டிரோன் (Drone) சாதனங்களின் துணையுடன் மருத்துவத்துறையை மாற்றியமைக்க முடியும் | தினகரன் வாரமஞ்சரி

டிரோன் (Drone) சாதனங்களின் துணையுடன் மருத்துவத்துறையை மாற்றியமைக்க முடியும்

இருதய சிகிச்சை வைத்திய நிபுணர் கோத்தாபய ரணசிங்க  

மருத்துவ சிகிச்சையளிப்புத் துறையில் டிரோன் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் கோத்தாபய ரணசிங்க  தெரிவித்தார். உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களில் மக்களைக் காப்பாற்றுவதற்கான மருந்து வகைகளை அவசரமாக விநியோகிக்க வேண்டிய தேவையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. யாருமே எதிர்பாராத வகையில், சம காலத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள், குருதித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து குருதியைப் பெற்றுக் கொண்டு வருவதற்கு வைத்தியசாலைகள் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுக்க  நேர்ந்தது. அவசர குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாட்டில் போதுமான குருதி கையிருப்பில் இருந்த போதிலும், அதனை தேவையான இடத்திற்கு விரைவாக கொண்டு செல்வதில் பாரிய முட்டுக்கட்டைகள் காணப்பட்டன என்றும் அவர் கூறினார்.   

மருத்துவ வசதிகள் தொடர்பில் இலங்கை முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதில் வளர்ச்சி கண்டு வருகின்ற பல நாடுகளும் எவ்வாறு மருத்துவ டிரோன் சாதனத்தை விநியோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்பதையும் இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் கோத்தாபய ரணசிங்க விளக்கியுள்ளார்.  

சேவைகள், உட்கட்டமைப்பு, மருத்துவ தொழில் ரீதியானவர்களின் எண்ணிக்கை மற்றும் பல அம்சங்கள் கடந்த ஒரு சில ஆண்டுகளில் இலங்கையில் கணிசமான அளவு விஸ்தரிப்படைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும் குறிப்பிட்ட சில அம்சங்கள் தொடர்பில் இன்னமும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதுடன், நாட்டில் தேவையான இடங்களுக்கு மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மேலும் பல பாகங்கள் போன்ற அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துத் தேவை காணப்படுகின்றது. தற்போது அவற்றை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் தேவையற்ற உயிரிழப்பைத் தடுத்து, எண்ணற்ற உயிர்களைக் காப்பதற்கு வேகமான மற்றும் திறன் மிக்க வழியில் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குதல் வேண்டும்.  

தேவைப்படுகின்ற கிராமப்புறங்களிலுள்ள நோயாளர்களுக்கு மத்திய களஞ்சியத்திலிருந்து மருந்து வகைகளை விநியோகிப்பதிலுள்ள சிரமம், சர்வதேசரீதியாக முக்கியமான மருத்துவ உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதை பாதிக்கின்றது.

அதிக அளவில் மருந்துகள் விரயமாதல், செலவுமிக்க அவசர பிரயாணங்கள் மற்றும் உகந்த துணை மருத்துவப் பராமரிப்பு உத்திகள் சுகாதாரத் துறையினரைப் பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினையாக உள்ளது. இதன் காரணமாக உயிரைப் காப்பதற்காக போராடுகின்ற மக்களுக்கு, தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான மருந்து வகைகள் கிடைப்பதில்லை.  

சர்வதேசரீதியாக காணப்படுகின்ற இப்பிரச்சினைகள் இலங்கையிலும் காணப்படுகின்ற நிலையில், நாட்டில் பிரதான மருத்துவ பரிசோதனை ஆய்வு கூடங்கள் அனைத்தும் கொழும்பில் மட்டுமே உள்ளமை முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது. அதனால், நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் சோதனை மாதிரிகள் அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மருத்துவ சோதனை முன்னெடுக்கப்பட்டு, சோதனைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேவையான சரியான மருந்து வகைகள் வெளியிடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இச்செயற்பாட்டிற்கு 24 மணி நேரம் வரையில் செல்வதால், நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்படுகின்றது.  

Comments