஒரு பேப்பரில போட்டிருந்தவை.”

“என்ன போட்டுக் கிடந்தது.”

“பங்களாதேஸ், பிரேசில், மாலாவி, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆறு நாடுகளில இன்சுலின் சரியா கிடைக்கிறதில்லையென்டு தெரிய வந்துக்கிடக்குது. இன்னொன்டு உந்த நாடுகளில தலை நகரங்களிலதான் இன்சுலின் கிடைக்குது. வெளி இடங்களில சரியாக் கிடைக்குது இல்லயென்டு சொல்லுகினம்”

“உதுக்கு என்னண்ண செய்யுறது.”

“ஒன்டும் செய்ய இயலாது. நோய் வராம பாத்துக் கொள்ளுறதுதான் புத்திசாலித்தனம்.”

“சரியாச் சொன்னியள். வந்து கஸ்டப்படுறதை விட வராமக் காப்பதுதான் புத்திசாலித்தனம் என்ன?”

Comments