தோற்றுப்போய்க் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் புத்துயிர் பெறுமா? | தினகரன் வாரமஞ்சரி

தோற்றுப்போய்க் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் புத்துயிர் பெறுமா?

இன்று மலையக தொழிற்சங்கங்கள் மீதான மதிப்பும் கெளரவமும் குன்றிப்போய் விட்டிருப்பது என்னவோ உண்மைதான். இதற்கு காரணமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று தொழிற்சங்கங்கள் பலவும் அரசியல் கட்சிகளாக மாற்றம் பெற்றிருப்பதேயாகும். இன்றைய நிலையில் இ.தொ.காவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மலையக அரசியல் தொழிற்சங்கத்தை வைத்திருக்கின்றன. தமிழ் முற்போக்குக் கூட்டணியில் மூன்று அமைப்புகள் இடம்பெறுகின்றன. அவை தனித்தனியாக தொழிற்சங்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பழனி திகாம்பரத்தின் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கம் மட்டுமே அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.

இது தவிர பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பில் 10வரையிலான தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. உதிரியாகவும் ஏகப்பட்டச் சங்கங்கள். ஆக ஒன்றைரை இலட்சம் பேரைப் பிரதி நிதித்துவப்படுத்த 60க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள். எதிலும் சேர்ந்துகொள்ளாத ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள்.

இப்படியான சூழலில் ஏகப்பட்ட தொழிற்சங்கங்கள் இயங்கியும் சக்திமிக்க இரண்டு அமைப்புகள் இம்மக்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்றும் இவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியாதுள்ளது. இதற்குக் காரணத்தைத் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றார் ஜே.வி.பி.யின் பாரளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேயிலைத் தோட்டங்கள் சொந்தமாக இருப்பதால் அவர்கள் 1000ரூபா அடிப்படைச் சம்பளத்தினைப் பெற்றுத்தர இதயசுத்தியுடன் செயற்பட முன்வருவதில்லை என்ற ரீதியில் கூறியிருக்கின்றார் பிமல் ரத்நாயக்க.

இதே நேரம் மலையக மக்களுக்குத் தலைமை தாங்குவோர் தனவான்களாக இருப்பதையும் கவனத்திற் கொள்ளத்தான் வேண்டும். இருந்தும் தொழிற்சங்க அரசியல் ரீதியில் இவர்கள் ஆற்றிய சேவைகளும் இருக்கவே செய்கின்றன. இவை சமூக ரீதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் தேசிய ரீதியில் சரியான அங்கீகாரத்தைப் பெற வழி வகுத்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை.

பெருந்தோட்ட மக்கள் இரும்புத்திரை வாழ்க்கையையே வாழ்ந்தனர். இந்த இரும்புத்திரை என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரித்தானியாவின் பிரதமாராயிருந்த வின்ஸ்டன் சர்ச்சில். இது வேறு ஒரு சந்தர்ப்பம். தங்களைத் தாமே தாழ்த்திக் கொண்ட இனமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழத் தலைப்பட்டார்கள். சாதி ரீதியாக இவர்களைப் பிளவுபடுத்தி தமது கங்காணி தனத்தால் கட்டுப்பட வைத்தவர்கள் இவர்களை இங்கு அழைத்துவர தரகர்களாக செயற்பட்ட கங்காணிமார்களே. இவர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தாம். ஆனால் இம்மியும் மனிதாபிமானம் மறந்தவர்களாய் மாறிவிட்டிருந்தார்கள்.

1919ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் நல உரிமைச் சங்கம் உதயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தொழிற்சங்க உரிமைகளுக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இதே நேரம் உலக ரீதியில் நிகழ்ந்துக் கொண்டிருந்த சுதந்திர இயக்கங்களின் போராட்டங்களும் இங்கு ஆதர்ஷமாக கொள்ளப்பட்டிருக்கின்றன. பொதுவாக அன்றைய நிலையில் தோட்டத் தலைமை கங்காணிமார் தமக்கென சங்கம் வைத்திருந்தனர். இதே போல தோட்ட உத்தியோகத்தர்களும் சங்கம் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு அடித்தளமாக செயற்பட்டுக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எச்சங்கமும் இருக்கவில்லை.

இவ்வாறான பின்புலத்திலேயே கோ. நடேசய்யரின் பொதுநல பிரவேசம் ஆரம்பமானது. அவர் மக்களை தெளிவுபடுத்துவதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். திவிர சிந்தனையாளர் அவர். நல்ல பத்திரிகையாளர். தமது எழுத்துக்கள் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைகளை பொதுவெளிக்கு கொண்டு சென்றார். போராட்ட உணர்வை ஊட்டினார். இவரே முதலாவது தொழிற் சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்தார். இது 1931ஆம் ஆண்டு நடந்தது.

