அமெரிக்காவின் chipகள் Huawei க்குத் தேவையில்லை | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவின் chipகள் Huawei க்குத் தேவையில்லை

வாஷிங்டன் விடுக்கும் அழுத்தத்தை Huawei எதிர்க்குமென்கிறார் ரென் செங்ஹீய்

ஏற்கனவே  chip தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் Qualcomm மற்றும் ஏனைய அமெரிக்க வழங்குனர்கள் Huawei க்கான chips  விற்பனையை நிறுத்தினாலும் தமது  நிறுவனத்திற்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று Huawei Technologies பிரதம நிறைவேற்று அதிகாரியான ரென் செங்ஹீய் கூறியுள்ளார். 

சீன Huawei Technologies நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைமை அதிகாரியுமான ரென் தனது நிறுவனத்தை அரசாங்கத்தின் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு டிரம்பின் நிர்வாகம் தீர்மானித்துள்ளமையை எதிர்த்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், சீன தொலைத்தொடர்பாடல் சாதன தயாரிப்பு நிறுவனம் எவ்விதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

சட்டத்தை மீறுகின்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் நாம் ஈடுபடவில்லை என Huawei உடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானம் வெளிவந்த பின்னர் முதன்முதலாக கடந்த சனிக்கிழமையன்று ஷென்ழேனிலுள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற நேர்காணலில் ஜப்பானிய ஊடகமொன்றுக்கு பிரதம நிறைவேற்று அதிகாரியான ரென் செங்ஹீய் கருத்து வெளியிட்டுள்ளார். 

தனது உற்பத்திகள் மீது இத்தடையால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் நிறுவனம் தொடர்ந்தும் தனது சொந்த chips களை தயாரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றார். Qualcomm மற்றும் ஏனைய அமெரிக்க வழங்குனர்கள் Huawei இற்கு chips களை விற்பனை செய்வதை நிறுத்தினாலும் கூட தமது நிறுவனத்திற்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதுடன், தாம் ஏற்கனவே இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார். 

பிரதானமாக core processor chips சாதனங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள HiSilicon Technologies என்ற Huawei இன் பிரிவானது, வழங்கலில் தடங்கல் ஏற்படும் வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அதனை கையாளுவதற்காக தானும் இத்தகைய தயாரிப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியான தெரேசா ஹீ டிங்போ அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்ைகயில் ஒன்றில் இத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை பல ஆண்டுகளாவே நாம் எதிர்வு கூறியுள்ளதுடன், அதற்கான மாற்றுத் திட்டத்தையும் ஏற்கெனவே தயாரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். 

சமீபகாலமாக கடுமையான தொனியில் தனது கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ள ரென், வாஷிங்டனின் அதிகாரப் போக்கிற்கு தனது நிறுவனம் தலையாட்டாது என்று குறிப்பிட்டார். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி நாம் எமது முகாமைத்துவத்தை மாற்ற மாட்டோம் என்பதுடன், ZTE இணங்கியதைப் போல கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் என்றார். 

கடந்த ஆண்டில் ZTE நிறுவனத்திற்கு எதிராகவும் அமெரிக்கா இத்தகைய ஒரு தடையை விதித்திருந்ததுடன், இச்சீன தொலைத் தொடர்பாடல் நிறுவனம் திவாலாகும் அளவிற்கு அழுத்தம் கொடுத்திருந்தது. 

Huawei வர்த்தகம் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையானது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட ரென், நீண்டகால அடிப்படையில் நிறுவனம் சிறப்பாக செயற்படும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “Huawei இன் வளர்ச்சி சற்று மந்தடையும் எனினும், அது சிறிய அளவிலேயே காணப்படும் என்று ரென் குறிப்பிட்டதுடன், வருடாந்த வருமான வளர்ச்சி வீதத்தில் சிறியளவிலான பாதிப்பு ஏற்படவே வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Comments