பெண்கள் எல்லோரும் மென்மை...? | தினகரன் வாரமஞ்சரி

பெண்கள் எல்லோரும் மென்மை...?

ஆண்களை வன்முறையாளனாகவும் பெண்ணை எதையும் தாங்கும் பெண்ணாகவும் பொறுமைசாலியாகவும் ஆண் தன்மீது வன்முறையை பிரயோகித்தால் அதை சகித்துக்கொண்டு வாழவும் பழக்கிவிடுகிறது.

ஏப்ரல் 21இல் நடந்த தற்கொலை குண்டுதாக்குதலில் குண்டுதாரிகளான ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்துள்ளனர் என்பதும் மற்றும் தெமடகொடையில் வயிற்றில் சிசுவை சுமந்து கொண்டிருந்த தாயும் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்ததும் நாம் அறிந்ததே. இதன் பின் பலர் “பெண்ணும் இப்படி செய்வதா அதுவும் பிள்ளைத்தாச்சி பெண், குழந்தைகளையும் கொன்று விட்டாள். ஒரு பெண்ணால் எப்படி இப்படி செய்ய முடிகிறது" என்று புருவம் உயர்த்துவதை காண முடிகிறது. இவள் பெண்ணா? தாயா? என்றெல்லாம் பலகேள்விகள்.

ஆம், பெண் என்றால் கருணை, அன்பு, பரிவு, பாசம், மென்மை, தாய்மை என்று உலகம் அவளுக்கு பல குணாதிசயங்களை கொடுத்து வைத்துள்ளது. இக் குணங்கள் இயற்கையிலேயே பெண்களுக்கு உண்டு என்றும், பெண் என்றால் இந்த குணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் சமூகம் எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குள் உலகத்தில் உள்ள சகல பெண்களும் அடக்கப்படுகின்றனர். இவ்வாறாக கருணை, அன்பு, பரிவு, பாசம், மென்மை போன்ற குணாதிசயங்களை கொண்டிராத பெண்கள் பெண்களாக கருதப்படுவதில்லை. மாறாக கொடுமைக்காரியாக, அரக்கியாக, திமிர் பிடித்தவளாக, அடங்காப்பிடாரியாக வர்ணிக்கப்படுகிறாள். குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள். உண்மையை சொன்னால் இப்படிபட்ட பெண்ணை ஆண்கள் துணைவியாக கொள்ள விரும்புவதில்லை. எந்த தாயும் தகப்பனும் தனக்கு மருமகளாக ஏற்று கொள்வதும் இல்லை.

இதே வேளையில், ஆண்களுக்கு இந்த குணங்கள் இருந்தால் அவன் ஆணாக கருதப்படுவதில்லை. மாறாக பெண்​ணை போன்றவன் என்று அவனை கிண்டல் செய்யும் பரிகாசம் செய்யும் ஏளனம் செய்யும் நிலை காணப்படுகிறது. அவன் ஆண்மைத்தன்மை இல்லாதவனாக கருதப்படுகிறான். இவனையும் குடும்பத்தில் யாரும் விரும்புவதும் இல்லை. அநேகமான பெண்கள் இப்படி மென்மையான ஆண்களை மணமகனாக வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுப்பதும் இல்லை. இங்கே இந்த இரு நிலைகளிலும் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. ஆண்கள் எல்லோருமே வீரம் உள்ளவர்களாகவும்  எதற்கும் துணிந்தவர்கலாகவும் தைரியசாலியாகவும் தான் இருக்க வேண்டும் என்று சமூகமாகிய நாம் எதிர்பார்கின்றோம். இது சமூகத்தின் சமநிலையை குழப்புகிறது. மாறாக ஆண்களை வன்முறையாளனாகவும், பெண்ணை எதையும் தாங்கும் பெண்ணாகவும், பொறுமைசாலியாகவும்  ஆண் தன்மீது வன்முறையை பிரயோகித்தால் அதை சகித்துக்கொண்டு வாழவும் பழக்கிவிடுகிறது.

இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். குணாதிசயங்கள் ஆண், பெண் உடல் வேறுபாட்டின் பிரதிபலிப்பு அல்ல. எந்த குணமும் யாருக்கும் இருக்கலாம். அதாவது குணங்கள் உடல் மூலக்கூறு சார்ந்தவை அல்ல. கர்ப்பப்பை, மார்பகம் கொண்ட பிறப்புக்கள் எல்லாவற்றிற்கும் கருணை, அன்பு, பரிவு, பாசம், மென்மை இருக்க வேண்டும் என்று சொல்வது தவறு. அதற்கு இந்த தற்கொலை குண்டுதாரிகளான பெண்கள் உதாரணம். இதேபோல், சகல ஆயுதக் குழுக்களிலும் பெண்கள் இருந்தனர், போர் செய்தனர், மனிதர்களை கொன்றொழித்தனர். ஆம், எமது தமிழ் சமூகத்தில் ஆணுக்கு பெண் எல்லாவற்றிலும் சமம் என பெண்கள் நிரூபித்ததை நாம் மறக்கலாகாது. அந்த பெண்கள் எம்மத்தியில் இன்றும் உயிருடன் வாழ்கின்றனர்.  அதேபோல் ஈவு இரக்கமில்லாத வன்முறை செய்யும் பெண்களை பற்றி அன்றாடம் நாம் அறியாமல் இல்லை. தந்தையை வீதியில் விட்டு சென்ற மகள், தாயை வீட்டினுள் அடைத்து வைத்த மகள் அல்லது அடித்து துன்புறுத்தும் மகள் என சமூக வலைத்தளங்களில் அன்றாடம் எத்தனையோ வீடியோக்களை பார்கின்றோமல்லவா?

அதேபோல், மென்மையான பயந்த சுபாவமுள்ள எத்தனையோ ஆண்கள் எம்மத்தியில் வாழாமல் இல்லை.  மிகவும் அன்பான இரக்கமுள்ள ஆண்கள் எம்முடன் வாழ்கின்றனர். அவர்களும் மனிதர்கள்தான். நல்ல குணமோ கெட்ட குணமோ யாருக்கும் இருக்கலாம். குணத்துக்கு ஆண், பெண் வேறுபாடு தெரியாது. சந்தர்ப்பம் சூழ்நிலை மாறும்போது ஒரு ஆணோ பெண்ணோ எப்படியும் மாறலாம். நல்ல குணங்களை நாம் நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். குணங்கள் எம்மால் கட்டுபடுத்த கூடியவை. மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அன்று வன்முறையை கையில் எடுத்து நாட்டுக்காக போராடிய எம் பெண்கள் இன்று குடும்ப பெண்ணாக சமூகத்தில் வாழ்கின்றனர். வன்முறையோ அன்போ பயிற்சியின் மூலம் கற்றுகொள்ளகூடியது. எல்லா ஆண்களும் வன்முறையாளர்களும் அல்ல, எல்லா பெண்களும் கருணை உள்ளம் கொண்டவர்களும் அல்ல என்பதை மனதில் நிறுத்துவோம்.

Comments