சிங்களமும் தமிழும் தெரிந்தால் முழு நாட்டையும் சொந்த வீடாக நினைத்து நடைபோடலாம் | தினகரன் வாரமஞ்சரி

சிங்களமும் தமிழும் தெரிந்தால் முழு நாட்டையும் சொந்த வீடாக நினைத்து நடைபோடலாம்

எங்களுக்கு மூன்றாம்  வகுப்பு பாடம் நடக்கும் போது எமது ஆசிரியர் ஒரு பாடத்தினை விளங்கப் பண்ணும்போது ஒரு கதை சொன்னார். காகம் இல்லாத ஊரும் இல்லைஎன்று. இப்போது நாம் அந்தக்கதையை மாற்றிப்போடுவோம். தமிழர் இல்லாத ஊரே இல்லை ஆனால் தமிழருக்கென்றொரு நாடும் இல்லை. சி. அண்ணாத்துரை ஆட்சிக்கு வந்தபின், தமிழ்நாடு தமிழருக்கானது என்ற கருத்து மேலோங்கினாலும் அந்த கருத்தை இந்தோ _சீன யுத்தம் நனைத்து துவைத்து கசக்கி காயப்போட்டுவிட்டது. மக்களும் ஜாலியாக தமிங்கிலேயர்களாக மாறினர். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் மட்டுமே ஆரம்பக்கல்வி தாய்மொழியில் நடக்கிறது. ஆதுவும் ஆறாம் வகுப்புக்கு மாறிவிட்டதும் ஆங்கில மொழிக்கல்வியாகத் தொடர்கிறது. அதை விடலாம் இந்தியாவைப் பொறுத்தவரை, பதினெட்டு மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் சிறீலங்காவில் உள்ளதே மூன்று மொழிகள்தான். இதில் எதை ஆட்சி மொழியாக வைப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பங்களே இன்று நாட்டையும் நாட்டு மக்களையும் ஜென்மச்சனியாக நின்று பிடித்தாட்டியது.  

 அந்தக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தமது பேச்சாற்றலால், தமிழ் மக்களைக் கட்டிப்போட்டனர்  யாரும் சிங்களம் படிக்கமாட்டோம் படிக்கத் தேவையில்லை என்று பிரச்சார மேடைகளில் முழங்கி, சாதாரண மக்களை சிங்கள மொழியை அறிய விடாது தடுத்தனர். ஆனால் அவர்களது பிள்ளைகள் கொழும்பிலும் வெளிநாட்டிலுமாக தங்கி தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்று அரசியல் பொருளாதாரம் போன்ற அனைத்திலும் முன்நின்றனர். ஏமாந்த மக்கள் தமது வேலைகளை இழந்தும், மொழிதெரியாமல் பல சிக்கல்களிலும் மாட்டி விழித்தனர். 

இதற்காகவே, நடந்த அரசியல் ராணுவ போர்களில்கூட இந்த இரண்டாம்தர பிரசைகளாக வாழ பிரியப்படாமலும் அதற்காக போராடாமலும், மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அட போங்கப்பா சிங்களத்தைப் படிக்க விரும்பாமலும், இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ விரும்பாமலும், புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள் சென்றடைந்த அந்தந்த நாட்டின் மொழிகளில் விரும்பியோ விரும்பாமலோ பாண்டித்தியம் பெற்றாலும் இரண்டாம்தர மூன்றாம் தரப்பிரசைகளாகவும் வாழ்வதை கட்டாயமாக்கியது விதி. தாம் கற்ற கல்விக்கு சம்பந்தமேயில்லாத வேலைகளில் அவர்கள் கஸ்டப்படுகிறார்கள் மிகக்குறைந்த அளவினருக்கே தாம் விரும்பிய வேலை கிடைக்கிறது. கடுமையான உழைப்பை வழங்கவேண்டிய தேவையில் தொழில் போட்டி நிறைந்து கிடக்கிறது. 

