கலாசார எழுச்சியாகவும் கிராமிய விழாவாகவும் சிறப்புப் பெறும் பண்டிகை | தினகரன் வாரமஞ்சரி

கலாசார எழுச்சியாகவும் கிராமிய விழாவாகவும் சிறப்புப் பெறும் பண்டிகை

மீண்டும் ஒரு சித்திரைப் புதுவருடம் மலருகிறது. நவக்கிரக நாயகர்களுள் முதல்வரான சூரிய பகவானின் இராசி மண்டலப் பிரவேசமே ஒவ்வொரு தமிழ் மாதங்களினதும் ஆரம்பமாக அமைகிறது. அதாவது பன்னிரு இராசிகளுள் முதலாவதான மேட இராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும்போது, பன்னிரு மாதங்களுள் முதலாவதான சித்திரை பிறக்கிறது. இராசிப் பிரவேச நேரமே, புதுவருடப் பிறப்பாகவும் அமைந்துள்ளது. 

இலங்கையில் சித்திரைப் புதுவருடம் இரு இனத்தினருக்கு மட்டுல்ல, இரு மத்தினருக்கும் உரிய ஒரு பண்டிகையாக அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இந்த வகையில் இதனை தமிழ் – சிங்கள புதுவருடம் எனக் குறிப்பிட்டாலும், தமிழ் இந்து மக்களும், சிங்கள பௌத்த மக்களுமே இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். வேறுபட்ட மதம் சார்ந்த, மொழிபேசும் இரு இன மக்கள் இணைந்து பண்டிகையொன்றை கொண்டாடுவது உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, சித்திரைப் புதுவருடம் இலங்கையில் தேசியப் பெருவிழாவாக முக்கியத்துவம் பெறும் அதேவேளையில், தமிழ் – சிங்கள மக்களின் இன ஐக்கியம், சமய சமூக கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருப்பதையும் குறிப்பிடவேண்டும். 

இந்த சித்திரைப் புதுவருடப் பிறப்பின்போது தமிழ் – சிங்கள மக்கள் வெவ்வேறு பாரம்பரிய சமய அனுட்டான முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  

இந்து மக்கள் புதுவருடப் பிறப்பன்று விஷு புண்ணியகாலத்தில் தலைக்கு மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்வது வழக்கம் என்பதுடன், ஆகவே புதுவருடத்தின் முதற் கருமமாகவும் அமைகிறது. புதுவருடம் பிறந்த பின்னர் வரும் குறிப்பிட்ட சுப நாளன்று, சுப நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து ஆசிபெறுவது பௌத்த மக்களது பாரம்பரிய வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன், அதுவே அவர்களது புதுவருடத்தின் ஆரம்பக் கருமமாகவும் இருக்கிறது. இந்து, பௌத்த இன மக்கள் மத்தியில் இன்னமும் வழக்கொழியாது சித்திரைப் புதுவருட கலாசார பாரம்பரியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சித்திரைப் புதுவருடப் பிறப்பு என்பது மங்களகரமான ஒரு நிகழ்வாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு அமைய புதிய விஷயங்களையும் எதிர்பார்ப்புகளையும் வைத்து புதுவருடம் வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு இந்து மக்களும் தங்கள் வீடுகளில் நிறைகுடம் என்று சொல்லப்படும் பூரண கும்பம் வைப்பது பாரம்பரிய வழக்கமாகும். விஷுபுண்ணிய காலத்தில் தலைக்கு மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்த பின், பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டிருக்கும் நிறத்திலான ஆடைகளை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்வதும், தாய் தந்தையர் குரு, பெரியோர் முதலானவர்களை வணங்கி அவர்களது ஆசியைப் பெறுவதும், தான தருமங்களைச் செய்வதும் சுபநேரத்தில் கைவிசேடம் பரிமாறிக்கொள்வதும் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதும், சுப தினங்கள் பார்த்து புதுக்கருமங்களை தொடங்குவதும் புதுவருடப் பிறப்பின் பின்னரான சிறப்புக் கருமங்களாகும் சித்திரைப் புதுவருடம் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கிராமிய விழாவாகவும் சிறப்புப் பெறுகிறது.  தமிழ் மக்களது கொண்டாட்ட செயற்பாடுகளும் இடத்துக்கிடம் மாறுபடுகிறது. அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அந்தந்த பிரதேசங்களின் கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நிகழ்வகளும், கொண்டாட்ட நடைமுறைகளும் வேறுபட்டு இருப்பதை காணமுடிகிறது. 

