தொழிலாளர் தின வேதனத்தை கூறுபோட்டது சங்கங்களின் துரோகச் செயல் | தினகரன் வாரமஞ்சரி

தொழிலாளர் தின வேதனத்தை கூறுபோட்டது சங்கங்களின் துரோகச் செயல்

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் செய்யும் போராட்டம், தின வேதனம் என்ற போதா வருமானம், மாறாத தோட்ட வாழ்க்கை என்ற சூழலை விட்டு வெளி வருவதற்கு வெளிவாரி பயிர்ச்செய்கை ஒரு சரியான வழிமுறை என்று கருதுகிறீர்களா?

கூட்டு ஒப்பந்தமானது என்ன நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டதோ அதன் இலக்கை அடையமுடியாமல் போனமை துரதிர்ஷடவசமானது. கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்ட முகாமைத்துவம் வழங்கும் வேலை நாட்களில் 75 வீதத்திற்கு அதிகமான நாட்கள் வேலை செய்பவர்களுக்கு என்று ஒரு சம்பளமும், ஏனையோருக்கு மற்றுமொரு வகையான சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டமை தொழிலாளர்களுக்கு செய்த மாபெரும் துரோகச் செயலாகவே நான் பார்க்கிறேன். இதனூடாக தேயிலைத்தொழிலை தமது பிரதான தொழிலாகக் கொண்டிருப்பதால் அதில் ஒன்றிணைந்திருப்பதே நமது பலமாகும். அதுவே நமது கலாசாரம். தேயிலைத் தொழில் தமது மூச்சு என்றிருக்கும் தொழிலாளர்களை சிதைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாகவே இதனை நான் கருதுகிறேன்.

இந்த உடன்பாடு காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் குறைந்தபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பெருந்தோட்ட முகாமைகள் தோட்டங்களை நடத்துகின்றன. வறுமையிலேயே வாழ வேண்டும் என்ற நிலைக்கு தீர்மானிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து வெளியேறும் பொருட்டு வேறு வேலைகள் தேடி தோட்டங்களை விட்டு வெளியேற மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மலையகத்தில் நிலவும் சங்க அரசியல் குறுகிய வட்டத்தில் இயங்குகிறது என்றும் சமூகவியல், இலக்கியம், அறிவுசார் கண்ணோட்டம் அதில் இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக உங்கள் பார்வை என்ன?

தொழிற்சங்க அரசியல் மலையக மக்களின் வாழ்வியலில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. தொழிற் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக காணப்படுகின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் முறையான பாதுகாப்பை இன்றுவரை வழங்கி வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகளாகவும் வளர்ந்துள்ளன. இந்த கட்சிகள் இன்று பலமிக்க அரசியல் கட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளமைக்கு காரணமே தொழிற்சங்க அங்கத்துவம்தான். இலங்கையில் பல அரசியல் கட்சிகள் புதிதாகத் தோன்றி குறுகிய காலத்திற்குள் செயலிழந்து விடுகின்றன. ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரையில் தொழிற்சங்க பின்னணியுடன் வளர்ந்துள்ள அரசியல் கட்சிகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன. இத் தொழிற்சங்கங்கள், கல்விக் கருத்தரங்குகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நினைவு மலர்களை வெளியிடுவதனூடாக கணிசமான அளவு அறிவுசார் பங்களிப்பையும் தொடர்ந்தும் செயல்படுத்தி வருவதையும் மறுப்பதற்கில்லை.

மலையகத்தில் வெறுமனே கல்வி வளர்ச்சி மட்டும் சமூக எழுச்சியைக் கொண்டுவராது. இன்றைய கல்வி சிலபசை ஒப்புவித்து புள்ளிகள் பெற்றால் போதும் என்ற வட்டத்தில் தேங்கி நிற்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக ஸ்மார்ட் போன் வந்து நிற்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி சமூக சிந்தனை எழுச்சியை உருவாக்குவது எவ்வாறு என்பதை உங்கள் துறைசார்ந்து பதில் சொல்வீர்களா?

உண்மையில் மலையகப்பகுதியில் போதுமான வருமான வாய்ப்புகள் இல்லாத நிலையிலேயே நகர்ப்புறங்களை நாடுகின்றனர். தொழில் வாய்ப்புகளில் பெரும்பாலும் குறைந்த வருமானத்தையே பெறுபவர்களாக இருக்கின்றனர். நல்லதொரு சமூக வாழ்க்கையை அனுபவிப்பவர்களாக அவர்கள் இல்லை. அதிலும் மிக இலகுவாக, குறுகிய காலத்தில் மற்றுமொரு சமூக வாழ்க்கையை தமதாக்கி கொள்கின்றனர். இது உலகெங்கும் வாழ்கின்ற குடிபெயர்ந்து செல்லும் சமூகங்களில் காணப்படும் பிரத்தியேக அம்சமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் மக்கள் தாம் வாழ்கின்ற பிரதேசத்திலேயே தொழில்புரியக்கூடிய வாய்ப்புகளை விரிவாக்க வேண்டியதுடன் அவர்களின் அரசியல், சமூக விழுமியங்களை வளர்ச்சியடையச் செய்யும் நிறுவனங்களையும் ஸ்தாபிப்பதும் அவசியமாகும்.

தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்து வெளியேறியதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த தோட்ட முகாமை, தோட்ட வேலைகளை பெருமளவு தொழிலாளர்களைக் கொண்டுதான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மறந்தே செயல்பட்டனர். முகாமைத்துவத்தின் எதிர்பார்ப்பு தற்காலிக தொழிலாளர்களைக் கொண்டு அதாவது குறைந்த கூலியை வழங்கி தோட்ட வேலையில் பெருமளவு இலாபம் உழைக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் முகாமைத்துவம் எதிர்பார்ப்பதற்கு எதிர்மாறாக பெருமளவு தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் தோட்டத் தொழிலை குறைந்தபட்ச தொழிலாளர்களைக்கொண்டு நடத்துவதும் சவாலாகிவிட்டது.

அதுமட்டுமன்றி முகாமைத்துவம் தம்வசம் வழங்கிய தேயிலைக் காணிகளில் சுமார் 25 வீதமானவற்றை பயிர்ச்செய்கையிலிருந்து கைவிட்டனர். மற்றுமொரு 30 வீதமான தேயிலை காணிகள் மிகவும் பழைய சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் பயிரிடப்பட்டதாகவும் குறைந்த விளைவு தரும் பயிர்களாகவும் காணப்படுகின்றன. மிகுதி 45 வீதமான தேயிலைக்காணிகளே அதிக விளைச்சல் தரும் தேயிலைக் காணிகளாக காணப்படுகிறது. இதனூடாக தோட்ட நிர்வாகத்திடமிருந்து சம்பள அதிகரிப்பை கேட்பதற்கு பதிலாக தமது உற்பத்திக்கு ஏற்ற வருமானத்தை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது முகாமைத்துவத்தின் எதிர்பார்ப்பாகும்.

இந்த செயல்முறை பல தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனூடாக இம் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மாதாந்தம் சுமார் 6000 ரூபா முதல் 7500 ரூபா வரை வருமானம் கிடைக்கின்றது. தோட்டங்களில் வழங்கப்படும் வேலைக்கு மேலதிகமாக கிடைக்கப்பெறும் இவ்வருமானம் ஓரளவேணும் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் சூழலை உருவாக்கியிருப்பதாக கருதமுடிகிறது.

மேலும் வெளிவாரி முறையூடாக உண்மையில் தொழிலாளர்கள் தாம் பறித்தெடுக்கும் கொழுந்துக்கு சொந்தக்காரராக மாறுகின்றனர். இதுவரை காலமும் இவ்வாறான சூழல் அதாவது தொழில் உரிமை என்ற நிலை தோட்டங்களில் இல்லை. இது ஒருவகையில் தேயிலைச் செடியை சொந்தம் கொண்டாடக்கூடிய முதற்படியாகவே நான் கருதுகின்றேன். இதை பலப்படுத்துவதனூடாக தாம் சொந்தமாக தொழில்புரியும் சுயமரியாதையுடன் வாழும் தொழிலாளர்களாக மலையகத்தில் வாழலாம்.

அவ்வாறான தேயிலைச் செடிகளை பராமரிப்பதற்கு போதுமான தொழிலாளர்களை வைத்துக்கொள்ளவே தோட்ட முகாமைத்துவம் விரும்பியது. இருப்பினும் தமது எண்ணங்களுக்கு மாறாக தொழிலாளர்களின் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமே உயர்வு விளைவுதரும் தேயிலைச் செடிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு வருமானத்தை தோட்டங்களில் பெற்றுக்கொள்ள முடியாதுபோனமையேயாகும்.

இவ்வாறு ஒட்டுமொத்தமாக வெளியேறும் தொழிலாளர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதே இந்த வெளியார் உற்பத்தி முறையாகும். இதனூடாக தேயிலைச் செடிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அதனை பராமரிக்கும் உரிமையையும் தொழிலாளர்களுக்கு வழங்கி தேயிலைக் கொழுந்தை நிர்ணயிக்கப்பட்ட விலையில் தொழிலாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதே முகாமைத்துவத்தின் எண்ணமாகும். இதனூடாக முகாமைத்துவத்தால் பராமரிக்க முடியாதுபோன தேயிலைச் செடிகளை தொழிலாளர்கள் பராமரிக்கக்கூடியதாக காணப்பட்டமை முகாமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மலையக இளைய சமூகம்தான் இன்றைக்கும் கடைகளிலும், சிறு தொழிற் கூடாரங்களிலும் குறைந்த சம்பளம், குறைந்த வசதி என பாடுபட்டு வருகிறது. அடுத்த பக்கம் படித்த சமூகம் நகரங்களுக்கு வந்து தோட்ட சமூகத்துக்கும் தமக்கும் சம்பந்தமும் இல்லை என்கின்ற மாதிரி நடந்துகொள்கிறது. என்ன செய்யலாம் என நினைக்கிறீர்களா?

கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, சினிமா என்பன உலக சமூகத்தில் எவ்விதமான வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் சமூக கலாசார கட்டுப்பாடுகள் என்பனவற்றை மீறிய நிலையில் பெரும்பாலானவர்களிடம் நாளாந்த வாழ்க்கையில் அவசியமான விடயங்களை ஒன்றுகலந்து விட்டன.

Comments