அரச மருத்துவத்துறையின் பலவீனங்களும் பாராமுகங்களும் | தினகரன் வாரமஞ்சரி

அரச மருத்துவத்துறையின் பலவீனங்களும் பாராமுகங்களும்

“இலவச மருத்துவ சேவையை வழங்குவதில் இலங்கை மிகச் சிறந்த இடத்தில் உள்ளது” என்று அண்மையில் குறிப்பிட்டிருக்கிறார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.  

அமைச்சர் சொல்வதைப்போல இலவசக் கல்வி, இலவச மருத்துவ சேவை போன்றவற்றை வழங்குவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பது உண்மையே.  

ஆனால் அவர் பெருமையாகக் குறிப்பிடும் அளவுக்கு இலங்கையின் மருத்துவத்துறையின் இலவசப் பங்களிப்பும்  இல்லை, சேவைகளும் இல்லை  என்பதே உண்மை.  

இதற்கு ஏராளம் உதாரணங்களையும் சாட்சியங்களையும் முன்வைக்க முடியும்.  

ஆண்டுதோறும் மருத்துவத்துறைக்காக குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது தனிநபர் வருமானத்தில் நான்கு வீதம் மருத்துவத்துறைக்காக செலவழிக்கப்படுகிறது.  

ஆனால் இலங்கையின் பாதுகாப்புத்துறைக்கான (யுத்தம் முடிந்த பிறகும் கூட) நிதி ஒதுக்கீடு, பாராளுமன்றச் செலவீனம், ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இந்த நிதி மிகச்சிறிய அளவானதே என்று தெரியும்.  

இந்த நிதியிலும் மக்களுக்கான மருத்துவ சேவைக்குரிய நிதி மற்றும் சலுகைகளுக்கு வழங்கப்படுவதை விட  மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நிதி என்பது விகிதாசாரத்தில் அதிகமானது.  

ஆகவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் மக்களுக்கான மருத்துவ சேவைக்குரிய நிதி ஒதுக்கீடு குறைந்தளவானதே. இதை விட மருத்துவத்துறையில் நடக்கின்ற “நிழலாட்டங்கள் உண்டாக்கும் பாதிப்பு மிக அதிகமாகும். இதனால்,  அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டுடன் மட்டும் நிற்காமல் இந்த நிழலாட்டங்கள் குறித்தும் கவனமெடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவரைவுகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான மருத்துவ சேவை சிறப்பானதாக அமையும். இல்லையென்றால் ஓட்டைப் பாத்திரத்தில் விடப்பட்ட நீரின் கதையாகவே எல்லாம் முடியும். இன்றைய நிலை ஏறக்குறைய அப்படியானதாகவே உள்ளது.  

வெளித்தோற்றத்தில் அரசாங்கம் உருவாக்கியிருக்கும் மருத்துவ நலத்திட்டங்களும் சேவை அமைப்பும் வரவேற்கக் கூடியனவே. நாடு முழுவதிலுமுள்ள அரச மருத்துவமனைகள் ஓரளவு குறிப்பிடத்தக்க மருத்துவ சேவையை சிறப்பாக வழங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளிலிருந்து மருத்துவ சேவைக்குரிய நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு எட்டு மணிவரையிலும் வெளிநோயாளர் பிரிவுகள் இயங்குகின்றன. விடுமுறை நாட்களிலும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற முடியும். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவையே. 

கூடவே, 48வகையான மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி 72வீதமான மருந்துப் பொருட்களுக்கு விலைக்குறைப்புக் கிடைக்கலாம்.  

இதைவிட புற்றுநோய்க்கான மருந்துக்காக செலவீனம் ஒரு நோயாளிக்கு  ஒன்றரை லட்சம் வரை என முன்பு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டு, சிகிச்சை குணமடையும் வரை, தேவையான மருந்துகளைப் பயன்படுத்த முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறே இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்புக்கான மாற்றுச் சுவாசக் குழாய்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. கண் சிகிச்சைக்கான வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்புரைச் சிகிச்சை மற்றும் கண் வில்லை பொருத்துவது போன்றவற்றையெல்லாம் இலவசமாகச் செய்து கொள்ள முடியும்.  

குடல் இறக்கத்துக்கான சிகிச்சையினையும் இவ்வாறு இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளுண்டு.   

இதெல்லாம் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் என்பது உண்மையே. ஆனால் இவற்றைப் பெற்றுக்கொள்வது என்பதில்தான் சிக்கலே இருக்கிறது.  இலவசம் என்பதற்காக இவையெல்லாம் இலகுவாகக் கிடைத்து விடும் என்றில்லை. உண்மையைச் சொல்லப்போனால் இவற்றில் பலவும் திட்டங்கள், அறிவிப்புகள் என்ற அளவில்தான் இருக்கின்றன. அதாவது நோயாளிகளுக்கு எட்டாக்கனிகளாக.  

