நாள், கோள் நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள் நற்பலன்

மேஷம் 

வசந்த காலத் தென்றலோடு அனல் காற்றும் கலந்து வீசும் வாரம் நடக்கிறது. சுகமும் லாபங்களும் போதுமான அளவைவிட அதிகமாகவே வந்து சேரும். கூடவே கவலைகளும், சோகங்களும் கை கோர்த்துக் கொண்டு வருவதைத் தடுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் இயலாமல் தடுமாறும் நிலையும் இருக்கும். மனதளவில் பெரும் தாக்கங்களை வெளியே தெரியாமல் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. வியாகூலமாய்ச் சில காலங்கள் கிடந்த பல விஷயங்கள் தானாக உங்கள் வழிக்கு வரும் அதிசயங்களும் நடக்கவே செய்யும். 

உத்தியோகம் புரியும் அன்பர்கள் அமைதியாகச் சில காரியங்களைக் கையாண்டு வெற்றிகளைத் தமதாக்கிக் கொள்ளலாம். வருமானங்களை மிக எளிதில் அடையத் தக்க நல்ல சந்தர்ப்பங்கள் குறுக்கே உங்களை நாடி வரும். 

பெண்மணிகள் நிம்மதியாக நினைத்ததை    சாதித்துக் கொள்ளலாம். கல்வித் துறையில் உள்ளவர்கள் பின்னடைவுகளைக் காணும் காலமாகும். மனம் ஒரு நிலைப்படாமல் தத்தளிப்பதால் எதிலும் ஊன்றித் தமது கவனத்தைச் செலுத்த முடியாத நிலைமை இருக்கும். 

ரிஷபம்

மேலே சென்ற ராட்டினம் மளமள வென்று கீழே சரிந்து வரும் ஒரு நிலையை உணரும் சூழ்நிலை இப்போது இருக்கும். பெரிதான ரோகங்களின் தாக்கங்கள் இல்லையென்று தெரிந்தும் மனம் அல்லல் படுவதும், நிம்மதி இல்லாத நிலையும், பயமும் இருக்கும். கைக்கு வரும் பணத்தை விட செலவுகள் அதிகமாகத் தெரிய எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக் குறியும் தலை தூக்கும். உறுதியாக நம்பியிருந்தவைகள் கை நழுவிப் போனதினால் ஏற்படும் ஏமாற்றமும், அதிர்ச்சியுமே காரணமாகும். ஆனால் நிச்சயமான நிலை நல்லதை நோக்கியே நகரும். உறவுகள் ஓரளவு ஒத்துழைப்பையே தருவார்கள். 

மிதுனம்

சேதங்களும், சிக்கல்களும் இருக்கின்ற போதிலும், எடுக்கின்ற காரியங்கள் நன்றாகவே முடியும். நிலை தடுமாற்றம் போல் தோன்றினாலும், தொழில்கள், தமது நிலைகள் எதிலும் ஆட்டம் காணாமல் நல்லபடியாகவே நடக்கும். விருந்துகளுக்கும், அதற்கான அழைப்புகளுக்கும் குறைவிருக்காது. குடும்பத்தில் குதூகலமும், கொண்டாட்டமுமாகவே இருப்பார்கள். தொல்லைகளை மனதிற்குள் வைத்துக் கொண்டுதான் சமாளிக்கும் நிலையாகும். நோயிற் கஷ்டப்பட்ட ஒருவர்  விடுதலை பெறுவார், துயரமாய் இருந்தாலும் ஒரு வகையில் நிம்மதியாய் முடிவடையும். 

பெண்மணிகளே கவலையே வேண்டாம், நினைத்ததைச் செய்யுங்கள், ஏதாவது சிக்கல்கள் வந்தால் நான் இல்லையென்று இலகுவாகச் சொல்லிவிடுங்கள். பெரிய துன்பங்கள் வராது. படிப்பவர்கள் தமது படிப்பை மட்டும் கவனித்தாக வேண்டும். தொழில் செய்யும் அன்பர்கள் தாங்கள் வேலையுண்டு என்றிருந்தால் நிம்மதி இருக்கும். 

கடகம்

துடிப்புடன் செயலில் இறங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மனம் மிதக்கும். சிரமங்கள் எதிர்பட்டாலும் வெற்றிகளுக்கும், பண வரவுகளுக்கும் குறைவிருக்காது. மற்றபடி எங்கேயாவது அகப்பட்டு அவமானப் படுவதும் நடக்கும். அலட்டிக் கொள்ளாவிட்டால் அதிகமானோருக்குத் தெரியப் போவதில்லை. ரகசிய மாகவே வைத்துக் கொள்ளலாம். நாலு பேருக்குத் தெரியாவிட்டால் சுகம்தானே? முக்கியமாகத் திருமணமாகாதோர் கவனத்தில் கொள்ளவும். எதிர்பாராத வகைகளில் பல காரியங்கள் ஏறுக்குமாறாக நடக்கத் தொடங்கும். சற்று அமைதியுடனும், கவனமாகவும் செயல்படவும். இந்த நிலை சில காலம் நீடிக்கச் செய்யும். 

