பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம் | தினகரன் வாரமஞ்சரி

பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள பால்மா விவகாரம்

(எம்.ஏ.எம். நிலாம்)  

இறக்குமதி செய்யப்படும் பால்மா விடயத்தில் கடந்த சிலவாரங்களாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிரதியமைச்சர் புத்திக பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக இவ்விவகாரம் நாட்டில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது.  

நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவது பால்மா அல்லவெனவும் அவை பாம் எண்ணெய், லக்டோஸ் கலவை என்று தெரிவித்திருக்கும் பிரதியமைச்சர் புத்திக பத்திரண அவற்றில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக தமக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.  

பிரதியமைச்சரின் கூற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை அவர் இன்றுவரை முன்வைக்கத்தவறியுள்ளார்.

தொடர்ந்து ஆரம்பத்தில் கூறியதையே கூறிவருகின்றார். இதன் பின்னணி என்னவென்பதை கண்டறிய வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்து காரணமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரதியமைச்சரின் கூற்று பெரும் சர்ச்சையையும், பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பாக முழுவிபரங்களை அறிந்து கொள்வதற்கு பிரதியமைச்சருடன் தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்தபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்த பால்மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் பொன்டேராவுடன் தொடர்பு கொண்டபோது மேற்கண்ட குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அந் நிறுவனம். இது தொடர்பில் விளக்கமளித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கைகள் குறித்து நாம் கரிசனை செலுத்தியிருந்தோம். இந்த அறிக்கைகளில் வெளியாகியிருந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் விநியோகிக்கும் பாற் பொருட்கள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்வதுடன், குறித்த தயாரிப்புகளின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்களை மாத்திரமே அவை கொண்டுள்ளன என்பதையும் உறுதி செய்கிறோம். எமது பால் மா தயாரிப்புகள் உயர் சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தர நியமங்களை பூர்த்தி செய்வதுடன், அவற்றின் தரம் நியுஸிலாந்து மற்றும் இலங்கை அரசாங்கங்களினால் சுயாதீனமான முறையில் பரிசோதிக்கப்படுகின்றன. 

எமது தயாரிப்புகளில் குற்றம் சுமத்தப்பட்ட பன்றிக் கொழுப்பு அல்லது பாம் எண்ணெய் சேர்மானங்கள் எதுவும் காணப்படுவதில்லை.

இலங்கையில் அணு சக்தி அதிகார சபை (AEA) தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI), சுகாதார விஞ்ஞான தேசிய நிறுவனம் (NIHS) மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) ஆகியன சுயாதீனமான பரிசோதனைகளை நாம் இறக்குமதி செய்யும் பால் மாவில் மேற்கொள்கின்றன.

எனவே, எமது இறக்குமதிகள் கடுமையான இறக்குமதி சுங்க விதிமுறைகளை பின்பற்றியே நாட்டினுள் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை குறித்த அமைப்புகள் கடுமையாக கண்காணிக்கின்றன. 

உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் எனும் வகையில், பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியன தொடர்பில் நாம் பிரதானமாக கவனம் செலுத்துவதுடன், சுமார் 40வருடங்களுக்கு மேலாக இலங்கையின் நுகர்வோருக்கு உயர்தரமான மற்றும் பாதுகாப்பான பாற் போஷாக்கை நாம் வழங்கி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்திலிருந்து கொண்டு வரப்படும் பால்மா சுமார் 6.6மில்லியனுக்கும் அதிகமான கடுமையான தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நியூசிலாந்து அரசாங்கத்தின் பிரதான தொழிற் துறைகள் அமைச்சினால் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. 

இலங்கையின் நுகர்வோருக்கான எமது அர்ப்பணிப்பை நாம் தொடர்ந்து உறுதி செய்வதுடன், பரந்தளவில் பாற்பண்ணையாளர்களுக்கும், உள்நாட்டு வியாபார சமூகத்துக்கும் தெரிவிக்கிறோம். பொன்டேரா பிரான்ட்ஸ் ஸ்ரீலங்கா, உறுதியான கூட்டாண்மை மேலாண்மை கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், நாட்டில் அமுலிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கமைய எப்போதும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது எனத் தெரிவித்துள்ளது.  

இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு நாம் இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்புகொண்டோம். இப்பேரவையில்உள்ள ஷரீஆ பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன் விளக்கங்களை வழங்கினார். 

பிரதியமைச்சரின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நியூசிலாந்திலிருந்து தருவிக்கப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு இல்லை.