இங்கேதான் உள்ளது மருத்துவத்துறையின் உச்சக் குறைபாடுகளும் நிழலாட்டங்களும். இந்த நிழலாட்டங்கள் மிகப் பயங்கரமானவை. ஏறக்குறைய ஒரு மாபியா உலகில் நடப்பதைப்போன்றவை. 

அரச உதவியில் அல்லது அரசின் ஏற்பாட்டின்படி சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதென்பது நோயாளிகளைப் பொறுத்தவரையில் மிகச் சிரமமான விசயம். ஆரம்ப நிலைச் சிகிச்சை அல்லது மிகச் சாதாரண நோய்களுக்கான வெளிநோயாளர் பிரிவுச் சிகிச்சையில் பிரச்சினைகள் பெரிய அளவில் இல்லை.  

அடுத்த கட்டத்தில் உள்ள நிபுணத்துவ ரீதியான சிகிச்சைகளைப் பெறுவதில்தான் பெரிய நிழலாட்டங்களையும் குதிரைப் பேரங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.  

உதாரணமாகக் கண்புரைக்கான அல்லது கண் வில்லைகளைப் பொருத்தும் சிகிச்சையின்போது அரச உதவியைப் பெறுவதற்கான நடைமுறைகள் நோயாளியைக் களைப்படைய வைக்கின்றன. இதனால் வெளியே தனியார் மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சையைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் நோயாளிகள். 

இதுதான் இதயத்தில் நடக்கும் இரத்தக் குழாய் அடைப்புக்கான சிகிச்சை, சிறுநீரக மாற்றுச் சிகிச்சை, என்பு முறிவுக்கான சத்திர சிகிச்சை போன்றவற்றுக்கும் நடக்கிறது.  

இன்னொரு உதாரணம், இது வடக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. அந்த மருத்துவ மனையில் உள்ள மகப்பேற்று விடுதிக்கு மாதமொன்றுக்குச் சராசரியாக 600தாய்மார் பேற்றுக்காக வருகை தருகின்றனர். ஆனால் அங்கே உள்ள கட்டில்களின் மொத்த எண்ணிக்கை 12மட்டுமே. இதனால் ஒரு கட்டிலில் இரண்டு தாய்மார் படுக்க வேண்டியுள்ளது. அல்லது கட்டிலுக்குக் கீழே படுக்க வேண்டும்.  

இதை விட பிறந்த குழந்தைகளை உரிய முறையில் பராமரிப்பதற்கான வசதிகளும் குறைவு. அந்த விடுதி முள்ளிவாய்க்கால் கால (பாடசாலை) மருத்துவமனைக்கு நிகரானது. இத்தகைய சூழலில் அங்கே தங்கள் குழந்தைகளைப் பிரசவிப்பதற்குப் பலரும் விரும்ப மாட்டார்கள். பதிலாக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வெளியே தனியார் மருத்துவமனைக்குப் போகலாம் என்ற எண்ணமே ஏற்படும். இத்தகையை உளவியலையே பெரும்பாலும் தனியார் மருத்துவத்துறையினர் அரச மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் மனதில் கட்டமைக்கின்றனர். ஆனால், இதை எல்லோரும் செய்யவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  

முக்கியமாக நிபுணத்துவத்துடன் கூடிய சிகிச்சைகளை வைத்து பேரங்கள் நடக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சிகிச்சையை அரச வைத்தியசாலைகளிலும் வெளியே தனியார் மருத்துவ மனைகளிலும் ஒரே மருத்துவர்கள்தான் செய்கின்றனர். இவர்கள் மிகத் தந்திரமாக அரச மருத்துவமனைகளில் இப்போதைக்கு இந்தச் சிகிச்சையை வழங்க முடியாது. கால அவகாசம் வேண்டும் என்பார்கள். இதே மருத்துவரிடம் வெளியே தனியார் மருத்துவமனையில் அடுத்த சில நாட்களிலோ வாரத்திலோ சிகிச்சையைப் பெற்று விடலாம்.  

அவர்கள் அரச மருத்துவத்துறையைப் பலவீனப்படுத்தித் தமது தனியார் துறையை வளர்க்கின்றனர். இதனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்குவதிலிருந்து அனைவருக்குமான நிறைவான சேவையை வழங்குவது வரையிலும் பிரச்சினைகளே! 

நாடுமுழுவதிலும் நடைமுறையில் உள்ள பகிரங்கமான சங்கதி இது. இதைப்பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் யாருமே இதைப்பற்றிப் பேசுவதில்லை. அப்படி யாரும் பேச முற்பட்டால் மருத்துவர்கள் பழிவாங்கலைச் சாதிப்பார்கள். அல்லது மருத்துவர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கும். எனவே இதற்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் உண்மை மிகத் துயரமானது.