இலங்கையின் வடபகுதியை குறிப்பாக யாழ். குடாநாட்டை எடுத்துக்கொண்டால், பொதுவாக அனைத்து பிரதேசங்களிலும் புதுவருடக் கொண்டாட்ட செயற்பாடுகள் ஒரேமாதிரியானதாகவே அமைந்திருப்பதைக் காணலாம். இங்கு போர்த்தேங்காய் அடித்தல் பாரம்பரியமான ஒரு விளையாட்டாக இருக்கிறது. இளைஞர்கள் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டு பெரும்பாலும் கோயில் வீதிகளில் அல்லது பொது இடத்தில் நடைபெறுவதுண்டு.

புதுவருடப் பிறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே கைக்கு அளவான சிறிய தேங்காய்களை இதற்காக சேகரிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரு தேங்காயை நிலத்தில் வைத்து, இன்னொரு தேங்காய்கொண்டு கையால் சிதறடிப்பதே இந்த விளையாட்டாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் தேங்காயை ‘கையான்’என்று சொல்வதுண்டு. இப்போது போர்த்தேங்காய் அடிக்கும் விளையாட்டு வெகுவாகக் குறைந்துவிட்டபோதிலும், சில கிராமப்பகுதிகளில் நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது. 

யாழ். குடாநாட்டில் இன்னொரு பாரம்பரிய போட்டி நிகழ்வாக கோழிச்சண்டை அமைந்திருக்கிறது. சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இதுவும் இப்போது குறையத் தொடங்கிவிட்டன. இங்குள்ள கிராமிய விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் என்பனவற்றில் புதுவருட தினத்தன்று அல்லது அடுத்தடுத்த தினங்களில் மாலை வேளைகளின்போது இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவது வழக்கம். இளைஞர்கள் கலந்து கொள்ளும் கிளித்தட்டு, சடுகுடு, கோலாட்டம் போன்றவைகளுடன், ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல் போன்ற பெண்கள் கலந்துகொள்ளும் விளையாட்டுகளும் புதுவருட சிறப்பு அம்சங்களாக இடம்பெற்றுவருகின்றன. காலமாற்றத்துக்கு அமைய இப்போது உதைபந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் புதுவருட கொண்டாட்ட சிறப்பு நிகழ்வுகளுடன் இணைந்து கொண்டுள்ளன.   

போர்ச் சூழ்நிலைகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டிச் சவாரி துவிச்சக்கரவண்டி ஓட்டம், மரதன் ஓட்டம் போன்ற போட்டி நிகழ்ச்சிகளும் யாழ். குடாநாட்டின் பல்வேறு கிராமங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன் மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. சிறுவர்கள் கலந்துகொள்ளும் பட்டம் ஏற்றும் போட்டியும் இப்போது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

இம்முறை சித்திரைப் புதுவருடம் ‘விஹாரி’ என்ற பெயரில் உதயமாகிறது. அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் இது 33ஆவது வருடமாகும். சூரிய பகவானுக்குரிய நாளான ஞாயிற்றுக்கிழமையன்று புதுவருடம் பிறப்பது பெரும் சிறப்புக்குரியது. சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து வழிபாடு செய்வதும் புதுவருடப் பாரம்பரிய வழக்கங்களுள் ஒன்றாகும். 

சித்திரைப் புதுவருடத்துடன் இணைந்து இளவேனில் எனப்படும் வசந்த காலம் ஆரம்பமாவதால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் எழுச்சியும் தரும் குதூகலமான பருவகாலத்தின் தொடக்கமாக இது அமைகிறது. எனவே, இந்த நன்னாளிலே நாம் அனைவரும் நல்லதொரு எதிர்காலத்திற்காக இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக! 

அ. கனகசூரியர்

Comments