பெண்மணிகளே நிலைமை எல்லாம் தலை கீழாகவே இருக்கும். பேச்சில், செயலில் முழுக் கவனத்துடன் இருங்கள்.

சிம்மம்

அப்படியொன்றும் பெரிதாக நடக்க வில்லையே என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது, ஆனால் முந்தைய நாட்களை விட சற்று குறைவான பலன் கிடைக்கும் வாரம் தான் இது. வருமானங்களில் லேசான அடி விழும், போட்ட திட்டங்கள் தடம் புரள மீண்டும் முயற்சிகளைத் தொடங்க வேண்டி வரும். நம்பியவர்களுக்கு வேறு வேலைகள் வந்து விட்டது என்று சொல்வார்கள். உறவினர்கள் உதவாக்கரையாவார்கள். தானகத் தனியாகப் புலம்பும் நிலைதான். கவனமாகச் செயல்பட்டால் விரயங்களைத் தடுத்து, வீணாகும் பணத்தைச் சேமிக்கலாம். இதற்காகக் கிடைத்த விருந்தைச் சாப்பிடாமல் ஒதுங்கிக் கொள்ளாதீர்கள். அதையும் ஒரு கை பார்க்கத்தானே வேண்டும்? அலைந்து திரிந்து கவலைப்படாமல், இருந்து தொழில் செய்தால் நிச்சயமாக நிம்மதியாவது மிஞ்சும்.

கன்னி

எப்பொழுதோ எல்லாம் நஷ்டம் என்று ஒதுக்கியவைகள் உயிர் பெற்று எழுந்து, கதவைத் தட்டி வீடு தேடி வந்து உட்காரும், லாபம் தானே? உறவினர்கள் சகாயம் செய்ய நண்பர்கள் இன்முகம் காட்டுவார்கள், மனம் அமைதியாகும். திருமணம் என்று சம்மதிக்காவிட்டாலும் நீங்கள் மனதில் நினைத்தவர்கள் சந்தோஷத்துடன் பழகுவார்கள்.

தொழில் துறைகளுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை, திடீர் அதிர்ஷ்டங்களோ, எதிர்பாராத முன்னேற்றங்களோ ஏற்படவும் சந்தர்ப்பங்கள் குறைவே. சரளமாகப் பணம் வரும், செலவுகளும் சேர்த்தே நடக்கும். புதிதாக வீடுகள், காணிகள் வாங்க முயற்சிப்பது சில சமயங்களில் சிக்கல்களில் கொண்டு போய்விடும். அதைப் போலவே விற்க நினைத்தால் எதிர் பார்க்கும் விலை கிடைக்க மாட்டாது, அல்லது தாமதித்தால் நல்ல விலையை அடையலாம். 

துலாம்

தவிர்க்க முடியாத வாதப் பிரதிவாதங்களில் அகப்பட்டுக் கொள்ள நேரலாம். இவைகளைத் தவிர்த்தால் பொருளாதார லாபங்களை எளிதில் பெறலாம். எப்படியானாலும் தொழில் வகையில் பெரும் திடீர்பொருள் வரவுகளை எதிர் பார்க்கலாம். எல்லாம் சரியாய்ப் போகும் என்று அசட்டையாக இருந்தால் தோல்விகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியேற்படும். இடையூறுகள் சத்துருக்களால் உண்டாவதற்கும், தொழில், வருமனங்களில் தடுமாற்றங்களை ஏற்படுத்தவும் அமையும். நேரடியாகவே அவைகளை வெல்ல வேண்டிய கட்டாயம் உருவாகும். நெருங்கிய நண்பர்களிடமிருந்து, அல்லது உறவினர்களிடமிருந்து துக்ககரமான செய்தி வந்து சேரவும் இடமுண்டு.

விருச்சிகம்

எதிரிகளாய் இருந்தவர்கள் நம்ப முடியாத வகையில் உறவு கொண்டாடி நட்புப் பாராட்டுவார்கள். இவைகள் தற்காலிகம்தான் என்றாலும் நடக்கும் சூழ்நிலையை அனுசரித்து அவர்களை ஏற்றுக் கொள்ள நேரும். எனினும் இந்த வகை உறவுகள் நெடுங்காலம் நீடிக்காது என்பது அடி மனதில் எப்போதும் இருப்பதே நல்லதாகும். இவர்கள் வழியாகப் பல பொருளாதார நன்மைகள், பெரிய உதவிகள் என்பன கிடைக்கவே செய்யும். கவனக் குறைவாக இருந்தால் பேரழிவுகளைப் பிற்காலத்தில் எதிர்கொள்ள நேரும். குடும்பத்தில், உறவினர் மத்தியில் குழப்பங்கள் வந்து போகும். ஒரு காதில் கேட்டு மறு காது வழியாக வெளியே விடவேண்டும் என்பதை விட காதில் போட்டுக்  கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது. குடும்பச் செலவினங்களுக்கு எல்லையோ கரையோ இல்லாமல் பெருகும்