 இதில் புலம் பெயர்ந்த அனைவரும் அடங்கமாட்டார்கள். விரும்பி உழைப்பு ஊதியம் என்பதற்காக புலம் பெயர்ந்தவர்களும், பிள்ளைகளை நாடிச்சென்ற பெற்றோரும் இதில் அடங்கார், ஆயினும் அவர்களும் அங்குள்ள மொழிகளை கற்கவே செய்கின்றனர் என்பதற்கு மேலாக ஜப்பானிய, சீன,ஜெர்மானிய பிரான்சிய மொழிகளை கற்பிக்கும் ஏராளமான தனியார் கல்வி நிலையங்கள் எமது  மண்ணிலேயே வந்துவிட்டன. ஆனாலும் என்ன? சிங்கள மொழி அகடமிகளும் தமிழ் பிரதேசங்களில் பெருகி வருகின்றன. பாடசாலைகளிலும் அந்த மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். சாதாரணமான ஒரு மாணவன் தென்னிலங்கைக்கு போனால், பேருந்துகளின் பெயர்ப்பலகையை வாசித்தறிய முடிகிறது. இரண்டு மொழி பேசுகிற மக்களும் கலந்துரையாட முடிகிறது கஷ்டப்பட்ட நேரத்தில் கைகொடுக்கவும் கலந்துரையாடவும் முடிகிறது. இந்த நட்பும் உறவும் என்றும் இருந்ததுதான் புதியவையல்ல. சிலருடைய சுய லாபங்களுக்காக கட்டமைக்கப்பட்ட கொள்கைகளே மக்களின் உறவுகளை சிதைத்தது. மறுபடியும் அந்த நாட்கள் மொழிகளைக் கடந்து கண்களில் தெரிகிறது. 

 இந்த நிலை இப்போது ஏற்பட்டதல்ல போர் நடந்த காலத்திலேயே சிங்களம் கற்பதை போராளிகள் ஊக்குவித்தே வந்தனர் போர்க் களங்களில் தொலைத் தொடர்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக சிங்களத்தை அறிந்திருக்க வேண்டிய தேவையிருந்தது. புலனாய்வு செய்பவர்களும் ஏற்கெனவே சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கற்பது கட்டயமாக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து எல்லா மக்களும் நகரத்துக்குள் செல்லமுடியாத நிலை இருந்ததால். செல்பவர்களில் பெரும்பாலோர் சிங்களத்தை அறிந்தவர்களாகவோ. அல்லது சிங்களம் தெரிந்த ஒரு துணையுடனோதான் பயணித்தனர். ஒரு சவரத்தொழிலாளி தனது கமக்கட்டுக்டகுள் சுருட்டி வைத்த பையுடன் வீடுகளுக்கு சென்று தொழில் செய்வதற்காக சென்றார். அவரை வழிமறித்த ஒரு ராணுவச் சிப்பாய்   அடோ கையில என்ன என்றார்.  

பையில என்றாரம்பிக்க, அந்தச்சொல் சிங்ளத்தில் நல்லசொல்லல்ல. எனவே அவன் அடித்தான். அடியை வாங்கிக்கொண்டே இவன்   ஆயுதம் என்றான் கேட்கவா வேண்டும்.

அவனை நன்கு அடித்துவிட்டு பார்சலைப் பிரித்தால், சவரக்கத்தியும் ஏனைய கருவிகளும் வந்தன. இதேபோல மொழி தெரியாமல் மாட்டிய பல நகைச்சுவைக் கதைகள் எமது வரலாற்றில் உண்டு. 

 மொழி என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அக்காலத்தில் ராணுவக் காவலரண்களூடாக பயணம் செய்பவர்களை கேட்டுப்பாருங்கள். அன்றும் இன்றும் ஆங்கில மொழி அறிந்தவர்களே பெருமையடைய முடிகிறது ஆனால் சிறீலங்காவில் சிங்களமும் தமிழும் தெரிந்தால் முழு நாட்டையும் சொந்த வீடாக நினைத்து நடைபோடலாம்.

Comments