இக்காலத்தில் இடதுசாரி இயக்கங்கள் நாடு முழுவதும் இயங்க ஆரம்பித்தன. இந்த இயக்கங்கள் பெருந்தோட்ட மக்களின் ஜீவாதார, தொழில்சார் நியாயங்களுக்கு குரல் எழுப்பின. கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா போன்றோர் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து தோழமையை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் தமது வாக்கு வன்மையால் தொழிலாளர்களது அன்பைச் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இதனால் தோட்டத் தொழிலாளர்களிடையே வர்க்க ரீதியான உணர்வு மேலோங்கிவரலானது. தொழிற்சங்க அமைப்பு முறை அடித்தளமிட ஆரம்பித்தது.

போராட்டங்கள் தோட்டங்கள் தோறும் வெடித்தன. முதலாவது போராட்டமாக பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டப் போராட்டம் வரலாற்றில் பதிவானது. வேலை நிறுத்தமும் இடம்பெற்றது. 1940இல் முல்லோயா தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் தொழிலாளியான கோவிந்தன் உயிர்த்தியாகம் செய்தார். 1938இல் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்தார். கொழும்பிலும் இதர நகர்ப்புறங்களிலும் தொழில் புரிந்த இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சிகளைக் களையும் நோக்கிலேயே அவர் வருகை அமைந்திருந்தது. இதன் பயனாக உருவாக்கம் பெற்றிருந்ததே இலங்கை -- இந்திய காங்கிரஸ். அதன் மூலம் மலையக தொழிலாளர்களிடையே பெரிய திருப்பம் ஏற்பட்டது. இதுவரை வர்க்க ரீதியாக ஒன்றுபட்டிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முதல் தடவையாக இன ரீதியாக இணைந்து செயற்பட ஆரம்பித்தனர் என்பதை வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

1948ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது தேர்தலின் பின் இலங்கை இந்திய காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் தயாரானது. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஏ. அஸீஸ் தலைமையில் அரங்கத்துக்கு வந்தது. இதன் பின்னரும் கருத்து முரண்பாடுகள் பெருத்தது. சீ.வீ. வேலுப்பிள்ளை, வீ.கே. வெள்ளையன் போன்றத் தலைவர்களும் இ.தொ.காவிலிருந்து வெளியேறலாயினர். தேசிய தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர். ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற றொசாரியோ பெர்னாண்டோ இலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தை ஆரம்பித்தார்.

தலைவர்களுக்கிடையேயான முரண்பாடுகளால் தொழிற்சங்க கூட்டமைப்பு சிதைவடைந்து வரலானது. புற்றீசல்கள் போல தொழிற்சங்கங்கள் தோற்றம் பெற்றன. இதனால் தொழிலாளர்களிடையே இருந்த ஒற்றுமை சின்னாப்பின்னமாக்கப்பட்டது. பிளவுகளும் போட்டிகளும் ஏற்பட்டு முதலாளித்துவ சக்திகளுக்கு வாய்பை ஏற்படுத்தித் தந்தன. இன்று வரையிலும் கூட அதே நிலைமைதான் நீடிக்கின்றது. அரசியல் ரீதியிலான போட்டா போட்டிகளுக்கு அப்பாவித் தொழிலாளர்களிடையேயான நல்லிணக்கம் நிலை குலைந்துபோய் விடுகின்றது. இன்று பல தொழிற்சங்கங்களின் பிராந்திய, மாவட்ட, மாநில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையைக் காணலாம். ஒரு காலத்தில் தோட்ட நிர்வாகங்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று செல்லாக் காசுகளைப்போல பார்க்கப்படுவதற்கு காரணமே இத்தொழிற்சங்கங்களின் பலவீனங்களே ஆகும்.

இன்று பெருந்தோட்ட மக்கள் அநுபவிக்கும் சகல உரிமைகளும் வரப்பிரசாதங்களும் இத்தொழிற்சங்க, அரசியல் அமைப்புகளின் செயற்பாடுகளால் கிடைக்கப் பெற்றவை தான் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அக் கெளரவத்தைத் தக்கவைத்துக் கொள்ள அவை தவறிவிட்டன. இதுதான் யதார்த்த நிலைமை. இன்று தொழிற்சங்கங்கள் மீதான நம்பகத் தன்மையை இத் தொழிற்சங்கங்கள் இழந்து கொண்டிருக்கின்றன.

இது ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் பெருந்தோட்டத்துறை இன்று தோற்றுப் போன தொழிற்துறையாக ஆகி வந்தாலும் கூட அது உடனடியாகவே கைவிடக்கூடிய நிலைமையில் இல்லை. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இதே நேரம் அரசியல் செயற்பாடுகளில் அநேகமான தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதால் தொழிற்சங்க முறைமை தொடர வேண்டுமா? என்னும் ஆய்வும் எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் பெருந்தோட்ட மக்களின் காவலனாக இருந்து கவனித்து வந்தன இத்தொழிற்சங்கங்கள். ஆனால் இன்று அதே மக்களால் பாதுகாத்து ஜீவ ஊட்டம் தரவேண்டிய பரிதாப நிலைக்கு இத் தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டு விட்டன. இதை ஜீரணித்துக்கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்பதே ஆய்வாளர்களது தேடல் பதிவு.  

பன். பாலா

Comments