தனுசு

திசைகள் எட்டுத்தானே, ஆகவே எனக்கு எட்டு வழிகளில் மட்டுமே துன்பங்கள் வரும், நான் சமாளிப்பேன் என்று ஆறுதல் அடையக் கூடிய நிலைமைதான் உங்களுடையது. திரும்பிய பக்கமெல்லாம் துன்பங்களேதான். தொழிலைத் தொடர முடியுமா, தெருவிற்கு வரவேண்டிவருமோ என்று மனம் துடிக்க வாழ்ந்து தானே ஆக வேண்டும் என்பதற்காக தொழில் முயற்சிகளில் ஈடுபட வரும் சங்கடங்களே அதிகம். ஆனாலும் என்னதான் நடந்தாலும் உங்கள் வாழ்க்கையின் முடிவு வெற்றிகளை நோக்கியே பயணம் செய்யும். நிலை தடுமாறலாம், நிலை குலைந்து, இல்லாமல் போகமாட்டீர்கள். ஏதோ ஒரு வருமானம் வரவே செய்யும், மூழ்காமல் தலை மேலேயே இருக்கும்.

மகரம்

செலவுகள் தாராளமாக வெள்ளம் போல் வர, வரவுகள் அதற்கு ஈடாக இல்லாதிருப்பது தலைவலிதான். முடியும் பொழுதுகள் விடியத்தானே வேண்டும், எல்லையில்லாத் தொல்லைகளுக்கு ஒரு கரை வரும் வரை கவலைப் படுவதில் அர்த்தமில்லை. தொழில்கள் எப்படியே ஓடிக்கொண்டே இருக்கும், மித்ருக்கள் சத்ருக்களாக மாறி உருவெடுப்பதும் நடக்கும். குடும்பம் முதல் அடுப்பங்கரை வரை வம்புகள் வந்தாலும் அலட்டிக் கொள்ளமல் இருந்தால் எல்லாம் சாதகமாகவே முடிவடையும். இல்லற விஷயங்களில் அந்நியர்  தலையீட்டை அனுமதிப்பது நிச்சயமாகத் துன்பத்தைப் பெருக்கும். 

பெண்கள் விவகாரங்கள் கலகலப்பாகவே நடக்கும். இடம் மாறி கதைகள் புரள, தடம் மாற்றிப் பேசியே காலத்தைக் கழிப்பார்கள். 

உத்தியோகத்தர்கள் தாங்கமுடியாத வேலைப் பளுவைச் சுமந்தே ஆகவேண்டும். யாரிடத்திலும் முறையிட்டு ஆகப்போவதும் ஏதுமில்லை. 

கும்பம்

வருமானங்களில், தொழிற் துறைகளில் சிறப்பாகவே செயற்பாடுகள் உள்ளன. சற்று நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கலாம் என்று பார்த்தால் அது நிச்சயமாக மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. நஷ்டங்களையும், சம்பந்தமில்லா கட்டுக் கதைகளையும் பரப்பி வீண் துன்பங்களுக்குத் தூபம் இடுகிறார்கள். உலகத்தில் இது ஒன்றும் நடக்காத காரியங்களும் இல்லையே, முணுமுணுத்துக் கொண்டிருப்பதைவிட முகம் கொடுத்து வெல்வதே மேல். குடும்பமும், நண்பர்களும் உங்கள் பக்கம் இருப்பார்கள், கவலை வேண்டாம். 

மீனம்

உங்கள் பக்கம் ஓரளவு அதிர்ஷ்டக் காற்று வீசுவது உண்மையே ஆனாலும், அளவிற்கு அதிகமான உற்சாகத்தோடு எதிலும் இறங்காதீர்கள். காலை வாரிவிட்டு, ஆளை மாட்டி வைக்க பலர் மிக மும்முரமாகக் காத்திருக்கிறார்கள்.

அதோடு குடும்பத்திலும் சில துன்பங்கள் நோய் வடிவில் இருக்கின்றன. மெதுவாக ஒன்றுமே தெரியாதவர் போல் இருந்து விட்டால் பெரிய பாதிப்புகள் இல்லாமல் இந்த வாரம் ஓடி விடும். கையில் கொஞ்சம் பணமாவது மிஞ்சும். 

சொந்தப் பணம் இருந்தால் பெண்கள் தமது இஷ்டம் போல் செலவழிக்கலாம். யாருடைய கையையும் எதிர்பார்த்தால் வம்பிலேயே முடியும்.

 

Comments