உலகில் உள்ள 300அளவிலான ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்களில் 80அளவிலான நிறுவனங்களையே நாம் அங்கீகரித்துள்ளோம். அந்த 80இற்குள் வருகின்ற, நியூசிலாந்து ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்கள் இப்பால்மா ஹலால் என்று தரச்சான்றிதழ் வழங்கியிருக்கின்றன என தெரிவித்தார்.  

இப்பால்மாவுக்கு நியூசிலாந்து ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு ஹலால் சான்றிதழ் வழங்குகின்றன என்று அவரிடம் வினவினோம். அவர் பின்வருமாறு விளக்கினார். 

ஒரு பொருளை பரிசோதனை செய்வதற்கான இரண்டு வழி முறைகள் இருக்கின்றன. ஒன்று, அப்பொருள் தயாரிக்கப்படும் உற்பத்திசாலைக்கு சென்று, அங்கு பயன்படுத்தப்படும் உற்பத்திப் பொருட்களை பரிசோதனை செய்தல். இரண்டாவது தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும் பொருளை எடுத்து பரிசோதனை செய்தல். இவற்றில் முதலாவது வகையே மிகவும் பாதுகாப்பானதாகும். 

ஏனெனில், ஒரு பொருள் நுகர்வுக்குத் தயாரான நிலையில் சந்தைக்கு வரும்போது, அதனைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்திய சில உதவிப் பொருட்கள் மறைந்து போயிருக்கும். உதாரணமாக, நாம் ரொட்டி சுடுவதாக வைத்துக்கொள்வோம். ரொட்டி சுடும்போது நாம் எண்ணெய் தடவுவோம் அல்லவா. ஆனால், சுட்டு முடித்து உணவுக்குத் தயாராக இருக்கும் ரொட்டியில் எண்ணெய்யைக் காண முடியாது. 

இவ்வாறுதான் உற்பத்திசாலைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது, சில உதவிப் பொருட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமாயின், உற்பத்திசாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டுதான் பரிசோதனை செய்ய வேண்டும். அதுதான் மிகவும் பாதுகாப்பானதும், நம்பகத்தன்மையானதுமான பரிசோதனையாக அமையும். 

எனவே, நியூசிலாந்தில் இருக்கும் ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்கள் இவ்வாறான பரிசோதனைகளையே மேற்கொள்கின்றன. அந்நிறுவனங்கள் அங்கீகரித்து, ஹலால் தரச் சான்றிதழ் வழங்கிய உற்பத்திகளுக்கு, நாமும் ஹலால் சான்றிதழ் வழங்குகின்றோம். இது தான் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.” 

“நீங்கள் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும்போது சார்ந்திருக்கும் ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்கள், தவறியேனும் அல்லது மோசடியில் ஈடுபட்டு ஹராமான பொருட்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கியிருந்தால், நீங்களும் அறியாமலேயே அவற்றை ஹலால் என்று சான்றிதழ் வழங்கும் வாய்ப்பு இருக்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் இலங்கையில் இப்பொருட்களை பயன்படுத்தும் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவார்கள் அல்லவா? எனக் கேட்டபோது. 

“இந்த நிறுவனங்களை நாம் அங்கீகரிக்கும்போது, அந்நிறுவனங்கள் கொண்டிருக்கின்ற ஷரீஆ கண்காணிப்பு குழு, தொழில்நுட்ப குழு என்பன குறித்து மிகவும் கவனமாகப் பார்ப்போம். எமது அவதானத்தின்படி அவர்கள் தகைமை கொண்டவர்களாக இருந்தால் தான் நாம் அவர்களை அங்கீகரிப்போம். 

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களினாலேயே நியூசிலாந்திலிருந்து வரும் பால்மாக்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. எனவே, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது.” 

“மிகவும் தரமான முறையில் பரிசோதனை செய்த பின்னர், தான் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  எனவே, இந்த விவகாரம் குறித்து குழம்ப வேண்டிய அவசியமில்லை.

அத்தோடு, மக்களை பீதியடையச் செய்யும் வகையில், சமூக ஊடகங்களில் ஓடியோக்களை பதிவு செய்து அனுப்பும் வேலைகளிலிருந்து தவிர்ந்துகொள்வோம். ஹலால் சான்றிதழ் குறித்த தெளிவுகள் வேண்டுமாயின், ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்புகொள்ளலாம்.” என்று குறிப்பிட்டார்.   

Comments