நீடிக்கும் வறட்சியும் பசுமை பூமிக்கான கனவுகளும் | தினகரன் வாரமஞ்சரி

நீடிக்கும் வறட்சியும் பசுமை பூமிக்கான கனவுகளும்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்கள் கடும் வறட்சியால் நீர்வற்றிக் கிடக்கின்றன. நீர்த்தேக்கங்களின் அடி ஆழத்தில் நீர் ஆறு போல கிடக்க, நீரில் மூழ்கிய மஸ்கெலிய நகரம் மற்றும் வீடுகள், கோவில்கள் என்பன தலைகாட்டி நிற்பதைப் பத்திரிகைகளில் புகைப்படங்களாகக் காண்கிறோம். ஏராளமானோர் நீர்த்தேக்கங்களில் இறங்கி அதிசயமாகப் பார்க்கிறார்கள். இதேசமயம் மலைநாட்டுப் பகுதியில் மக்களுக்கு அன்றாடப் பாவனைக்கான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பசுமை மிகுந்த நீரேந்து பகுதிகள் பசுமை இழந்து காணப்படுகின்றன. பசுமையான இப்பகுதிகளுக்கு இந்நிலையென்றால் வறட்சியான பகுதி என்று கூறப்படும் வட மத்திய, வட மேல் மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது ஒன்றும் புதுமையல்ல.  

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருப்போர் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து போயுள்ள நிலையில், கால்நடைகளுக்கான தீவணமின்றி பல்வேறு இடர்களை அனுபவிக்கின்றனர். கால்நடை நோய்வாய்ப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. வீட்டுப் பாவனைக்கான தண்ணீருக்கு பல மைல் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. பொதுவாக வறட்சியால் பாதிப்புறாத களுத்துறை, குருநாகல் மாவட்டங்கள் இம்முறை அதிகளவான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கு விவசாய உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  

காரியாலயத்திலிருந்து பகல் பொழுதில் தேவையின் நிமித்தம் வெளியில் செல்பவர்கள் வெயில் எரிக்கிறது, வியர்வை ஊற்றுகிறது என்று புலம்புகின்றார்கள். வீடுகளில் கூட இருக்க முடியாதளவுக்கு உஷ்ணம் தரும். இது வெயில் ஊர்தான். ஆனால் இப்படி ஒரு உஷ்ணத்தை நான் அனுபவித்ததே இல்லை என்கிறார்கள். இந்த புதுவருட கொண்டாட்டத்திற்கான ‘ஷொப்பிங்’ வேலைகளை அதிகமானவர்கள் மாலை வேலைகளிலேயே வைத்துக் கொள்கிறார்கள். நாடெங்கும் அந்த அளவுக்கு உஷ்ணம் தகிக்கிறது.  

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான வெப்பநிலை எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள காலநிலை அவதான நிலையம், அதேநேரத்தில் வெப்பநிலை 38பாகை செல்சியசாக அதிகரித்து காணப்படும் என்றும் நாட்டின் சில பாகங்களில் ஆங்காங்கே குறைந்தளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவும் நாளை (15) முதல் இந்த கடும் வெப்பநிலை மாறும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி மொஹமட் சாலிஹீன் ஆருடம் சொல்கிறார்.  

“சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளது. அதாவது வளிமண்டலத்தின் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் அதேவேளை, வளிமண்டலத்தின் வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும். வளி மண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ஈரப்பதம் குறைவடைய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வெப்ப சுட்டெண் வளிமண்டலத்தில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.  

இந்த அதிகரித்த வெப்பநிலை காரணமாக Heat Stoke வெப்பத்தினூடாக வியாதிகள் உருவாகலாம். இது சூரியனின் வெப்ப தாக்கம் என்று அறியப்படுகிறது. இது நாற்பது பாகை செல்சியஸ் அல்லது 104பரனைட் வெப்பம் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த சுகவீனத்தின் மேலதிக அறிகுறியாக தோல் வறண்டு சிவக்கும் அல்லது ஈரலிப்புடன் சிவந்திருக்கும். சிலருக்கு தலைவலியுடன் உடல் அசதியாக இருக்கும். இந்த நிலை திடீரெனவோ அல்லது படிப்படியாகவோ ஏற்படலாம். சில சமயம் காய்ச்சல் போன்று உடல் வெப்பம் காணப்படும். இது வயதானவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். உஷ்ணம் மிகுந்த இந்நாட்களில் பொதுமக்கள் அதிகளவு நீர் அருந்த வேண்டும். வெயிலில் நடப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் வெயிலில் விளையாட அனுமதிக்கக் கூடாது. இந்த வெப்ப மயக்கம் ஏற்பட்டால் வைத்தியரை நாட வேண்டும்.  

