உருக்குலைக்கும் தொழிற்துறை | தினகரன் வாரமஞ்சரி

உருக்குலைக்கும் தொழிற்துறை

மலையகத்தில் வாழும் பெண்கள் குறிப்பாக பெருந்தோட்ட தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பல தசாப்தகாலமாக மறுக்கப்பட்டும் தட்டிக்கழிக்கப்பட்டும் வந்ததே நாம் கண்ட வரலாறாகும். இலங்கை பெண்களின் கடின உழைப்பாளிகளாக கருதப்படும் பெருந்தோட்ட பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. இவ் ஊதியத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு இவர்களுக்கு தொழில் பாதுகாப்பு உள்ளதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம். தொழில்துறை பாதுகாப்பு இன்மையால் இப்பெண்கள் தினமும் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்தவர்களாக வாழ்கிறார்கள். வேலை பளுவுடன் குடும்ப சுமையும் இவர்களை முழுமையாக முடக்கி வைத்துள்ளது. இதனால் இளமையில் முதுமை தோற்றத்தை அடையும் இப்பெண்கள் திருமண பந்தத்தில் இணையும் வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி ஒரு சமுகப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

கொழுந்துப் பறிக்கும் பெண்கள் இன்னும் கூடை, உர பேக் (பை) என்பவற்றை பட்டிகளில் மாட்டி தலையில் சுமந்து கொழுந்து பறிக்கின்றனர். இவற்றை தலையில் சுமந்து கொண்டு தேயிலை மலைகளில் ஒரு நாளைக்கு பல மைல் தூரங்களை கடந்து சென்று கொழுந்து பறிக்கின்றனர். இதன் காரணமாக அவர்களது இரத்த அழுத்தம், குருதிச் சுற்றோட்டம் என்பன பாதிக்கப்பட்டு இளம் வயதிலேேய முதுமை கோலத்துடன் நோய்களுக்குட்பட்டு காட்சியளிக்கின்றனர். அத்தோடு இப் பெண்கள் போஷாக்கான உணவுகளை உட்கொள்ள கூடிய வருவாயும் குறைவாகவே இருக்கிறது. இந் நிலையில் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய கொழுந்தின் அளவும், சுமையும் இவர்களை ஒவ்வொரு நாளும் மன உளைச்சளுக்கு உள்ளாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் மலையக இளைஞர்கள் வெளி இடங்களில் வேலைக்குச் சென்று தமது பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு நகர் புறங்களிலேயே திருமணம் செய்துகொண்டு மலையகப் பெண்களை திருமணம் செய்வதை புறக்கணிக்கின்றனர். மலையகப் பெண்கள் பல்வேறு தொழில் துறைகளுக்கு சென்றிருந்தாலும் அநேகமான பெண்கள் வர்த்தக நிலையங்களிலும், தோட்டங்களிலும் தொழிலாளர்களாக உள்ளனர்.

இவர்கள் தினமும் 8 மணித்தியாலயத்திற்கு மேல் உழைத்து அதிக களைப்புடன் தனது குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றி அன்றாட வாழ்க்கையை இயந்திர மயமாக கழித்து வருகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் சோர்வடைந்து விரக்தியுடன் காணப்படுகின்றனர். இவர்களின் கல்வி நிலையின் வீழ்ச்சியும் இவ்வாறான தொடர் புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் மறைமுக காரணிகளாக கருதப்பட்டாலும் இப் பெண்களின் உரிமைகளுக்காக போராடபெண்கள் அமைப்புகள் முனைப்பு காட்ட வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல் பிரமுகர்கள் தோட்ட நிர்வாகத்திற்கும், அரசாங்கத்திற்கும் உரிய அழுத்தத்தைக் கொடுத்து பாதுகாப்பான உடைகள், தொழில் உபகரணங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களுக்குரிய களம் என்பவற்றை தோட்டவாரியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments