கொழும்பு முகத்துவாரம் கற்கோயில் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு முகத்துவாரம் கற்கோயில்

இலங்கைக்கு வர்த்தக நோக்கத்துடன் வந்த ஆங்கிலேயருடன் அங்கிலிக்கன் திருச்சபையும் இலங்கைக்கு வந்தது. கிறிஸ்தவ மதத்தை பரப்பவந்தவர்கள் சமூக சேவைகளிலும் தங்களது கவனத்தை திருப்பி பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டனர். இவர்களினால் பல பாடசாலைகள் இலங்கையில் அமைக்கப்பட்டன. இப்பாடசாலை கல்வியூடாகவே கல்வி கற்ற சமுதாயமொன்று உருவாகவும், அதன் வழியே அரசியல் மறுமலர்ச்சி உருவாகவும் வழிவகுத்தது.

கொழும்புக்கு வருகை தந்தை அங்கிலிக்கன் மதகுருவும் முதலாவது கொழும்பு பேராயருமான ஜேம்ஸ் செப்மன் 1845 முதல் 1861 ஆம் ஆண்டுவரை சேவையாற்றினர். கொழும்பு, கொட்டாஞ்சேனையை தாண்டி முகத்துவாரத்துக்கு செல்லும் வழியில் கொழும்பு துறைமுகத்திற்கு எதிர்ப்புறமாக உள்ள மேட்டினில் கல்பள்ளிய அல்லது கல்கோவில் என்று அழைக்கப்படும் கிறிஸ்து நாதர் ஆலயம் இயற்கை எழிலுக்கு மத்தியில் கம்பீரமாக எழுந்து நிற்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

இவ்வாலயத்தை நாம் சுற்றிப் பார்த்தோம். பின்னர் இவ்வாலயத்தின் தலைமைப் போதகர் அருட்திரு ஜெயநாத் பண்டிதரட்னவுடன் உரையாடினோம். .

பேராயர் ஜேம்ஸ் செப்மன் 1851 ஆம் ஆண்டு ஆண்களுக்கான புனித தோமையர் (தோமஸ்) கல்லூரி முகத்துவார மேட்டில் நிறுவினார். அக்கல்லூரி நிறுவப்பட்ட தன் பின் பல மாணவர்களுக்கு கல்வி வசதி கிடைத்தது. மணிவிழாவினை கொண்டாடி 67 வருடங்கள் பெயரும் புகழுடனும் இயங்கியது. இக்கல்லூரி கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இயங்கியதினால் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் புகை, நிலக்கரி தூசு காரணமாக மாணவர்கள் தொய்வு (ஆஸ்மா) நோயினால் பாதிக்கப்பட்டனர். எனவே இக்கல்லூரி 1918 ஆம் ஆண்டு கல்கிசைக்கு மாற்றப்பட்டது. இன்று புகழுடனும் இயங்கும் கல்கிசை புனித தோமையாரின் புகழ் இந்த ஆலய வளவிலிருந்தே சுடர் விட்டது என்பது பலரும் அறியமாட்டார்கள். இன்று கல்கிசை புனித தோமையார் கல்லூரியின் வருடாந்த கிரிக்ெகட் போட்டிக்கு முன்னதாக இந்த ஆலயத்துக்கு வருகை தருவதும் நினைவு கூறுவது இன்றும் கடைபிடிக்கப்படும் மரபாகும்.

இப்பகுதியில் கதிட்ரல் ஆண்கள் பாடசாலை மற்றும் பெண்கள் பாடசாலையும் இருந்ததை திருச்சபையின் போதகர் மேலும் சுட்டிக்காட்டினார். இப்பெண்கள் பாடசாலை இவ்விடத்தில்லாவிட்டாலும் சென். ஜேம்ஸ் பாடசாலை கொட்டாஞ்சேனை பகுதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். இதனால் இவ்வாலயத்திற்கு அருகிலுள்ள வீதிக்கு கோலேஜ் ஸ்ட்ரீட் என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கொழும்பு ஆயர் ஜேம்ஸ் செப்மன், தேவ மகிமைக்காக ஒரு ஆலயத்தை அமைப்பதற்காக இம்மேட்டு நிலப்பகுதியில், அவரின் எண்ணத்திற்கும் வடிவமைப்புக்கும் ஏற்றவிதமாக 1850 ஆலயத்திற்கான அத்திவாரகல் இடப்பட்டது.