சூரியனின் வடக்கு சஞ்சாரம் காரணமாக கடந்த 5ஆம் திகதியிலிருந்து நாளை (15) வரை சூரியன் உச்சம் பெறும். இது குருநாகலில் 38செல்சியஸ் ஆகக் காணப்படுகிறது. இதன்பின்னர் இடப்பெயர்ச்சி ஆரம்பமாகப் போகிறது. மே மாதம் நடுப்பகுதிவரை பகலில் வெப்பம் காணப்படும். இரவில் மழை பெய்யும். அத்துடன் ஆங்காங்கே மழை பொழிவும் இடம்பெறும். இதன் பின்னரே தென்மேல் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகும் என்று சாலிஹீன் மேலும் தெரிவித்தார்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை மற்றும் கடும் வறட்சி காரணமாக இதுவரை நாட்டின் 14மாவட்டங்களில் 4இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊவா மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களைச் சேர்ந்த 14மாவட்டங்களில் வறட்சி நிலை தொடர்வதாகவும் இதனால் 99,226குடும்பங்களைச் சேர்ந்த 4,07,672பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக தண்ணீர் பவுஸர் மற்றும் தண்ணீர் தாங்கிகள் அனுப்பப்பட்டுள்ளது.  

மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 46ஆயிரத்து 584குடும்பங்களைச் சேர்ந்த 2,21,659பேரும் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் 24,207குடும்பங்பளைச் சேர்ந்த 84ஆயிரத்து 656பேரும், வடமேல் மாகாணத்தில் புத்தளம், குருநாகல் மாவட்டங்களில் 11,272குடும்பங்களைச் சேர்ந்த 39ஆயிரத்து 432பேரும், மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் 9,160குடும்பங்களைச் சேர்ந்த 33,081பேரும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 3791குடும்பங்களைச் சேர்ந்த 13,557பேரும், வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் 2,028குடும்பங்களைச் சேர்ந்த 7,367பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் 1523குடும்பங்களைச்சேர்ந்த 5,523பேரும் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் 647குடும்பங்களைச் சேர்ந்த 3,337பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை குறையும் போதோ அல்லது பொய்க்கும் போதே ஏற்படுகிறது.

இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். இதற்காக மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். காடழிப்பை அரசு தடை செய்ய வேண்டும். நாட்டின் அபிவிருத்தி என்பது மரங்களை தறிப்பதாக மட்டும் இல்லாது மரங்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.  

வறட்சியின் காரணமாக நாட்டின் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சூழல் சார்ந்த உற்பத்தி மற்றும் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்த வரை நீர் மின்சாரமே வளமான ஆதாரம். ஆனாலும் இந்த சூழ்நிலை காரணமாக மின் வெட்டை அரசு அமுல்படுத்தினாலும் அதிகளவான சிறுகைத்தொழில், உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டாக வேண்டும். சிறு அளவில் உற்பத்திகளில் ஈடுபடும் தனியார் உற்பத்திகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடுமையான வறட்சியின் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருகின்றது. கடந்த வாரம் களுத்துறையை ஊடறுத்துச் செல்லும் களுகங்கையுடன் கடல் நீர் கலந்ததால் சுமார் 2.1இலட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாக்கியதாக அறிய முடிகிறது.  

நீரேந்து பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைக்க காலத்திற்கு காலம் அரசுகள் முயற்சித்து வந்த போதிலும் எதிர்பார்க்கப்பட்ட பலன் கிட்டவில்லை என்பதே உண்மை. 

எதிர்காலத்தில் சிறப்பான நீர் முகாமைத்துவத்தின் ஊடாக வீணாக கடலில் சங்கமம் ஆகும் நீரை ஆக்கத் தேவைகளுக்குப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது நல்ல பயன்களைத் தரலாம். உலகளவில் காலநிலை மாற்றம் வேகமாகவே இடம்பெற்ற வருகிறது. இந்நிலையில் நீரையும் நீர் மூலம் பெறப்படும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்துவதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும். தண்ணீர் பொன்னுக்குச் சமம் என்று கருதும் காலம் வரலாம். எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்தி வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பசுமை உலகை விட்டுச் செல்வோம்.  

 போல் வில்சன் 

Comments