தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் | தினகரன் வாரமஞ்சரி

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் நாடறிந்த ஒரு பிரபல்யமான நகைச்சுவை நடிகர் என்பது அனைவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக இலங்கைவாழ் தமிழ் ரசிகப் பெருமக்களால் பெரிதும் நேசிக்கப்படும் ஒருவர் .

திரையுலகில் அவரை நகைச்சுவைப் பாத்திரமாகவே ரசிகர்கள் அன்றிலிருந்து இன்றுவரை நேசிகின்றனர். இவரது திரைப்பட நடிப்புக் காட்சிகளை நாம் பார்க்கின்றபொழுது மக்களது இறை வழிபாடு அவர்களது இயல்புநிலை வாழ்க்கை முறைகளில் அவர்கள் கடைப்பிடிக்கும் மூட நம்பிக்கைகளை களைந்தெறியும் எண்ணக்கரு கொண்ட உரையாடல்கள் மூலமாகவும் நடிப்புத்திறமையினாலும் வெளிப்படுத்தி மக்கள் உள்ளங்களைக் கவர்ந்த மாபெரும் நகைச்சுவை நடிகர்.

இப்பேர்பட்ட ஒரு நடிப்புத்துறை சார்ந்த கலைஞன் இலங்கைக்கு அதிலும் குறிப்பாக மட்டுநகருக்கு வருகை தந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என்பதை சுட்டிக்காட்டும் அதே சமயம், ஏற்பாட்டாளர்களது ஒருங்கிணைக்கும் தன்மையும் வெளிப்படத் தன்மையும் காணப்படாததினால் சில கசப்பான நிகழ்வுகளும் அரங்கேறியதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக இருக்கும்

பத்மஸ்ரீ விவேக், முதன்முறையாக மட்டக்களப்பிற்கு வருகை தந்ததினால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்ததெனக் குறிப்பிடலாம். பல கோடி ரசிகப் பெருமக்களை நகைச்சுவை கலந்த பாணியில் கவர்ந்திழுக்கும் ஒரு மக்கள் கலைஞனை பூட்டிய அறைக்குள் வைத்து கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் நிகழ்வுகளை நடத்த முனைந்தமை வேதனைக்குரிய விடயமாகும். இந்த நடவடிக்கை ஊடக செயற்பாட்டிற்கு புறம்பானதொரு விடயமாகும்.

பிரபல்யமானவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தருகின்ற பொழுது அதனை ஏற்பாடு செய்பவர்கள் இவர்கள் வருகை தந்தமைக்கான காரணங்களை ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பத்திரிகை மாநாடு ஒன்றினை நடத்தி அதுதொடர்பாக ஊடக கருத்தினை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டினைச் செய்வதுதான் வழக்கம். இது இயல்பாகவே நடைபெறுவதுண்டு.

இதற்கு எதிர்மறையாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் நடந்துகொண்டமை ஊடக சுதந்திரத்தினை புரிந்துகொள்ளாமையே என எண்ணத்தோன்றுகிறது. நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக், சுவாமி விவேகானந்தரின் 125 ஆவது ஞாபகார்த்த தினத்தையொட்டி, சுவாமியின் சிகாகோ உரையின் சிறப்பம்சத்தினை சிறப்புச் சொற்பொழிவாக ஆற்றுவதற்கு இராமகிருஷ்ண மிஷன் அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்தார். எனினும், இது தொடர்பாக அறிவதற்கும் அவரை பேட்டி எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கு உரிமை உண்டு என்பதனை அவர் புரிந்திருக்கவில்லை. விவேக் அவர்களை சந்தித்து செவ்வி எடுப்பதற்கும் அவர்களைக் காண்பதற்கும் விவேக் இலங்கைக்கு வருவதற்கு முன்னராகவே சுவாமிகளிடம் அனுமதி கேட்டதற்கு சுவாமிகளினால் கூறப்பட்ட கருத்தினையும் இவ்விடத்தில் கூறுவது பொருத்தம். நடிகர் விவேக், ஒரு நடிகராக இங்கு வரவில்லை. ஆன்மீகப் பயணமாகவே வந்திருக்கிறார். அவர் விளம்பரம் எதையுமே விரும்பாதவர். அரசியல்கூட இந்நிகழ்வுகளில் கலக்கக்கூடாது. எனவே அவரைச் சந்திப்பதற்கு அனுமதிக்க முடியாது. நீங்கள் பொதுவாகவே நிகழ்வு ஆரம்பிக்கும்போது கூட்டத்தோடு கூட்டமாக நின்று படமெடுத்துக்கொள்ளுங்கள். அந்த இடத்தில் வேண்டுமென்றால் பேட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும் குறிப்பிட்ட நேரம் நடக்கமுடியாததொன்றினை அவர் கூறியது, செவ்வி காண்பது என்பது அவருக்கு புரிந்திருக்கவில்லை. சுவாமிகளிடத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாதுதானே. அதுமாத்திரமின்றி அரசியல் கலக்கக்கூடாது என நாசுக்காக கூறிய சுவாமி பல அரசியல்வாதிகளை மேடைக்கு அழைத்தே இந்நிகழ்வுகளை நடாத்தியமை அவரது முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைக்கு சான்றாகும்.

இராமகிருஷ்ண மிஷனுக்கு விவேக் வந்தபோது ஊடகவியலாளர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை நெருங்க எத்தனித்தபோது, விவேக்கிடம் என்னகேள்வி கேட்கப்போகின்றீர்கள் என என்னிடம் கூறுங்கள், என ஊடகவியலாளர்களிடம் கூறியமை ஊடகவியலாளர்களுக்குக் கடிவாளமிடும் செயலாகவே பார்க்க முடிகிறது.

கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகளை ஒரு இறை தொண்டராகப் பார்க்கின்ற அதேசமயம், அவர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பதனையே சகலரும் விரும்புவார்கள். அவர் ஏன் இவ்வாறு நடந்துகொண்டார் என்பதற்கு விடைகாண முடியவில்லை.

சிகாகோ உரையினைக் கேட்க வந்தவர்களை விட விவேக்ைகப் பார்க்க வந்தவர்களும் அவருடன் செல்பி எடுக்க வந்த ரசிகர்கள் கூட்டமுமே அதிகம். இதற்கு எடுத்துக்காட்டாக மட் /சிவானந்தா விளையாட்டரங்கில் விவேக், உரைநிகழ்த்தி முடிந்ததும் மேடையை விட்டுக் கீழ் இறங்கியதும் ரசிகர்கள் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த முடியாமல், நகைச்சுவை நடிகர் நெரிசலில் சிக்குண்டு தள்ளப்பட்டமை அனைவரையும் வருந்த வைத்த ஒரு விடயமாகும். சுவாமி சினிமாத்துறை சார்ந்து சுவாரஸ்சியமாக சமயக்கொள்கைகளை மக்கள் மனத்தில் பதியவைப்பதற்காக முனைந்தால், அது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது சந்தேகமே!

மக்கள் உள்ளார்ந்த ரீதியாக மனமாற்றமடைந்து இறைவனை நேசிக்க வேண்டும். இதனைத்தான் தேனகத்தில் வாழ்ந்த மாமனிதர் சுவாமி விபுலானந்த அடிகளார் வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல; உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்றுரைத்தரர்கள்.

இப்பேர்பட்ட சுவாமிகளின் சமாதி இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் இருந்தும்கூட அவரது சமாதிக்கு அன்றயதினம் நடிகர் விவேக் அவர்களினால் மரியாதை செலுத்துவதற்கு தவறியமை, சுவாமிகளின் சிந்தனைக்கு எட்டாத ஒரு விடயம். அடிகளாரின் நினைவு வருகின்ற இம்மாதத்தில் அதனை நிறைவேற்றியிருந்தால் சிறப்பம்சமாக இருந்திருக்குமல்லவா!

இது தவிரவும், மட்டக்களப்பு மாநகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் சுவாமி அவர்களும் நடிகர் விவேக் அவர்களும் மற்றும் அரச அதிபர், மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் என உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட நிகழ்வில், நகைச்சுவை நடிகர் விவேக் காந்திப் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி அடிகளாருக்கு மலர்மாலை அணிவித்து மரக்கன்று ஒன்றினையும் நட்டுவைத்தார். அதனைத்தொடர்ந்து மாநகர சபைக்கு நடைபவனியில் சென்றிருந்த சமயம், நீரூற்றுப்பூங்காவில் தென்பட்ட சுவாமி விபுலானந்தர் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் வேதனை தரும் விடயம் என்னவென்றால், சுவாமிகளின் திருவுருவச் சிலையின் பாதங்களுக்கே விவேக் மாலை அணிவித்தமை மாநகர வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பதுடன், சுவாமிகளின் உருவச்சிலையின் மேற்பகுதி காக்கைகளின் எச்சங்களினால் மாசுபடுத்தப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது. எனவே, இது திடீரென ஏற்படுத்தப்படததொரு நிகழ்வென்பது வெளிப்படை. அதிலும் இந்நிகழ்வினை ஏற்பாடுசெய்வதற்கு மூலகாரணமாக இருந்த மாநகர சபை உத்தியோகத்தர் ஒருவரை நடிகர் விவேக் அவர்கள் சதி செய்து விட்டார்கள்.

எனவே, குறிப்பிட்ட நபரை சதிக்குமார் என நகைச்சுவையாக கூறியதாகவும் இருக்கின்றது. இதிலிருந்து அவருக்கு உடன்பாடில்லாத ஒரு நிகழ்வாகவும் இது இருந்திருக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக், சுவாமி விவேகானந்தரின் 125 வது நினைவு தினத்தினையொட்டி, சிகாகோ பிரசங்கத்தின் தொனிப்பொருளாக சிறப்புரை ஆற்ற வந்தது தொடர்பாகவும் அவரது ஆன்மிகப் பிரவேசம் மற்றும் அவரது எதிர்கால சமயப்பணி என்ன என்பது தொடர்பான கேள்விகளை கேட்டறிந்து கொள்வதற்கும் அதனை வெளிப்படுத்தவும் ஊடகவியலாளர்களுக்கு பொருத்தமான நேரம் ஒதுக்கித்தர சுவாமிகள் மறுத்தமை மனதுக்கு வேதனையளிக்கும் ஒரு விடயமாகும். ஒட்டுமொத்தத்தில், நடிகர் விவேக்கின் மட்டுநகர் விஜயம் சினிமாத்துறை சார்ந்த ரசிகர்களை அவரால் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

Comments