இவ்வாலயத்தின் கூரை மிக உயரமாகவும் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் கட்டிட நிர்மாணம் வேலையும் மிகவும் நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயமே முதலாவது பேராலயமாக 'கிறிஸ்து நாதர்' ஆலயம் என்ற பெயருடன் 1854 ஆம் ஆண்டு விசுவாசிகளின் பாவனைக்கு திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வாலயத்தில் ஐந்து ஆங்கில ஆராதனையும் ஒரு சிங்கள ஆராதனையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழ்நிலையில் இவ்வாலயத்திற்கு வருகை தரும் விசுவாசிகள் இடம்மாறி வேறு அங்கிலிக்கன் திருச்சபைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் இவ்வாலயத்திலிருந்து பார்த்தால் முழுமையான துறைமுகத்தினையும் பார்க்கலாம். ஆனால் துறைமுகம் தெரிந்தாலும் துறைமுகத்திலுள்ள கட்டடங்கள் மறைக்கின்றன.

இப்பேராலயத்தில் சுமார் பத்து பேராயர்கள் பணியாற்றியுள்ளனர். 1973 ஆம் ஆண்டு முதல் கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமே பேராலயமாகக் கருதப்படுகிறது. கிரைஸ்ட் ஆலயம் என்று மட்டுமே தற்போது இவ்வாலயம் அழைக்கப்படுகிறது.

இவ்வாலயத்தில் முதலாவது பேராயருக்கு கொடுக்கப்பட்ட ஞாபகார்த்த சின்னம், ப​ைழமை வாய்ந்த ஞானஸ்ஞானத் தொட்டில் உட்பட 1904 - 1908ஆம், ஆண்டுகள் அச்சிடப்பட்ட இரு ஆங்கில வேதாகமங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

காலை 6 மணி, நண்பகல் 12 மணி மாலை 6 மணிக்கு இவ்வாலயத்தின் மணி ஒலிக்கச் செய்யப்படுகிறது. இப்பகுதி வாழ் மக்கள் இதை ஒரு மரபு சார்ந்த விடயமாகக் கருதுகிறார்கள். இம்மணி இருக்கும் இடத்திற்கு நாம் செங்குத்தாக படிகளில் ஏறி சென்று பார்வையிட்டோம். அங்கு இரண்டு பெரிய மணிகள் பொருத்தப்பட்டிக்கின்றன. இவ்வாலயத்தின் பாடகர் குழுவுக்கான இடம் மேல் மாடியில் அமைந்திருந்தாலும், இதற்கு செல்லும் படிப்பாதையும் மிகவும் ஒடுக்கமானது. 2012 இல் இவ்வாலயத்திற்கான ஒரு நினைவு தபாலுறையும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தில் மிகவும் பழைமை வாய்ந்த கதிரைகள் மற்றும் வாங்குகள் காணப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஞாபகார்த்த சின்னங்களும் காணப்படுகின்றன. இவ்வாலயத்தில் பலிபீடத்திற்கு பிரிதாக ஜெபம் செய்வதற்கென்று தனியான ஒரு பகுதியும் காணப்படுகிறது. இவ்வாலத்தின் குருவானவரான அருட்திரு. ஜெயாநாத் பண்டிதரட்ன தற்போது திருச்சபையின் தலைமை போதகராக பணியாற்றி வருகின்றார்.

இச்சபையின் கட்டடத்தை பாதுகாப்பது போல் இவ்வாலயத்திலுள்ள அனைத்து பொருட்களையும் பாதுகாத்து வருகிறார்கள். இவ்வாலயத்திற்கான வளவும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகிறது.

 

Comments