இங்கேதான் நிபுணத்துவ அறிவைப் பெற்றவர்களின் மனப்பாங்கினை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் படித்த அறிவை மக்களுக்குப் பயன்படுத்தாமல் தங்களுடைய மிகை வருமானத்துக்காகப் பயன்படுத்துவதை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது? 

இலங்கையில் மருத்துவ சேவைத்துறைக்குரிய ஆளணி ஒப்பீட்டளவில் போதுமானது. ஆனால் பங்கீடுகளில் பிரச்சினைகள் உண்டு. இதனால் போதிய ஆளணி வசதியை எல்லா இடங்களும் பெற்று விடுவதில்லை. இது ஒரு பெரிய பிரச்சினை. நல்லதொரு உதாரணம் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றவுடன் அல்லது முதற்கட்ட அனுபவத்தைப் பெற்றவுடன் நாட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். அல்லது வடக்கு, கிழக்கை விட்டு வெளியேறி கொழும்பு உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள்.  

இதனால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தென்பகுதியிலிருந்து சிங்கள மருத்துவர்களே வடக்குக் கிழக்கிற்குச் செல்ல வேண்டியுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் உரிய ஆளணியைப் பங்கீடு செய்வதில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் உண்டாகின்றன. 

மற்றும்படி தொழில் ரீதியான சிறப்புத் தேர்ச்சியுடைய மருத்துவர்களும் தாதியர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும் உண்டு. கூடுதல் விருத்தி, தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், தாதியர்கள் (விசேட பயிற்சி வழங்கப்பட்டு) வடிகட்டி எடுப்பதற்கான நடைமுறை உண்டு என்பது சிறப்பு. 

ஆனால், இவர்களுடைய சேவை மக்களுக்குத் திருப்திகரமாக இருக்கின்றதா என்பது கேள்வியே. அதாவது மருத்துவ சேவைத்தரம் (Service Quality) எந்த அளவில் உள்ளது என்பது கேள்வியே. 

நோயாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சையளிப்பு, கவனமெடுத்தல் போன்றன ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் உள்ளனவா என்பதும் கேள்வியே. சில மருத்துவ மனைகளில் இவை ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தாலும் பொதுவாக ஒரு பின்னிலையே காணப்படுகிறது. 

எனவேதான் அரச சுகாதார சேவைத்துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டியுள்ளது, என்பது மக்களுடைய பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. இல்லையெனில் மக்கள் தனியார் துறையை நாட வேண்டிய அவசியமில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவத்துறை இப்போதுள்ள அளவுக்கு வளர்ச்சியடையவும் இல்லை. எடுத்ததெற்கெல்லாம் தனியார் மருத்துவத்துறையை நோக்கி மக்கள் ஓடுவதுமில்லை. 

அப்படியென்றால் இவ்வளவு பெருந்தொகையானோர் தனியார் மருத்துவத்துறையை நோக்கிச் செல்வதற்கான காரணம் என்ன? 

அரச மருத்துவத்துறையில் காணப்படும் பலவீனங்களும் பாராமுகங்களுமே. கூடவே அரச மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களே தனியார் மருத்துவத்துறையை நடத்துவது அல்லது அங்கே மருத்துவம் செய்வதுமாகும்.   இதைத் தடுப்பதற்குச் சட்ட மூலங்களை உருவாக்குவதே ஒரே வழி என்கின்றனர் மக்கள். அதைச் செய்ய வேண்டியது அரசு. ஆனால். அது அதற்குத் தயாரில்லை. காரணம் மருத்துவர்களுடன் மோத முடியாது என்பதே. 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவத்துறை இப்போதுள்ள அளவுக்கு வளர்ச்சியடையவும் இல்லை. எடுத்ததெற்கெல்லாம் தனியார் மருத்துவத்துறையை நோக்கி மக்கள் ஓடுவதுமில்லை. 

அப்படியென்றால் இவ்வளவு பெருந்தொகையானோர் தனியார் மருத்துவத்துறையை நோக்கிச் செல்வதற்கான காரணம் என்ன? 

அரச மருத்துவத்துறையில் காணப்படும் பலவீனங்களும் பாராமுகங்களுமே. கூடவே அரச மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களே தனியார் மருத்துவத்துறையை நடத்துவது அல்லது அங்கே மருத்துவம் செய்வதுமாகும்.   இதைத் தடுப்பதற்குச் சட்ட மூலங்களை உருவாக்குவதே ஒரே வழி என்கின்றனர் மக்கள். அதைச் செய்ய வேண்டியது அரசு. ஆனால். அது அதற்குத் தயாரில்லை. காரணம் மருத்துவர்களுடன் மோத முடியாது என்பதே.  (தொடரும்)

கருணாகரன்

Comments